வியாழன், 29 செப்டம்பர், 2011

ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி! - துக்ளக் சஞ்சிகை


இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்திட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனைக் கைதிகளாகவுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ராஜீவ்காந்தி படுகொலையில் என்ன பங்கு வகித்தார்கள் என்பது தொடர்பாக 2011.09.29ஆம் திகதி வெளிவந்த "துக்ளக்" சஞ்சிகையில் எஸ்.புஸ்பவனம் "ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!" எனும் தலைப்பில் கட்டுரையைப் பதிவு செய்துள்ளார்.
ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!
Rajiv-Gandhi_0Rajiv-mordராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு கருணை காட்ட வேண்டும் என்ற பிரசாரம், தொலைக்காட்சிகள் உதவியுடன் நடைபெறுகிறது. சாதாரணமாக ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்று அறியப்படுபவர்கள், தற்போது ‘மனித நேயக் காவலர்களாக’ அவதாரம் எடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த படுகொலையைப் பற்றிய சில விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
யாழ்ப்பாண மேயர் கொலை வழக்கில் பிரபாகரன் சார்பாக வாதாடிய வக்கீல் எஸ்.நடராஜன், டெஸோ தலைவர் சிறி.சபாரத்தினம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் எம்.பி., E.P.R.L.F. ஜார்ஜ், P.L.O.T.E. வாசுதேவன், E.P.R.L.F. பத்மனாபா, கிருபன், யோக சங்கரி மற்றும் நால்வர் தவிர, ரஞ்சன் விஜயரத்னே, பிரேமதாசா, லக்ஷ்மண் கதிர்காமர், காமினி திசநாயகே, நீலம் திருச்செல்வன், அருணாசலம் தங்கதுரை, சாம் தம்பிமுத்து, சரோஜினி யோகேஸ்வரன், யாழ்ப்பாண மேயர்.... என்று பலர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள். தவிர விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மாத்தையா, கிட்டு உட்பட பலரும் கொல்லப்பட்டனர். இவர்களெல்லாம் யார்? இவர்களுக்கு எது பொதுவானது?
பிரபாகரனுக்குப் பிடிக்காத, அவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் எல்லோரும் ‘துரோகி’ பட்டம் சூட்டப்பட்டனர். ஈவு இரக்கமின்றி, கோழைத்தனமாக, மனித நேயம் துளியும் இன்றி கொலை செய்யப்பட்டனர். இவர்களில் சிலரிடம் அவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டார்கள் விடுதலைப் புலிகள். நிராயுதபாணியாக இருந்தவர்களை ஒருவித விசாரணையுமின்றி விடுதலைப் புலிகள் கொன்ற பல தமிழர்களில் சிலர்தான் இவர்கள். (ரஞ்சன், காமினி, பிரேமதாஸா போன்றோர் சிங்களவர்கள்.)
பல தமிழ்க் குடும்பங்களிலிருந்து சிறுவர்களைக் கடத்திச் சென்று, கோழைத்தனமாக அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாக்கினார்கள் விடுதலைப் புலிகள். பிரபாகரன் கொல்லப்பட்டதும் இக்குடும்பங்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடின. இதுதான் விடுதலைப் புலிகளின் லட்சணம். இப்படிப்பட்டவர்கள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கு 10 வக்கீல்களை இந்திய அரசு அமைத்துக் கொடுத்தது. அந்த வக்கீல்களுக்கு ஃபீஸும் இந்திய அரசே வழங்கியது. 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 251 குற்றச்சாட்டுகள் பதிவாகின.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே 112 மனுக்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்தனர். எல்லாவற்றையும் பரிசீலித்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1993 மே 5– ல் பிராஸிகியூஷன் தனது தரப்பு வாதத்தைத் தொடங்கியது. 1994 ஜனவரி 19–ல் விசாரணை ஆரம்பமானது. ஆயிரத்திற்கும் மேலான ஆவணங்கள், சாட்சியங்கள் பரிசீலிக்கப்பட்டன. சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை 28.1.98 அன்று வழங்கியது;
மேல்முறையீட்டில் உச்சநீதி மன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு 11.5.1999 அன்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை. நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்றவர்கள் ஏற்கெனவே சிறையில் கழித்த காலத்தை தண்டனைக் காலமாகக் கருதி, விடுவிக்கப்பட்டனர். தமிழக ஆளுநர் நளினியின் கருணை மனுவை ஏற்று, அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்றவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஆனால், பிரபாகரனால் துளிக்கூட மனித நேயம் இன்றி கொடூரமாகக் கொல்லப்பட்ட எண்ணற்ற தமிழர்களின் மரணத்தைப் பற்றி, மறந்தும் வாய் திறக்காத இந்த ‘மனித நேயக் காவலர்கள்’, இவ்வளவு முறையாக நடந்து நிறைவு பெற்ற வழக்கில் கொடுக்கப்பட்ட தண்டனையை, ‘மனித நேயமற்ற செயல்’ என்று கூறுவதும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரசாரம் செய்வதும் வேடிக்கை; வேதனை.
