ஞாயிறு, 22 ஏப்ரல், 2007

தாக்குதலுக்குரிய பயங்கரமான ஆயுதங்கள்


ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதன் படையணியும் ஈழத்தமிழர்களுக்குச் செய்யும் கொடுமைகள் எழுதி முடிக்க இயலாதவை, அந்த கொடூர வரிசையில் இப்படமும் பதிவாகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் தமிழர்கள் வாழும் பகுதியில் நேற்று தெருவால் வந்த முதியவர் ஒருவரை ஸ்ரீலங்கா பெண் பொலிஸார் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரா இவரின் பையினுன் தாக்குதல் செய்யக்கூடிய பயங்கரமான ஆயுதங்கள் இருக்கின்றனவாவென துருவித் துருவி ஆராய்வதனைப் பாருங்கள்.

ஸ்ரீலங்கா எதிர்நோக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு

ஆக்கம் - பீஷ்மர்



கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கொழும்பு நிலைப்பட்ட தென்னிலங்கை அரசியல் போக்குகளின் பிரதான பண்புகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
முதலாவது இலங்கையில் பிரதானமாக கொழும்பில் நடைபெறும் அரச நிலைப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமை. இரண்டாவது யு.என்.பி.அரசாங்க எதிர்ப்பை மிக வேகமாக தூண்டியுள்ளமை. மூன்றாவது இவற்றின் தாக்கங்கள் காரணமாக ஜனாதிபதி நிர்வாக மட்டத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளமை. இந்த அரசியல் உஷ்ண அதிகரிப்பின் பிரதான அம்சம் தமிழர் பிரச்சினையோ விடுதலைப் புலிகள் பிரச்சினையோ பெரிய முக்கியத்துவம் பெறாமையாகும். சடங்காசாரமான குறிப்புகள் உண்டெனினும் மேற்கூறிய பிரச்சினையின் வெடிப்புக்கு தமிழர் பிரச்சினை நிச்சயமாகக் காரணமாக அமையவில்லை.

சற்றுப் பின்நோக்கிப் பார்க்கும்போது அரசாங்கம் சிங்கள மக்களின் ஆதரவை மேலும் மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக எடுத்துக்கொண்ட சில செயல்களின் பக்க விளைவுகளாக இவை தோன்றினவோ என்ற சந்தேகம் ஏற்படவே செய்கின்றது. கிழக்கிலே அரச படைகள் வென்றுவிட்டதாகவும், உண்மையில் கிழக்கு மீட்கப்பட்டு விட்டதாகவும், அந்தச் சாதனையில் படையினரின் ஊக்கமும் முன்னேற்பாடுகளுமே பிரதான காரணிகளாக அமைந்தன என்றும் கூறப்பட்டது. பிரதான சிங்கள ஊடகங்கள் இதே கருத்தினை சிங்கள நிலைப்பாட்டின் அடிப்படையில் எடுத்துக் கூற இந்தக் கண்ணோட்டம் சிங்கள மக்களிடையே அரசாங்கத்துக்கு பெரிய ஆதரவினை வழங்கிற்று.

இந்தப் பின்புலத்திலே தான் கொழும்பில் சில கைதுகள் நடைபெற்றன. உண்மையில் இவற்றைப் பற்றி சிங்கள ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. இவை பெரும்பாலும் தமிழர் நிலையிலேயே நடைபெற்றன. இவ்விடயம் சம்பந்தமாக மனோகணேசன் ஒழுங்கமைத்த கூட்டம் சர்வதேச கணிப்பாளர்களையும் உள்ளடக்கியிருந்தது. இந்தக் கட்டத்திலே தான் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் முக்கியமானவை இவ்விடயங்கள் பற்றி கருத்துத் தெரிவிக்க தொடங்கின. அமெரிக்க தூதுவர், பிரிட்டிஷ் தூதுவரென படிப்படியாக சில விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கின.

ஏற்கனவே, நாட்டின் இறைமைக்காக செய்கின்றோமெனக் கூறுகின்ற சிங்கள வாதத்துக்கு, நட்ட- ஆகம ஜாதிய நாடு மதம் இனம்- இது பிரச்சினைகளை ஏற்படுத்திற்று.

ஜனாதிபதி மனிதவுரிமை மீறல்களை கவனிக்காதிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு அதிகரிக்கத் தொடங்கவே அலரி மாளிகையில் அவசர அவசரமாக சில கூட்டங்கள் கூட்டப்பெற்றன.

உதவியமைச்சர் இராதாகிருஷ்ணனே ஜனாதிபதியின் தலையீட்டை வற்புறுத்த தொடங்கினார். ஆனால், கூட்டங்களோ பின்போடத் தொடங்கின. இந்தப் பின்புலத்திலேயே பாப்பரசர் தனது வருடாந்த ஈஸ்ரர் செய்தியில் இலங்கை விடயத்தை எடுத்துக் கூறினார்.

இது நிச்சயமாக ஜனாதிபதிக்கு எதிர்பாராத பிரச்சினைகளை கிளப்பிற்று. அதில் முக்கியமானது சிங்கள மக்களிடையே கிறிஸ்தவம்- பௌத்தம் எனும் அடிப்படையில் ஏற்படக்கூடிய தொலைப்படுத்துகையாகும்.

இந்த வேளையிலேயே தான் சற்றும் எதிர்பாராத வகையில் டெய்லி மிரர் விவகாரம் பெருத்த அரசியல் வெடிப்பை ஏற்படுத்தி பூதாகரமாக வளரத் தொடங்கிற்று.

ஜனாதிபதியின் பிரதம நிர்வாகஸ்தர்கள் பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறார்களில்லை என்கிற விடயம் மிகப்பெரிதாயிற்று. அரசாங்கம் சர்வதேச பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியாயிற்று. வத்திக்கான் விஜயம் உண்மையில் அத்தியாவசியமானதா என்பது ஒரு முக்கியமான பிரச்சினை. ஜே.வி.பி., ஹெல உறுமய இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் இதனை பேசவும் முடியவில்லை.

ஜனாதிபதி உண்மையானதொரு இக்கட்டு நிலைக்குள் தள்ளப்பட்டார்.

அவரவருக்கு ஏற்றவகையில் பேசி பிரச்சினைகளின் உக்கிரத்தை தவிர்க்கின்ற ஜனாதிபதியின் இயல்புக்கு எதிரான நிலைமைகளே இப்பொழுது தோன்றியுள்ளன.

டெய்லி மிரர் ஆசிரியருக்கு ஜனாதிபதி கூறியதாக எடுத்துச் சொல்லப்பட்ட காரணம் கிழக்கில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நடவடிக்கை மாற்றங்களுக்கு பெரிய பிரச்சினைகளாயிற்று, ஆனால் ஒன்று தெரிகின்றது.

ஜனாதிபதியோ அல்லது அவரது அலுவலகமோ கொழும்பை உள்ளடக்கிய சிங்களப் பிரதேசங்களையே கருத்திற்கொண்டுள்ளது. இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் தமிழ்ப் பயங்கரவாதம் எனும் உச்சாடனம் அரசியற் தீர்வுக்கான வழிவகைகள் பற்றி பேசவுமில்லை.

ஹெல உறுமயவும் ஜே.வி.பி.யும் முதலில் புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்ற கோஷத்தையே முன்வைக்கின்றன.

வியாழனன்று பி.பி.சி. சிங்கள சேவையில் நடந்த ஒரு நேர்காணலில் பாப்பரசர் இலங்கையின் மனிதவுரிமைப் பிரச்சினையை மிக ஆழமாக பார்க்கிறார் என்பதைக் காட்டிற்று. இந்தப் பின்புலத்தில் ஜனாதிபதியின் விஜயம் ஏறத்தாழ பிரச்சினை பெரிதாக வெடிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் வருமுன் காப்பு நடவடிக்கையே தெளிவாகின்றது. இலங்கை விடயங்கள் பற்றி வத்திக்கானுக்குள்ள ஆழமான சிரத்தையின் வெளிப்பாடாக அமைந்தது, வத்திக்கான் மடுத்தேவாலயப் பிரச்சினையை கிளப்பியதாகும்.

உலகிலுள்ள எந்த நாட்டிலுமுள்ள ஒரு சிறு கத்தோலிக்க தேவாலயத்துக்கு கூட வத்திக்கானில் ஒரு `பைல்' இருக்குமென்று கிண்டலாக கூறுவார்கள். அந்த உண்மையை ஜனாதிபதி உணர்ந்திருப்பார்.

இதற்குள் ஜிம் பிறவுண் என்ற கத்தோலிக்க குரு ஒருவர் பற்றிய பிரச்சினை வேறு. இலங்கை அரசாங்கம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை நேராகவும் நேர்மையாகவும் எதிர்நோக்கத் தவறுகின்றது என்ற அபிப்பிராயமே சர்வதேச மட்டத்தில் படிப்படியாக மேற்கிளம்புகின்றது.

இலங்கைத் தமிழர் போராட்டங்களின் பொழுது மனிதவுரிமை கோட்பாட்டை தனக்குச் சாதகமாக அடிக்கடி பயன்படுத்தி வந்த அரசாங்கம் இப்பொழுது அதே மனிதவுரிமைப் பிரச்சினையால் வேலிக்கான முட்கம்பி போல தன் கால்களை தானே சுற்றி வளைத்துக் கொண்டுள்ளது.

நன்றி தினக்குரல்

சனி, 21 ஏப்ரல், 2007

2012.12.22 ம் நாள் உலக அழிவு ஏற்படும்?



உலக அழிவை ஏற்படுத்தப் போகும் நொடிப் பொழுதை அறிந்து கொள்ளக் கூடிய கடிகாரத்தை அமெரிக்க சிக்காக்கோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் 1947ம் ஆண்டில் கண்டு பிடித்துள்ளார்கள்.

மத்திய அமெரிக்கா, தென் மெக்சிக்கோ போன்ற பகுதிகளில் குடியிருந்த ஆதிக்குடிகளான செவ்விந்தியர்கள் தங்களின் மாந்திரீக நம்பிக்கைக்கேற்ப கால அட்டவணையொன்றைச் செப்பனிட்டு வைத்திருந்தனர், இவர்களின் கணிப்பின்படி 2012 டிசம்பர் 22ம் திகதி உலக அழிவு ஏற்படுமென கூறப்பட்டுள்ளது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ் ஆதிக் குடிகள் கணித்துக் கூறியுள்ள உலக அழிவு ஏற்படப் போகும் நொடி பற்றிய கருத்தினை ஒத்ததாகவே சிக்காக்கோ பல்கலைக் கழக விஞ்ஞானிகளின் கடிகாரமும் கூறுவதாக அறிய முடிகின்றது.

நாசா விண்வெளி ஆராட்சி நிறுவனத்தாரின் ஆய்வின்படி 3600 ஆண்டுகளுக்கு ஒரு தடவை "திபுரு" எனும் பெயருடைய வால் நட்சேத்திரம் புவியைத் தாண்டிச் செல்வதாகவும் அதன் சுற்று வட்டத்துக்கமைய எதிர்வரும் 2012.12.22 இல் பூமியைத் தொட்டுச் செல்லுமெனவும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இத் "திபுரு" வால் நட்சேத்திரம் தாண்டிச் செல்லும் போது புவியுடன் மோதுண்டால் மாபெரும் உலக அழிவு ஏற்படுமென்பது நிச்சயமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள இக் கடிகாரம் கூறிய 18 நேர மாற்றங்களில் உலக அழிவு ஏற்பட்ட பதிவு இருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இறுதியான 18 வது தடவை இக் கடிகாரத்தில் ஏற்பட்ட நேர மாற்றத் தினமான 2007ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் வடகொரியாவில் அணுசக்திப் பரிசோதனை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2007

மூன்று ஈழ அரசியற்கட்சிகளின் கூட்டு

இலங்கையில் ஈழ விடுதலையை நோக்கமாகக் கொண்ட விடுதலை இயக்கங்களிடையே கருத்து மோதல்களும் விரிசல்களும் ஏற்பட்டு தினமும் அப்பாவி இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அநியாயமாக கொல்லப்படுவது தெரிந்த விடயம்.

ஒத்தகருத்து மாற்றுக்கருத்து என்று வேறுபட்டு ஈழ விடுதலை அமைப்புக்கள் செயற்பட்டு வரும் இவ்வேளையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களைக் கொண்டு இயங்கி வரும் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய மூன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒரே கருத்தைக் கொண்ட அறிக்கையை முன் வைத்துள்ளனர்.

தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து சிலர் பிரிந்து தமிழரசுக் கட்சி எனும் பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செயற்படுகின்றனர், அதேபோல் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இருந்து சிலர் பிரிந்து ஈ பி ஆர் எல் எவ் சுரேஸ் அணியென விடுதலைப் புலிகளுடன் செயற்படுகின்றனர்.

