வெள்ளி, 31 ஆகஸ்ட், 2007

கிளிநொச்சியில் எண்மருக்கு மரண தண்டனை?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வரி பெறும் சுங்கப் பணியில் ஈடுபட்டு வந்த எட்டு உறுப்பினர்கள் அவ் அமைப்பினாலேயே கடந்த இரு வாரங்களுக்கு முன் மரண தண்டனைக்கு இலக்காகி உள்ளனர்.

சேகரிக்கப்பட்ட வரிப்பணத்தை தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தினார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கிளிநொச்சி, வட்டக்கச்சி விளையாட்டு மைதானத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மரண தண்டனை வழங்கியதாக ஸ்ரீலங்கா தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் செய்தி தெரிவித்துள்ளது.

சுட்டுக்கொல்லப்படும் தமிழ் இளைஞர்கள்!

கடந்த 29ஆம் திகதி காலை 10.00 மணியளவில் திருகோணமலை அன்புவழிபுரத்தில் வைத்து கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான 24 வயதுடைய லெப்டினன் கேணல் முரளி எனும் இல.01, பிரதான வீதி, எருவில், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு எனும் சொந்த முகவரியாகக் கொண்ட நடராசா குமணன் என்பவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

30ஆம் திகதி காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணியில் ஈபிடிபி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களான உமா மில்வீதி, செங்கலடி எனும் சொந்த முகவரியாகக் கொண்ட 31 வயதுடைய கண்ணன் எனும் சின்னத்தம்பி சீனிவாசன் மற்றும் அதே வீதியைச் சேர்ந்த குட்டி எனும் 29 வயதுடைய சித்திரவேல் வசந்தன் ஆகியோரும் துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கந்தளாய் ஜனதா மாவத்தையிலுள்ள வியாபார நிலையத்தில் வைத்து 29ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினரான கிளிநொச்சியைச் சேர்ந்த 34 வயதுடைய நடராஜா சுகுமார் என்பவர் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.கந்தளாயில் திருமணம் செய்த இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், அத்துடன் கந்தளாய் பிரதேசசபைத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழின அழிப்பு தொடர்கின்றது,
தமிழ் இளைஞர்களின் மீதான படுகொலை நீள்கின்றது
என்று தணியும் இந்த நோய்!

வியாழன், 30 ஆகஸ்ட், 2007

சிறார்கள் மீதான தாக்குதல் பற்றிய செய்திகளில் முரண்பாடு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து செயற்பட வந்த பராயமடையாத சிறார்களை யுனிசெப் அமைப்பினரின் வேண்டுகோளுக்கமைய ஒப்படைக்கும் நோக்கில் அழைத்து வரப்பட்ட சிறார்கள் மீது திருக்கோவில் தாண்டியடி பகுதியில் வைத்து ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையினர் தாக்குதல் நடாத்தியதாக ஊடகங்களின் வெளிவந்த செய்திகளில் பல திரிபுச் செய்திகளும் அத்துடன் விடுதலைப் புலிகளின் அறிக்கைக்கு யுனிசெப்பினரின் மாற்று அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யுனிசெப் அனுமதியுடன் அவர்களிடம் ஒப்படைக்க கூட்டி வரப்பட்ட சிறார்கள் மீது ஸ்ரீலங்கா படை தாக்குதல்: விடுதலைப் புலிகள்

விடுதலைப்புலிகள் சிறுவர் போராளிகளை எம்மிடம் ஒப்படைக்க உள்ளமை பற்றி எதுவும் தெரியாது: யுனிசெப்


விடுதலைப்புலிகள் அணியின் மீது சங்குமன்கண்டியில் தாக்குதல் நடாத்தினோம்: விசேட அதிரடிப்படை


சிறுவர் போராளிகளை யுனிசெப் அமைப்பினரிடம் கையளிக்க வரும் வழியில் விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகத் தமக்கு எதுவும் தெரியாதென யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைய வந்த சிறார்களை செவ்வாய்கிழமை யுனிசெப் அமைப்பிடம் கையளிப்பதற்காக தாண்டியடி பகுதிக்கு அழைத்து வரும் வழியில் ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படையினர் அவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகளின் தரப்பு செய்திகள் கூறின. ஆனால் விடுதலைப் புலிகள் கூறுவதைப் போல சிறுவர் போராளிகளைக் கையளிப்பது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனினும் இச் சம்பவத்தில் சிறார்கள் காயமடைந்தோ அல்லது கொல்லப்பட்டோ இருக்கலாமென யுனிசெவ் அமைப்பின் பேச்சாளர் திரு. கோர்டன் வெயிஸ் தெரிவித்துள்ளார்.

