திங்கள், 4 ஆகஸ்ட், 2008

சார்க் நிறைவில் கீழே வீழ்ந்த கொய்ராலா!


கொழும்பில் இடம்பெற்ற தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு ஒன்றியத்தினது 15 ஆம் உச்சி மாநாடு நேற்றுடன் நிறைவெய்தியது.


உணவு, எரிபொருள், பிராந்திய நாடுகளுக்கு இடையில் வர்த்தக மேம்பாடு மற்றும் பயங்கரவாதத்தினை முறியடித்தல் போன்ற விடயங்கள் இந்த மாநாட்டில் அதிகம் பேசப்பட்டன.


...


இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, வங்காளதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இம் மாநாட்டில் 83 வயதுடைய நேபாள பிரதமர் கிரியா பிரசாத் கொய்ராலா கால் இடறி கீழே வீழ்ந்தார், எனினும் அருகில் நின்றவர்கள் இலாவகமாக தூக்கி விட்டார்கள், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களில் நேபாள பிரதமரே வயதில் முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


16 வது உச்சி மாநாடு மாலைதீவில் இடம்பெறுமென இறுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

தமிங்கிலத்தில் சிக்கியுள்ள தமிழக ஊடகங்கள்

தமிழ் மொழி வளர்ச்சிக்காக தென்னிந்திய மாநிலத்தில் எண்ணற்ற ஊடகங்கள் கால் பதித்துள்ளன, அவற்றில் பல பிரபல்யமாகி கொடி கட்டிப் பறக்கின்றன, சில மௌனமாகவே தமது செயற்பாட்டை தொடர்ந்து வருகின்றன.

தமிழ்மொழியை வளர்க்க வேண்டுமென முன்வந்துள்ள ஊடகங்கள், வருமானம் ஈட்ட வேண்டிய காரணத்தை முதன்மைப்படுத்தி ஏனோ ஆங்கிலமொழி மோகத்துக்கு சிக்குண்டு தமிங்கிலத்தில் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே!

ஆங்கிலமொழிக்காக எத்தனையோ ஊடகங்கள் இருக்கும் போது, தமிழ்மொழிக்கான ஊடகங்களென தம்மை அடையாளப்படுத்தி உள் நுழையும் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ஆங்கில மோகத்துக்கு இலக்காகி வருகின்றன, இந் நிலை நீடித்தால் தமிழகத்தில் தமிழை தேடவேண்டிய நிலை விரைவில் ஏற்படும்.

தரமான நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சி நடத்தி வருகின்றது, அவற்றில் பல மேலைத்தேய தொலைக்காட்சிகளின் தாக்கத்துக்கு உட்பட்ட நேரடி நிகழ்ச்சிகளும், போட்டி நிகழ்ச்சிகளும் ஆகும். இந் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களும், பங்கு பற்றுவோரும் ஆங்கிலமொழி கலந்தே தமிழைப் பேசுவதை அவதானிக்க முடிகின்றது.

தொலைக்காட்சி நிறுவனத்தாரின் உத்தரவின் படியே ஆங்கிலம் கலந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றனவோ தெரியவில்லை, பாமர மக்களுக்கும் இந் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் சென்றடைய வேண்டுமெனில், தொலைக்காட்சி நிறுவனத்தினர் தமிழில் நிகழ்ச்சிகளைப் படைப்பதே சிறப்பானதாகும்.

இதனை தமிழ்நாடு கண்டும் காணாத மாதிரி இருப்பதன் மர்மம் தான் என்ன?

பிள்ளையான் குழுவினரின் அடாவடித்தனம் தொடர்கின்றது

பிள்ளையான் குழுவினருக்கு மகிந்த ராஜபக்ஷ் அரசினால் கிழக்கிலங்கையின் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பிள்ளையான் குழுவினரின அடாவடித்தனங்கள் தினம் தினம் அதிகரித்து வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

மட்டு. ஏறாவூர் மூன்றாம் பிரிவில் கடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம்கள் ஐவரில் நான்கு பேர் விடுவிக்கப் பட்டனர், ஒருவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்த இரவு வேளையில் ஆயுதங்களுடன் வந்த பிள்ளையான் குழுவினர் மட்டு. கல்லடி அலுவலகத்தில் இவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்துள்ளனர்.