சிலர் பொய்ப் பிரசாரத்தின் உச்சத்திற்கே சென்று, “அந்த மூவரும் ‘அப்பாவிகள்’, சும்மா ஒரு பாட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக மரண தண்டனையா” என்று பேசுகிறார்கள்.
சில தினப் பத்திரிகைகளும் இப்பிரசாரத்திற்கு இடமளிக்கின்றன. ‘அப்பாவி’ என்று சொல்லப்படும் பேரறிவாளன், முருகன், சாந்தன் என்பவர்களின் பங்கு ராஜீவ் காந்தி படுகொலையில் என்ன என்பதை, கீழ்கண்ட குறிப்புகளின் மூலம் வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அறிவு (எ) பேரறிவாளன்:
பிரபலமான விடுதலைப் புலி ஆதரவாளரின் மகன். பொது இடங்களில் கடை பரப்பி, கேசட், வீடியோ கேசட், பிரசுரங்கள், புத்தகங்களை விற்பனை செய்து, மற்றும் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிக் கொடுப்பவர். விடுதலைப் புலித் தலைவர் பேபி சுப்ரமணியத்துடன் கள்ளத்தனமாக யாழ்ப்பாணம் சென்று 1990 மே முதல் நவம்பர் வரை தங்கியுள்ளார். அவர் விடுதலைப் புலிகளுடன் இருக்கும் வீடியோ படங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் உள்ளன. ராஜீவ் காந்தியைக் கொல்வதுதான் திட்டம் என்பது தெரிந்தே முழு மூச்சாக விடுதலைப்புலி சிவராசனுக்கு உதவினார் பேரறிவாளன்.
பஜாஜ் மோட்டார் சைக்கிளை இவர் பெயரில் சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தது, ஒயர்லஸ் செட்டுக்கு வேண்டிய பேட்டரியை வாங்கிக் கொடுத்தது, மனித வெடிகுண்டு தனுவின் உடம்பில் கட்டிய வெடிகுண்டை இயக்க, கோல்டன் பவர் பேட்டரியை வாங்கிக் கொடுத்தது எல்லாம் இவர்தான். படுகொலை நடந்த பின் செய்தித் தொடர்பு வேலையைச் செய்தவரும் இந்தப் பேரறிவாளன்தான். விடுதலைப் புலிகளின் மறைவிடத்திலிருந்து தூர்தர்ஷன் செய்திகளைப் பதிவு செய்து, யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது இவருடைய முக்கிய வேலையாக இருந்தது. சுபா சுந்தரம் ஸ்டூடியோவிற்கு அடிக்கடி சென்று செய்திகளைப் பரிமாறிக் கொண்டு, திட்டம் தீட்டும் வேலையில் ஈடுபட்டார் இவர். முருகன் அவ்வப்போது இவர் வீட்டில் தங்குவார்.
முருகன்:
இவர் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். இந்தப் படுகொலையை நடத்துவதற்காகவே, சிவராசன் தலைமையில் கோடியக்கரையில் வந்து இறங்கிய 9 பேர்களில் இவர் ஒருவர். வயர்லெஸ் செட் தொடர்பு, சிவராசனுக்குப் பல வகைகளிலும் உதவுவது, பணம் பட்டுவாடா செய்வது ஆகியவை இவரது பொறுப்புக்கள். நளினியைச் சந்தித்து அவர் மீது இவர் காதல் வயப்பட்டதால், பொட்டு அம்மன் இவரை யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப உத்தரவிட்டார். படகுக்காக கோடியக்கரையில் சில நாட்கள் காத்திருந்தார். அந்த நாட்களில் நளினியின் ஒத்துழைப்பு சிவராசன் குழுவுக்குக் கிடைப்பது வெகுவாகக் குறையத் தொடங்கவே, நளினியின் ஒத்துழைப்பு வேண்டுமென்றால், முருகன் இங்கு இருப்பது அவசியம் என்று கருதி, சிவராசன், முருகனைத் திரும்ப அழைத்தார்.