சங்கமங்கண்டி இராணுவ முகாமை அண்மைத்த பகுதியில் விடுதலைப்புலிகள் சிறிய ரக ஆயுதங்களால் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோட முற்பட்ட வேளையில் விடுதலைப் புலிகள் மீது 28ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் தாக்குதல் நடத்தியதாக ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படை தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2007

பிரித்தானியாவின் திட்டத்தை சிறிலங்கா வரவேற்குமா? -செய்திஆய்வு

இலங்கைப்பிரச்சனைக்குத் தீர்வுகான உதவக்கூடிய வழிமுறைகளை பிரித்தானியா வெளியிட்டுள்ளதன் மூலம் அது இலங்கை விவகாரங்களில் தலையிட விருப்பம் கொண்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 150ஆண்டுகள் பிரித்தானியாவின் காலணித்துவப் பிடிக்குள் இலங்கை அகப்பட்டுக்கொண்டது. ஐரோப்பிய வருகைக்குமுன் தமிழ் சிங்கள இனங்களுக்குத் தனியரசு தனித்தனியாக இருந்து வந்துள்ளது.ஆயினும் பிரிட்டனே பல்வேறு சிற்றசுகளை வெற்றிகொண்டு இலங்கையை ஒரே நிர்வாக அலகாக்கியது.

இன்று இலங்கையில் நிலவும் இன முரண்பாட்டிற்கு பிரித்தானியாவும் ஒருகாரணமாகும். காலணித்துவத்தைக் கைவிட்டுச் சென்றபோது இருதேசிய இனங்களும் சுய உரிமையோடு வாழ ஏற்பாடு செய்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே தனித்தனி நாடுகளாக இருந்தது போன்று அதனைப்பிரி;த்து சுதந்திரம் வழங்கியிருக்கவேண்டும்.

ஆனால் பிரித்தானியா இது பற்றி தூரநோக்கற்று சிங்களவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு கழன்றுசென்றுவிட்டதால் தமிழ் தேசிய இனம் பௌத்த சிங்களபேரின வாதிகளால் நசுக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வந்துள்ளது என்பது யதார்த்த நிலையாகும்.

எனவே காலம் கடந்தாவது பிரித்தானியா இலங்கை இனவிவகாரங்களில் அக்கறையுடன் செயல்பட முன்வந்திருப்பது வரவேற்கக் கூடியதே. அதனுடைய பங்களிப்பு எதுவரை செல்லும் என்பது குறித்து அது வெளியிட்டுள்ள உபாயங்களில் தெளிவாகக் குறிப்பிடவில்லை. பிரிட்டனின் பங்களிப்பை சிறிலங்கா எவ்வாறு எதிர் கொள்ளப்போகிறது என்பதே இன்றுள்ள எதிர்பார்ப்பு.

ஏற்கனவே சிறிலங்கா ஆட்சியாளர்களும் சிங்களப்பேரினவாதச் சக்திகளும் தமிழர்களின் அரசியல் அபிராசைகளை நிராகரித்திருக்கின்றன.

அது ஜே.ஆர் தொடக்கம் பிரேமதாஸா வரைக்கும் சந்திரிகா தொடக்கம் சிறிமாவோ வரைக்கும் எல்லாக்காலங்களிலும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் வன்முறைகள் மூலம் அடக்கப்பட்டது.போராடும் சக்திகளை அரசபயங்கரவாதம் மூலம் நசுக்கியும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் அழித்தும் இன்னும் பிற மனித உரிமை மீறல்கள்மூலம் தமிழர்களை வதைத்தும் பழக்கப்பட்ட சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு எவ்வாறு சர்வதேச சக்திகளை வரவேற்கப் போகிறது.

கடந்த பல ஆண்டாகத் தமிழர்கள் தமது வாழ்வுரிமைக்காக போராடி வருகின்றனர். இவையாவும் சிறிலங்கா ஆயுதப்படைகளின் கரங்கொண்டு நசுக்க முற்பட்ட போது தமிழர்களும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தனர். தமக்கு விடுதலை கிடைக்கும் வரை அவர்கள் போராடத் தயாராகவுள்ள நிலையில் சர்வதேச சமூகம் தலையிட்டு மோதலை நிறுத்தி அரசும்-விடுதலைப்புலிகளும் அமைதிவழியில் பேச்சு வாத்தை மூலம் தீர்வு கான வேண்டுமென விரும்பியது. அதனை தமிழர் தரப்பு ஏற்றது ஆனால் நடந்தது என்ன?

இவையெல்லாம் நடைபெற்று சிறிலங்கா அரசாங்கம் எதற்கும் தயாரில்லை என்ற நிலை தோன்றி விட்டது. அதுவும் குறிப்பாக மகிந்த இராஜபக்ச அரசாங்கம் அமைதிவழியில் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகானும் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதும் இனிவரப்போகும் தலைமுறையும் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகறை நிறை வேற்றும் என்றில்லை.