கொண்டு செல்லப்பட்ட ஐவரில் 42 வயதுடைய ஏறாவூர் கடற்தொழிலாளர் சங்கத் தலைவரான எஸ்.எஸ். ஸமத் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

பிள்ளையான் குழுவினரின் அடாவடித்தனத்தால் தினமும் இப்பகுதி மக்கள் நொந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனை கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானும், அக்கட்சியின் தலைவர் கருணாவும் கவனம் எடுப்பார்களா?

சனி, 2 ஆகஸ்ட், 2008

மன்னர் 5ஆம் ஜோர்ஜின் முடி சூட்டு விழா


தென்பசுபிக் நாடான தொங்காவின் தேவாலயமொன்றில் ஆயிரம் அதிதிகள் முன்னிலையில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தொங்கா மன்னன் ஐந்தாம் ஜோர்ஜ் துபோயு தங்க கிரீடத்தை முடிசூடிக் கொண்டார்.

மன்னர் ஐந்தாம் ஜோர்ஜின் தந்தை மன்னர் நான்காம் டோபாஹயு துபோயு 1967 ஆம் ஆண்டு முடி சூடி ஆட்சி புரிந்து வந்தார், இவர் 2006 ஆம் ஆண்டு மரணமானதைத் தொடந்து புதிய மன்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

கடந்த 40 ஆண்டு காலத்தின் பின்னர் முடி சூட்டு விழா பிரமாதமாக நடைபெற்றது.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2008

மதுரை - அனுராதபுரம் கடலடி கம்பிவழி மின்சாரம்



இலங்கையில் தொடர்ந்து வரும் மின்சார தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மின்சாரத்தை இறக்குமதி செய்வதென ஏற்பாடாகி உள்ளது.

தமிழ்நாட்டின் மதுரையில் இருந்து தனுஷ்கோடி ஊடாக தலைமன்னாரை ஊடறுத்து இலங்கையின் அனுராதபுரம் வரைக்கும் கடலடியால் மின்சாரத்தைக் கொண்டு செல்ல இரு நாட்டு அரசாங்கங்களும் முடிவு செய்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இதற்கென 1000 மெகாவோட் மின்சாரத்தை இலங்கைக்கு கடலடி கம்பிவழி மின்வலு திட்டத்தின் மூலம் இந்தியா வழங்கவுள்ளது.

கி.மு. 300 - கி.பி. 2000 "இலங்கையில் தமிழர்" வரலாற்று ஆய்வு நூல்

...


...


கலாநிதி முருகர் குணசிங்கம் என்பவரால் எழுதப்பட்டு சிட்னி தென் ஆசியவியல் மையத்தின் எம் வி வெளியீடாக கிமு 300 முதலாக கிபி 2000 ஆண்டு வரையான "இலங்கையில் தமிழர்" எனும் முழுமையான வரலாற்று ஆய்வு நூல் பிரசுரமாகியுள்ளது.


இலங்கையில் இந் நூலை எங்கு பெறலாம் எனும் விபரத்தினை அறிய முடியவில்லை, தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.


கலாநிதி முருகர் குணசிங்கத்துக்கு "களத்துமேடு" வாழ்த்தினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றது.

வியாழன், 31 ஜூலை, 2008

வெப்ப மாற்றத்தால் பாரிய பனிப்பாறை உடைந்தது

அண்மைக் காலமாக புவி வெப்பமடைந்து வருவது யாவரும் அறிந்ததே! கடந்த காலங்களில் ஆர்ட்டிக் பிராந்தியத்தில் வெப்பநிலை உயர்வடைந்து வருவதால் பனிப்பாறைகள் உடைந்து உருகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

வட கனடாவின் எல்லிஸ் மெரே தீவுக்கு அப்பாலுள்ள வார்ட்ஹண்ட் எனும் தீவில் கடந்த வாரம் 20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள பாரிய பனிப்பாறை உடைவு அவதானிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஐலெஸ்ஸில் 50 சதுர கிலோமீற்றர் பரப்பளவு பனிப்பாறை உடைந்தது, இதன் பின்னர் ஏற்பட்ட பாரிய உடைவே இதுவாகும்.

