
"பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டிவைச்சாண்டா, எவளாச்சும் ஒரு செங்கல் நட்டுவைச்சாளா' என்னும் பா.விஜயின் வரிகளை மீண்டும் ஒரு முறை மீளாய்வு செய்ய வேண்டும் போல் உள்ளது. ஓர் உண்மையான காதலன் தன் காதலியை இழந்து விட்டால் அவளுக்கு நினைவுச்சின்னம் எழுப்புவது பற்றிக் கோள்விப்பட்டிருக்கின்றோம். அதற்கு தாஜ்மஹால் ஒரு சான்று. ஆனால் ஒரு மனைவி கணவனின் மறைவுக்குப்பின் அவன் நினைவாய் நினைவுச்சின்னம் எழுப்பியுள்ளாள் என்றால் அது விந்தையானது தானே.
கி.மு 623 இல் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது ஹலிகர்னேசஸ் (HALICARNASSUS) என்னும் நகரமாகும். இது தற்போதைய துருக்கியின் துறைமுக நகரமான பொட்ரம் (BODRUM, TURKEY) ஆகும். இந்த நகரத்தை கி.மு.377 இல் கெகற்டோம்நஸ் (HECATOMNUS OF MILAS) ஒவ் மிலஸ் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் இறந்து போக அவனது மகனான மாசோலஸ் கெக்ற்டோம்நஸ் ஆட்சிப் பொறுப்பினைக் ஏற்றான். இவன் ஆட்சிப்பீடம் ஏறியபின் தனது ஆட்சிநிலப்பரப்பை நெய்ற்போரிங் நகரம், மற்றும் அனரோலியா ஆகிய இடங்கள் வரை விஸ்தரித்தான். அவனுக்கு ஆட்டிமிசியா என்னும் தங்கை ஒருத்தி இருந்தாள். அவள் ஆணழகனான மாசோலஸ் மன்னனைக் காதலித்து கரம்பிடித்தாள். அந்தக்காலத்தில் உடன்பிறந்தவர்களை மணப்பது தவறாகத் தெரிவதில்லை. தங்களது உடைமைகள் தமது வம்சாவழியினருக்குக் கிடைக்கவே இவ்வாறு செய்தனர். ஆர்ட்டிமிசியா. காதலுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவள், திருமணத்தின் பின்னும் அவள் தன் கணவன் மேல் கொண்ட பாசத்தையிட்டு உலகமே வியந்தது. இவ்வாறு இருவரும் ஆட்சியை 24 ஆண்டுகள் ஆண்டனர்.
யார் கண்பட்டதோ தெரியவில்லை.
மாசோலஸ் மன்னன் திடீரென ஒருநாள் அதாவது கி.மு.353 இல் மரணமடைந்தான்.
ஆர்ட்டிமிசியா கணவனின் பிரிவைத் தாங்காது துவண்டாள். துடித்தாள் இருந்தும் தான் தளர்ந்துவிட்டால் நாட்டை யார் ஆள்வார்கள் எனத் தன்னைத் தேற்றிக்கொண்டு கணவனுக்குப்பதில் நாட்டை ஆளத் தொடங்கினாள். இதனால் கெகற்ரோம்நஸ் நகரம் ஆர்ட்டிமிசியா நாடு எனப்பட்டது.
இருந்தும் அவள் கணவன் மீது கொண்ட பற்றினால் அவனது முகத்தை அவளால் மறக்க முடியவில்லை. கணவனின் நினைவிலிருந்து விடுபட எவ்வளவோ முயன்றும் தோல்வி கண்டாள். முடிவில் ஆர்ட்டிமிசியா தன் அருமைக் கணவனுக்காக நினைவுச்சின்னம் கட்ட முடிவு செய்தாள்.

இன்றைய துருக்கியின் துறைமுகப்பட்டினமான பொட்ரம் தான் அன்றைய ஆர்ட்டிமிசியா நாட்டின் தலைநகராக விளங்கியது.
அந்தப்பட்டினத்திலேயே கணவனின் நினைவுச் சின்னத்தையும் கட்ட ஆர்ட்டிமிசியா தீர்மானித்தாள். இதற்காக கிரேக்க நாட்டிலேயே தலை சிறந்த சிற்பி எனப் போற்றப்பட்ட ஸ்கோபாஸ் ஒவ் பரஸ், என்பவன் தேர்ந்தெடுக்கப்பட்டு வரவழைத்து நினைவுச்சின்னம் அமைக்கும் பணியை தொடங்கினாள். அச்சிற்பி தனக்குத் துணையாக வேறு பலரையும் அமர்த்திப் பணியைத் தொடங்கினான்.
120 அடி அகலமும், 100அடி நீளமும், 145 அடி உயரமும், உடைய நினைவுச்சின்னம் பளிங்கினால் அமைக்கப்பட்டது.
அந்நினைவுச்சின்னத்தின் நான்கு முகப்புக்களை லியோசர்ஸ், பிரையக்ஸ், ஸ்கோப்பஸ் ஒவ் பரஸ், அத்துடன் ரிமோதயஸ் ஆகியோர் கட்டினர்.
அம்முகப்புக்களுக்கு மேல் வானளாவிய உயரத்தில் 36 தூண்கள் அமைக்கப்பட்டு அதற்கப்பால் 24 அடுக்குகள் கொண்ட பிரமிட் வடிவிலான விதானம் அமைக்கப்பட்டது.
அவ்விதம் அமைக்கப்பட்ட கல்லறைக்குள் மாசோலஸ் மன்னனின் உருவச்சிலை வடிக்கப்பட்டது. அத்துடன் கல்லறைக்குச் செல்ல அகலமான இருபது படிகள் அமைக்கப்பட்டன.


பின்னர் 1960 களில் பிரித்தானியாவைச் சேர்ந்த தொல்லியலாய்வாளர் சாள்ஸ் ரோமன் நியூட்டன் என்பவர் இப்பிரதேசத்தை ஆய்வுசெய்தார். இன்றும் பிரித்தானியா அருங்காட்சியகத்திலே இதன் முழுவிபரமும் அடங்கிய எச்சங்கள் காணப்படுகின்றன.
தன் கணவனை ஆழமாய் நேசித்த ஒரு காதலி. தன் காதலின் சிறப்பை உலகுக்கு உணர்த்தும் வகையில் கலையம்சத்துடன் அமைத்த மாசோலியம் இன்று இல்லை.
இருந்தபோதும் ஒரு ஆணுக்காக பெண் ஒரு செங்கல் நட்டுவைத்தாளா என்கின்ற பாடல் வரிகளை இது பொய்யாக்கியுள்ளது. இது ஆண்களுக்காக பெண்கள் ஒரு கல்லைக்கூட நாட்டவில்லை. என்ற ஆண்களின் குற்றச்சாட்டிலிருந்து பெண்கள் விடுதலை பெற இது ஒரு வழியாக அமைந்துவிட்டது எனலாம்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=20_07_2008_035_002&mode=1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.