எனவே தமிழர்களின் அரசியல் வரலாற்றை உணர்ந்து கொண்டு பன்னாட்டு சமூகம் தமிழர்களின் வாழ்வுரிமைப்போராட்டத்தை அங்கிகரிக்கவேண்டும்.அந்த வகையில் பிரித்தானியாவிற்கு பொறுப்பிருக்கிறது. அது உலக சமூகத்தில் அதற்கென்றொரு தனியிடமுண்டு. ஆகவே பிரித்தானியா இலங்கை இனவிவகாரங்களில் எவ்வாறு தலையிடப்போகிறது. என்பது இன்றுள்ள எதிர்பார்ப்பு.

ஆனால் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் கூட சிறிலங்காவில் தலையிட்டு இனப்பிரச்சனைக்குத் தீர்வை எட்ட முனைந்து தோற்றுப்போயுள்ளது.இந்நிலையில் பிரிட்டனும் அதுபோன்று முயல எத்தனிப்பதில் ஏதேனும் பயனுண்டா? என்ற கேள்வி எழுகின்றது.

ஆயினும் பிரித்தானியாவின் முயற்சி சிறிலங்காவில் வெற்றியளிக்காது போனால் அது தமிழிழத் தனியரசை அங்கீகரிக்க வேண்டுமென்பதே பலரது விருப்பமாகும்.

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வுகானும் திட்டங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய இராச்சியத்தின் உபாயங்கள் (பி.பி.எஸ்) என்ற பிரித்தானிய வெளிவிவகார பொதுநலவாய அமைச்சு பாதுகாப்பு அமைச்சு அணைத்துலக அபிவிருத்திக்கான திணைக்களம் ஆகியன இணைந்துள்ளன.இத்திட்டம் தெற்காசியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

2006-2009 காலப்பகுதிக்குள் இலங்கையில் எவ்வாறு சமாதானத்தை ஏற்படுத்த பிரித்தானியா எவ்வாறு உதவ முஎயும். என இத்திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ராச்சியத்தில் நீண்டகாலமாக போராட்டத்தை நடாத்திய வட அயர்லாந்துந்தை எவ்வாறு அமைதி வழிக்கு இணங்க வைத்த அனுபவம் பாதுகாப்புத்துறையில் நாம் கொண்டுள்ள நிபுணத்துவம் ஆகிய வற்றை வைத்து இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காணத்தமது திட்டம் உதவும் என்று பிரித்தானியா எதிர்பாhக்கிறது.

ஆனால் எதையும் உள்வாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் சிங்களப்பேரினவாத்திற்கு இல்லாதிருப்பதால் பிரித்தானியாவின் முயற்சி எவ்வளவுக்கு கைகூடும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியதே.

ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பிற்கு அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது. நோர்வேயின் அனுசரணைப்பங்களிப்போடே பிரித்தானியா தலையிடுவது இப்பொழுது உறுதியாகிவிட்டது.அடுத்த வாரத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்புகள் உள்ளன.

நன்றி: சங்கதி
http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=1761&Itemid=1

திங்கள், 27 ஆகஸ்ட், 2007

கிழக்கைப் போன்று வன்னியும் புலிகளிடமிருந்து மீட்போம் - கோத்தபாய

கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றியது போல் விரைவில் வன்னி பெருநிலப்பரப்பையும் கைப்பற்றுவோமென, அநுராதபுரம், கல்கிரியாகம உயர் பயிற்சி நிறுவகத்தில் நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்பு படையணிக்கான நிகழ்வொன்றில் பேசும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007

போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவுக்குப் புதிய பேச்சாளர்

இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளராக திரு. ஸ்ரேனர் ஸ்வென்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னாள் பேச்சாளர் திரு. தொபினுர் ஓமர்சனின் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து புதிய பேச்ச்சாளராக ஸ்ரேனர் ஸ்வென்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சனி, 25 ஆகஸ்ட், 2007

ஓமந்தை சோதனைச் சாவடி திங்கள் முதல் வாரத்தில் ஐந்து நாட்கள் திறந்திருக்கும்.

ஸ்ரீலங்காவின் அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குச் செல்லும் வவுனியா ஏ-9 ஓமந்தைச் சோதனைச் சாவடியை பொது மக்களின் பாவனைக்காக வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்து விடுவதென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வாரத்தில் மூன்று நாட்கள் எனும் தற்போதைய நடைமுறையிலிருந்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கோரிக்கைக்கிணங்கி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓமந்தை சோதனைச் சாவடியில் தமது பணிகளை வாரத்தில் ஐந்து நாட்களாக அதிகரிக்கவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஸ்ரீலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி திரு. டூன் வண்டன்ஹோவ் அறிவித்துள்ளார்.

செருப்பால் எறி வாங்கிய ஸ்ரீகாந்தா.