அமிம்சையை நேசித்த தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரின் வழி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆயுத தீர்வின் மூலமே ஈழத்தை வென்றெடுக்கலாமெனும் நோக்கோடு செயற்பட்டு அதில் தோல்வி கண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள மற்றய இரு விடுதலை இயக்கங்களுடனும் செயற்பட முற்பட்டமை வரவேற்கக்கூடியதே!

சகல இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் ஈழத்தை வென்றெடுக்க வேண்டுமென்பதே களத்துமேட்டின் ஆசையுமாகும்.


துகளுடைய அனாமதேய தபால்


ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஸவின் ஊடகப் பணிப்பாளர் திரு.சந்திரபால லியனகேயின் முகவரியிட்டு வந்துள்ள தபால் பொதியில் துகள்கள் உள்ளடங்கி இருந்ததாக அறியப்படுகின்றது, இந்தப் பொதி இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அரிய முடிகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் இவரின் முகவரிக்கு இத் தபால் அனுப்பப்பட்டிருக்கலாம், இத் துகள்கள் உயிர்பலி கொள்ளக்கூடியதாக செறிவு இருக்குமோவெனவும் புலனாய்வுத் தரப்பு தீவிர விசாரணை செய்து வருகின்றது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னரும் இப்படிப்பட்ட அனாமதேய துகள்களினால் சர்வதேசமே துவண்டு போன விடயம் கவனத்துக்கு உரியது.

புதன், 18 ஏப்ரல், 2007

உலகக் கிண்ண கிரிகெட் மைதானத்தில் தமிழீழ தேசியக்கொடி


ஸ்ரீலங்காவுக்கு எதிராக அவுஸ்ரேலியா கிரிகெட் அணியினர் நேற்று மேற்கிந்தியதீவு பிரிஜ்ரவுன் மைதானத்தில் களமிறங்கி விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசியக் கொடியுடன் ஒரு இளைஞன் வலம் வந்தார்.

உலகக் கிண்ண கிரிகெட் மைதானத்தில் சர்வதேச விளையாட்டு இரசிகர்கள் ஸ்ரீலங்கா அணியினரின் பந்து வீச்சு மற்றும் களத் தடுப்பு முறையையும் அவுஸ்திரேலியா அணியினரின் ஓட்ட எண்ணிக்கையையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தவேளையில் இடம் பெற்ற இச்சம்பவம் சர்வதேச முக்கியத்தைப் பெற்ற நிகழ்வாகி விட்டது.


அனுமதியின்றி முறைகேடாக இடம் பெற்ற இந்தச் சம்பவம் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியது, புலிக்கொடியுடன் ஓடிய இந்த நபர் இறுதியில் பாதுகாப்புப் பிரிவினரால் கைதாகிய போதிலும் அவர் சர்வதேச சமூகத்துக்கு சொல்ல முற்பட்ட விடையம் தான் என்ன?

இந்த இளைஞன் மனோநிலை பாதிப்புக்குள்ளானவரா அல்லது ஸ்ரீலங்காவும் ஈழமும் ஒன்றென அர்த்தப்பட இலங்கை அணிக்கு வலுச் சேர்க்க முற்பட்டாரா இல்லையேல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான விளம்பரம் நிகழ்வா என பார்வையாளர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.

இரத்தத்தை உறைய வைக்கும் கோரச் சம்பவம்


அமெரிக்க வேர்ஜீனிய தொழிநுட்ப பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த மாணவர்கள் உட்பட 33 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற இரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் இன்று பரவலாகப் பேசப்படும் செய்தியாகும்.


இக் கல்லூரியில் கல்வி கற்ற துப்பாக்கிதாரி 23 வயதான தென்கொரியரான யோ சுங் வி இறுதியில் தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர்களை சுட்டுக் கொல்லும் நோக்கதில் செயற்பட்ட இக் கொலையாளி மனநோயாளியா அல்லது இவரின் பின்புலத்தில் வெறுயாராவது இருக்கின்றார்களா என்பது இன்னும் புலனாகவில்லை.


தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான பேராசிரியரான ஜி.எஸ்.லோகநாதன் கொல்லப்பட்டதுடன், கல்வி கற்று வந்த சில ஈழத்துத் தமிழ் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.


துப்பாக்கியை யார் வைத்திருக்க வேண்டும் யார் வைத்திருக்கக் கூடாது என்பதை சர்வதேச சமூகம் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது, உலகப் பொலிஸ்காரராக எல்லா நாட்டிற்குள்ளும் மூக்கை நுளைத்துக் கொள்ளும் அமெரிக்கா இச் சம்பவத்துக்கு சொல்லக் கூடிய காரணம் தான் என்ன? வருடாந்தம் அமெரிக்காவில் இடம் பெறும் துப்பாக்கி மூலமான கொலைகளுக்கு முடிவே இல்லையா?

பிறருடைய முதுகில் உள்ள அழுக்கை நீக்க முற்படுவதற்கு முன் தனது முதுகில் உள்ள அழுக்கை முதலில் அகற்றுவதே மிகவும் சிறந்தது.

திங்கள், 16 ஏப்ரல், 2007

இளவரசரின் காதல் முறிவு


பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் உலக அழகி டயானா தம்பதிகளின் மூத்த புத்திரன் இளவரசர் வில்லியத்துக்கும் அவரின் காதலி கதேமிட் லெடனுக்கும் இடையிலான நான்கு வருட காதல் முடிவுக்கு வந்துள்ளதாக அரண்மனைத் தகவல்கள் கூறுகின்றன.

சென்.அன்ட்வுஸ் பல்கலைக்கழகத்தில் வைத்து 2001ம் ஆண்டு வில்லியமும் கதேயும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டதைத் தொடர்ந்து அவர்களின் காதல் விவகாரம் பரவலாகப் பேசப்பட்டது.

இருபத்தி நான்கு வயதுடைய இளவரசர் வில்லியம் இராணுவத்தில் இணைந்து செயற்படுவதனால் அவர்களின் வாழ்க்கை வட்டத்தில் மாற்றங்கள் ஏற்படலாயின, இதனால் காதலர்கள் சந்திக்க முடியாமல் போனமையும் மற்றும் அரச குடும்பத்தின் தலையீடு காரணமாகவும் இளவரசர் வில்லியத்துக்கும் அழகி கதேமிட்டுக்கும் இடையிலான காதல் முறிவடைந்துள்ளது.

காதலி கதேமிட் லண்டனில் இருக்கும் போது அவளின் அனுமதியின்றி காதலன் வில்லியம் டோர்ஸெட் இராணுவ முகாமுக்கு பணிக்காகச் சென்றமை தான் விரிசலுக்கான காரணமெனவும் கூறப்படுகின்றது.

நோர்வேக்கும் விடுதலைப்புலிகளுக்குமான இரகசியத் தொடர்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே நாட்டுக்குமான தொடர்புகள் பற்றிய கருத்துக்கள் பலவேறுபட்டதாக வெளிவந்து கொண்டிருந்த போதிலும் இப்போது திடீரென நோர்வே தீவிரவாத ஒழிப்புக் குழுவின் முக்கியஸ்தரான போல்க் ஆர் ரோவிக் என்பவர் சாட்சியமாக உள்ளே பொசிந்திருக்கும் இரகசியமெனக் கூறவிருப்பது தான் என்ன?

ஒடுக்கப்படும் மனித ஜீவன்களுக்காக மானுட நேயங்கொண்டவர்கள் பங்களிப்புச் செய்வதில் எவ்வித தவறும் இல்லை, இதற்கு ஆதரவுக்கரம் பாரத்தின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது, இதற்கு இந்தியாவின் சுயநலன் காரணமாக இருந்த போதிலும் ஒடுக்கப்படும் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு உதவி கிடைத்ததை இலகுவாக மறந்து விட முடியாது. அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல சர்வதேச அமைப்புக்கள் உதவி புரிகின்றன.

காலங்காலமாக மாறி மாறி வரும் ஸ்ரீலங்காவின் அரசாங்கங்கள் தமிழர்கள் மீது கோலோச்சும் அடக்குமுறை முற்றுப்பெறுவதற்கான சைகை எதுவும் இன்னும் தென்படவில்லை, 2002ம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையைத் தொடர்ந்து ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்ட தமிழ் மக்கள் மீண்டும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் வதைக்கப்படும் நிலைக்குத் திரும்பி விட்டனர்.

எங்கு பார்த்தாலும் ஆட்கொலைகளும், அப்பாவிப் பொதுமக்கள் கைது செய்யப்படுதலும், குண்டுத் தாக்குதலும், அகதி முகாம் வாழ்க்கையுமென தமிழரின் அவலவாழ்வு தொடர்கின்றது, இதனைத் தடுத்து நிறுத்த முன்வருபவர்கள் தான் யார்?

30 கோடி ரூபா பணத்தினை புலிகளுடன் தொடர்புடைய இரு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட நோர்வேயுடனான புலிகளின் தொடர்புகள் பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு வெளி ப்படுத்த அந்நாட்டு தீவிரவாத ஒழிப்புக் குழுவின் முக்கியஸ்தர் போல்க் ஆர் ரோவிக் இன்று (16 ஆம் திகதி) இலங்கை வரவுள்ளார். நோர்வே நாட்டு அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்திடம் உரிய சாட்சியங்களுடன் பல இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக ரோவிக் ஒஸ்லோ நகரிலிருந்து தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். நோர்வே அரசுடனான தொடர்பு குறித்து வெளிப்படுத்தல் மற்றும் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென புலிகள் இயக்கம் ரோவிக்குக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதால் அவர் இலங்கையில் இருக்கும் காலத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. புலிகளுடன் தொடர்புடைய இரு நிறுவனங்களுக்கு நோர்வே மாநகர சபை நிதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கும் மேற்படி தீவிரவாத ஒழிப்புக் குழுவின் முக்கியஸ்தர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு 15 மில்லியன் குரோன்களும் புலிகளின் சமாதான செயலகத்திற்கு 5.6 மில்லியன் குரோன்களும் நோர்வே அரசினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் புலிகளுடன் மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தையின் போது புலிகள் இயக்கத்தின் முன்னாள் படைத்தளபதி கருணா அம்மான் நோர்வேயின் ஆயுத நிறுவனங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டமை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்திற்கு நிதி வழங்கியமை மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் குழுவொன்றிற்கு நோர்வேயின் ரேன் மாநில விஷேட அதிரடிப்படை முகாமில் பயிற்சி வழங்கப்பட்டமை உள்ளிட்ட பல இரகசியங்கள் ரோவிக்கினால் வெளியிடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக் கப்படுகிறது.

15.4.2005 திவயின

நன்றி வீரகேசரி

ஞாயிறு, 15 ஏப்ரல், 2007

தமிழ் வருடக் கணிப்பு முறை

60 வருடங்களைக் கொண்ட சுற்று வட்டத்தைக் கொண்டதே தமிழ் வருட அட்டவணையாகும், இதன்படியே தமிழ் வருடங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன.

ஆங்கில வருடத்தின் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து அடுத்த வருட ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை ஒரு தமிழ் வருடமென கணக்கிடப்படுகின்றது.

சித்திரை மாதம் முதலாம் நாளே தமிழ் வருடப் பிறப்பின் ஆரம்பமென கூறப்படுகின்றது.


