இலங்கைத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அண்மைக் காலமாக மர்ம மனிதன் எனும் பீதி மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றது. இதனைச் செய்வித்துக் கொண்டிருப்பது அரசாங்கமே என பல்வேறு சந்தற்பங்களில் அடையாளம் காணப்பட்டிருந்தும் அரசாங்கமோ அல்லது படை தரப்போ மர்ம மனிதன் விடயத்தில் எவ்வித அக்கறையும் காட்டாமல் அல்லது கைது செய்ய முயற்சி எடுக்காமல், மாறாக மர்ம மனிதனைப் பிடிக்க முயலும் பொதுமக்கள் மீதே தாக்குதலும் குற்றமும் சுமத்தப்படுகின்றது.
தமிழர்கள் மீது நிழல் உளவியல் யுத்தம் ஒன்றை உருவாக்கி படையினரை நிரந்தரமாக வடக்கு கிழக்கில் குடிகொள்ள வைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சியாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. இந்த மர்ம மனிதன் விவகாரத்தினால் மாலையானதும் மக்கள் பீதியிலே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். மர்ம மனிதன் அடையாளம் காணப்படுகின்ற போதிலும், அவனைப் பிடிக்க முற்படும் பொது மக்களே மறுதலையாக படையினரால் மர்ம மனிதனாக சித்தரிக்கப்படுவதனால் எது நடந்தாலும் தெருவுக்கு வர மக்கள் அஞ்சுகின்றார்கள்.
மர்ம மனிதன் விவகாரம் இலங்கை வாழ் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களையும் பதட்டநிலைக்கு உள்ளாக்கியிருப்பதாலும், அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மர்மத்தையும் துலக்க வேண்டிய பொறுப்பு தமிழ் பேசும் அரசியல்வாதிகளிடம் உள்ளது, அதனால் தமிழ்பேசும் அரசியலாளர்கள் ஒன்றிணைந்து கட்சி பேதம் பாராமல் மர்ம மனிதன் விடயத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
இதன் முதற்படியாக அரசாங்கத்தின் கவனைத்தைத் திருப்பக் கூடிய வகையில் 2011.09.10 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதம் நடாத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரியின் தலைமையில் ஏற்பாடாகியுள்ளது, இதனை யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான அரசியலாளர்கள் ஏற்று முதற்கட்டமாக நேற்று 2011.09.04 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
யாழ்ப்பாணத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சிலவேளை சங்கரி குழுவினரால் அழைப்பு விடுக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் மக்களுக்கான தீர்வு மற்றும் அன்றாடப் பிரச்சனைக்களுக்கு முடிவு காண முயலும் ஈபிடிபி வரட்டுக் கௌரவம் பாராமல் இப்படியான தமிழ் மக்கள் சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்வதுடன், அடையாள உண்ணா விரத்திலும் கலந்து தமிழர்களை அச்சத்துக்கு உள்ளாக்கி வரும் மர்ம மனிதன் விடயத்தை பொதுப் பிரச்சனையாகக் கருதி அரசின் கவனத்துக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
தொடர்புபட்ட செய்தி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.