புதன், 30 ஜூலை, 2008

அல்-கைதா தலைவர் கொல்லப்பட்டார் ?

அல்-கைதா இயக்க இரசாயன ஆயுத நிபுணரான 55 வயதுடைய எகித்து நாட்டவரான அபு கபாப் அல்-மாஸ்ரி எனப்படும் மிதாத் முர்ஸி அல்-செயித், பாகிஸ்தானின் தென் வாஸிரிஸ்தானிலுள்ள அஸாம் வர்ஸாக் கிராமத்தின் பள்ளிவாயலொன்றின் தாலிபான்களுடன் இருக்கும் போது எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டாரென பாகிஸ்தான் படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தெருண்டாலிலுள்ள அல்-கைதா முகாமில் இரசாயன வெடிகுண்டுகள் தயாரிப்பு சம்பந்தமான பயிற்சித் தளத்துக்கு பொறுப்பாக இருந்த மிதாத் முர்ஸி அல்-செயித்தின் தலைக்கு 5 000 000 அமெரிக்க டொலர் பணத்தினை வெகுமதியாகக் கொடுக்க அமெரிக்கா தயாராக இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

இத் தாக்குதலை அமெரிக்கப் படையினர் நடாத்தியதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் கூறுகின்றன.

சார்க் மாநாட்டில் வெளிநாட்டமைச்சின் செயலர்கள்


சார்க் மாநாட்டையொட்டி நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர்களின் நிலையியல் குழுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களின் செயலாளர்கள் கலந்து கொண்ட காட்சி.

செவ்வாய், 29 ஜூலை, 2008

மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமை

மட்டக்களப்பு கோட்ட மட்டத்திலான 2008 ஆம் ஆண்டு ஆங்கில மொழி எழுத்துப் போட்டிப் பரீட்சைக்கு மட்டக்களப்பு வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருத்தி பரீட்சையில் சித்தியடைந்து முதலாமிடத்தைப் பெற்றாள்.

இதனைத் தொடந்து வலய மட்டத்துக்கு தெரிவாகிய இம் மாணவிக்கான ஆங்கில மொழி எழுத்துப் போட்டிப் பரீட்சை 2008.07.09 ஆம் திகதி மட்.புனித மிக்கேல் கல்லூரியில் ஆங்கில ஆலோசகர் ஒருவரின் தலைமையில் நான்கு நடுவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது, இப் பரீட்சைக்குப் பல மாணவர்கள் தோற்றினார்கள்.

இப் போட்டிப் பரீட்சையிலும் இம் மாணவி சிறப்பாகச் சித்தியடைந்து முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டாள், இறுதியில் பரீட்சையில் சித்தியெய்தியவர்களின் பெயர்ப் பட்டியல் அலுவலக விளம்பரப் பலகையில் இரண்டு நாட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது, இதில் இவளின் பெயர் முதலாமிடத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் இப் போட்டிப் பரீட்சையில் சித்தியடையாத ஒரு மாணவியின் பெயர் இப்போது பரிந்துரை செய்யப்பட்டு உண்மையாக சித்தியடைந்த மாணவியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் பிரபல்யமான ஒருவரே தனது சித்தியடையாத மகளுக்காக இந்த முதலாமிடத்தை இப்பகுதி கல்வி அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்துப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

கிராமப் பகுதிகளில் இருந்து பலத்த சிரமத்தின் மத்தியில் ஆங்கிலக் கல்வியினைக் கற்று நகரத்துக்கு போட்டிப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பக்கச் சார்பான தெரிவுகளால் திண்டாடி இளம் வயதிலேயே உளவியல் தாக்கத்துக்கு இலக்காகின்றனர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணசபையும் அதன் கீழுள்ள கல்வியமைச்சும் இதில் கவனம் எடுக்குமா?

அநீதி இழைக்கப்பட்ட மாணவிக்கு தீர்வு கிட்டுமா?