2007. சர்வசித்து
2008. சர்வதாரி
2009. விரோதி
2010. விக்ருதி
2011. கர
2012. நந்தன
2013. விஜய
2014. ஜய
2015. மன்மத
2016. துன்முகி
2017. ஹேவிளம்பி
2018. விளம்பி
2019. விகாரி
2020. சார்வரி
2021. பிலவ
2022. சுபகிருது
2023. சோபகிருது
2024. குரோதி
2025. விசுவாவசு
2026. பராபவ
2027. பிலவங்க
2028. கீலக
2029. செளமிய
2030. சாதாரண
2031. விரோதிகிருது
2032. பரிதாபி
2033. பிரமாதீச
2034. ஆனந்த
2035. ராக்ஷஸ
2036. நள
2037. பிங்கள
2038. காளயுக்தி
2039. சித்தார்த்தி
2040. ரெளத்திரி
2041. துன்மதி
2042. துந்துபி
2043. ருத்ரோத்காரி
2044. ரக்தாக்ஷி
2045. குரோதன
2046. அக்ஷய
2047. பிரபவ
2048. விபவ
2049. சுக்கில
2050. பிரமோதூத
2051. பிரஜோத்பத்தி
2052. ஆங்கிரஸ
2053. ஸ்ரீமுக
2054. பவ
2055. யுவ
2056. தாது
2057. ஈஸ்வர
2058. வெகுதான்ய
2059. பிரமாதி
2060. விக்கிரம
2061. விஷு
2062. சித்திரபானு
2063. சுபானு
2064. தாரண
2065. பார்த்திப
2066. விய
2067. சர்வசித்து

ஓ...அறுபத்திமூன்றிலும் ஆசை வரும்


காதலிக்கு சம்பளத்தை அதிகரித்ததால் சிக்கலில் மாட்டியுள்ளார் மாமா, ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது, இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்னும் ஒரு கருத்து வழக்கு எம்மிடம் நீண்ட காலமாக இருந்து வருகின்றது, இத்தகைய சர்ச்சைக்கு மேதைகள் பலர் இலக்காகியுள்ளனர், இந்த வரிசையில் இப்போது சிக்கித் தவிர்க்கின்றார் உலக வங்கித் தலைவர்.
காதலிக்கு 31 ஆயிரம் பவுண்ஸ்களுக்கு மேல் சம்பளத்தை உயர்த்தி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் உலக வங்கித் தலைவர் உல்போவிட்ச்.
ஈராக்கிற்கு எதிரான போரின் போது, அமெரிக்க இராணுவ கொள்கைகளை வகுத்ததில் முக்கிய பங்காற்றியவர் பால் உல்போவிட்ச். அப்போது, பென்டகனில் துணைத் தலைவராக இருந்தார். `ஈராக்கிற்கு எதிராக புஷ்ஷுக்கு விவகாரமான யோசனைகளை வழங்கியது இவரே' என கடும் விமர்சனங்கள் அப்போது எழுந்தன. விமர்சனங்களுக்கு மத்தியில், 2005 இல் உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மனைவியை பிரிந்து வாழும் உல்போவிட்ஸுக்கு தற்போது வயது 63. உலக வங்கி தலைவர் பொறுப்பை ஏற்ற நேரத்தில் ஷாஹா ரிஸா என்ற 53 வயது பெண்மணியுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. ரிஸாவும் விவகாரத்தானவர் என்பதால் உறவு பலப்பட்டது. இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றி வந்தனர். ரிஸா, ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பயின்று, அமெரிக்க இராணுவத் துறையில் பணியாற்றியவர். பின்னர் உலக வங்கியில் சேர்ந்தார். உல்போவிட்ஸுக்கு முன்பாகவே உலக வங்கியில் பணியாற்றி வந்தாலும், ரிஸாவுக்கு சமீப காலத்தில் வழக்கத்துக்கு மாறாக பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் என ஏராளமான திடீர் சலுகைகள் கிடைத்தன. உல்போவிட்ச் தலைவர் பொறுப்புக்கு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், பணியாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொடர்பு பிரிவில் இருந்த போது ரிஸாவின் சம்பளம் 67 ஆயிரம் பவுண்ஸ்கள். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அரசுத் துறையில் உலக வங்கிப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, 98 ஆயிரம் பவுண்ஸ்கள் சம்பளம் பெறுகிறார் ரிஸா. திடீரென 31 ஆயிரம் பவுண்ஸ்கள் சம்பளம் உயர்த்தப்பட்டது பணியாளர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி `விசாரணை நடத்த வேண்டும்' என வாஷிங்டன் பணியாளர்கள் சங்கம் வற்புறுத்தியுள்ளது.

நன்றி தினக்குரல்

சனி, 14 ஏப்ரல், 2007

இனிய சர்வசித்து வருடம்


தமிழ் சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்.

புது வருடம் பிறந்து விட்டால் சந்தோசம் பெருகும், உற்றார்கள் ஒன்று கூடி வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் நேரம் அல்லவா இப் புத்தாண்டு.
ஈழத்திலுள்ள அகதி முகாம்களில் தமிழர்கள் படும் வேதனை இன்றோடு தீர்ந்து புத்தாண்டு புதியதாய் மலர்ந்து நல்வாழ்வு மலர வேண்டும். ஈழத் தமிழர்கள் புத்தாண்டு பிறப்பன்று காலையில் எழுந்து மருத்துநீர் வைத்து நீராடி புத்தாடை அணிந்து பொங்கலிட்டு இறைவனுக்கு படையலிட்டு இன்றைய நாளை வரவேற்பது காலங்காலமாய் நடந்தேறும் நிகழ்ச்சி, ஆனால் இன்று இந்நிகழ்வு எத்தனை தமிழர்களின் வீட்டில் நடக்கும்? கண்ணீரே தமிழர்களின் வீடுகளை நிரப்புகின்றன.

சிறு வயதில் புத்தாண்டுப் பிறப்பென்றால் ஒரு வாரத்துக்கு முன்னமே சந்தோசம் வந்து விடும், பெற்றோர் அழகு பார்த்து வாங்கித் தந்த புத்தாடையை அணிய வேண்டுமல்லவா, முதல் நாள் இரவு நித்திரையே வர மறுக்கும், அதிகாலையில் அப்பாவைத் தட்டி எழுப்பி மருத்துநீர் வைத்து குளிப்போமா என கேட்பேன், நேரத்தைப் பாரும் விடிய இன்னும் நேரம் இருக்கு.... எனும் நினைவு வந்து போகின்றது, பின் நீராடி கோவிலுக்கு குடும்பமாய் அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தம்பி மற்றும் தங்கையுடன் போய் வணங்கிவிட்டு வரும் வழியில் உறவினர் வீடுகளுக்கும் போய் வருவது வழக்கம், உறவினர்கள் எங்களுக்கு கைவிசேடம் என பணம் தருவார்கள் இவையெல்லாம் என்னை இப்போது இளம் பராயத்துக்கே அழைத்துச் செல்கின்றது.

உங்களுக்கும் இப்படியான நினைவுகள் வந்து செல்லவில்லையா? நீங்களும் பதிவு செய்யலாமே!

வெள்ளி, 13 ஏப்ரல், 2007

சிங்கள அப்பாவி பொதுமக்களின் படுகொலை


இலங்கையில் ஆயுதக் கலாசாரம் நச்சுப் பார்வையை திணிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து அப்பாவிப் பொதுமக்களின் மீதான படுகொலைகள் சர்வசாதாரணமாக நடைபெறுவதை எவரும் மறுத்துவிட முடியாது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் அனைத்தும் ஸ்ரீலங்கா அரச இயந்திரத்தின் திட்டமிட்ட நசுக்குதலாலும், ஈழ விடுதலை இயக்கங்களாலும் மற்றும் தீவிரவாத போக்குடைய முஸ்லிம்களினாலும் தினமும் நடைபெறுவதனை ஊடங்களின் மூலமாக எல்லோரும் அறியக் கூடியதாக செய்திகள் வருகின்றன. விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களில் அதிகமானோர் ஈழ விடுதலை அமைப்புக்களினால் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் எனும் தகவல் மூடிமறைக்கப்பட்டுள்ள விடையமாகும். அப்போதைக்கப்போது முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் ஆயுதக் கலாசாரத்தின் இரத்தவெறிக்கு இரையாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஈழ விடுதலை எனும் பெயரில் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடையமாகும், போலிக் காரணங்களைக் கூறி மனிதாபிமானமின்றி செய்யப்படும் இப்படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி ஜீவன்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஏதுமறியாத அப்பாவி சிங்கள மக்கள் மீதான கொலை வெறியாட்டத்தின் மூலம் கொலையாளிகள் உலகுக்கு அல்லது ஸ்ரீலங்கா நாட்டுக்கு அல்லது சிங்கள மக்களுக்கு எதைக் கூற முற்படுகின்றார்கள் என்பது தெரியாத விடயமாக உள்ளது.

சிங்கள மக்களைக் கொல்வதால் இன்னும் இன்னும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே
பூசல்கள் விரிசலடைந்து கொண்டு தான் இருக்கும். பதிலுக்கு அவர்களும் தாக்குதல் நடத்த வேண்டுமெனத் தீர்மானித்து சில தமிழர்களை கொலை செய்வார்களேயானால் விளைச்சல் எப்படி இருக்கும். பொது மக்களை அழிப்பதால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை, இதனை ஆயுத மேந்திய சகல தரப்பும் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகும்.


இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்கு உட்பட்ட அவரந்துலாவ பகுதியில் உள்ள பழைய ஊருவ என்ற சிங்கள கிராமத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் புகுந்த ஆயுதபாணிகள் 7 பொதுமக்களைக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 6 பேர் பெண்கள் என்றும், ஒருவர் ஆண் என்றும் ஊடகத் தகவல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தச்சம்பவத்தை விடுதலைப் புலிகளே மேற்கொண்டுள்ளதாக் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது, எனினும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது குறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைப் பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிபதியிடம் சம்பவம் பற்றி தெரிவித்த கிராமவாசி ஒருவர் இன்று மாலை 4.15 மணியளவில் தமது கிராமத்திற்கு ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் இரு பிரிவுகளாகப் பிரிந்து வீடுகளை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் இதில் தனது மனைவி, அம்மா, தங்கை, தங்கையின் மகள் ஆகியோர் உட்பட
6 பெண்களும் 17 வயதுடைய ஒரு இளைஞனும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 13 வயதுக்கும் 85 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்களின் தலை, கால்கள், வயிற்றுப்பகுதி ஆகியவற்றில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த ஏழு சடலங்களும் வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பழைய ஊருவ என்ற கிராமத்தில் குறைந்த எண்ணிக்கையான குடும்பங்களே வசிப்பதாகவும்,
இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் அநேகமானோர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினருக்கு உதவியாக விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலை முறியடித்து, கிராமப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக ஊர்காவல் படை என்ற அணியில் கிராமவாசிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி பிபிசி தமிழோசை

வியாழன், 12 ஏப்ரல், 2007

தமிழீழ வான்படையின் தாக்குதலும் இந்திய நிபுணர்களின் மாற்றுக் கருத்துக்களும்!


சர்வதேச ரீதியில் பல விடுதலை அமைப்புக்களும், எண்ணற்ற தீவிரவாத அமைப்புக்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன, இவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த வேறு எவ்வமைப்புக்களும் தம் கைவசம் விமானப்படையை வைத்திருப்பதற்கான தகவல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வான்படை கச்சிதமாக நடத்தி முடித்த கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கமும் வேற்று அமைப்புக்களும் பற்பல கருத்துக்களை உள்வாங்கி தங்களது உளக்கிடக்கைகளை வெளியிட்டுள்ளன, இதில் அச்சம்சார் பதிலே அதிகம் தொக்கி நிற்கின்றது, இதற்கு இந்தியா ஆதாரபூர்வமாக எக்கருத்தையும் பதிவு செய்யவில்லை, இருந்தும் சில கருத்துக்கள் ஆங்காங்கே கசிந்து கொண்டுதானிருக்கின்றன, இதில் இந்திய பாதுகாப்பு நிபுணர்களிடம் இருக்கும் மாற்றுக்கருத்துக்களுக்கு மத்தியில் பி.இராமன் அவர்கள் பல சந்தேகங்களுக்கு விடை தேடுகின்றார்.

வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு முன் புலிகள் சிறிது காலமாவது அதற்கான பயிற்சியை பெற்றிருக்க வேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் விமான பயிற்சி மேற்கொள்ளப்பட்டதா? அப்பகுதியில் விமானங்கள் பறப்பதை இலங்கை விமானப் படையினரும், இந்தியாவும் கவனிக்காமல் விட்டு விட்டனரா? மீண்டும் வான்வழித் தாக்குதல் இருக்கும் என்று புலிகள் எச்சரித்துள்ளனர். அப்படியென்றால் அதற்குத் தேவையான எரிபொருள் அவர்களிடம் ஏராளமாக இருப்பில் உள்ளது என்பதே இதன் அர்த்தம். அந்த எரிபொருளை அவர்கள் தங்கள் பகுதிக்கு கொண்டு சென்றது எப்படி? புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதியில் ஓடுதளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் மீது சரமாரியாக குண்டுகள் வீசி சேதப்படுத்திவிட்டோம் என்று இலங்கை விமானப்படை முன்னர் தம்பட்டம் அடித்தது. அந்த ஓடுதளத்தை புலிகள் சரி செய்து விட்டனரா? அல்லது அதேபோன்றதொரு ஓடுதளம் மற்றொரு பகுதியில் உள்ளதா? இவ்வாறு பல்வேறு கேள்விகளை ராமன் எழுப்பியுள்ளார். `புலிகள் வான்வழித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஆபத்தானதே' என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். ஆனால், புலிகளின் வான்வழித் தாக்குதலால் மத்திய அரசு கவலை அடையவில்லை. வான்வழித் தாக்குதலுக்கு அடுத்தநாள் மட்டக்களப்புப் பகுதியில் புலிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இவ்விரு சம்பவங்களுக்கு முன் மேற்கத்தைய நாடுகளின் தூதர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இவை அனைத்தும் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள். `இவற்றினால் புலிகள் பலம் பெற்று விட்டதாக கருத முடியாது. முன்பை விட புலிகள் பலவீனம் அடைந்துள்ளதையே இந்தத் தாக்குதல்கள் வெளிப்படுத்துகின்றன' என்று இந்திய உளவுத் துறையினர் கூறுகின்றனர். மூன்று தாக்குதல்களிலும் பெருத்த அளவு சேதம் ஏற்படவில்லை. பீதியை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்குதல் இருந்தாலும், சேதம் மிகக் குறைவே என்பது அவர்களின் கணிப்பு.

