சனி, 26 ஜூலை, 2008

ஐநா சபைக்குள் நுழைந்த தமிழிச்சி

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நீதிபதியாகவும், தென்னாபிரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றின் முதற் பெண் நீதிபதியாகவும் பணிபுரிந்து வரும் தென்னாபிரிக்காவில் பிறந்த தமிழிச்சி திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஸ்தானிகராக, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, டேபன் நகரின் பேரூந்து ஓட்டுநர் ஒருவருக்கு மகளாக பிறந்த நவநீதம்பிள்ளை அவர்கள் தென்னாபிரிக்க வம்சாவளியாக இருந்தமையால் 28 வருடங்களாக அந் நாட்டின் நிறவெறி அரசாங்கத்தினால் நீதிபதி சம்மேளனத்தில் இணைக்கப்படாமல் இருந்து, 1995 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதல் பெண் மேன்நீதிமன்ற நீதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஐ.நா. சபையினுள் நுழைந்த தமிழிச்சி திருமதி நவநீதம்பிள்ளைக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

வெள்ளி, 25 ஜூலை, 2008

யார் இவள்!

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பை அண்டியுள்ள பூநொச்சிமுனையில் வீட்டுத் திட்ட கிராமத்தின் அருகே கருஞ்சிவப்பு நிற சல்வாரும் வெள்ளை நிற கீழ் அங்கியும் அணிந்துள்ள 20 - 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தெருவில்
கொல்லப்பட்டுக் கிடந்தாள்.

இவளது சடலம் இப்போதும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யார் இவள்! ஏன் இப்படியான கொலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

வியாழன், 24 ஜூலை, 2008

வீரகேசரியே மதவாதம் வேண்டாம் !

இலங்கையின் தேசியப் பத்திரிகையில் ஒன்றான வீரகேசரி "விடிவெள்ளி" எனும் பக்கத்தை ஆரம்பித்திருப்பது வாசகர்கள் அறிந்ததே!

ஒரு தேசியப் பத்திரிகையானது அந் நாட்டில் வாழும் சகலருக்கும் சமவாய்ப்பைக் கொடுக்க வேண்டுமென்பது ஜனநாயக மரபாகும், அவரவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிப்பது சிறப்புக்குரியதே!

இருப்பினும் மதரீதியாக பக்கங்களைப் பிரிப்பது அவ்வளவு நல்லதல்ல என்றே சொல்லத் தோன்றுகின்றது, "கிழக்கின் விடியல்" என்றதுமே தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் செய்தி அல்லது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் ஆட்சிமை பற்றிய செய்தியாக இருக்குமெனும் நோக்கோடு பக்கத்தைத் திருப்பிய போது எதிர்மாறாக "கிழக்கு முஸ்லிம்களின் விடியலை நோக்கி..." எனும் வாசகம் காட்சிக்கு இருந்தமையும், அப்பக்கங்களை அளவுக்கு அதிகமான முஸ்லிம் படைப்பாளிகளைக் கொண்டு பூர்த்தியாக்கி இருந்ததனையும் நோக்கும் போது வீரகேசரியும் மதவாதத்துக்கு அடிபட்டுப் போய்விட்டதோவென எண்ணத் தோன்றுகின்றது.

இன்றைய நிலையில் கிழக்கின் விடியலானது தமிழ் பேசும் மக்களின் விடியலாக நோக்கப்படும் போது பக்கச் சார்பாக முஸ்லிம்களின் விடியலெனப் பார்ப்பது, வீரகேசரியிடமும் நியாயத்தன்மை மரித்து விட்டதோவெனும் புரிதல் மக்களிடம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.

ஆகவே வீரகேசரி "கிழக்கு முஸ்லிம்களின் விடியலை நோக்கி..." எனும் பதத்தை மாற்றி "கிழக்கிலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடியலை நோக்கி..." எனும் தோரணையில் கிழக்கின் விடியலான வீரகேசரியின் விடிவெள்ளி அடுத்த பதிப்பில் மாற்றம் காணுமாயின் சிறப்பாக இருக்குமென்பது "களத்துமேட்டின்" ஆதங்கமாகும்.


http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_021.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_022.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_023.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_024.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_025.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_025.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_027.pdf

செவ்வாய், 22 ஜூலை, 2008

1020 மில்லியன் மக்களுக்கு மலசலகூட வசதியில்லை

அண்மையில் உலக சுகாதார அமையமும், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெவ்வும் இணைந்து தயாரித்துள்ள அறிக்கையின் பிரகாரம் இந்தோனேசியாவில் 66 மில்லியன் பேருக்கும், எத்தியோப்பியாவில் 52 மில்லியன் பேருக்கும், பாகிஸ்தானில் 50 மில்லியன் பேருக்கும், சீனாவில் 32 மில்லியன் பேருக்கும் மலசலகூட வசதி இல்லை எனவும் இந்தியாவில் 665 மில்லியன் பேரும், நைஜீரியாவில் 29 மில்லியன் பேரும், பிரேஸிலில் 18 மில்லியன் பேரும், பங்களாதேஷில் 18 மில்லியன் பேரும் இயற்கைக் கடனை முடிப்பதற்காக திறந்த வெளியைப் பயன்படுத்துவதாக அறிய முடிகின்றது.