இணையத்தில் சுட்ட செய்தி, அறியப்படாத செய்தியாகையால் பதிவாகின்றது.
நன்றி: http://www.eeraanal.org/

விடுதலைப் புலிகளின் சம்பூர் காவல்துறைப் பொறுப்பாளர் கைது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பூர்ப் பிரதேச காவல்துறைப் பொறுப்பாளர் சஞ்சீவன் மாஸ்டர் எனப்படும் 29 வயதுடைய காளிமுத்து வினோத்குமாரை நேற்று திருகோணமலை துறைமுகப் பொலிஸார் வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அயர்லாந்து நாட்டில் காவல்துறை பற்றிய மூன்று மாத கால விசேட பயிற்சிநெறியினை 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெற்றுக் கொண்டு ஸ்ரீலங்கா திரும்பியதும் விடுதலைப் புலிகளின் காவல்துறையினருக்கு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் பயிற்சிகளை வழங்கியதாகவும் அதன் பின்னரே சம்பூர்ப் பிரதேச காவல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் சஞ்சீவன் மாஸ்டர் கூறியதாக அரச தரப்புச் செய்திகள் மேலும் கூறுகின்றன.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2007

ஸ்ரீலங்காவில் கைதாகுவோர் 48 மணித்தியாலங்கள் பொலிஸின் பூரண கட்டுப்பாட்டில்!

ஸ்ரீலங்கா காவல்துறையினரால் கைதாகும் பொது மக்களை காவல்துறையினர் தங்களின் பூரண கட்டுப்பாட்டில் 48 மணித்தியாலங்கள் வைத்திருந்து விசாரிக்கும் வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது, இப் பிரேரணைக்கு ஆதரவாக அரசில் பங்கேற்றுள்ள மலையகக் கட்சிகளும் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களை இவ்வளவு காலமும் மாதக்கணக்கில் வைத்திருந்து விசாரித்து வந்த ஸ்ரீலங்கா காவல்துறை இனிமேலாவது துரிதமாகச் செயற்பட்டு குற்றமற்றவர்களை விடுவிப்பார்களா என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இப் புதிய நடைமுறையின் காரணமாக மனித உரிமை மீறல்கள் பெருமளவு அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர் மேகலா சண்முகம் கவலை தெரிவித்திருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

வியாழன், 23 ஆகஸ்ட், 2007

ஸ்ரீலங்கா படை வசமான விடுதலைப் புலிகளின் வைத்தியசாலை (வீடியோ பதிவு)

ஸ்ரீலங்கா படையினரால் மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் குடும்பிமலைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிட்டுச் சென்ற வைத்தியசாலையை ஸ்ரீலங்கா படையினர் கண்டு பிடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதனை இந்த சுட்டியில் காணலாம். http://www.defence.lk/videos/20070822_hospital.wmv

தாடியுடைய பெண்


இணையத்தில் சுட்ட படம், சாதாரண அரும்பு மீசையுடன் பெண்களைப் பார்த்துள்ளோம், இப்போது தாடியுடன் பெண்ணைப் பார்க்கச் சந்தற்பம் கிட்டியுள்ளது.

இந்தியாவின் அசாம்ஹார் எனும் இடத்திலுள்ள 45 வயதைக் கொண்ட சபீரா பேகம் என்பவரே முகத்தில் தாடியுடன் காணப்படுகின்றார்.

நன்றி: http://nitharsanam.net/wp-content/uploads/2007/08/nito005.jpg

மட்டக்களப்புக்குச் சென்ற ஈழ விடுதலை இயக்க தலைவர்களின் அரசியல் நாடி பிடிப்பு

ஈழ விடுதலை இயக்கங்களான பத்மநாபாவின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய மூன்று இயக்கங்களும் ஜனநாயக செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டு ஒன்றாகச் செயற்பட்டு வருகின்றனர்.

சிறிதரன்(சுகு),ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் இம் மூவரும் நேற்று முன்தினம் மட்டுநகருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டனர், அங்கு சென்று தங்களின் கட்சி முக்கியஸ்தர்களையும், அரச உயரதிகாரிகளையும் சந்தித்து உரையாடியதுடன் கிழக்கில் ஏற்பட்டுள்ள மக்களின் அகதி வாழ்வியல் பிரச்சனைகளையும் உற்று நோக்கியுள்ளனர்.

"எரிகின்ற வீட்டில் பிடிங்கியது இலாபம்" எது எப்படி இருப்பினும் விரைவில் நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல், மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பனவற்றில் இவர்களின் அரசியற்பலம் எவ்வாறு உள்ளது என்பதனை நாடி பிடித்துப் பார்க்கும் நோக்கிலே இவர்கள் இத் திடீர் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 ஆகஸ்ட், 2007

தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டித்து தமிழகத்தில் சுவரொட்டிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டித்து கடலூர் பகுதிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

"ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த, தமிழக மீனவர்களைக் கொன்று குவித்த, விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தடுப்போம், தமிழக மக்களைக் காப்போம்" எனும் வாசகங்கள் அச் சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளன.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2007

ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் விசேட செய்தியுடன் வன்னி செல்லும் செஞ்சிலுவைச் சங்க தலைவர்


ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட செய்தியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சந்திக்கவென இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜெகத் அபயசிங்க நேற்று வன்னிக்குச் சென்றுள்ளார்.