புலிகளின் தற்போதைய நிலை குறித்து உளவுத்துறையினர் கூறியதாவது; பீதியை உண்டாக்கவும் மீண்டும் அனைத்து தரப்பினராலும் பேசப்படுவதற்காகவும் இதுபோன்ற தாக்குதல்களை புலிகள் தொடர்ந்து மேற்கொள்ளலாம். ஆனால், அவற்றினால் பெரிய அளவு வெற்றி எதையும் காண முடியாது. சர்வதேச அளவில் புலிகள் மேற்கொண்டுள்ள நிதி திரட்டும் முயற்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புலிகள் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே இதற்கு காரணம். அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இலங்கைத் தமிழர்களால் நிதி திரட்டப்பட்டு புலிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் புலிகள் மீது அனுதாபம் காட்டியவர்கள் தற்போது கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். புலிகளின் எதிர்கால நோக்கம் என்ன? என்பது தான் அவர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. புலிகள் அமைப்பில் உள்ளவர்களின் ஆடம்பர வாழ்க்கை மற்றும் சிறுவர், சிறுமிகளை படையில் தொடர்ந்து சேர்த்து வருவது ஆகியவையே இந்தக் கேள்விக்கு அடிப்படையாக உள்ளது.

புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது மிகப் பெரிய அடி. கடந்த காலங்களில் ஆதரவுக் கரம் நீட்டி வந்த கனடா அரசும் புலிகளின் ஆதரவாளர்கள் நடமாட்டத்தை தடை செய்யத் தொடங்கிவிட்டது. பிரிட்டனும் இதேபோன்ற செயலில் இறங்கியுள்ளது. இவையெல்லாம், புலிகள் அமைப்பினர் மீது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே. இராணுவத்தின் துணையுடன் புலிகளை கட்டுப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை முன்னெப்போதையும் விட இலங்கையில் தற்போது தோன்றியுள்ளது. இதனால் தான், வடக்கு பகுதியில் தீவிர தாக்குதலை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் சிங்கள மக்களிடம் ஒருவித வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. புலிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதை இந்த வெறுப்புணர்வு தான் தடுத்து வருகிறது. இதுவும் புலிகளுக்கு ஒரு பின்னடைவு தான். இவ்வாறு உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி தினமலர்

புதன், 11 ஏப்ரல், 2007

தேன்கூட்டின் விளையாட்டு

தேன்கூட்டிடமிருந்து கிடைத்த மறுமொழியை முன்னைய எனது பதிவில் இட்டிருந்தேன், அவர்கள் குறிப்பிட்டபடி தேன்கூட்டின் இடுகைகள் பகுதியில் அதே நிமிடம் பதிவானது, ஆனால் முன்னர் எனது பதிவுகள் அனைத்தும் தேன்கூட்டின் திரட்டி'ஜி' பகுதியில் தான் பதிவானது, இடுகைகள் பகுதியில் தடம் பதிக்கவில்லை, இப்போது அதற்கு எதிர்மாறாக திரட்டி'ஜி' பகுதியில் எனது பதிவுகள் காணாமல் போய் விட்டன.

என்ன தேன்கூட்டில் இப்படியும் விளையாட்டுக்கள் உள்ளனவா?

தேன்கூட்டின் மறுமொழி

தேன்கூட்டுக்கு ஒரு மடல் எனத் தலைப்பிட்டு நேற்று நான் பதிவு செய்த பகிரங்க மடல் சார்ந்த e mail இற்கு தேன்கூட்டில் இருந்து பதில் கிடைத்தது.

பொறுமை காக்க முடியாமல் நான் பகிரங்கமாக பதிவு செய்த காரணத்தினால் தேன்கூடு எனது ஆதங்கத்தைப் புரிந்து பதில் தந்தமைக்காக நன்றியுடன் அப் பதிலை இத்தால் இணைக்கின்றேன்.

இனிமேல் எனது இடுகைகள் தேன்கூட்டில் பதிவாகும் எனும் நம்பிக்கையில் காத்திருக்கின்றேன்.



அன்பு நண்பருக்கு,

தேன்கூடு தளம் சாகரனின் (கல்யாண்) முழு மேற்பார்வையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருந்ததால் அவருக்கு பிறகு தொடர்ந்து நடத்துவதில் சில நடைமுறை சிக்கல்களும், தாமதங்களும் ஏற்படுகின்றன. இடுகைகள் பகுதியில் புதிய பதிவுகள் இணைப்பதில் இருந்த சிரமங்கள் நீங்கி இப்பொழுது பதிவுகள் இணைக்கத் தொடங்கிவிட்டோம். இனி இந்த வகையான தாமதங்கள் ஏற்படாது என நம்புகிறோம். பொறுமை காத்தமைக்கு நன்றி.

- தேன்கூடு குழு

செவ்வாய், 10 ஏப்ரல், 2007

தேன்கூட்டுக்கு ஓர் மடல்


எனது பதிவுகள் அனைத்தும் தேன்கூட்டின் இடுகைகள் http://www.thenkoodu.com/ பகுதியில் தடம் பதிக்காமல் அடம் பிடித்து தூர நிற்கின்றது, வாசகர்களின் பார்வைக்கு எட்டுவவில்லை, ஆனால் தேன்கூட்டின் திரட்டி'ஜி' http://www.thenkoodu.com/?mode=google பகுதியில் உடனடியாக அரங்கேறுகின்றது, இதற்கான காரணம் என்னவென்று அறிய முடியாமல் இருக்கின்றது, தேன்கூட்டு தாபனத்தாருக்கு இரண்டு மடல்கள் அனுப்பியுள்ளேன். விபரம் தெரிந்தோர் அறியத்தந்தால் உதவியாக இருக்கும்.

ஈழத்து வலைப்பதிவுகளுக்கு தேன்கூட்டில் அதிமுக்கியத்துவம் காட்டப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு சில வலைஞர்களிடம் இருக்கின்றது, ஆனால் இது எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை நான் அறியேன்.

களத்துமேட்டின் பதிவுகள் ஈழம்சார்புடையதாக இருக்கப் போவதில்லை, ஊடகப் புதினங்களைத் திறனாய்வு செய்வதே இதன் நோக்கம், நேர்மையான செய்திகள் மக்களின் புலன்களுக்கு எட்ட வேண்டும் அல்லவா. ஊடகங்கள் அனைத்தும் ஒவ்வொரு தளத்தில் இருந்து தம் பக்கம்சார் கருத்துக்களை எழுதுவதையே தற்போதைய நிலையில் காணக்கூடியதாக இருக்கின்றது, இதில் மாற்றங்காண வேண்டும் என்பதனால் களத்துமேட்டில் நக்கீரக் கருத்துக்களை பதிவு செய்ய விளைகின்றேன்.

சாகரன் கல்யாண் அவர்களின் இழப்பின் பின் தேன்கூடு வலைப்பதிவுகள் மீது அதிக சிரத்தை எடுப்பதில்லையோவென எண்ணத் தோன்றுகின்றது.

எது எப்படி இருப்பினும் தேன்கூடு தமிழ் வலைப்பதிவுகளுக்கு செய்யும் சேவை அளப்பரியது, அதன் சேவை இன்னும் விரிவு செய்யப்பட்டு எல்லோருக்கும் தாயாக இருக்க வேண்டும்.

திங்கள், 9 ஏப்ரல், 2007

சரிநிகரின் மறு பிரவேசம்


சரிநிகரின் மறு பிரவேசம் வரவேற்கப்பட வேண்டிய தொன்றாகும், நண்பன் சிவகுமாரின் ஆளுமையில் இருந்த போது சரிநிகர் காத்திரமான கட்டுரைகளை தந்தது,தெரியாத பல விடயங்களை உலகுக்குக் கொண்டு வந்தது. இணையம், வலைப்பதிவு என்றும் எதுவும் இல்லாத காலகட்டத்தில் சரிநிகர் சிறப்பாகச் செயற்பட்டதனை வாசகர்கள் நன்கறிவர், இவ்வேளையில் சரிநிகருக்கென்று ஒரு குறுகிய வாசகர் வட்டமே நிலைத்திருந்தது, தீவிர அரசியல்வாதிகளும், அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாகக் கற்கும் உயர் வகுப்பு அல்லது பல்கலைக் கழக மாணவர்களிடமும் மற்றும் கட்டுரையாளர்களிடமே சரிநிகர் ஆட்சிமை செலுத்தியது, அக்கட்டுரைகள் நடுநிலை கருத்துக்களை பதிவு செய்திருந்தாலும் கூடவே ஒரு சாராரை மட்டம் தட்டி மேட்டுமைக் குழாத்தின் கருத்துக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடிய விதத்தில் தீவிர மாற்று அரசியல் கருத்துக்கான தளமாக முகவரி காட்டி வாசகர்களுக்கு எட்டியது. கூடவே வால் பிடிப்புகளும் ஆங்காங்கே காணப்பட்டன.

கவர்ச்சிக்கு அடிமையாகியுள்ள இப்புவியில் சாதாரண வெள்ளைக் காகிதத்தில் கறுப்புச் சாயம் தடவி செப்பனிடப்படும் பத்திரிகைகளை தேடிப் பிடிப்பதென்பது கடினமான விடயம், இக் கவர்ச்சி எனும் கொடிய வியாதிக்கு சரிநிகர் தாக்குப்பிடிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டதை எவரும் மறந்துவிட முடியாது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எம் மக்கள் நூறு ரூபாய் கொடுத்து பத்திரிகை வாங்கிப் படிப்பதென்பது முடியாத விடயம், ஆனால் சாதாரண வாசகர்களை மையமாக வைத்து சரிநிகர் வெளிவருமேயானால் வரவேற்கக் கூடியது தான். ஆனால்
சந்தாதாரர்களை மையமாக வைத்து இவ்விலை தீர்மானிக்கப்பட்டிருப்பின் எவராலும் ஒன்றும் செய்ய முடியாதுமீண்டும் கருக்கட்டிய இடத்துக்கே திரும்ப வேண்டிய துர்ப்பாக்கியம் நிகழலாம்.

எப்படி இருப்பினும் தீவிர மாற்று அரசியலென்று கூறி ஒரு சாராரை மட்டம் தட்டி மேட்டிமைக் குழாத்தினரின் கால் தடவி சந்தற்பத்துக்கேற்ப வால் பிடித்து பதிவுகளுக்கு உருக் கொடுக்காமல் சீரான பக்கச் சார்பற்ற சரிநிகர் தடம் பதிக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் அவாவாகும்.

"ம்..." எனும் வலைப் பதிவுக்கு ஆதரவூட்ட இதனைப் பதிவு செய்ய நினைக்கின்றேன்.

`எயார் கனடா'

புலிகளின் விமானங்கள்

ஸ்ரீலங்காவில் தற்போதைய சூழ்நிலையில் அடிக்கடி பேசப்படும் சொற்பிரயோகம் "கொட்டியா" தான், கொட்டியா என்பது புலி என்பதன் சிங்களச் சொல். 26.3.2007 திகதியன்று அதிகாலை தமீழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் சிங்களவர்களின் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது, எவரின் வாயிலும் புலிகளின் விமானம் பற்றிய பேச்சே ஒலிக்கின்றது, ஏதாவது பேரிரைச்சல் கேட்டாலும் உடனே ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து புலிகளின் விமானம் வருகின்றதோ என பார்க்குமளவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானம் பேர் பெற்று விட்டது.

புலிகளின் விமானம் ஸ்ரீலங்கா பகுதிகளில் குண்டு வீச்சுக்களை நடாத்தாமல் தடுப்பதற்காக அரசாங்கம் பலவித முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது, மக்களிடமிருந்து தகவல் திரட்டுவதற்காக இலவச தொலைபேசி இலக்கம் ஊடகங்களின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தொலைபேசி இலக்கத்தின் மூலம் உண்மையான தகவல்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைப்பதை விட பொய்யான தகவல்களே அதிகமாக கிடைப்பதாக அறிய முடிகின்றது.