இப் புவியில் 1020 மில்லியன் பேர் இயற்கை கடனை முடிக்க மலசலகூடமின்றி திறந்தவெளியையே பயன் படுத்துவதாகவும் இவர்களில் 83 சதவீதத்தினர் ஆசிய, ஆபிரிக்கா போன்ற 13 நாடுகளைச் சேர்ந்தோரெனவும், இந்தியா இப்பட்டியலில் முன்னணீயில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இத்தகைய சுகாதாரக் குறைபாட்டால் தொற்றுநோய் தொடர வாய்ப்பிருப்பதாக இவ் அறிக்கை மூலம் எச்சரித்துள்ளனர்.

ஞாயிறு, 20 ஜூலை, 2008

கணவனுக்குக் கட்டிய நினைவாலயம் - அ.மயூரன் லண்டன்


"பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டிவைச்சாண்டா, எவளாச்சும் ஒரு செங்கல் நட்டுவைச்சாளா' என்னும் பா.விஜயின் வரிகளை மீண்டும் ஒரு முறை மீளாய்வு செய்ய வேண்டும் போல் உள்ளது. ஓர் உண்மையான காதலன் தன் காதலியை இழந்து விட்டால் அவளுக்கு நினைவுச்சின்னம் எழுப்புவது பற்றிக் கோள்விப்பட்டிருக்கின்றோம். அதற்கு தாஜ்மஹால் ஒரு சான்று. ஆனால் ஒரு மனைவி கணவனின் மறைவுக்குப்பின் அவன் நினைவாய் நினைவுச்சின்னம் எழுப்பியுள்ளாள் என்றால் அது விந்தையானது தானே.
கி.மு 623 இல் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது ஹலிகர்னேசஸ் (HALICARNASSUS) என்னும் நகரமாகும். இது தற்போதைய துருக்கியின் துறைமுக நகரமான பொட்ரம் (BODRUM, TURKEY) ஆகும். இந்த நகரத்தை கி.மு.377 இல் கெகற்டோம்நஸ் (HECATOMNUS OF MILAS) ஒவ் மிலஸ் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் இறந்து போக அவனது மகனான மாசோலஸ் கெக்ற்டோம்நஸ் ஆட்சிப் பொறுப்பினைக் ஏற்றான். இவன் ஆட்சிப்பீடம் ஏறியபின் தனது ஆட்சிநிலப்பரப்பை நெய்ற்போரிங் நகரம், மற்றும் அனரோலியா ஆகிய இடங்கள் வரை விஸ்தரித்தான். அவனுக்கு ஆட்டிமிசியா என்னும் தங்கை ஒருத்தி இருந்தாள். அவள் ஆணழகனான மாசோலஸ் மன்னனைக் காதலித்து கரம்பிடித்தாள். அந்தக்காலத்தில் உடன்பிறந்தவர்களை மணப்பது தவறாகத் தெரிவதில்லை. தங்களது உடைமைகள் தமது வம்சாவழியினருக்குக் கிடைக்கவே இவ்வாறு செய்தனர். ஆர்ட்டிமிசியா. காதலுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவள், திருமணத்தின் பின்னும் அவள் தன் கணவன் மேல் கொண்ட பாசத்தையிட்டு உலகமே வியந்தது. இவ்வாறு இருவரும் ஆட்சியை 24 ஆண்டுகள் ஆண்டனர்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை.

மாசோலஸ் மன்னன் திடீரென ஒருநாள் அதாவது கி.மு.353 இல் மரணமடைந்தான்.

ஆர்ட்டிமிசியா கணவனின் பிரிவைத் தாங்காது துவண்டாள். துடித்தாள் இருந்தும் தான் தளர்ந்துவிட்டால் நாட்டை யார் ஆள்வார்கள் எனத் தன்னைத் தேற்றிக்கொண்டு கணவனுக்குப்பதில் நாட்டை ஆளத் தொடங்கினாள். இதனால் கெகற்ரோம்நஸ் நகரம் ஆர்ட்டிமிசியா நாடு எனப்பட்டது.