எம்மவருக்கு தேவையான நிம்மதியினை இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் ஜெகத் அபயசிங்க கொண்டு செல்லும் விசேட செய்தி ஏற்படுத்தித் தருமா?

திங்கள், 20 ஆகஸ்ட், 2007

சதாம் உசைனின் மகள் தேடப்படுகின்றார்

2003 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படையினர் ஈராக்கில் நிலை கொண்டதையடுத்து அந்நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் உசைனின் மூத்த புதல்வியான ரகாத் சதாம் உசைனை கைது செய்ய சர்வதே பொலிஸ் பிரிவான "இன்டர் போல்" பிடி ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பலரைப் படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்ட தந்தைக்குரிய சட்டப் பாதுகாப்பை ஏற்பாடு செய்ய உதவியுள்ளார். ஈராக்கின் போராளிகளுக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வருபவர்களில் முக்கிய புள்ளிகளாக ரகாத்தும் அவருடைய தாயாரும் விளங்குகின்றனர். இதனால் ரகாத் மீது பயங்கரவாதம் மற்றும் ஏனைய எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது
இன்டர் போல் இப் பிடி ஆணை குறித்து அதனுடைய அங்கத்துவ நாடுகளுக்கு அறிவித்துள்ளது..

கடந்த வருடம் தனது தந்தை சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டபோது அவருடைய உடலை ஈராக்கிலிருந்து கூட்டுப்படையினர் அகலும் வரை, தற்காலிகமாக யேமனில் புதைக்க அனுமதிக்க வேண்டுமென ரகாத் கோரியிருந்தார்.

சதாம் உசைனின் புதல்வி தொடர்பில் ஜோர்தான் அதிகாரிகள் விபரிக்கையில், கடந்த வருடம் ரகாத் புகலிடம் கோரி தமது நாட்டில் வசித்து வந்ததாகவும் தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினர்.

யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளைச் சென்று பார்வையிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவம் தொடங்கி உள்ளதால் அவ்வாலயத்துக்குச் சென்று வழிபாடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பின்னர் யாழ்ப்பாணம் மத்திய பஸ் தரிப்பு நிலைய கட்டடத் தொகுதியையும் திறந்து வைத்து வைத்துள்ளார்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2007

கடற்புலிகளின் தளபதி சூசை சேர்க்கப்படவில்லை

புல்மோட்டைக் கடலில் கடந்த 13ஆம் திகதி திங்களன்று ஸ்ரீலங்கா கடற்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட நேரடி மோதலில் கடற்புலிகளின் சாள்ஸ் படையணித் தளபதி லெப்.கேணல் தியாகன் எனப்படும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சந்திரசேகரம்பிள்ளை தககுவேரன், சாள்ஸ் படையணித் துணைத்தளபதி லெப்.கேணல் கன்னியத்தம்பி எனப்படும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சோதிலிங்கம் நிசாந்தன், மற்றும் கடற்புலி கப்டன் அகப்போர் அல்லது செவ்வந்தன் எனப்படும் திருகோணமலை மாவட்டத்தைச் சேந்த அருள் சுரேஸ் ஆகிய மூவரும் வீரச்சாவைத் தழுவினர்.

இம் மூன்று மாவீரர்களின் வித்துடல்களுடன் வீரவணக்க நிகழ்வுகள் சிலைவேந்தன் தலைமையில் புதுக்குடியிருப்பு மாவீரர் வணக்க மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடற்புலிகளின் தளபதி கலார்த்தன் பொதுச்சுடரினை ஏற்ற மாவீரர்களினது வித்துடல்களுக்கு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான் மலர்மாலை அணிவித்தும் வீரவணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

வழமையாக இடம்பெறும் கடற்புலிகள் சார்ந்த இவ்வாறான நிகழ்வுகளுக்கு கடற்புலிகளின் தளபதி சூசையே தலைமை வகிப்பார், ஆனால் இம்முறை கடற்புலிகளின் தளபதி சூசை கலந்து கொள்ளவில்லை, சூசைக்குப் பதிலாக கலாத்தன் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

செஞ்சோலை படுகொலையின் ஓராண்டு நினைவாஞ்சலி (வீடியோ பதிவுடன்)

ஸ்ரீலங்கா வான்படையால் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் களத்துமேடு ஓராண்டு நினைவு அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றது.






