அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தை மூடுமந்திரமாகவே உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும், பல கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் ஆதங்கம் தெரிவித்துள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிக்கு செவ்வி வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்த கருத்தின் பிரகாரம் அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தை விடயங்கள் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற மூவரையும் தவிர வேறெவருக்கும் தெரிந்திருப்பதில்லை (செவ்வி நிமி 45:00), அடுத்த நாள் பத்திரிகைச் செய்தியினைப் பார்த்தே தெரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குள் அரசாங்கத்துடன் பேசுவது சம்பந்தமான கருத்தொற்றுமை இல்லையென்பதுடன் தீர்வு சம்பந்தமாக எவ்வித முன்னேற்பாட்டு கலந்துரையாடல்களும் இதுவரை நடைபெறவில்லையென சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளது முக்கிய விடயமாகும்.
எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது தொடர்பாக தமிழ் சிவில் சமூகம் அறிக்கையொன்றினை அண்மையில் அனுப்பி வைத்தது, இந்த அறிக்கையில் பல புத்திஜீவிகள் கையொப்பம் இட்டுள்ளார்கள்.
தமிழ் சிவில் சமூகத்தின் அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதிலளிக்கும் விதமாக, அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இடம்பெறும் எல்லா விடயங்களையும் பொதுமக்களிற்கு வெளியிடுவது சாத்தியமற்றதாகுமென அவ் அறிக்கையில் முதலாவதாக கையொப்பம் இட்டிருந்த மன்னார் கத்தோலிக்கப் பேராயர் கலாநிதி. இராயப்பு ஜோசப் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் மக்களை உணர்ச்சிச் வசப்படுத்தி வாக்குகளைப் பெற்று அரசியற் கதிரைகளைப் பெறுவதே தவிர வேறெந்த நன்நோக்கமும் இல்லையென பொது மக்கள் அனைவரும் உணர்ந்துள்ள நிலையில், அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தையில் ஒன்றும் மறு நிமிடம் பின் கதவால் சென்று இன்னொன்றும் கேட்டு வரும் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாத அரசியல் தெரியாதது அல்ல.
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் சாரம்சத்தை பொது மக்களுக்கு வெளியிடுவதில் சிக்கல் இருக்குமாயின் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்காவது தெரிவிக்கலாம் அல்லவா, இரகசியம் பேண வேண்டிய தேவை இதில் இல்லை. மேலே சித்தார்த்தனால் குறிப்பிடப்பட்டுள்ள மூவருக்கு மாத்திரமே தெரிந்துள்ள பேச்சுவார்த்தை தொடர்பான விடயங்களை ஏனைய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிய முடியாமலிருப்பதற்கான காரணமென்ன?
கூட்டமைப்பின் உள்ளேயே ஒற்றுமையைப் பேணும் முயற்சி இன்னும் இல்லாமல் இருப்பதால் அனைத்து தமிழ் சமூகத்தையும் ஒற்றுமைப்படுத்த சுயநலவாதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடியுமா?
மேலதிக தேடலுக்கு:
தமிழ் சிவில் சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவுரை
அரசுடன் பேசும் எல்லா விடயங்களையும் பொது மக்களிடம் சொல்ல முடியாது - கூட்டமைப்பு
மக்கள் விடுலைக் கழக(PLOTE) தலைவர் த. சித்தார்த்தன் அவர்கள் வழங்கிய செவ்வி
சிவில் சமூகத்துக்கு சம்பந்தர் பதில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.