இருந்தும் அவள் கணவன் மீது கொண்ட பற்றினால் அவனது முகத்தை அவளால் மறக்க முடியவில்லை. கணவனின் நினைவிலிருந்து விடுபட எவ்வளவோ முயன்றும் தோல்வி கண்டாள். முடிவில் ஆர்ட்டிமிசியா தன் அருமைக் கணவனுக்காக நினைவுச்சின்னம் கட்ட முடிவு செய்தாள்.

ஆனால் இந்த நினைவுச்சின்னம் உலகில் உள்ள நினைவுச்சின்னங்களை விட பெரிதாக இருக்க வேண்டும் என நினைத்தாள்.

இன்றைய துருக்கியின் துறைமுகப்பட்டினமான பொட்ரம் தான் அன்றைய ஆர்ட்டிமிசியா நாட்டின் தலைநகராக விளங்கியது.

அந்தப்பட்டினத்திலேயே கணவனின் நினைவுச் சின்னத்தையும் கட்ட ஆர்ட்டிமிசியா தீர்மானித்தாள். இதற்காக கிரேக்க நாட்டிலேயே தலை சிறந்த சிற்பி எனப் போற்றப்பட்ட ஸ்கோபாஸ் ஒவ் பரஸ், என்பவன் தேர்ந்தெடுக்கப்பட்டு வரவழைத்து நினைவுச்சின்னம் அமைக்கும் பணியை தொடங்கினாள். அச்சிற்பி தனக்குத் துணையாக வேறு பலரையும் அமர்த்திப் பணியைத் தொடங்கினான்.

120 அடி அகலமும், 100அடி நீளமும், 145 அடி உயரமும், உடைய நினைவுச்சின்னம் பளிங்கினால் அமைக்கப்பட்டது.

அந்நினைவுச்சின்னத்தின் நான்கு முகப்புக்களை லியோசர்ஸ், பிரையக்ஸ், ஸ்கோப்பஸ் ஒவ் பரஸ், அத்துடன் ரிமோதயஸ் ஆகியோர் கட்டினர்.

அம்முகப்புக்களுக்கு மேல் வானளாவிய உயரத்தில் 36 தூண்கள் அமைக்கப்பட்டு அதற்கப்பால் 24 அடுக்குகள் கொண்ட பிரமிட் வடிவிலான விதானம் அமைக்கப்பட்டது.

அவ்விதம் அமைக்கப்பட்ட கல்லறைக்குள் மாசோலஸ் மன்னனின் உருவச்சிலை வடிக்கப்பட்டது. அத்துடன் கல்லறைக்குச் செல்ல அகலமான இருபது படிகள் அமைக்கப்பட்டன.

இவ்விதமாக மாசோலஸின் கல்லறை முழுமையடையும் தறுவாயில் எவரும் எதிர்பாராத விதமாக இராணி ஆர்ட்டிமிசியா மடிந்து போனாள். (கி.மு.351) இது தனது கணவன் இறந்து இரண்டுவருடங்களின் பின் ஆட்டிமிசியா இறந்தாள். இதனால் கணவன் மனைவி இருவருமே ஓர் இரதத்தில் அமர்ந்திருப்பது போல் சிலை வடித்து கல்லறையில் வைத்தனர். அந்தக் கல்லறைக்கு அவர்கள் மாசோலியம் (THE MAUSOLEUM) எனப்பெயரிட்டனர். அந்த மாசோலஸ் கல்லறை இன்றைய தாஜ்மஹாலைவிட உயர்ந்தது. தாஜ்மஹால் 137அடி உயரமுடையது. ஆனால் மாசோலஸ் 145 அடி உயரமுடையது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக பல காலமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக எல்லா நினைவுச்சின்னங் களுக்கும் ஏற்பட்ட நிலை இந்த மாசோலியத்திற்கும் ஏற்பட்டது. அதாவது கி.மு.334 அளவில் அலெக்சாண்டரின் படையெடுப்பாலும், அதன்பின்னர் கி.மு.62 மற்றும் 58 களில் கடற் கொள்ளைக்காரர்களின் அட்டூழியத்தாலும் இம் மாசோலியம் சிதைவடையத் தொடங்கியது. அதன்பின்னர் 1404 இல் நிகழ்ந்த மிகப்பெரும் பூமியதிர்ச்சியினால் தன்னிலை தளர்ந்து தடுமாறி தரையில் வீழ்ந்து அடிமட்டம் மட்டும் எஞ்சியது. மாசோலியம். கி.பி. 15ஆம் நூற்றாண்டில் மல்டா நாட்டைச் சேர்ந்த நைற் ஒவ் சென்யோன்ஸ் தலைமையிலான படைகள் இந்த மாசோலியத்தினைத் தகர்த்து அதன் கற்களைக் கொண்டு போட்ரம் நகரின் துறைமுகப் பாதுகாப்புக்கென போட்ரம் கோட்டையை (BODRUM CASTLE) 1494 இல் அமைத்தனர். இன்றும் இந்தக் கோட்டையின் சுவர்களில் இப்பளிங்குக் கற்களைக் காண முடிகிறது.