வீடியோ பதிவுக்கு உதவி: யாழ் இணையம்
http://www.yarl.com/videoclips/view_video.php?viewkey=885e0d7c260cc007e8b9

ஈழத்திலுள்ள சகோதரப் படுகொலைக் கலாசாரம் ஐரோப்பாவுக்கு தாவியுள்ளது

ஈழத்தில் தினமும் இடம்பெற்று வரும் சகோதரப் படுகொலைக் கலாசாரம் ஐரோப்பாவையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள முருகன் ஆலய தீத்தோற்சவத்தின் போது ஆலய வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் வாள் வெட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த சிலிக்கா ரஞ்சன் கொல்லப்பட்டதாகவும் சாவகச்சேரி குகன், கொடிகாமம் கண்ணன் இருவரும் வாள் வெட்டுக் காயத்துக்கு இலக்காகியும் மற்றும் தாக்குதல்தாரிகள் பயன்படுத்திய கார் மோதியதில் இன்னுமொருவரும் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இவர்கள் சிகிச்சைக்காக ஒஸ்லோ தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஒஸ்லோவிலுள்ள "நெய்தல்" கடையொன்றை இன்னுமொரு தரப்பினர் சுவீகரிக்க எடுத்த முயற்சியே இவ்விபரீதத்துக்கு காரணமென்றும் இத் தாக்குதலை "Jaffna bad boys" குழுவினர் நடத்தியதாகவும் அறிய முடிகின்றது.

நோர்வே பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

நோர்வே பத்திரிகைச் செய்தி: http://www.vg.no/pub/vgart.hbs?artid=174946

நோர்வே பத்திரிகை வீடியோ செய்தி: http://atvs.vg.no/player/index.php?id=10749

வடக்கு இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்

எதிர்வரும் மாதங்களில் வடக்கிலுள்ள இராணுவ நிலைகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கான படைப்பிரிவு மற்றும் தாக்குதலில் பாதிப்புறும் விடுதலைப்புலிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியர்கள் மற்றும் வைத்திய உபகரணங்கள் அனைத்தும் தயாராகவிருப்பதாகவும் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக நேற்றைய "லங்காதீப" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவ அதிகாரி தெரிவித்ததாகவும் மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனி, 11 ஆகஸ்ட், 2007

கருணா அணியினரும் இராணுவத்தினரும் நிகழ்த்திய மனிதவுரிமை மீறல் சம்பவங்கள் - கண்காணிப்புக் குழு

ஜூலை 30- ஓகஸ்ட் 5 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கை:

கிழக்குப் பிரதேசத்தில் கடத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்தும் கண்காணிப்புக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கடத்தப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. அடையாளம் தெரியாத குழுவினர் 4 பேரை கடத்தியுள்ளனர். இதில் 2 சம்பவங்களில் சிறிலங்கா காவல்துறையினரைப் போன்ற உடை உடுத்தியோர் ஈடுபட்டுள்ளனர். மற்ற இரு சம்பவங்களில் கருணா குழுவினரையும் சிறிலங்கா இராணுவத்தினரையும் தொடர்புபடுத்தி பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் 3 கடத்தல் சம்பவங்களில் கருணா குழுவினரும் மற்றொரு சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

ஓகஸ்ட் 31 ஆம் நாள் பெரியவெளியில் 46 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மூதூர் மக்களிடத்தில் இன்னமும் இயல்பு வாழ்க்கை உருவாகவில்லை. நிலையற்ற பாதுகாப்பு நிலைமைகளால் வருவாய் செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலில் கருணா குழுவின் அலுவலகத்தில் ஓகஸ்ட் முதலாம் நாள் 45 பொதுமக்களை பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாக கண்காணிப்புக் குழுவிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ். கோட்டையிலிருந்து பூநகரி மற்றும் முகமாலை நோக்கி பலமுறை எறிகணைத் தாக்குதல் நடத்துள்ளன.

வவுனியா பம்பைமடு பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி இந்த வார காலப்பகுதி முழுமையும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை இராணுவத்தினர் மேற்கொண்டனர். சில எறிகணைகள் வன்னியின் வடக்குப் பகுதியிலும் வீழ்ந்துள்ளன.

ஜூலை 30 ஆம் நாள் முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினர் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 31 ஆம் நாள் மாசேரி பகுதியில் நிகழ்ந்த கிளைமோர் தாக்குதல்களில் 3 சிறிலங்கா இராணுவத்தினரும் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மன்னாரை அண்மித்த பகுதியில் ஓகஸ்ட் 3 ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் இரு கிளைமோர் தாக்குதல்கள் நிகழ்த்தபட்டுள்ளன. யாழில் ஜூலை 30 ஆம் நாள் அன்றும் வன்னி பள்ளமடுவில் ஓகஸ்ட் 4 ஆம் நாள் அன்றும் கிளைமோர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

மன்னாரில் ஓகஸ்ட் 3 ஆம் நாள் சிறிலங்கா இராணுவத்தினரின் பதுங்குகுழிகளை நோக்கி சிறிய வகை ஆயுதங்கள் மூலம் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

