
பிறக்கும் புத்தாண்டில் தீயன கழிந்து நல்லன பெருக வேண்டுமென "களத்துமேடு" வாழ்த்துகின்றது.
யாழ்ப்பாணத்தின் எதிர்கால நோக்கு எனும் தொனிப்பொருளில் தொழில்சார் மற்றும் கல்விக் கண்காட்சியும் களிப்பூட்டு விழாவும் யாழ்ப்பாண மாவட்ட ஸ்ரீலங்கா இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீயின் ஏற்பாட்டில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது, இந் நிகழ்வில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டதுடன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்கைக்கோள் மூலமாக அகன்ற தொலைக்காட்சியில் தமிழில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் இடம்பெற்ற பாடல் போட்டியில் தோற்றி முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாண பல்கலைக் கழக நுண்கலைப் பீட 3 ஆம் வருட மாணவி றஞ்சன் தாரிணி களிப்பூட்டு விழாவின் போது "உயிரே உயிரே" எனும் பாடலைப் பாடி "வடக்குத் தாரகை" (North Star) எனும் கிரீடத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன், அசோஷியேற்றட் மோட்டார் கொம்பனி அன்பளிப்புச் செய்த மாருதி சுஷுக்கிக் காரினை முதலாம் பரிசாகப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இங்கு இடம்பெற்ற போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற மீசாலையைச் சேர்ந்த விழிப்புலன் இழந்த திரு.குலேந்திரன் ஜெகதீசன் இரண்டாம் பரிசான இரு சக்கர உழவு இயந்திரத்தினைப் பெற்றுக்கொண்டார்.
மூன்றாம் இடத்தினை வென்ற யாழ்ப்பாண பல்கலைக் கழக சமூக விஞ்ஞான பிரிவு மாணவனான, சாவகச்சேரியைச் சேர்ந்த திரு.மகாலிங்கம் தயாபரன், மூன்றாம் பரிசாக உந்துருளியைப் பரிசாகப் பெற்றுள்ளார்.






இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்டவர்கள் அண்மையில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் கைதுகளைக் கண்டித்தும் தமிழக அரசின் கருத்துச் சுதந்திர மறுப்பு எதோச்சதிகாரத்தைக் கடுமையாகச் சாடியும் வலைப்பதிவுகளில் தோழர்கள் எழுதிக் குவித்துள்ள கட்டுரைகளைப் படிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நீண்ட நாட்களாகவே பேசியும் எழுதியும் வருபவன் என்ற முறையில் உள்ளபடியே எனது கண்கள் பனிக்கின்றன. இந்த வலைப் பதிவாளர்களல்லவா எனது தோழர்கள் எனத் திரும்பத் திரும்ப எனது உதடுகள் முணுமுணுக்கின்றன.
நாங்கள் தமிழக அரசின் கைதுகளைக் கண்டிக்கிறோம். சீமான், கொளத்தூர் மணி ஆகியோரின் கைதால் கவலையுற்றிருக்கும் தோழர்களின் துயரில் நாங்களும் பங்கெடுக்கிறோம். புலிகளிடம் ஆயிரக்கணக்கானவர்களைப் பலி கொடுத்துவிட்ட துயரிலும் இனியும் பறிகொடுக்கப்போகும் பதற்றத்திலுமிருக்கும் எங்கள் உணர்வுகளிலும் பங்கெடுக்குமாறு அந்தத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறோம். புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக்கு எதிராக இந்தத் தோழர்கள் வருங்காலங்களிலாவது குரல் கொடுக்க வேண்டுமென விரும்புகிறோம். இதன் முலம்தான் கருத்துச் சுதந்திரம் மீதான அவர்களது வேட்கை முழுமை பெறுமென வலியுறுத்தவும் விரும்புகிறோம்.
வன்னியை நோக்கி முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படைதரப்பினரை எதிர்த்து 2008.12.21 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதலை நடத்தியதில் பல இராணுவத் தளபாடங்களையும், ஸ்ரீலங்கா படையினரின் உடலங்களையும் கைப்பற்றியிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் பல இழப்புக்களுக்கும் மத்தியில் முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிரத் தாக்குதலை மேற்கொண்டதில் கடந்த 2008.12.16 ஆம் திகதி கிளாலியில் 50 பேருக்கும் அதிகமான ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டும், 160 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர், இம் முறியடிப்புச் சமரில் விடுதலைப் புலிகளினால் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கில் முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பு பரந்தனில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள சின்னப்பரந்தன் பகுதி முழுவதையும் 2008.12.23 ஆம் திகதி இன்று தமது கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுடன் இணைந்து சிங்களத் தம்பதியரும் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் செல்லும் போது இந்திய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அகதித் தஞ்சம் மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த கேணல் கருணா அம்மான் அவ்வமைப்பின் உள்முரண்பாட்டிலிந்து மீண்டு தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை ஸ்தாபித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் செயற்படும் போது, ஸ்ரீலங்கா பேரினவாதிகளினால் ஈழம் எனும் பதத்தினை கட்சிப் பெயரில் இருந்து நீக்க கருணா அம்மான் நிர்ப்பந்திக்கப்பட்டார், அதன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகப் கட்சிப் பெயரைச் சுருக்கிக் கொண்டார்.
ஸ்ரீலங்காவுக்கு வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பாகிஸ்தான், பங்களதேசம் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளைச் சேர்ந்த இவ்விராணுவ ஆலோசகர்கள் வவுனியா இராணுவ தலைமையகத்துக்குச் சென்று ஆலோசனைகளை மேற்கொண்டதுடன், 57 வது மற்றும் 59 வது படையணித் தலைமையகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா இராணுவ தரப்புக்கும் இடையிலான யுத்தம் இடம்பெற்று வரும் சில முன்னரங்க நிலைகளுக்கும் விஜயம் மேற்கொண்டு வன்னியின் நேரடி நிலைமைகளை அவதானித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. 
2008.12.16 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கில் புலிக்குளம், குஞ்சுப்பரந்தன், மலையாளபுரம் மற்றும் முறிகண்டி பகுதிகளை நோக்கி முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பினரை எதிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தியதில் 300 பேருக்கும் அதிகமான ஸ்ரீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாகவும், படையினரின் 24 உடலங்களும் மற்றும் இராணுவ யுத்த தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பிலிருந்து, வவுனியா வரை இடம்பெற்ற புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த இப் புகையிரத சேவை நாளையில் இருந்து வவுனியா வரை தொடரும்.
மட்டக்களப்பு, ஆரையம்பதி 3 ஆம் குறிச்சியில் வசிக்கும் மாவிலங்குதுறை பாடசாலை ஆசிரியரான செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளையின் வீட்டில் 2008.12.13 ஆம் திகதி இரவு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அக் குடும்பத்தினரில் ஒருவர் கொல்லப்பட்டும், இருவர் படுகாயமும் அடைந்துள்ளனர்.
வன்னியை நோக்கி முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பினரின் 57 ஆம் படைப் பிரிவினர் கொக்காவிலுக்கு வடக்காகவும், அக்கராயன்குளத்துக்கு கிழக்காகவும் நகர்ந்து 2008.12.10 ஆம் திகதி நேற்றுப் பிற்பகல் முறிகண்டியை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா படை தரப்புச் செய்திகள் கூறுகின்றன.






கிளிநொச்சிக்கு மேற்குத் திசையிலுள்ள ஊற்றுப்புலம், புதுமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கான முன்நகர்வில் 2008.12.10 ஆம் திகதி இன்று காலை வேளையில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஸ்ரீலங்கா படை தரப்பில் 60 படையினர் கொல்லப்பட்டும் 120 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.