1522 இல் துருக்கியர்கள் கலிகர்னேசஸ் நகரினை முற்றுகையிட்டபோது காவலாளிகள் மாசோலியத்தைப் பாதுகாத்தனர். இதனால் இவ்விடம் பொட்ரம் என அழைக்கப்பட்டது.

பின்னர் 1960 களில் பிரித்தானியாவைச் சேர்ந்த தொல்லியலாய்வாளர் சாள்ஸ் ரோமன் நியூட்டன் என்பவர் இப்பிரதேசத்தை ஆய்வுசெய்தார். இன்றும் பிரித்தானியா அருங்காட்சியகத்திலே இதன் முழுவிபரமும் அடங்கிய எச்சங்கள் காணப்படுகின்றன.

தன் கணவனை ஆழமாய் நேசித்த ஒரு காதலி. தன் காதலின் சிறப்பை உலகுக்கு உணர்த்தும் வகையில் கலையம்சத்துடன் அமைத்த மாசோலியம் இன்று இல்லை.

இருந்தபோதும் ஒரு ஆணுக்காக பெண் ஒரு செங்கல் நட்டுவைத்தாளா என்கின்ற பாடல் வரிகளை இது பொய்யாக்கியுள்ளது. இது ஆண்களுக்காக பெண்கள் ஒரு கல்லைக்கூட நாட்டவில்லை. என்ற ஆண்களின் குற்றச்சாட்டிலிருந்து பெண்கள் விடுதலை பெற இது ஒரு வழியாக அமைந்துவிட்டது எனலாம்.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=20_07_2008_035_002&mode=1

புதன், 5 மார்ச், 2008

உலகத்திலேயே வளர்ச்சி குன்றிய 22வயதுடைய பெண்










உலகத்திலேயே வளர்ச்சி குன்றிய 22வயதுடைய பெண்ணெனும் (Smallest woman in the world. Age-22 years) தலைப்பில் இணையத்தளமொன்றில் சுட்ட படங்கள் இவை, இப்படங்கள் பற்றிய பூரண விபரங்கள் காணப்படாத போதிலும் மனிதரில் இப்படியுமாவென எண்ணத் தோன்றுகின்றது.

நன்றி: நிதர்ஷனம்.நெற்
http://nitharsanam.net/?p=13811#more-13811

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2008

மூக்குடைந்து போன சுரேஸ் பிரேமச்சந்திரன் பா.உ


13 ஆவது திருத்தத்தின் கீழ் இனநெருக்கடிக்கு தீர்வில்லை
ஏற்றுக் கொண்டார் அமெரிக்க தூதுவர்

[14 - February - 2008]
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

இரு தசாப்தங்களை பூர்த்தி செய்திருக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒரு போதும் நிறைவேற்றப் போவதில்லையென வட, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் திருத்தமாக தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்காவும் 13 ஆவது திருத்தத்தின் மூலம் இனநெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர முடியாதென்பதை ஏற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை அந்நாட்டின் தூதுவர் ரொபேர்ட் பிளேக் நேற்று புதன் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், யாழ்.மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று அமெரிக்கத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இச்சந்திப்பு குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்;

"தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களாகிய நாம் தற்போது நாட்டின் நிலைவரம், மனித உரிமை மீறல் விவகாரம், தமிழர் பகுதிகளில் இடம்பெற்றுவரும் விமானத் தாக்குதல்கள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள் தொடர்பாக மேற்குலகின் தூதுவர்களை சந்தித்து விரிவாக எடுத்துரைத்து வருகிறோம்.

இத்தாலி, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர்களை சந்தித்துள்ளோம். அதன் ஓரங்கமாகவே அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக்கை சந்தித்தோம்.

இச்சந்திப்பில் தமிழ் மக்கள் மீதான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறினோம். தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளை உடனடியாக கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் வலியுறுத்தினோம். இலங்கை இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக 1987 இல் மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தம் எந்த விதத்திலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியாதென உடனடியாக தமிழ்த் தலைவர்கள் இந்திய, இலங்கையின் அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதையும் அமெரிக்கத் தூதுவரிடம் சுட்டிக்காட்டினோம்.