யாழ்ப்பாணத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வார காலப்பகுதியில் 10 படுகொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனிடையே மாவட்டத்தில் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் மக்களினது நாளாந்த வாழ்க்கை மற்றும் பிரதேச பொருளாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

ஜூலை 31 ஆம் நாள் மூவர் யாழில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். யாழ். நகரத்தில் இரு வேறு தனித்தனி சம்பவங்களில் 42 மற்றும் 21 வயது மதிக்கத்த இருவர் கொல்லப்பட்டனர். 42 வயது மதிக்கத்தக்க நபர் ஈ.பி.டி.பி.யினருடன் தொடர்புடையவர். அதே நாளில் திருநெல்வேலி பகுதியில் 21 வயது மதிக்கத்தக்க நபர் கொல்லப்பட்டார்.

ஓகஸ்ட் 2ஆம் நாள் மேலும் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். திருநெல்வேலியில் ஒருவரும் யாழ். நகரில் இருவரும் கொல்லப்பட்டனர். கொக்குவில் பகுதியில் 22 வயது ஊடகவியலாளர் மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமே பொறுப்பு என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

ஓகஸ்ட் 3 ஆம் நாள் திருநெல்வேலியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் ஜூலை 31 ஆம் நாள் 22 வயதுள்ள இளைஞர் ஒருவர் மாசேரி பகுதியிலும் ஓகஸ்ட் 2 ஆம் நாள் யாழ். மாநகர சபைக்குள் 25 வயது மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்திலிருந்து தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளன. இரண்டு சம்பவங்களுக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் காரணம் என்றும் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜூலை 31 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ளுர் கண்காணிப்புக் குழுவினரின் கூட்டத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பங்கேற்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பின்னர் முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்றனர். யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, யாழ். நகருக்குள் நுழைவதில் உள்ள சிரமங்கள், அதிகரித்து வரும் இராணுவ சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், மீன்பிடித் தடைகள் உள்ளிட்டவைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசத்தில் இந்த வார காலப்பகுதியில் 6 கிளைமோர் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிழக்கில் தம்பலகாமத்துக்கு அண்மித்த பகுதியில் ஓகஸ்ட் முதலாம் நாள் சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் 3 விடுதலைப் புலி போராளிகள் உயிரிழந்திருப்பதாகவும் 4 பொதுமக்கள் படுகாயமடைந்ததாகவும் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸட் 2 ஆம் நாள் கொக்கட்டிச்சோலையில் காவல்துறையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. எவருக்கும் காயமில்லை.

ஓகஸ்ட் 3 ஆம் நாள் வெல்லாவெளியில் சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

வடபகுதிக்கு விடுதலைப் புலிகள் நகர்வதைத் தொடர்ந்து நிலாவெளியிலிருந்து சிறிலங்கா கடற்படையினர் எறிகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்போது பாரிய அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று சிறிலங்கா கடற்படையினர், கண்காணிப்புக் குழுவினரிடம் தெரிவித்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி புதினம்
http://www.eelampage.com/?cn=32977

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து அரச பகுதிக்கு தப்பி வந்த குடும்பம்

வீட்டுக்கு ஒருவர் இயக்கத்தில் சேர வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகள் கடிதம் மூலம் அறிவித்ததற்கிணங்க, அவர்களின் கருத்தை ஏற்க முடியாதென மறுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து கடந்த 8ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு குடும்பத்தினருடன் படகின் மூலம் தப்பி வந்துள்ள மக்கள் இவர்களென ஸ்ரீலங்காவின் பாதுகாப்புக்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

வியாழன், 9 ஆகஸ்ட், 2007

துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தலுக்கு இராணுவத்தினர் உடந்தை - அனைத்துலக மன்னிப்புச் சபை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டிருந்தார். அப்பகுதி ஸ்ரீலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசமாகையால் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அல்லது அவர்களுடன் தொடர்புள்ளவர்களால் இக் கடத்தல் நிகழ்ந்து இருக்கலாம் என்று அனைத்துலக மன்னிப்புச் சபையின் இம்மாத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் 5749 வழக்குகள் கடத்தப்பட்ட அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டு நீதி விசாரணையின்றி இருப்பதால், அவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனவர்களுக்கான செயற்குழு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படும் பொது மக்கள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் தொடர்பான எந்த தகவல்களும் கிடைப்பதில்லை. இக் கடத்தல் நடவடிக்கைகள் பல படையினரால் மேற்கொள்ளப்பட்டாலும், ஏனையவை கருணா குழு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிகழ்ந்தவை ஆகும்.