கொழும்பு நகரைத் தாக்க புலிகளின் விமானம் வந்து விட்டதாக எழுந்த அனாமதேய தகவலைத் தொடர்ந்து கடந்த வாரம் தலைநகல் அல்லோல கல்லோலப்பட்டது, இருபது நிமிடம் சகல மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு இருளில் மூழ்கியிருந்தது கொழும்பு.
யானை அடிக்க முன்னர் தானே அடித்துச் சாவது என்பது இதைத் தானோ!

புலிகள் இயக்கத்தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆரம்ப காலகட்டங்களில் சைக்கிள்களில் வந்தே திடீரென்று தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிள்களில் வந்தும் அதன் பின்னர் சிறிய, பெரிய வாகனங்களில் வந்தும் தாக்குதல்களை விரிவுபடுத்தினர். இவ்வாறே கடற்பிராந்தியங்களில் ஆரம்ப காலகட்டங்களில் படகுகள் மூலம் தாக்குதல்களைத் தொடங்கிய புலிகள் பின்னர் கப்பல்கள், நீர்மூழ்கிப் படகுகளில் வந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தனர். இன்று விமானங்களில் வந்து தாக்குதலை நடத்துகின்றனர். இது மிகவும் பயங்கரமான விடயமாகும்.

புலிகள் அமைப்பு ஹெலிகொப்டர்கள், விமானங்கள் பற்றி இற்றைக்கு 22 வருடங்களுக்கு முன்னரே சிந்தித்து விமானப் படைபலத்தையும் விமானங்களையும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டனர். புலிகள் அமைப்பின் விமானப்படையை உருவாக்கியவர் வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் அல்லது `சங்கர்' எனப்படும் புலிகள் இயக்க முன்னணி உறுப்பினராவார். இவர் புலிகள் அமைப்புடன் இணைந்து கொள்வதற்கு முன்னர் கனடாவிலுள்ள "எயார் கனடா" எனப்படும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றியவராவார். இவர் புலிகள் அமைப்புடன் 1983 ஆம் ஆண்டில் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு 1985 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுட்கால உறுப்பினராக இணைந்துகொண்டார்.

வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் அல்லது "சங்கர்" இவ்வாறு புலிகள் அமைப்பின் விமானப்படையை உருவாக்குவதற்கு முன்னர் கடற்புலிகள் படையணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவராவார். இந்த வகையில் புலிகள் அமைப்பின் கடற்படையையும் வான் படையையும் உருவாக்குவதற்கு அடிப்படையான பலமாக இருந்துள்ளார் சொர்ணலிங்கம்.

இவ்வாறு முதன்முதலில் கடற்புலிகள் படையை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்ட அவர், அக்காலகட்டத்தில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அதிநெருங்கிய சகாவாக இருந்துள்ளார். பின்னர் பிரபாகரனின் விமானப்படை அமைக்கும் கனவை நனவாக்கும் நடவடிக்கைகளில் "சங்கர்" தீவிரமாக ஈடுபட்டார். இதற்காக ஹெலிகொப்டர்களின் இயந்திரம் மற்றும் பாகங்களைத் தனித்தனியாக இங்கு கொண்டுவந்து சேர்த்த அவர் அவற்றைப் பொருத்தி சிறிய விமானம் ஒன்றை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி புலிகள் அமைப்பின் விமானப்படையின் தலைவராகிய அவர் புலிகளுக்காக விமானம் ஒன்றை உருவாக்குவதில் வெற்றிகண்டுவிட்டதாக உலகறிய பகிரங்கமாக புலிகள் இயக்கம் அறிவித்தது. குறித்த 1998 நவம்பர் 27 ஆம் திகதி புலிகள் இயக்கத்தின் விமானம் வன்னியைச் சேர்ந்த முள்ளியவளைப் பிரதேசத்தின் மேலாகப் பறந்து சென்று அங்குள்ள கோவில் ஒன்றுக்கும் உயிரிழந்த புலிகள் இயக்க உறுப்பினர்களின் சமாதிகள் அமைந்திருக்கும் மயான நிலையத்துக்கும் மலர்களைத் தூவியதாக புலிகள் இயக்கம் அறிவித்தது. இந்த நிகழ்ச்சி பற்றிய நேர்முக வர்ணனை புலிகளின் குரல் வானொலி மூலமாக ஒலிபரப்பப்பட்டது. அன்றைய இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியின்போது விமானங்களைத் தாக்கியழிக்கும் ஆயுத உபகரணமும் புலிகள் அமைப்பிடம் இருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டது. இவ்வாறு புலிகள் இயக்கம் அதனிடம் விமானப்படை இருப்பதாக உத்தியோகபூர்வமாக முதன்முதலில் அறிவித்த சந்தர்ப்பம் 1998 நவம்பர் 27 ஆம் திகதியாகிய அன்றாகும். எவ்வாறாயினும் குறித்த புலிகளின் குரல் ஒலிபரப்பின்போது விமானம்பற்றிய மேலதிக விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இவ்வாறு 1998 தொடக்கம் 2007 வரையான தற்போதைய காலகட்டம் வரையில் அதாவது, சுமார் 9 வருடகாலமாக புலிகள் அமைப்பு படிப்படியாக அதன் விமானப் படை பலத்தை அதிகரித்து வந்துள்ளது. 1998 இல் "சங்கர்" புலிகள் அமைப்பின் முதலாவது விமானத்தை உருவாக்கியதைத் தொடர்ந்து சிறிய ஹெலிகொப்டர்கள், பாரம்குறைந்த விமானங்கள் ஆகியவற்றின் பாகங்கள் கொண்டுவரப்பட்டு சிறிய விமானங்களை புலிகள் அமைப்பின் விமானப் படையினர் உருவாக்கினர். புலிகள் இயக்க உறுப்பினர்கள் விமானமோட்டிகளாகப் பயிற்சிபெற்றனர். இவ்வாறு புலிகளின் விமானப் படையின் விமானமோட்டிகளாக இருந்தவர்கள் முன்னர் கனடா, இந்தியா, இங்கிலாந்து உட்பட வெளிநாடுகளில் புலிகள் அமைப்பிற்காகச் செயற்பட்டுவந்த இயக்க உறுப்பினர்களேயாவர்.

இவ்வாறு புலிகளின் விமானப்படை உருவாக்கப்பட்டதற்குப் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் மேலாக விமானங்களில் பறந்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விமானப்பயிற்சிகள் பகல் நேரத்திலும் இரவு நேரங்களிலும் நடத்தப்பட்டன.

புலிகள் அமைப்பின் விமான நிலையம் மற்றும் ஓடுபாதை இரணைமடுவில் அமைக்கப்பட்டுள்ளதைப் போலவே, பிரமந்தன் குளம் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் அமைக்கப்பட்டு புலிகளின் பாரம் குறைந்த விமானங்கள் இறங்குவதற்கும் புறப்பட்டுச் செல்வதற்குமான வசதிகள் செய்யப்பட்டன. இவ்வாறு மேற்படி பிரதேசங்களுக்கு மேலுள்ள வான் பரப்பிலேயே புலிகளின் விமானப்படையினர் விமானம் செலுத்தும் பயிற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். இவ்வாறு இரணைமடுவில் புலிகளின் விமான ஓடுபாதையில் இரண்டு சிறிய விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை முன்னரே சிறிலங்கா விமானப்படையின் செலுத்துநர் இல்லாத தன்னியக்க உளவு விமானங்கள் புகைப்படம் பிடித்துள்ளன.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்ற இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்களில் ஒருவர் அங்கு புலிகளின் விமானத்தரிப்பிடத்தில் சில விமானங்கள் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது பற்றிய தகவல்கள் அடிக்கடி அரச பாதுகாப்புத் துறைக்கு அறிவிக்கப்பட்டன. ஆயினும், அந்தத் தகவல்கள் உண்மையானவை அல்லவென்றே இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், சாத்தியப்பாடான அவ்வாறான தகவல்களை விமானப்படை உயரதிகாரிகள் கவனத்தில் எடுக்காமல் அலட்சியமாகவே இருந்தனர். மொத்தத்தில் பாதுகாப்புத்துறை சிரேஷ்ட தரத்தினர் அனைவருமே மேற்படி தகவல்களை பொய்யெனவே நினைத்தனர். இந்த வகையில் அரச ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூட இதுபற்றித் தெரிவிக்கையில்;

"சிறிய சிறிய விமானங்கள் அவர்களிடம் இருக்கக்கூடும். ஆனால், எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நெருங்கக்கூடிய எவையும் அவர்களிடம் இல்லை. அப்படி வந்தாலும் அவற்றை அழித்துவிட முடியும்" என்று கூறியிருந்தார். இவ்வாறே விமானப்படையினரும் எந்தவொரு புலிகளின் விமானத்தையும் அது வானத்தை நோக்கி எழுந்த 5 நிமிடத்தில் அழித்துவிட முடியும் என்று கருத்துத் தெரிவித்தனர்.

இறுதியில் விமானப்படையினரை ஏமாற்றிவிட்டு, தேசிய பாதுகாப்புப் பலத்தைச் சூனியமாக்கிவிட்டு புலிகள் அமைப்பின் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்துள்ளார். அவர் அந்த விமானங்களைப் புகைப்படம் பிடித்தபோதிலும் உடனே அவை புலிகள் இயக்கத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இறுதியில் விமானப்படையினரை ஏமாற்றிவிட்டு, தேசிய பாதுகாப்புப் பலத்தைச் சூனியமாக்கிவிட்டு புலிகள் அமைப்பின் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்துள்ளார். அவர் அந்த விமானங்களைப் புகைப்படம் பிடித்தபோதிலும் உடனே அவை புலிகள் இயக்கத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இனி புலிகள் இயக்க விமானப்படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் பற்றித் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப கடந்த 2005 அக்டோபர் 19 ஆம் திகதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கிளிநொச்சிப் பகுதிக்கு மேலாக ஏவப்பட்ட சிறிலங்கா விமானப் படையினரின் செலுத்துனரற்ற தன்னியக்க உளவு விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே உடைந்து அப்பகுதியில் விழுந்தது. பின்னர் கிடைத்த தகவல்களுக்கேற்ப புலிகளின் விமானப்படையினர் தமது விமானத்தில் வந்து அந்த உளவு விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து புலிகள் இயக்க விமானப்படையினரின் பயிற்சிகள் பற்றிப் பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றில் வன்னிப் பகுதியில் வான்பரப்பில் புலிகளின் சிறிய விமானங்களும் ஹெலிகொப்டர்களும் கட்டுநாயக்காவுக்கு மேலாகப் பறந்து குண்டுகளை உமிழ்ந்துவிட்டு திரும்பவும் பாதுகாப்பாக வன்னிக்குச் சென்றுவிட்டன. இந்த விமானத் தாக்குதலுக்காக இரண்டு விமானங்கள் கட்டுநாயக்காவுக்கு வந்ததாக புலிகள் அமைப்பு தெரிவித்தது. அவர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் தாக்குதலுக்காக வந்த விமானம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. அது "ஸ்லின் - 143" (Zlin - 143) வகையைச் சேர்ந்த விமானம் என்பதைப் பாதுகாப்புத்துறை உறுதி செய்துள்ளது. அது பாரம் குறைந்த விமான வகையைச் சேர்ந்ததாகும். 7.58 மீற்றர் நீளம் கொண்டதும் இரண்டு இறக்கைகளின் அகலப்பக்கமாக 10.14 மீற்றர் கொண்டதுமான இந்த விமானத்தில் நான்கு பேர் பயணம் செய்து தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். மேலும், ஒரே தடவையில் இந்த விமானத்தில் 600 கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட தூரம் பயணம் செய்ய முடியும். இதன்மூலம் மணிக்கு 260 கிலோமீற்றர் வரை அதிகூடுதலான வேகத்தில் பறந்து செல்ல முடியும்.

வன்னிப் பகுதியிலிருந்து இவ்வாறான இரண்டு விமானங்கள் தெற்கு நோக்கி கட்டுநாயக்க விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த வந்ததாகக் கூறப்பட்ட போதும் விமானப்படை முகாமுக்கு மேலாக ஒரு விமானமே பறந்துசென்று தாக்குதலை நடத்தியதாக விமானப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மற்றொரு விமானம் தாக்குதல் விமானத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக வந்திருக்கலாம் எனவும் அவ்வாறு தாக்குதலுக்காக வந்த விமானத்தின் மீது அரச விமானப்படையினர் தாக்குதல் தொடுத்தால் பதில் தாக்குதல் நடத்துவதற்குத் தயாராக அந்த விமானம் வந்துள்ளதாகவும் மேலும் விமானப்படை தரப்பில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதுவரை புலிகளின் இந்த விமானத் தாக்குதல் பற்றிய விசாரணைகளிலிருந்து தாக்குதலுக்காக வந்த விமானிகளின் எண்ணிக்கை பற்றியோ அல்லது தாக்குதல் நடத்தப்பட்ட முறை பற்றியோ உறுதியான தகவல்கள் பெறப்படாத வகையில் கேள்விக்குறியான நிலைமையே உள்ளது.