இன நெருக்கடிக்கு தீர்வு காண 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக அறிவிப்பு ஆக்கபூர்வமான பயனைத்தரப் போவதில்லையெனவும் ஒற்றையாட்சி முறைக்குள் ஒருபோதும் தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாதெனவும் தூதுவரிடம் விரிவாக எடுத்துரைத்தோம். அத்துடன், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றின் மூலமே பல தசாப்தகாலங்களாக தொடரும் இனநெருக்கடிக்கு நிலையான தீர்வொன்றைக் கொண்டுவர முடியுமென்பது தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கை என்பதையும் அவரிடம் கூறினோம். மேலும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் விமானத்தாக்குதல் நடத்தப்படுவதையும் தாக்குதலின் பின் புலிகள் கொல்லப்படுவதாக போலியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தூதுவரிடம் சுட்டிக்காட்டினோம்.

இவற்றை கவனமாக செவிமடுத்த தூதுவர் பிளேக், உரிய தரப்பினரின் கவனத்துக்கு இவற்றை கொண்டு செல்வதாக உறுதியளித்தார். அதேசமயம், 13 ஆவது திருத்தத்தின் கீழ் இனநெருக்கடிக்கு தீர்வு காணமுடியாதென்பதையும் தூதுவர் ஏற்றுக்கொண்டார்" என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.



அமெரிக்க தூதுவரின் விளக்கம்...
[16 - February - 2008]

13 ஆவது திருத்தத்தின் கீழ் இன நெருக்கடிக்கு தீர்வில்லை - ஏற்றுக்கொண்டார் அமெரிக்கத் தூதுவர் எனும் தலைப்பில் நேற்று முன்தினம் வெளியான தலைப்புச் செய்தி தொடர்பாக அமெரிக்க தூதுவர் ரொவேர்ட் பிளேக் விளக்கமளித்துள்ளார்.

அவரின் விளக்கம் வருமாறு;

2008 பெப்ரவரி 14 ஆம் திகதி உங்கள் தினக்குரலில் பிரசுரித்த என்னுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடான சந்திப்பு சம்பந்தமாக மேலும் விளக்கிக் கூற விரும்புகின்றேன். "13 ஆவது திருத்தத்தின் கீழ் இன நெருக்கடிக்கு தீர்வில்லை - ஏற்றுக்கொண்டார் அமெரிக்க தூதுவர்" எனும் தலைப்பின் கீழ் பிரசுரமானதை வித்தியாசமான முறையில் நான் கூறியதாக நம்புகிறேன். மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வின் ஓர் நல்ல முதல் அத்தியாயமாக 13 ஆவது திருத்த அமுலாக்கம் அமையுமென அமெரிக்கா நம்புகின்றது.

மேலும் பல திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. சர்வகட்சிக் குழுவின் முக்கிய பணிகளைத் தொடர்வதற்காக இலங்கை அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் எமக்கு நம்பிக்கையூட்டுகிறது. தமிழ் மற்றும் ஏனைய சமூகங்களின் அபிலாஷைகள் நிறைவேறக்கூடிய அதிகாரப் பகிர்வுக்கான இணக்கப்பாட்டை கட்டியெழுப்பக் கூடிய நல்ல சந்தர்ப்பத்தை சர்வகட்சிக் குழு வழங்குகிறது. அதன்மூலம் ஒரு ஐக்கிய இலங்கையினுள்ளே நம்பிக்கையும் வாய்ப்புகளுமுள்ள எதிர்காலத்தை அநுபவிக்கலாமென வன்னியிலும் மற்றுமிடங்களிலும் வசிக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முடியும்.

எனது கருத்துக்களை விளக்கிக் கூற சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றி.

சுரேஸ் பிரேமச்சந்திரன் இப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இவரின் நடவடிக்கைகள் அனைத்தும் கிரகித்துக் கொள்ளாமல் அவசரத்தில் விடப்படும் அறிக்கைகள் போன்றே தெரிகின்றது, இவர் ஈபிஆர்எல்எவ் எனப்படும் இயக்கத்தில் பொறுப்பு வாய்ந்தவராக இருந்ததுடன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்பு இலங்கை வந்தடைந்த இந்திய அமைதி காக்கும் படையினருடன் சேர்ந்தியங்கிய மண்டையன் குழுவுக்கு (ஈபிஆர்எல்எவ்) தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இக்குழு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேட்டையாடுவதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பான காலங்களில் பாராளுமன்ற ஆசனம் கிடைக்காத காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சரணடைந்து அவர்களின் சிபாரிசுவில் இப்போது பாராளுமன்ற ஆசனம் பெற்று கிரகிக்காமல் எல்லாம் பதில் அளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆக இவர் பொறுப்பில் இருந்த போது ஈபிஆர்எல்எவ் அமைப்பு எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கும் என்பதை இத்தால் அறிய முடிகின்றது.

