தேர்தல் காலம் வந்தால் மாத்திரம் மூட்டை முடிச்சுகளுடன் பரிவாரங்களையும் அழைத்துக் கொண்டு பிரசாரங்களுக்காக தேர்தல் கடை நடத்துபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பது இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் தெரிந்த விடயமாகும்.
தற்போது கல்முனை உள்ளூராட்சி தேர்தல் நெருங்கியுள்ளதால் தங்களது அரசியற் பெட்டிக்கடையினை திறந்து தமிழர்களை மீண்டும் தீவிரவாதத்தின் பக்கம் செல்லக் கூடிய பிரசாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தமிழ்த் தலைமைகளின் பிழையான வழி நடாத்தலில் தமிழினம் அடைந்த இன்னல் நிரந்தர ஊனமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை, அறிந்தும் அறியாதவர்கள் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களை உசுப்பேற்றிக் கொண்டிருப்பது வாக்குகளைச் சேகரிப்பதற்கு மாத்திரமே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் மக்களுக்கு செய்த சேவைகள் என்ன என்பதனைப் பட்டியலிட்டால் தெரியவரும் இவர்களின் வண்டவாளங்கள், தங்களது குடும்பங்களை மேலைத்தேய நாடுகளுக்கு அனுப்ப முயன்றவர்களும், பிள்ளைகள் கல்வி கற்க அரசாங்கத்தின் செல்வாக்கில் "ஸ்கொலசிப்" வாங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்களுமே இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்றால் அதில் மிகையில்லை.
தங்களது குடும்ப உறவுகளுக்கான தேவைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திடம் பின் கதவால் சென்று உதவி பெறும் இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு வாக்களித்த ஏனைய தமிழ் வாக்காளர்களுக்கு தேவையான விடயங்களை பின் கதவாலாவது அரசாங்கத்திடம் சென்று வாங்கிக் கொடுக்கலாமே, சுய தேவைக்காக மாத்திரம் அரசியல் நடத்தும் இவர்களால் மக்களுக்கான தேவைகள் என்றும் பூர்த்தி செய்யப்பட மாட்டாது, இதனை மக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் உணர்ச்சிவசப்படக் கூடிய வார்த்தைப் பிரயோகங்களைச் செய்து தமிழ் மக்களிடம் இருந்து வாக்குகளைப் பெறுவதே இவர்களின் நோக்கம், அரசாங்கத்திடம் இந்த வாக்குகளைக் காட்டி இன்னும் அளவுக்கதிகமான சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதே இவர்களின் நோக்கமாகும், தவிர இவர்களினால் வெற்றி பெறும் பிரதேசங்களொ அல்லது உறுப்பினர்களோ சிறப்புரிமை பெறப்பட மாட்டார்கள், இதனை அண்மைக் கால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் எடுத்துக் காட்டியுள்ளன.
ஆகவே கல்முனைப் பகுதிக்கு அரசியல் பெட்டிக் கடையினை நகர்த்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இனங்காண வேண்டியது தமிழ் வாக்காளர்களின் அவசியத் தேவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.