-லங்காதீப பாதுகாப்பு விமர்சனம்: 01.04.2007-

நன்றி தினக்குரல்

ஞாயிறு, 8 ஏப்ரல், 2007

கார்டூன்

தினக்குரல் நேளேட்டின் இவ்வார கார்டூன் சித்திரங்கள்



1. ஸ்ரீலங்காவில் அடிக்கடி ஏற்படும் எரிபொருள் விலையேற்றத்தினால் மக்கள் படும் அவஸ்த்தையை சொல்லில் வடித்து விட முடியாது. விலங்கிடப்பட்ட மனிதர்களாய் தோற்ற மளிக்கும் சிவிலியன்கள் பொருட்களுக்கான விலை குறைப்பு எனும் எட்டாக் கனி எப்போது எமது கைக்கு எட்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி வரையப்பட்டுள்ளது.

2. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாதொழித்து பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து தெரிவாகும் பிரதமர் ஆட்சி நிர்வாகத்தை உருவாக்குவதற்கு மறைமுக வேலைத் திட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஸ முயற்சிப்பது போன்ற சித்திரம் வரையப்பட்டுள்ளது.

இமயமலைக்கு ஆபத்து


2030-க்குள் உலகில் பேரழிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். உலகின் மிகப் பெரிய மலைத் தொடர்களுள் முக்கியமானது இமயமலை.
ஐக்கிய நாடுகள் சபையின் இண்டர் கவர்ன்மெண்டல் பானல் அன்ட் கிளைமேட் சேன்ஜ் (ஐ.பி.சி.சி.) தற்போது ஒரு அதிர்ச்சியினை ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டுள்ளது. தற்போது உலகில் அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக உலகில் பல மாற்றங்கள் வரவிருக்கின்றன. கால நிலை மாற்றங்கள் மனிதனின் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அமைய கூடும்... பெருகி வரும் தட்ப வெப்பம் மற்றும் சுற்றுப்புற சூழல் மாசு பாட்டால் ஆசிய கண்டத்தில் உள்ள இமயமலையின் பாதிக்கும் மேற்பட்ட பனி சிகரங்கள் உருகி இமயமலையே பிளந்து விட கூடிய அபாயம் ஏற்பட போகிறது. வருகிற 2030க்குள் இந்த மாற்றம் நடக்கலாம்... மேலும் ஆப்பிரிக்கா கண்டத்தில் பல நாடுகளில் பட்டினி சாவுகள் ஏற்படும். அமெரிக்கா, லத்தீன் நாடுகளில் கடும் சூறாவளி, மற்றும் சுனாமி ஏற்பட்டு. கண்டமே அழியும் சூழல் ஏற்படும்... பங்களாதேஷ் மற்றும் 100க்கும் மேற்ப்பட்ட சிறு சிறு தீவுகள் காணாமல் போய் விடும் அபாயமும் உள்ளது. மேலும் விண்வெளியில் அதிகரித்து வரும் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன்டை ஆக்சைடு வாயுக்களால் பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் ஏறி வருகிறது. இதனால் துருவ பகுதிகள் உருக தொடங்கி நீரின் பரப்பு உயரும் அபாயமும் உள்ளது. இப்போது இருக்கிற கடல் மட்டம் சிறிது உயர்ந்தாலும் இன்றிருக்கும் பல தீவுகள், நாடுகள் கடலுக்குள் மூழ்கும் அபாயமும் உள்ளது.

கடந்த 50ஆண்டுகளுக்கிடையே உயர்ந்த இந்த அதிக வெப்ப நிலைக்கு மனிதர்களாகிய நாமே காரணம்... இப்போது இமயமலையில் 5.லட்சம் கி.மீ. பனிமலை குன்றுகள் உறைந்து கிடக்கின்றன. வருகிற 2030க்குள் 4 லட்சம் பனிமலை குன்றுகள் உருகி விடுமாம் மீதி ஒரு லட்சம் குன்றுகள் பாக்கியிருக்குமாம். மேலும் இந்த அதிக வெப்பத்தால் மற்ற கண்டங்களை விட ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்கள் தான் அதிகளவு பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் சூரிய கதிர்கள் அதிகம் செங்குத்தாக இந்த கண்டங்களில் தான் விழுகின்றனவாம். சில நாடுகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட போவதில்லை என்றும் இதில் ஆறுதலாய் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா, ரஷியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அதிக அளவு நன்மைகள் ஏற்பட கூடுமாம். இங்கு இயற்கையின் எந்த சீற்றமும் இருக்காது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் இயற்கை தனது கோர முகத்தை காட்ட தயாராகி விட்டது என்பதையே இந்த பரபரப்பு ஆய்வறிக்கை நமக்கு உணர்த்துகிறது.

இந்த ஆய்வறிக்கை தயாரிப்பதில் 130 நாடுகளில்ë இருந்து 2.500 விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வறிக்கை 1400 பக்கங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த அறிக்கையில் முதல் பாகம் தான் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் 2-ம் பாகம் வருகிற வெள்ளிக்கிழமை பிரான்சு நாட்டில் நடக்கும் விஞ்ஞானிகள் மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

நன்றி: விழிப்பு.நெற்

வெள்ளி, 6 ஏப்ரல், 2007

கூகிள் தரும் பயன்தகு தளங்கள்

கூகிள் எமக்கு எண்ணற்ற பயன்தகு தளங்களை அள்ளி வழங்குகின்றது. நேரடியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளையும் இன்னும் பல தளங்களையும் ஒரே சுட்டியில் தருகின்றது http://www.google.com/ig/directory?synd=open&source=gghp

Live tv: http://www.cammap.net/tvlive/livetven.html

ABC News Now
Al Jazeera
Animal Planet
Baseball channel
BBC
CNN
Euro news
France 24
MTV
Nasa TV
Russia today
Sky News
WSTV
...........
...........
...........

புதன், 4 ஏப்ரல், 2007

தமிழருக்குத் தமிழ் செம்மொழி

பேராசிரியர் கா.சிவத்தம்பி

தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியும் மொழியியல் அறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பியை ஒரு மழை நாளில் மாலை மயங்கி இரவு பூக்கும் வேளையில் சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் இலங்கையில் உள்ள தமிழ்ச் சூழல் குறித்தும் தமிழகத்திலுள்ள தமிழின் நிலை குறித்தும் தமுஎச தலைவர்களில் ஒருவரான சிகரம் ச.செந்தில்நாதனும் கவிஞர் சா. இலாகுபாரதியும் உரையாடினர். அதிலிருந்து ஒரு பகுதி . . .

ச.செந்தில்நாதன்: நீங்கள் இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கிற இலக்கியவாதி. ஆய்வாளர் என்கிற முறையில் உங்களிடம் ஒரு கேள்வி. எழுத்து சீர்திருத்தம் தமிழுக்குத் தேவை என்பது பற்றி பெரிய அளவில் விவாதம் நடக்கவில்லை என்றாலும் அது பற்றிய குரல் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது பெரியார் காலத்திலிருந்தே வந்திருக்கிறது. இப்போது அதற்கான தேவை இருப்பதாக எண்ணப்படுகிறது. கணினியுகத்தில் எழுத்து சீர்திருத்தம் தமிழுக்குத் தேவை என்ற கருத்தும் இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்கள் தமிழை சுலபமாகக் கற்கவேண்டும் என்றால் எழுத்து சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இந்நிலையில், எழுத்து சீர்திருத்தம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?. . .

கா.சிவத்தம்பி : தமிழினுடைய எழுத்தமைப்பைப் பற்றி பேசுகிறபொழுது முதலில் தமிழ் எழுத்தின் தன்மையைப் பற்றி பேசுவது அவசியம். எழுத்துக்களின் எழுதுநிலைப்பற்றி பேசுகிறபொழுது இரண்டு வகையாக எழுத்துக்களை பிரிப்பார்கள். ஒன்று - அல்ஃபபெட்டிகல் மெத்தட் (Alphabetical method) A,B,C என்கிற மாதிரியான ஒலிகள் மற்றது க, ங . . போல சிலபிக் மெத்தட் (Sylabic method) இந்திய மொழிகளில் பெரும்பாலும் சிலபிக் மெத்தட்தான் உண்டு. மேற்கத்திய மொழிகள்ல ஆல்ஃபபெட்டிகல் மெத்தட் உண்டு. இந்த சிலபிக் இருப்பதினாலே உண்மையில் எங்களுடைய சொற்கள் முப்பதுதான். ஆயுத எழுத்தோடு முப்பத்தி யொன்னு. இது காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. பிரிண்ட் மீடியம் வந்ததற்குப் பிறகுதான் இது ஓரளவிற்கு நிலை பேறான வடிவத்தைப்பெற்றது. அதைப் பெறுகின்ற அதே காலகட்டத்திலேதான் தமிழ் எழுத்தை எடுத்துச் சொல்வதற்கு சில தொழில் நுட்ப வரையறை இருப்பது உணரப்பட்டது. இதனாலே வீரமாமுனிவர் சில எழுத்துச் சீர்திருத்தங்களைச் செய்தார்.

எழுத்து சீர்திருத்தத்தின் தேவையைப் பெரியாரும் உணர்ந்தார். லை, னை போன்ற சொற்களுக்கு சீர்திருத்தம் வந்து அது இப்போது நடைமுறையில் உள்ளது. தட்டச்சுக்கு வருகிறபோது கூட சார்பெழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பது முக்கியமான பிரச்சனையானது. இரட்டைக் கொம்பை எவ்வாறு போடுவது என்பதும் சில எழுத்தொலிகளை எவ்வாறு தட்டச்சில் பதிவு செய்வது என்பதும் பிரச்சனையாகி அது இப்போதும்கூட உண்டு என்று நினைக்கிறேன். கணினி வந்த பொழுது அதிலும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. தமிழில் மேலும் சில எழுத்துச் சீர்திருத்தத்தை செய்ய வேண்டும் என்பது ஒரு நியாயப்பூர்வமான கேள்வி. இது சம்பந்தமாக சிந்திக்கிறபோது இதில் உள்ள முக்கியமான பிரச்சனை என்னவென்றால் இதுவொரு Historical cultural problem. (வரலாற்று ரீதியான பண்பாட்டுப் பிரச்சனை)

நீண்ட காலமாக தமிழை இவ்வாறு அடையாளம் பண்ணுகிற ஒரு மரபு உள்ளது. இந்த அடையாளம் பண்ணுகிற மரபை மொழியினுடைய தனித் தன்மையாக பேணுவது உண்டு. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் உலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன. குறிப்பாக மலேய மொழி அல்லது சுவாகிலி போன்ற மொழிகள் ரோமலிபியைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன. ஐரோப்பாவில் பிரென்ச் முதல் ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிய மொழிகள் எல்லாமே இந்த ரோம லிபியைப் பயன்படுத்துகின்றன. அதே வேளையில் அவற்றிற்கிடையே ஒரு அடித்தளமான பண்பாட்டு ஒருமைப்பாடும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த மாதிரியான ஒரு நிலையை இந்திய மொழிகளில் எடுத்துக்கொள்ள முடியாது.

ஏனென்றால் சமஸ்கிருதத்தைப் பின்பற்றுகிற மொழிகள் அல்லது இந்தி, தேவநாகரியில் உள்ளதைத் தமிழில் கொண்டுவருவதிலே சிக்கல் இருக்கிறது. அதோடே தமிழினுடைய அடித்தளம் மாற்ற முடியாததாக இருக்கின்றது. தெலுங்கில் இப்படித்தான் இருக்கிறது. மலையாளத்திலேயும் இப்படித்தான். இது உண்மையில் எங்களுடைய தமிழ் மக்கள் அடையாளம் பற்றி வைத்திருக்கிற உளவியல் சம்பந்தப்பட்ட பெரிய விடயம் என்பது தெரிய வருகிறது. ஒரு புறத்தில் வேண்டிய மாற்றங்கள் காலம் காலமாக செய்து, இன்னொரு புறத்தில் அந்த சிலபிக் தன்மை உயிர்மெய்களை சார் பெழுத்துக்களை சொல்லுகிற அந்தத் தன்மையும் பேணப்பட்டு வந்திருக்கிறது. உண்மையில் இவை இரண்டையும் இணைத்துத்தான் செய்ய வேண்டும். கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய ஒரு முக்கியமான கருதுகோள்.