வியாழன், 27 செப்டம்பர், 2007

சுன்னாகத்தில் பொதுமக்கள் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல்!

இன்று காலை 9.50 மணியளவில் யாழ்ப்பாணம் சுன்னாகம் மத்திய சந்தை பகுதியில் ரோந்து சென்ற பொலிஸ் வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டும் 17 பேருக்கும் மேற்பட்டோர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொல்லப்பட்டடோர் விபரம்:
1.நாகமுத்து ராசையா (வயது 70) அளவெட்டி.
2.சீனியர் சண்முகராஜா (வயது 49)
3.செல்லையா அசோகன் (வயது 37) கல்லாரை, மல்லாகம்.

படுகாயமடைந்தோர் விபரம்:
1.காசிப்பிள்ளை (வயது 90) கண்ணகி அம்மன் கோவிலடி அளவெட்டி
2.நளாயினி (வயது 45) அளவெட்டி வடக்கு
3.தமிழ்ச்செல்வன் (வயது 35) அளவெட்டி மேற்கு
4.எஸ்.குணமணிதேவி (வயது 50)
5.ஜீ.பொன்னையா (வயது 63) வயது
6.வீ.கமலவாஸ் (வயது 48)
7.ராசையா சிறிசண்முகராஜா (வயது 40)
8.கே.அமுதராணி (வயது 42) தொல்புரம் கிழக்கு
9.சின்னத்தம்பி செல்லத்துரை (வயது 45)
10.ஏ.காந்திமதி (வயது 43)
11.ரீ.சீதாலக்ஷ்மி (வயது 57)
12.ரீ.நாகேஸ்வரி (வயது 46)
13.நந்தகுமார் அளவெட்டி
14.விசாலாட்சி
15.ஜீவன் (வயது 34)
16.ஜே.ஜெகதீஸ்வரன் (வயது 16)
17.ரீ.சர்மிளா (வயது 16)

புதன், 26 செப்டம்பர், 2007

யாழ்.கிளைமோர் தாக்குதலில் இருவர் பலி

நேற்றுக் காலை யாழ்ப்பாணம், வலி மேற்கு சண்டிலிப்பாய் பிரதான வீதி சித்தங்கேணியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரான 42 வயதுடைய சாரதா பரஞ்சோதி என்பவரும் உடுவில் உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் தொழில் நுட்ப உத்தியோகத்தராக பணிபுரியும் 25 வயதுடைய சிறிகாந்தன் நிஷாந்தன் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.

பொது மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதலை "களத்துமேடு" கண்டிக்கின்றது.

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆயுத முகவர் கேபி கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத முகவர் கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தாய்லாந்து நாட்டின் பாங்கோக் நகரில் கைதானதாக "பாங்கோக் போஸ்ட்" பத்திரிகைச் செய்தி பிரசுரித்துள்ளது.

இவர் இன்ரபோல் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top Tamil Tiger arrested in Bangkok

(BangkokPost.com, Agencies)
Thailand has arrested the finance chief of the Tamil Tigers of Sri Lanka, allegedly the group's chief procurer of arms.

Kumaran Pathmanadan is reported to have been arrested by police in Bangkok on Monday evening. He is one of the top officials in the Liberation Tigers of Tamil Eelam, the formal name of the group.

Pathmanadan apparently had obtained Thai citizenship. He continued to run the global network of LTTE offices and its weapons procurement, logistics and money laundering operations.

He has been on Interpol's Most Wanted list for a number of years. He has also been implicated in several assassinations of political leaders.

The online newspaper Asian Tribune called him "the king pin of Tiger arms smuggling".

"He is a noted smuggler of arms and narcotics. Operating with bank accounts opened in London, Frankfurt, Denmark, Athens and Australia... he has had a free run so far," the newspaper alleged

His arrest followed the detention in Ranong province last month of three Tamil Tiger operatives trying to buy guns and 45,000 rounds of ammuntion.

All four were suspected of running a Tamil Tiger gun-running ring centered in Thailand.

Pathmanadan, who also had a number of aliases, has recently been the subject of a manhunt that stretched to Johannesburg, Rangoon, Singapore and Bangkok. Police said they believed he had bank accounts in London, Frankfurt Denmark, Athens and Australia and has over 200 passports for his use.

He and his group are suspected of running weapons purchased Thailand and neighbouring countries to the Tamil Tigers in Sri Lanka. The Tigers have been desinated as a terrorist group by most western countries, but not Thailand.