சனி, 26 ஜூலை, 2008

ஐநா சபைக்குள் நுழைந்த தமிழிச்சி

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நீதிபதியாகவும், தென்னாபிரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றின் முதற் பெண் நீதிபதியாகவும் பணிபுரிந்து வரும் தென்னாபிரிக்காவில் பிறந்த தமிழிச்சி திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஸ்தானிகராக, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, டேபன் நகரின் பேரூந்து ஓட்டுநர் ஒருவருக்கு மகளாக பிறந்த நவநீதம்பிள்ளை அவர்கள் தென்னாபிரிக்க வம்சாவளியாக இருந்தமையால் 28 வருடங்களாக அந் நாட்டின் நிறவெறி அரசாங்கத்தினால் நீதிபதி சம்மேளனத்தில் இணைக்கப்படாமல் இருந்து, 1995 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதல் பெண் மேன்நீதிமன்ற நீதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஐ.நா. சபையினுள் நுழைந்த தமிழிச்சி திருமதி நவநீதம்பிள்ளைக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

வெள்ளி, 25 ஜூலை, 2008

யார் இவள்!

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பை அண்டியுள்ள பூநொச்சிமுனையில் வீட்டுத் திட்ட கிராமத்தின் அருகே கருஞ்சிவப்பு நிற சல்வாரும் வெள்ளை நிற கீழ் அங்கியும் அணிந்துள்ள 20 - 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தெருவில்
கொல்லப்பட்டுக் கிடந்தாள்.

இவளது சடலம் இப்போதும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யார் இவள்! ஏன் இப்படியான கொலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

வியாழன், 24 ஜூலை, 2008

வீரகேசரியே மதவாதம் வேண்டாம் !

இலங்கையின் தேசியப் பத்திரிகையில் ஒன்றான வீரகேசரி "விடிவெள்ளி" எனும் பக்கத்தை ஆரம்பித்திருப்பது வாசகர்கள் அறிந்ததே!

ஒரு தேசியப் பத்திரிகையானது அந் நாட்டில் வாழும் சகலருக்கும் சமவாய்ப்பைக் கொடுக்க வேண்டுமென்பது ஜனநாயக மரபாகும், அவரவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிப்பது சிறப்புக்குரியதே!

இருப்பினும் மதரீதியாக பக்கங்களைப் பிரிப்பது அவ்வளவு நல்லதல்ல என்றே சொல்லத் தோன்றுகின்றது, "கிழக்கின் விடியல்" என்றதுமே தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் செய்தி அல்லது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் ஆட்சிமை பற்றிய செய்தியாக இருக்குமெனும் நோக்கோடு பக்கத்தைத் திருப்பிய போது எதிர்மாறாக "கிழக்கு முஸ்லிம்களின் விடியலை நோக்கி..." எனும் வாசகம் காட்சிக்கு இருந்தமையும், அப்பக்கங்களை அளவுக்கு அதிகமான முஸ்லிம் படைப்பாளிகளைக் கொண்டு பூர்த்தியாக்கி இருந்ததனையும் நோக்கும் போது வீரகேசரியும் மதவாதத்துக்கு அடிபட்டுப் போய்விட்டதோவென எண்ணத் தோன்றுகின்றது.

இன்றைய நிலையில் கிழக்கின் விடியலானது தமிழ் பேசும் மக்களின் விடியலாக நோக்கப்படும் போது பக்கச் சார்பாக முஸ்லிம்களின் விடியலெனப் பார்ப்பது, வீரகேசரியிடமும் நியாயத்தன்மை மரித்து விட்டதோவெனும் புரிதல் மக்களிடம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.

ஆகவே வீரகேசரி "கிழக்கு முஸ்லிம்களின் விடியலை நோக்கி..." எனும் பதத்தை மாற்றி "கிழக்கிலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடியலை நோக்கி..." எனும் தோரணையில் கிழக்கின் விடியலான வீரகேசரியின் விடிவெள்ளி அடுத்த பதிப்பில் மாற்றம் காணுமாயின் சிறப்பாக இருக்குமென்பது "களத்துமேட்டின்" ஆதங்கமாகும்.


http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_021.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_022.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_023.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_024.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_025.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_025.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_027.pdf