முருகன், யாழ்ப்பாணம் செல்லும் முன், இயக்கத்தின் முக்கியமான கடிதங்கள், ஆயுதங்கள், புத்தகங்கள் மற்றும் வரவு செலவுக் கணக்குகளை கோடியக்கரை சண்முகத்திடம் கொடுத்து, பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னார். அதை சண்முகம் கடற்கரை மணலில் புதைத்து வைத்தார். சண்முகம் கைதானவுடன் அவை அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்தன; முருகனின் முழுப் பங்கும் வெளியானது.
இந்து மாஸ்டர் எனப்படும் முருகன்தான் நளினியை மூளைச் சலவை செய்து, ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டியவரே, அதற்காக எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு நளினியைக் கொண்டு வந்தவர்.
மே 7, 1991 அன்று வி.பி.சிங் கூட்டத்தில் நடந்த படுகொலைக்கான ஒத்திகையில் பேரறிவாளன், ஃபோட்டோ கிராபர் ஹரிபாபு, நளினி, சிவராசனுடன் முருகனும் பங்கேற்றார்.
முருகனின் மடிப்பாக்கம் வீட்டிலிருந்து வயர்லெஸ் செட்டுகளும், சங்கேத மொழிக்குறிப்பும் கைப்பற்றப்பட்டன. இவர் பிடிபட்டவுடன், சயனைட் சாப்பிட முயன்றார். அது தடுக்கப்பட்டு கைதானார்.
சாந்தன்:
சின்ன சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா, சிவராசனின் உதவியாளர். இவரும் விடுதலைப் புலிகளின் உளவுத் துறையைச் சேர்ந்தவர். சிவராசனுடன் மே 2–ல் சென்னைக்கு வந்து, அவருடன் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் தங்கியவர். ஃபோட்டோ கிராபர் ஹரிபாபுவுடனும் 1 வாரம் தங்கினார்.
மே 1– ஆம் தேதி சிவராசன் தலைமையிலான குழுவுடன் கோடியக்கரைக்கு வந்தார். சிவரூபன் போன்ற விடுதலைப் புலிகளை வேதாரண்யத்திலிருந்து திருச்சிக்கு அழைத்துச் சென்றவர் இவர். சிவராசனின் கூட்டாளிகளுக்குத் தகவல்களை எடுத்துச் செல்வது, பணப் பட்டுவாடா செய்வது, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, ஒரு மறைவிடத்திலிருந்து மற்றொரு மறைவிடத்திற்கு ரகசியமாக நபர்களை அழைத்துக் கொண்டு போவது போன்றவை இவரது வேலை.
1988–ல் அமைதிப் படையினரால் யாழ்ப்பாணத்தில் பிடிபட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர் இவர். 1990 பிப்ரவரியில் சிவராசன் பண உதவி செய்ய, சென்னை எம்.ஐ.இ.டி. கல்லூரியில் சேர்ந்தார். பத்மநாபா கொலையில் இவருடைய பங்கு முக்கியமானது. ஜக்கரியா காலனியில் EPRLF உடன் பழகி அவர்களது நம்பிக்கையைப் பெற்று, பத்மநாபாவின் நடவடிக்கைகளை கண்காணித்து, சிவராசனிடம் அவ்வப்போது சொல்லி, பத்மநாபா மற்றும் 7பேர் படுகொலை செய்யப்பட ஏற்பாடு செய்தவர்.
1991 ஏப்.28 அன்று சிவராசனுடன் பொட்டு அம்மனைச் சந்தித்தபோது, ராஜீவ் காந்தி படுகொலைத் திட்டம் பற்றி இவரிடம் விளக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர்தான் கொலை செய்யப்பட வேண்டிய இடம் என்று முதலில் சிவராசன் இவருக்குத்தான் சொன்னார். அதன்பின் ஏற்பாடுகள் இவருடையது. மரகதம் சந்திசேகரின் மகன் மூலம், ரூ.5 லட்சம் தேர்தல் நிதி கொடுத்து, மாலை போட அனுமதி வாங்கியதும் இவர்தான். படுகொலைக்குப் பிறகு, சிவராசன், நளினி, சுபாவுடன் ஆட்டோவில் ஏறி டிரைவர் அருகே உட்கார்ந்து சென்னைக்கு வந்தார். கத்திப்பாராவில் இறங்கிக் கொண்டார். சிவராசன் தப்பிக்க சிவராசனுக்கும், திருச்சி சாந்தனுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இதுதான் இவர்களுடைய பூர்வோத்ரம்.
இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டவை. ராஜீவ் காந்தி கொலைச்சதியில் முக்கியப் பங்கு வகித்ததால்தான், இவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
‘ராஜீவ் காந்தி உயிரோடிருந்தால் இவர்களை மன்னித்திருப்பார்’ என்கிறார் கருணாநிதி. இந்தப் பிதற்றலை துக்ளக் ஆசிரியர் சிறப்பாக நையாண்டி செய்திருந்தார். ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்திப் பார்ப்போம். அவரது தாயார் 31 அக்.1984 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அப்படுகொலையில் சம்பந்தப்பட்ட சத்வந்த் சிங்குக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. அவருக்குத் தூக்கு வேண்டாம் என்று ராஜீவ் காந்தி சொல்லவில்லை! சத்வந்த் சிங் தூக்கிலிடப்பட்டார்.
சரி, ராஜீவ் காந்தியுடன் இறந்த மற்றவர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதி? ஒரு கொலை செய்யப்பட்டாலே, இறந்தவர்களின் குடும்ப வேதனையைக் காண்பிக்கும் தொலைக்காட்சிகள், இந்த 17 பேரின் குடும்பங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஏன் விவாதிக்கக் கூடாது? குண்டு வெடிப்பின்போது சுற்றி நிற்கும் பல அப்பாவிகளும் இறந்து போவார்கள் என்று, தெரிந்தே செய்யப்பட்ட தீவிரவாதச் செயல் இது.
இதில் பலியானவர்கள்
1. பி.கே.குப்தா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அலுவலர்,
2. பி.கே. எஸ்.முகமது இக்பால், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,
3. ராஜ குரு, பல்லாவரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்,
4. சி.எட்வர்ட் ஜோசப், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்,
5. வி.எத்திராஜுலு, குன்றத்தூர் காவல்நிலைய எஸ்.ஐ.,
6. எஸ்.முருகன், சோமங்கலம் காவல்நிலைய கான்ஸ்டபிள்,
7. ஆர்.ரவிச்சந்திரன் (எஸ்.பி.சி.ஐ.டி. கமாண்டோ கான்ஸ்டபிள்),
8. தர்மன், காஞ்சிபுரம் ஸ்பெஷல் பிராஞ்ச் கான்ஸ்டபிள்,
9. திருமதி. சந்திரா, காஞ்சிபுரம் கான்ஸ்டபிள்,
10. திருமதி. லதா கண்ணன், அரக்கோணம்,
11. செல்வி. கோகில வாணி (லதா கண்ணனின் மகள்),
12. திருமதி. சந்தானு பேகம், திருமுல்லைவாயில்,
13. டரியல்பீட்டர் (கொலைக்குழு) திருமங்கலம், சென்னை,
14. செல்வி.சரோஜாதேவி, ஸ்ரீபெரும்புதூர்,
15. முனுசாமி (முன்னாள் எம்.எல்.சி., சென்னை),
16. தனு (விடுதலைப் புலி),
17. ஹரிபாபு (கொலைக் குழுவின் ஃபோட்டோ கிராபர், சென்னை)

இவர்களில் கொலைக் குழுவினரைத் தவிர மற்றவர்கள் உயிருடனோ, ஆவியாகவோ திரும்பி வந்தால், இந்த மூவரையும் மன்னித்து விடுவார்களா? அவர்களின் குடும்பங்கள்தான் மன்னிக்குமா?
மிகவும் பாராட்டப்பட்ட தீவிர புலனாய்வுக்குப் பின் 6 வருடங்கள் வழக்கு நடந்து, இரு தரப்பினருக்கும் அதன் பிறகே அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி, சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதை மறுபரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இந்த மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பிறகு கருணை மனு கவர்னரால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. மற்றொரு கருணை மனு ஜனாதிபதியால் தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இவ்வளவு நடந்த பிறகும் ‘இவர்களுக்கு தூக்குத் தண்டனை கூடாது; காலம் கடந்து விட்டது. இதற்கு சட்டத்தில் இடம் இல்லை’ என்று கூறுவதை மனசாட்சி உள்ளவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
நன்றி: துக்ளக்

1 கருத்து:

  1. சோ இராமசுவாமி ஐயரிடம் இருந்து இந்த கருத்து வருவதில் வியப்பேதும் இல்லை, சுப்பிரமணிய ஐயர் மற்றும் சந்த்ராசாமி ஐயர் இவர்களுக்கும் மடையன் ராசீவ் காந்தி கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை இதை நான் சோ வின் சார்பாக நான் சொல்கிறேன் தயவு செய்து இதையும் நம்புங்கள்....

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----