A Jane's Intelligence report on the group stated that despite the cease-fire agreement in Sri Lanka, the LTTE continued to re-supply cadres. It said:

"While Cambodia is the hub of the LTTE East Asia Network, Thailand continues to serve as the most important country for trans-shipment of munitions and coordination of logistics... its excellent communications infrastructure, proximity to former war zones in both Cambodia and [Burma] and its western coastline facing the Bay of Bengal and Sri Lanka beyond have made Thailand the ancient interface between the LTTE's war zone."

ஞாயிறு, 9 செப்டம்பர், 2007

தாஜ்மஹால் சீனாவில் கட்டப்பட்டுள்ளது!


இந்தியாவில் ஆக்ராவுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் இனிமேல் சீனாவுக்கு படையெடுக்கப் போகின்றார்கள் ஏனெனில் தாஜ்மஹாலைப் போன்று சீனாவின் நிங்சியாவில் உருவாக்கி விட்டார்கள்.

சனி, 8 செப்டம்பர், 2007

ஈபிடிபி பிரதேசசபை வேட்பாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆதரவாளர்களும் சாவகச்சேரி மற்றும் மன்னார் பிரதேசசபை வேட்பாளர்களுமான இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் ஈபிடிபியின் ஆதரவாளரும் அக்கட்சியின் சாவகச்சேரி பிரதேசசபை வேட்பாளருமான கைதடி வடக்கைச் சேர்ந்த 57 வயதுடைய செல்லையா ஜெயபாலசிங்கம்(ஜெயசீலன்) என்பவர், அவரது வீட்டின் முன்பாக துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை ஈபிடிபியின் மன்னார் பிரதேசசபையின் வேட்பாளர் ஒருவரும் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் ஈபிடிபியின் ஆதரவாளரும் அக்கட்சியின் மன்னார் பிரதேச சபைக்கான வேட்பாளருமான வவுனியாவைச் சேர்ந்த 39 வயதுடைய இராசையா யோகானந்தம்(மோகன்) என்பவர் மன்னார், எழுத்தூரில் உள்ள அவரின் வீட்டின் முன்பாக துப்பாகிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வல்வையில் உப்பு விளைந்துள்ளது!

வல்வை பரவைக் கடலில் விளைந்த உப்பை அள்ளுவதற்கு மக்கள் கடகங்களுடன் திரண்டு செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

வல்வைக் குடாக் கடலின் உப்புக்கழி, கொள்ளையன்தூவு, அலைவாய்க்கடல், ஆனைவிழுந்தான், மண்டான்கரை, மாதுவில் முழக்கன், உப்புவல்லை போன்ற பகுதிகளில் செறிவாக உப்பு விளைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 7 செப்டம்பர், 2007

விடுதலைப் புலிகள் இலங்கை இனத்தவர்கள் அல்லர் - ரோஹிக போகல்லாகம

விடுதலைப் புலிகள் அமைப்பில் தமிழர்கள் பலர் இருந்தாலும் அவர்கள் எவரும் இலங்கை தேசத்தினர் அல்லர் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம பெல்ஜியம் நாட்டு பிரசல்ஸ் நகரில் தெரிவித்துள்ளார். பிபிசி உலகச் சேவையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இந் நாட்டின் சமாதானத்திற்காக சர்வ கட்சிக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைய அரசு இறுதிக்கட்ட முடிவுக்கு வந்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அரசு புலிகளை சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அழைத்திருந்த போதிலும் அவர்கள் பின்வாங்கும் நடவடிக்கைகளிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனினும் அவர்கள் தீவிரம் காட்டும் ஜனநாயக திட்டங்களினூடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. தேசிய ரீதியிலான பாதுகாப்புக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் எதிராக புலிகளினால் பல்வேறு பாதுகாப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அதன் போது இடம் பெறும் மேலதிக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலும் இராணுவத்தினர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

(06.09.2007 திவயின)
நன்றி: வீரகேசரி

விடுதலைப் புலிகளில் 19539 மாவீரர்கள் பதிவாகியுள்ளனர்!




தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1982.11.27 - 2007.08.31 வரையான காலப்பகுதியில் மரணித்த மாவீரர்களின் மொத்த எண்ணிக்கை 19539 பேர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு ஏடான "விரிப்பு" தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டம் 7041 பேர்
மட்டக்களப்பு-அம்பாறை 4966 பேர்
வன்னி மாவட்டம் 2879 பேர்
திருகோணமலை மாவட்டம் 1763 பேர்
முல்லைத்தீவு மாவட்டம் 1449 பேர்
மன்னார் மாவட்டம் 1110 பேர்
வெளி மாவட்டம் 331 பேர்

புதன், 5 செப்டம்பர், 2007

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாய்மாரும் குழந்தைகளுமாக எண்மர் சரண்!