செவ்வாய், 22 ஜூலை, 2008

1020 மில்லியன் மக்களுக்கு மலசலகூட வசதியில்லை

அண்மையில் உலக சுகாதார அமையமும், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெவ்வும் இணைந்து தயாரித்துள்ள அறிக்கையின் பிரகாரம் இந்தோனேசியாவில் 66 மில்லியன் பேருக்கும், எத்தியோப்பியாவில் 52 மில்லியன் பேருக்கும், பாகிஸ்தானில் 50 மில்லியன் பேருக்கும், சீனாவில் 32 மில்லியன் பேருக்கும் மலசலகூட வசதி இல்லை எனவும் இந்தியாவில் 665 மில்லியன் பேரும், நைஜீரியாவில் 29 மில்லியன் பேரும், பிரேஸிலில் 18 மில்லியன் பேரும், பங்களாதேஷில் 18 மில்லியன் பேரும் இயற்கைக் கடனை முடிப்பதற்காக திறந்த வெளியைப் பயன்படுத்துவதாக அறிய முடிகின்றது.

இப் புவியில் 1020 மில்லியன் பேர் இயற்கை கடனை முடிக்க மலசலகூடமின்றி திறந்தவெளியையே பயன் படுத்துவதாகவும் இவர்களில் 83 சதவீதத்தினர் ஆசிய, ஆபிரிக்கா போன்ற 13 நாடுகளைச் சேர்ந்தோரெனவும், இந்தியா இப்பட்டியலில் முன்னணீயில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இத்தகைய சுகாதாரக் குறைபாட்டால் தொற்றுநோய் தொடர வாய்ப்பிருப்பதாக இவ் அறிக்கை மூலம் எச்சரித்துள்ளனர்.

ஞாயிறு, 20 ஜூலை, 2008

கணவனுக்குக் கட்டிய நினைவாலயம் - அ.மயூரன் லண்டன்


"பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டிவைச்சாண்டா, எவளாச்சும் ஒரு செங்கல் நட்டுவைச்சாளா' என்னும் பா.விஜயின் வரிகளை மீண்டும் ஒரு முறை மீளாய்வு செய்ய வேண்டும் போல் உள்ளது. ஓர் உண்மையான காதலன் தன் காதலியை இழந்து விட்டால் அவளுக்கு நினைவுச்சின்னம் எழுப்புவது பற்றிக் கோள்விப்பட்டிருக்கின்றோம். அதற்கு தாஜ்மஹால் ஒரு சான்று. ஆனால் ஒரு மனைவி கணவனின் மறைவுக்குப்பின் அவன் நினைவாய் நினைவுச்சின்னம் எழுப்பியுள்ளாள் என்றால் அது விந்தையானது தானே.
கி.மு 623 இல் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது ஹலிகர்னேசஸ் (HALICARNASSUS) என்னும் நகரமாகும். இது தற்போதைய துருக்கியின் துறைமுக நகரமான பொட்ரம் (BODRUM, TURKEY) ஆகும். இந்த நகரத்தை கி.மு.377 இல் கெகற்டோம்நஸ் (HECATOMNUS OF MILAS) ஒவ் மிலஸ் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் இறந்து போக அவனது மகனான மாசோலஸ் கெக்ற்டோம்நஸ் ஆட்சிப் பொறுப்பினைக் ஏற்றான். இவன் ஆட்சிப்பீடம் ஏறியபின் தனது ஆட்சிநிலப்பரப்பை நெய்ற்போரிங் நகரம், மற்றும் அனரோலியா ஆகிய இடங்கள் வரை விஸ்தரித்தான். அவனுக்கு ஆட்டிமிசியா என்னும் தங்கை ஒருத்தி இருந்தாள். அவள் ஆணழகனான மாசோலஸ் மன்னனைக் காதலித்து கரம்பிடித்தாள். அந்தக்காலத்தில் உடன்பிறந்தவர்களை மணப்பது தவறாகத் தெரிவதில்லை. தங்களது உடைமைகள் தமது வம்சாவழியினருக்குக் கிடைக்கவே இவ்வாறு செய்தனர். ஆர்ட்டிமிசியா. காதலுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவள், திருமணத்தின் பின்னும் அவள் தன் கணவன் மேல் கொண்ட பாசத்தையிட்டு உலகமே வியந்தது. இவ்வாறு இருவரும் ஆட்சியை 24 ஆண்டுகள் ஆண்டனர்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை.