இதில் நான் இன்னொன்றையும் சொல்லுகிறேன். இது சற்றே ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையோ என்று நான் அய்யுறுகிறேன். அதாவது அறிவியலின் ஒரு முக்கியத்துவம் என்ன வென்றால் மனிதனுடைய தேவைகளை அவனுடைய விருப்புக்களை நன்கு நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தத்தக்க ஒன்று. அப்போது அறிவியலின் தொழில்நுட்பத் தேவைகளுக்காக ஒரு மொழியினுடைய இயல்பை மாற்றுவதா, அமைப்பை மாற்றுவதா அல்லது அறிவியல் இதற்கு வேண்டிய சில புதிய அனுசரணைகளை அல்லது புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து இதற்கு உதவுவதா என்பது ஒரு முக்கியமான கேள்வி என்று நான் கருதுகிறேன். விஞ்ஞானிக்கு அந்தக் கடனொன்று இருக்கிறது. அறிவியலைக் கொண்டு வரலாம். ஆனால் அது உலக அறிவியலுக்கான, அவை எல்லாவற்றையும் சொல்வதற்கான மொழியல்ல. அப்படி பயன்படுத்தப் படுவதில்லை. அப்படி சொன்னால் அது ஏன் ஆங்கிலத்துக்குப்போச்சு, பிரஞ்ச்காரன் கூட அதை ஏற்றுக் கொள்கிறான் என்று சொன்னால் நாங்கள் எல்லாருமே இரண்டு மொழியை படிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அது பண்பாட்டுத் தேவையில் ஒன்று. மற்றது உலக நிலைத்தேவையில் உள்ளது. இந்தக் கட்டத்தில் பண்பாட்டுத் தனித்துவம் போற்றப்படுவது என்பது இந்த விடயம் கவனிக்கப்படுவது என்பது அந்த சமூகத்தினுடைய உளப்பாங்கோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம்.

எனவே மாற்றங்கள் வந்துள்ளன. படிப்படியாக வரும். படிப்படியாக ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவை செய்யப்படுகிறபோது பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் உள்ள உளப்பாங்கிற்கும் நிலைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காதபடி நடந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் உலக மொழிகளுக்கு ஏற்ற வகையில் தமிழைப் பலப்படுத்த வேண்டும் என்கின்ற அந்த எண்ணத்தையும் கைவிடக்கூடாது. இதுவொரு இக்கட்டான பிரச்சனை. இது மிக நிதானமாகப் பார்க்கப்பட வேண்டும். மாற்றங்கள் அவசியம். ஆனால் அந்த மாற்றங்கள் பண்பாட்டுத் தொடர்ச்சியை அறுக்காத முறையில் அமைவது அவசியம் என்பது என் கருத்து.

ச.செந்தில்நாதன்: இலங்கையில் இலக்கிய வாதிகள், ஆய்வாளர்கள் மத்தியில் இது சம்மந்தமான முயற்சிகள் ஏதாவது நடந்திருக்கிறதா?

கா.சிவத்தம்பி : அப்படியில்லை. எழுத்து முயற்சிகளை செய்யவேணும் என்கிறதைப் பற்றிய பெரிய முயற்சிகள் இல்லை. ஆனால் எங்களுடைய பிரதேசங்களிலுள்ள காணி நிலங்கள் சம்பந்தமான உறுதிகள் என்று நாங்கள் சொல்லுகிற பட்டுவாடா பத்திரங்களிலே உள்ள எழுத்துமுறை பல இடங்களில் தமிழகத்திலுள்ளவைகளை ஒத்திருக்கிற வேளையில் இந்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வருகிறபோது அவற்றையும் மனங் கொள்ளல் வேண்டும் என்று நான் கருதுகிறேன். உதாரணமாக மோடி கொடுத்தார் என்று சொல்கிற போது த்தன்னாவையும் தாவன்னாவையும் சேர்த்து எழுது வார்கள். அதுவொரு கொம்பாக ஃபார்ம் ஆகாது. அந்த மாதிரியான சில வழக்குகள் இருக்கு. துரதிர்ஷ்ட வசமாக அந்த வழக்குகள் பற்றிய ஆழமான சிந்திப்போ சிரத்தையோ இல்லை.

எழுத்து சீர்த்திருத்தத்தில் உள்ள இன்னொரு மிக முக்கியமான விஷயம் என்னன்னா, அச்சுவந்ததன் பின்னர் ஏறத்தாழ நமக்குத் தெரிந்தது எல்லாமே அச்சில் வந்துவிட்டன.


ச.செந்தில்நாதன் : சீன மொழியில் பத்தாயிரம் எழுத்துக்கள் இருந்ததாகவும் அதை இப்போது இரண்டாயிரம் எழுத்துக்களாக குறைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அந்த மொழிக்கு நீங்கள் சொல்வதுமாதிரி வரலாற்று ரீதியாகவோ பண்பாட்டு ரீதியாகவோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கருத்துண்டா?

கா.சிவத்தம்பி : இல்லை. ஆனால் சீன எழுத்துக்களின் வரிவடிவம் அதன் நேர்க்கீழாக எழுதுகிற தன்மை அதையெல்லாம் மாற்றி இப்போது நேர்க்கோட்டில் எழுதுவதென்று வந்துவிட்டது. ஒலிகளும் குறைக்கப்பட்டுவிட்டன. ஆனால் இந்த மாற்றம் ஏற்படுவதற்கு மாவோவின் சிந்தனைகள் என்ற சிறு நூல்கள் முக்கியமானவையாக இருந்தன என்பதை நான் அறிவேன். பேராசிரியர் ஜோசப் மீரான் அதைப் பற்றி ஒரு விரிவுரையிலே விளக்கியபொழுது நான் அந்தக்கூட்டத்திலே இருந்தேன். மாவோ சீன மொழியின் நடைமுறையில் ஏற்படுத்திய மாற்றம் மிகப் பெரியது. அதாவது சித்திரவடிவில் இருந்து சித்திர ஒலிகளாகி பிறகுதான் அந்த வடிவத்தைப் பெற்றது.

எனவே அதைக் குறைப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கலாம். அப்படியிருந்தாலும் அதன் பிறகு அவர்கள் முக்கியமான மாற்றத்தை செய்தார்கள். முதலில் நேர்க்கோடாக எழுதுவார்கள். ஆனால் அந்த மாற்றம் இப்போது கிடையாக எழுதுவது, வலதிலிருந்து இடதிற்குப் போவதாக இருக்கிறது. இதைப் பற்றி சிந்திக்கிறபோது அரபு மொழியில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. கீழிருந்து போறது. அது இன்னும் மாறல. அதற்குப்பின்னால் உள்ள காரணங்கள் என்ன? அவர்கள் எங்களைப் போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கவில்லையா? அதற்கு அவர்களின் பதிற்குறிகள் யாவை? என்பது போன்ற விடயங்களை மனதில் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன் அறிவியலின் ஒரு பயன்பாடு மனித தேவைகளைப் பூர்த்தி செய்வது. மனிதத் தேவைகள் அறிவியலின் தேவைகளுக்கு ஏற்பத் தொழிற்பட வேண்டும். தவறென்று சொல்வது அந்த அறிவு வளர்ச்சியையே கொச்சைப்படுத்துவதாக இருக்கும். என்னுடைய அபிப்ராயம் இதுரெண்டும் சேரும். எப்படி கிரந்த எழுத்துக்கள் வந்தது. கிரந்த எழுத்துக்களும் வட எழுத்துக்கள் தானே. அந்த வடஒலிகளுக்கென தமிழ் நாட்டிலே தோற்றுவிக்கப்பெற்ற எழுத்துக்கள். அதுக்குப்பேரே பல்லவ கிரந்தம். பல்லவர்காலத்து நூல்களிலே காணப்படுகிற எழுத்துக்கள். கல்வெட்டுக்களில் அது தேவைப்பட்டது. ஆனால் அந்த எழுத்துமுறை இப்போ பல இடங்களில் பயன்படுத்துறதில்ல. பாரதியினுடைய எழுத்துக்களுக்கும் எங்களுடைய எழுத்துக்களுக்குமே வித்தியாசம் இருக்கு. அப்படி பார்க்கிறபொழுது இந்த எழுத்துச்சீர்திருத்தம் என்பது தேவையானது. என்னுடைய அபிப்ராயம் என்னவென்றால் அந்த தேவைக்கு கீழே வருகிறபொழுது அந்த பண்பாட்டுத் தொடர்ச்சியும் அதோடு இணைந்துதான் வரும் என்று நான் கருதுகிறேன். சீர்திருத்தம் அல்லது மாற்றம் என்பது தொடர்ச்சி அறுந்துவிட்டதான ஒரு உணர்வினை ஏற்படுத்தி விடக் கூடாது என்று சிரத்தையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

சா.இலாகுபாரதி: மொழிகுறித்து பேசும்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழுக்கான இடம் குறைந்துகொண்டே வருகிறது. மெட்ரி குலேஷன், கான்வென்ட் போன்றவை அதிகமாகிவிட்டன. அரசுப் பள்ளிகளிலே கூட தாய்மொழிவழிக் கல்வி என்பது இன்றைக்குத் தேய்மானத்திலேயே இருக்கிறது. இலங்கையில் இந்த மாதிரியானதொரு போக்கு இருக்கிறதா? அங்கிருக்கும் சூழல் என்ன? இந்தப் போக்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கா.சிவத்தம்பி : இலங்கையிலே முற்றிலும் மாறுபட்ட நிலைமை. இலங்கையில் ஒரு குழந்தை தன்னுடைய தொடக்கக் கல்வி முதல் நிச்சயமாக பல்கலைக்கழக புகுமுகக் கல்வி வரை சில வேளைகளில் பல்கலைக்கழக முதலாவது பட்டப் படிப்பு வரை தமிழிலோ அல்லது சிங்களத்தில் மாத்திரமோ படிக்கிறது. அந்த மாற்றம் ஐம்பதுகளில் ஏற்பட்டு அறுபதுகளில் விசேடமாக கலைத்துறைக்கும் எல்லாப் பல்கலைக் கழகங்களுக்கும் வந்துவிட்டது. ஆங்கிலத்தில் பயிலாமல் இருக்கிற தமிழ் கலைத்துறை மாணவர்கள் பலர் இருக்கிறார்கள். மருத்துவம், என்ஜினீரிங், காமர்ஸ் போன்ற துறைகளை எடுத்துக்கொண்டால் பல்கலைக்கழக புகுமுக முதலாவது வகுப்பில் ஆங்கிலத்தையும் தமிழையும் சேர்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதனால் எங்களுடைய நாட்டின் கல்வித்தரம் எந்த வகையிலும் குறைந்ததாக நான் சொல்ல மாட்டேன். எங்களுடைய மாணவர்கள் இப்படி தமிழிலே படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அங்கே ஆங்கிலத்தில் படிக்கிறார்கள். டாக்டர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எந்தவொரு வகையிலும் குறைந்த டாக்டர்களாக இருப்பதில்லை. மாறாக மாணவர்கள் தொடக்க நிலைக்கல்வியைத் தாய் மொழியில் பயில்வது என்பது மாணவர்களுக்கு அத்தியாவசியமானது. அவர்களுடைய ஆளுமை விருத்திக்கும் கருத்து வெளிப்பாட்டு அபிவிருத்திக்கும் உதவும் என்பது கல்வியியலில் கண்டறியப்பட்ட ஒரு பேருண்மை. அது எல்லோருக்கும் பொதுவானது. அந்த வழக்கும் இந்தியாவில் கன்னடத்தில் உண்டு. வங்காளத்தில் கூட உண்டென்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மாத்திரம்தான் இல்லை என்பது மிகமிக கவலைக்குரிய விடயம். ஆனால் அது தமிழ் நாட்டில் ஏன் இல்லை என்பதற்கான சமூக நிலைக்காரணங்கள் உண்டு. பண்பாட்டு நிலைக் காரணமும் உண்டு.

முதலாவது என்னவென்றால், தமிழ்நாடு என்பது ஒருகாலத்திலிருந்த மெட்ராஸ் பிரசிடென்சியினுடைய எச்சசொச்சமாக வந்தபடியினாலும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருச்சி போன்ற இடங்களில் தமிழர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பலர் இருக் கிறார்கள். இவர்கள் தங்களது குழந்தைகளைத் தமிழில் கற்பிக்க விரும்பவில்லை. எனவே அவர்கள் ஆங்கிலத்தை விரும்புகிறார்கள்; இதுவொரு நிலை.