யாழ்ப்பாணத்தில் தினமும் நிகழ்ந்து வரும் மனிதப் படுகொலை கலாசார வாழ்வில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கத்தில் அன்றாடம் மக்கள் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் அலுவலகத்தில் சரணடைந்து உயிரைப் பாதுகாத்துத் தருமாறு கேட்கின்றனர்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் சரணடைந்த எண்மரை நீதிமன்றத்தில் பொலிஸார் ஒப்படைத்தனர்.

கொடிகாமத்தை சேர்ந்த 30 வயதுடைய தாயும், அவரது 13,10,மற்றும் மூன்று வயதுடைய மூன்று பிள்ளைகளும், சாவகச்சேரியைச் சேர்ந்த 30 வயதுடைய தாயும் அவரது 8,5,மற்றும் ஒரு வயதுடைய மூன்று பிள்ளைகளுமாக எண்மர் சரணடைந்துள்ளனர்.

தாய்மாரையும் குழந்தைகளையும் சிறைச்சாலையில் தடுத்து வைக்க முடியாததால் இருபாலையில் உள்ள சிறுவர் இல்லத்தில் நீதியமைச்சின் அங்கீகாரத்தினைப் பெற்று பாதுகாக்குமாறு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரஸ்ரீ யாழ் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் ஆகியோருக்கு யாழ் மாவட்ட நீதிபதி திரு.இ.த.விக்னராஜா ஆணை பிறப்பித்தார்.

கடந்த இரு மாதங்களில் உயிரச்சம் காரணமாக 61 பேர் சரணடைந்து யாழ்ப்பாண சிறைச்சாலையில் பாதுகாக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 4 செப்டம்பர், 2007

இலங்கையில் இரண்டரை மில்லியன் நாய்கள்!

இலங்கையில் உள்ள மக்களின் தொகை 18 மில்லியனாகும், ஆனால் இங்குள்ள நாய்களின் தொகை இரண்டரை மில்லியன் என கணக்கெடுப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

திங்கள், 3 செப்டம்பர், 2007

விடுதலைப் புலிகளின் கனரகவாகனம் மோதியதில் கணவனும் மனைவியும் பலி!

கிளிநொச்சி் இரத்திரனபுரம் பகுதியில் 2ஆம் திகதி பிற்பகல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கனரக வாகனம் மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பச்சிலைப்பள்ளி புலோப்பளையைச் சேர்ந்த 58 வயதுடைய யாக்கோப் சந்தியாப்பிள்ளையும் அவரது மனைவியான 51 வயதுடைய திரேசம்மாவும் கொல்லப்பட்டனர்.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2007

விடுதலைப் புலிகளிடம் ஆளணி பற்றாக்குறை.





தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பினுள் ஆளணி பற்றாக்குறை நிலவுவதால் வன்னிப் பகுதியில் பலாத்காரமாக மக்களை தமது இயக்கத்தில் சேர்த்து வருவதாக வோய்ஸ் ஒவ் அமெரிக்கா தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

இந்த சுட்டியில் செய்தியைக் கேட்கலாம்.
http://www.voanews.com/mediaassets/uspolicy/2007_08/Audio/mp3/13722.mp3

சனி, 1 செப்டம்பர், 2007

கைதாகிய சிறுவர்கள் மீது ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினர் விசாரணை


திருக்கோவில் சங்குமன்கண்டி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியினருடன் ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையினர் தாக்குதல் நடாத்திய போது எண்மர் கைதாகியுள்ளதுடன் இவர்களிடமிருந்து வெடிபொருட்களையும் கைப்பற்றியதாக ஸ்ரீலங்கா படை தரப்பு செய்திகள் கூறுகின்றன.

இவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டோர் பெயர் விபரம்
1.ஜீவராசா சுதன் - வயது 15
2.சாமுத் நாடன் திரவுல் - வயது 19
3.பெருமாள் சின்னத்தம்பி - வயது 15
4.தர்மரதம் ரமேஷ் - வயது 16
5.செல்வராசா சுவராஜினி - வயது 15
6.துரைசிங்கம் சுமன் நமீனா - வயது 14
7.விக்னேஷ்வரன் வினோதினி - வயது 16
8.தவராசா ரசீனா - வயது 14

யுனிசெப் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்காக சிறுவர்களை அழைத்து வந்த போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இவ்விடயம் சம்பந்தமாக விடுதலைப் புலிகள் எதுவும் தமக்குத் தெரிவிக்கவில்லையென யுனிசெப் தெரிவித்துள்ளது.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----