மாசோலஸ் மன்னன் திடீரென ஒருநாள் அதாவது கி.மு.353 இல் மரணமடைந்தான்.

ஆர்ட்டிமிசியா கணவனின் பிரிவைத் தாங்காது துவண்டாள். துடித்தாள் இருந்தும் தான் தளர்ந்துவிட்டால் நாட்டை யார் ஆள்வார்கள் எனத் தன்னைத் தேற்றிக்கொண்டு கணவனுக்குப்பதில் நாட்டை ஆளத் தொடங்கினாள். இதனால் கெகற்ரோம்நஸ் நகரம் ஆர்ட்டிமிசியா நாடு எனப்பட்டது.

இருந்தும் அவள் கணவன் மீது கொண்ட பற்றினால் அவனது முகத்தை அவளால் மறக்க முடியவில்லை. கணவனின் நினைவிலிருந்து விடுபட எவ்வளவோ முயன்றும் தோல்வி கண்டாள். முடிவில் ஆர்ட்டிமிசியா தன் அருமைக் கணவனுக்காக நினைவுச்சின்னம் கட்ட முடிவு செய்தாள்.

ஆனால் இந்த நினைவுச்சின்னம் உலகில் உள்ள நினைவுச்சின்னங்களை விட பெரிதாக இருக்க வேண்டும் என நினைத்தாள்.

இன்றைய துருக்கியின் துறைமுகப்பட்டினமான பொட்ரம் தான் அன்றைய ஆர்ட்டிமிசியா நாட்டின் தலைநகராக விளங்கியது.

அந்தப்பட்டினத்திலேயே கணவனின் நினைவுச் சின்னத்தையும் கட்ட ஆர்ட்டிமிசியா தீர்மானித்தாள். இதற்காக கிரேக்க நாட்டிலேயே தலை சிறந்த சிற்பி எனப் போற்றப்பட்ட ஸ்கோபாஸ் ஒவ் பரஸ், என்பவன் தேர்ந்தெடுக்கப்பட்டு வரவழைத்து நினைவுச்சின்னம் அமைக்கும் பணியை தொடங்கினாள். அச்சிற்பி தனக்குத் துணையாக வேறு பலரையும் அமர்த்திப் பணியைத் தொடங்கினான்.

120 அடி அகலமும், 100அடி நீளமும், 145 அடி உயரமும், உடைய நினைவுச்சின்னம் பளிங்கினால் அமைக்கப்பட்டது.

அந்நினைவுச்சின்னத்தின் நான்கு முகப்புக்களை லியோசர்ஸ், பிரையக்ஸ், ஸ்கோப்பஸ் ஒவ் பரஸ், அத்துடன் ரிமோதயஸ் ஆகியோர் கட்டினர்.

அம்முகப்புக்களுக்கு மேல் வானளாவிய உயரத்தில் 36 தூண்கள் அமைக்கப்பட்டு அதற்கப்பால் 24 அடுக்குகள் கொண்ட பிரமிட் வடிவிலான விதானம் அமைக்கப்பட்டது.

அவ்விதம் அமைக்கப்பட்ட கல்லறைக்குள் மாசோலஸ் மன்னனின் உருவச்சிலை வடிக்கப்பட்டது. அத்துடன் கல்லறைக்குச் செல்ல அகலமான இருபது படிகள் அமைக்கப்பட்டன.