இன்னொன்று, தமிழர் சம்மந்தப்பட்ட சமூக, பண்பாட்டு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஆங்கிலக் கல்விக்கான வாய்ப்புகள் இருந்ததன் மூலமாகத் தமிழ்நாட்டின் சில சாதிக்குழுமங்கள் மத்தியவர்களைப் பார்த்து அதிக வசதிபெற்று உயர் உத்தியோகங்களுக்குப் போவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த வாய்ப்பு தங்களுடைய குழந்தைகளுக்கு இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக பெரும்பாலான பிராமணரல்லாத சாதியினர் குறிப்பாக படிப்படியாக இப்போதுதான் மேல்நிலைக்கு வந்துகொண்டிருப்பவர்கள் கருதுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு இதுபற்றிய விஞ்ஞானப் பூர்வமான விளக்கம் கொடுக்கப்பட வில்லை. தமிழினுடைய மேன்மைக்கு, தனித்துவத்துக்கு தமிழ்ப்பண்பாட்டின் முக்கியத்துவத்துக்கு பேசிய திராவிட கட்சிகளே இந்தவிசயத்தில் தெளிவான கொள்கையில் இல்லை. அது ரொம்ப கவலைக்குரிய இடம்.

ச.செந்தில்நாதன்: தெளிவான கொள்கை இல்லாதது மட்டுமல்ல இந்த நிலைக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்ல வேண்டும்.

கா.சிவத்தம்பி: அதுமாத்திரமல்ல. இவையெல்லாம் பேசுகிறவர்கள் தமிழ் கற்பித்தல் முறையை இன்றைக்கும் மாற்றவில்லை. பத்துவருடத்துக்கு முந்தியிருந்த இங்லீஷ் புத்தகத்தையும் இப்ப உள்ள இங்லீஷ் புத்தகத்தையும் எடுத்துப் பாருங்க. பத்துவருஷத்துக்கு முந்தி வந்த தமிழ் புத்தகத்தையும் இப்ப உள்ள தமிழ் புத்தகத்தையும் எடுத்து வாசித்து பாருங்க; அடிப்படையில் மாற்றம் இல்லை. ஆங்கிலத்தில் தொடக்கக் கல்வியில் கற்பிப்பதன் மூலம் அந்தப் பிள்ளைகளுக்கு பெரிய அறிவு வருவதாக சொல்வதற்கு என்ன சாத்தியப்பாடு இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பிள்ளையினுடைய பண்பாட்டுச் சூழலில் இல்லாத விடயங்களாக அங்கு பேசப்படுகின்றன. என் பிள்ளை இங்லீஷ் மீடியம் படிக்கிறான், மெட்ரிகுலேஷன் போறான் என்று சொல்லலாமே ஒழிய, உங்கள் வீட்டில் அந்தச் சூழல் இல்லையென்றால் அந்தப் பிள்ளைக்கு அந்த மொழி வராது. இதை சாதாரண பெற்றோர்கள் புரிந்துகொள்றதில்ல. ஆனபடியினால் சொல்றேன் தமிழ்நாட்டினுடைய மிகப்பெரிய கவலைக்கிடமான விடயம் நான் சொல்றது சரியோ தெரியாது. வெளியூர்க்காரன், ஆனால் தமிழன் என்கிற முறையில் சொல்கிறேன் தொடக்க நிலைக் கல்வி தாய்மொழியில் தான் இருத்தல் வேண்டும்.


ச.செந்தில்நாதன்: இப்போது தமிழ் செவ்வியல் மொழி என்று ஆக்கப்பட்டிருக்கு. இதில் ரெண்டு விஷயங்களை நீங்கள் தெளிவாக்க வேண்டும். ஒன்று செம்மொழி கோட்பாடு இலங்கையில் உண்டா? இது பற்றி ஏதாவது பேச்சு உண்டா? இரண்டாவது இந்தியாவில் அரசாணை போட்டு செம்மொழி என அறிவித்தது மாதிரி உலகில் வேறு எங்காவது உண்டா? இதன் மூலம் சர்வதேச அளவில் இந்த ஆணைக்கு மரியாதை இருக்குமா?

கா.சிவத்தம்பி: ரொம்ப சுவாரசியமான கேள்வி. இந்திய அரசு இந்தியாவைப் பொருத்த வரையில் பதினான்கு, இருபது மொழிகளை அதனுடைய உத்யோக மொழிகளாக ஏற்றுக்கொண்டாலும் பொது மொழியாக உத்யோக மொழியாக இந்தியை ஏற்றுக் கொண்டாலும் ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக எடுத்துக் கொண்டுள்ளது. இவற்றிற்கு மேலாக நீங்கள் கிளாசிக்கல் லேங்வேஜுக்கு தமிழில் வைத்திருக்கிற மொழிபெயர்ப்பு பல இடர்ப்பாடுகளை ஏற்படுத்தும். கிளாசிக் என்று சொல்வது வேறு, கிளாசிக்கல் என்று சொல்வது வேறு. கிளாசிக் என்றால் சிறந்தது, நல்லது, உயர்ந்த பண்பாடுகளை உடையது, உயர்ந்ததன் பண்புகளைக் கொண்டது என்றெல்லாம் சொல்லலாம். கிளாசிக்கல் என்று சொன்னால் நீண்டகாலத்திற்கு உரியது, செம்மையானது, செழுமையானது, பழமையானது. நான் பேராசியர் ஒருவரோடு பேசிக் கொண்டிந்தபோது சொன்னேன், செவ்வியல் மொழி செம்மொழி என்கிறதைவிட்டுவிட்டு தொல்சீர்செம்மொழி என்று சொல்லலாம்... அப்போ பிரச்சனை பாதியில்லை. இந்தியாவின் தொல்சீர் செம்மொழிகள் யாவை? சமஸ்கிருதம், பாரசீகம் அதோடு சேர்த்து இந்தியப் பண்பாட்டின் உருவாக்கத்தில் தமிழுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. நான் அந்தக் கணக்கில்தான் கிளாசிக்கல் லேங்வேஜ் என்று பார்க்கிறேன்.
நான் அவரைக் கேட்டேன், கான்ஸ்டிடியூஷன்ல ஏதாவது சொல்லியிருக்காசார். இல்லை என்றார். அப்போ தயவு செய்து தொல்சீர்செம்மொழி என்று சொல்லுங்கள். அந்தமொழிபெயர்ப்பை நாங்கள் கிளாசிக்கலுக்கு இலங்கையில் பயன்படுத்துகிறோம். ஒரு நாட்டின் அரசாங்கம் சிலமொழிகளை கிளாசிக்கல் லேங்வேஜூக்காக பிரகடனப்படுத்துவதுண்டா என்பதும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. அப்படியில்லை. அந்தந்த நாடுகளினுடைய அடிப்படையான நாகரீக வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்ற மொழிகள்தான் அதனுடைய கிளாசிக்கல் லேங்வேஜஸ்.

இலங்கையிலே இப்படியான கிளாசிக்கலை பார்க்கிறதில்லை. பௌத்தர்களுக்கு பாலி மிகமுக்கியம். ஏனென்றால் அது புத்தர் பயன்படுத்திய மொழி. தமிழர்களுக்கு நிச்சயமாக தமிழ் செம்மொழி. ஏனென்றால் அது நீண்டகாலத்துமொழி. தமிழர்களைப்பொறுத்தவரையில் தமிழினுடைய தனித்துவத்தை நாங்கள் வலியுறுத்து கிறோம். ஏனென்றால் அது சமஸ்கிருதத்தினுடைய சாயல்களிலிருந்து வந்ததல்ல. அது திராவிடக்குடும்பத்தின் முக்கியமான மொழி.

தமிழை செம்மொழியாக அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்று சொல்கிற பொழுது இதனை உண்மையில் இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்தில் தமிழுக்கு உள்ள இடத்தை அங்கீகரிப்பதான ஒரு முயற்சியே. இதனால் என்ன லாபம் வரும் என்பது முக்கியமான கேள்வி. அனைத்திந்திய பண்பாட்டில் தமிழினுடைய முக்கியத்துவத்தை தமிழ்ப்பண்பாட்டினுடைய முக்கியத்துவத்தை உலக அறிஞர்கள் அறியத் தொடங்கிவிட்டார்கள். அது முன்னரே இருந்தது, சில கிறிஸ்தவ அறிஞர்கள் அதை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். 50களுக்குப்பின்னர், அந்தப் பண்பு வளர்ந்து வளர்ந்து இந்தியப் பண்பாடு பற்றி பேசுகிறபொழுது தமிழைப் பற்றிய விடயங்களை அறியாமல் இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்தைப் பேசமுடியாது என்பதனை பிலியோசா போன்ற பிரெஞ்சு அறிஞர்கள், ஜெர்மன் அறிஞர்கள், ஆங்கில அறிஞர்கள், அமெரிக்க அறிஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; எழுதியிருக்கிறார்கள். அங்கே இந்த செவ்வியல், செம்மொழி என்பதற்கு முன்னரே டிபார்ட்மெண்ட் இருக்கு.
தமிழர்கள் அல்லாதவர்களுக்கு இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்திற்கு தமிழ்மொழி எவ்வாறு பணியாற்றியுள்ளது என்பதை நாங்கள் அவரவர்கள் மொழிகளிலே அல்லது உலகமுக்கிய மொழிகளிலே உலகப் பொதுவான நிலையில் நின்று எழுத வேண்டும். எடுத்தவுடனே தொல்காப்பியத்திற்கு பதினையாயிரம் வருடம். பத்தாயிரம் வருடம் இப்படியெல்லாம் பண்ண இயலாது. உங்களை மாதிரி எங்களுக்கும் தமிழினுடைய பழமையிலே ஆர்வம் இருக்கு. தொல்காப்பியத்துல நிறைய ஆர்வம் இருக்கு. இப்படி சொல்றதாலே ஒருத்தரும் நம்பாமவிட்றாங்க. தொல்காப்பியத்தின் பெருமையை உலக அகடமிக் ஸ்டாண்டர்படி எழுத வேண்டும்.

நன்றி

திங்கள், 2 ஏப்ரல், 2007

இணையத்தில் உலாவும் சிவாஜி


விரைவில் வெள்ளோட்டம் காண இருக்கும் சிவாஜி திரைப்படத்தின் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் இணையம் மூலமாக காணக்கூடியதாக இருக்கின்றது எதிர்வரும் 4ம் திகதி இத்திரைப்படப் பாடல்களின் கெஸட், சிடி வெளியீட்டு விழாவினை நடத்த தீர்மானிக்கப் பட்டிருந்தது, இருப்பினும் இரண்டு நாட்கள் முன்னதாகவே இன்று சகல பாடல்களும் கொண்ட கெஸட், சிடி விற்பனை தொடங்கி விட்டது.
கடந்த வாரம் மூன்று பாடல்களை இணையத்தில் கேட்கக் கூடிய சந்தற்பம் கிடைத்தது. இன்று சிவாஜி திரைப்படத்தில் காட்சியமைக்கப்பட்ட இன்னும் நான்கு பாடல்களுமாக மொத்தம் ஏழு பாடல்கள் இணைய வழியாக மென் தட்டுக்களில் பதிவு செய்து கேட்கும் சந்தற்பம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் 40 நிமிட காட்சிகள் தமிழ்நாட்டின் தெருக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது எப்படியாக இருப்பினும் திருட்டுத் தனமாக செய்யப்படும் இத்தகைய செயல் கண்டிக்கப்படவேண்டியதே ஆகும்.மில்லியன் மில்லியனாக பணத்தை வாரி இறைத்து திரைப்படத்தைச் செப்பனிட்டு திரையிடும் திகதியை நிர்ணயித்து சுபநேரத்துக்காக காத்திருக்கும் தருணத்தில் இப்படியாக மறைமுகமாக இருந்து பாடல்களையும், திரைப்படப் பகுதிகளையும் அனுமதியின்றி வெளியிடுவது வருந்தத்தக்க விடயமாகும்.

வெளிநாட்டில் இதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பேரூந்து வண்டி ஏல விற்பனைக்காகக் காத்திருக்கின்றது.
சிவாஜி திரைப்படத்துக்கு ரசிகர் மட்டத்தில் ஒரு வரவேற்பு இருந்ததென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
ரஜனிகாந்தை கதாநாயகனாகக் கொண்டு சிறப்பாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் முற்கூட்டியே கசிந்த விடயம் ரசிகர்களின் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ரகுமானிடமிருந்து சிலவேளை இரகசியமாக இப்பாடல்கள் திருடப்பட்டிருக்கலாமென்றும் ஆரூடம் கூறுகின்றார்கள் திரைப்படவுலகத்தைச் சேர்ந்தோர்கள்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----