புதன், 8 ஆகஸ்ட், 2007

கணினி ஓவியம்


கணினியின் உதவியினால் வரைந்த ஓவியம், இவ்வோவியம் பற்றிய கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2007

தமிழ் வலைப் பதிவர் பட்டறைக்குப் பாராட்டுதல்

தமிழ் வலைப் பதிவர்களின் பட்டறையை பலத்த வேலைகளுக்கும் மத்தியில் சோர்ந்து போகாமல் நடாத்தி முடித்த சக வலைப் பதிவர்களுக்கும் களத்துமேடு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கின்றது.




(படங்களைத் தந்த சகோதர பதிவருக்கு நன்றி)

திங்கள், 6 ஆகஸ்ட், 2007

தன்னார்வ தொண்டூழியர்களின் ஓராண்டு நினைவு


கடந்த ஆண்டு திருகோணமலை மூதூரில் பட்டினிச் சாவுக்கெதிரான மனித நேயங்கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமான "அக்ஸன் பார்ம்" ஊழியர்களை ஸ்ரீலங்கா படையினர் சுட்டுக் கொலை செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது தெரிந்ததே!

ஒரு வருடமாகியும் கொலைகாரர்களை கண்டு பிடிக்காமல் நீதி விசாரணை இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது, கொலைக்கு காரணமானவர்கள் ஸ்ரீலங்கா படையினரேயென சர்வதேசம் உட்பட ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கும் தெரிந்திருந்தும் முற்றுப்புள்ளி வைக்காமல் ஸ்ரீலங்கா அரசாங்கம் இழுத்தடிப்பது வினோதமான விடயமாகும்.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2007

தமிழீழ விடுதலைப் புலிகள் 19476 பேர் வீரச்சாவு


27.11.1982ஆம் ஆண்டு தொடக்கம் 31.07.2007ஆம் ஆண்டு வரையான கால் நூற்றாண்டினுள் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆண் மாவீரர்கள் 15,356 பேரும், பெண் மாவீர்களில் 4120 பேருமாக மொத்தம் 19,476 பேர் வீரச் சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்டுள்ள "விரிப்பு" தெரிவிக்கின்றது.

மாவீரர் விரிப்பு
கரும்புலி மாவீரர்கள் 322 பேர்


தரைக் கரும்புலிகள்:
ஆண்கள் 63 பேர்,
பெண்கள் 18 பேர்
மொத்தம் 81 பேர்


கடற் கரும்புலிகள்:
ஆண்கள் 169 பேர்
பெண்கள் 72 பேர்
மொத்தம் 241 பேர்

எல்லைப்படை மாவீரர்கள் 279 பேர்
ஆண்கள் 274பேர்
பெண்கள் 5 பேர்

காவல்துறை மாவீரர்கள் 35 பேர்

ஆண்கள் 32பேர்
பெண்கள் 3பேர்

மாமனிதர் 18 பேர்
நாட்டுப்பற்றாளர்கள் 459 பேர்
ஆண்கள் 434 பேர்
பெண்கள் 25 பேர்
யாழ்ப்பாணம் மாவட்டம் 7016 பேர்
மட்டு - அம்பாறை மாவட்டம் 4963 பேர்
வன்னி மாவட்டம் 2857 பேர்
திருமலை மாவட்டம் 1758 பேர்
முல்லைத்தீவு மாவட்டம் 1443 பேர்
மன்னார் மாவட்டம் 1109 பேர்
வெளி மாவட்டம் 330 பேர்
மொத்தம் 19,476 பேர்




இம் மாவீரர்களுக்கு "களத்துமேடு" கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகின்றது.

அழகான கணவனும் மனைவியும்


பஞ்சாப் நகரத்தில் திருமணம் செய்து கணவன் மனைவியாக சமூக அங்கீகாரத்தைத் தேடிக் கொண்ட லெஸ்பியன்களே இவர்களாவர்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2007

பயிற்சி பத்திரிகையாளர் நிலக்‌ஷன் சுட்டுக்கொலை

யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவனும், யாழ்.பல்கலைக்கழக இதழியல் ஊடகவள பயிற்சி நிலைய (எம்.ஆர்.ரி.சி.) மாணவனும் பயிற்சிப் பத்திரிகையாளருமான வயது 22 கொண்ட சகாதேவன் நிலக்‌ஷன் 01.07.2007 புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் ஊரடங்கு உத்தரவு அமுலிலிருந்த வேளையில் கொக்குவில் கிழக்கிலுள்ள புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள இவரது வீட்டினுள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களுட்பட அப்பாவிப் பொதுமக்கள் ஆயுததாரிகளினால் கொல்லப்பட்டு வருவது நிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச ரீதியில் குரலெழுப்பட்டு வந்த போதிலும் எவரும் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை, இறப்புக்களும் இழப்புக்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

அப்பாவி மனித ஜீவன்களைக் கொல்வதற்கான உரிமைகளை கைவசம் கொண்டுள்ள துப்பாக்கிதாரிகள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், இவ் அராஜக நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----