இவ்விதமாக மாசோலஸின் கல்லறை முழுமையடையும் தறுவாயில் எவரும் எதிர்பாராத விதமாக இராணி ஆர்ட்டிமிசியா மடிந்து போனாள். (கி.மு.351) இது தனது கணவன் இறந்து இரண்டுவருடங்களின் பின் ஆட்டிமிசியா இறந்தாள். இதனால் கணவன் மனைவி இருவருமே ஓர் இரதத்தில் அமர்ந்திருப்பது போல் சிலை வடித்து கல்லறையில் வைத்தனர். அந்தக் கல்லறைக்கு அவர்கள் மாசோலியம் (THE MAUSOLEUM) எனப்பெயரிட்டனர். அந்த மாசோலஸ் கல்லறை இன்றைய தாஜ்மஹாலைவிட உயர்ந்தது. தாஜ்மஹால் 137அடி உயரமுடையது. ஆனால் மாசோலஸ் 145 அடி உயரமுடையது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக பல காலமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக எல்லா நினைவுச்சின்னங் களுக்கும் ஏற்பட்ட நிலை இந்த மாசோலியத்திற்கும் ஏற்பட்டது. அதாவது கி.மு.334 அளவில் அலெக்சாண்டரின் படையெடுப்பாலும், அதன்பின்னர் கி.மு.62 மற்றும் 58 களில் கடற் கொள்ளைக்காரர்களின் அட்டூழியத்தாலும் இம் மாசோலியம் சிதைவடையத் தொடங்கியது. அதன்பின்னர் 1404 இல் நிகழ்ந்த மிகப்பெரும் பூமியதிர்ச்சியினால் தன்னிலை தளர்ந்து தடுமாறி தரையில் வீழ்ந்து அடிமட்டம் மட்டும் எஞ்சியது. மாசோலியம். கி.பி. 15ஆம் நூற்றாண்டில் மல்டா நாட்டைச் சேர்ந்த நைற் ஒவ் சென்யோன்ஸ் தலைமையிலான படைகள் இந்த மாசோலியத்தினைத் தகர்த்து அதன் கற்களைக் கொண்டு போட்ரம் நகரின் துறைமுகப் பாதுகாப்புக்கென போட்ரம் கோட்டையை (BODRUM CASTLE) 1494 இல் அமைத்தனர். இன்றும் இந்தக் கோட்டையின் சுவர்களில் இப்பளிங்குக் கற்களைக் காண முடிகிறது.

1522 இல் துருக்கியர்கள் கலிகர்னேசஸ் நகரினை முற்றுகையிட்டபோது காவலாளிகள் மாசோலியத்தைப் பாதுகாத்தனர். இதனால் இவ்விடம் பொட்ரம் என அழைக்கப்பட்டது.

பின்னர் 1960 களில் பிரித்தானியாவைச் சேர்ந்த தொல்லியலாய்வாளர் சாள்ஸ் ரோமன் நியூட்டன் என்பவர் இப்பிரதேசத்தை ஆய்வுசெய்தார். இன்றும் பிரித்தானியா அருங்காட்சியகத்திலே இதன் முழுவிபரமும் அடங்கிய எச்சங்கள் காணப்படுகின்றன.

தன் கணவனை ஆழமாய் நேசித்த ஒரு காதலி. தன் காதலின் சிறப்பை உலகுக்கு உணர்த்தும் வகையில் கலையம்சத்துடன் அமைத்த மாசோலியம் இன்று இல்லை.

இருந்தபோதும் ஒரு ஆணுக்காக பெண் ஒரு செங்கல் நட்டுவைத்தாளா என்கின்ற பாடல் வரிகளை இது பொய்யாக்கியுள்ளது. இது ஆண்களுக்காக பெண்கள் ஒரு கல்லைக்கூட நாட்டவில்லை. என்ற ஆண்களின் குற்றச்சாட்டிலிருந்து பெண்கள் விடுதலை பெற இது ஒரு வழியாக அமைந்துவிட்டது எனலாம்.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=20_07_2008_035_002&mode=1

புதன், 5 மார்ச், 2008

உலகத்திலேயே வளர்ச்சி குன்றிய 22வயதுடைய பெண்










உலகத்திலேயே வளர்ச்சி குன்றிய 22வயதுடைய பெண்ணெனும் (Smallest woman in the world. Age-22 years) தலைப்பில் இணையத்தளமொன்றில் சுட்ட படங்கள் இவை, இப்படங்கள் பற்றிய பூரண விபரங்கள் காணப்படாத போதிலும் மனிதரில் இப்படியுமாவென எண்ணத் தோன்றுகின்றது.

நன்றி: நிதர்ஷனம்.நெற்
http://nitharsanam.net/?p=13811#more-13811

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2008

மூக்குடைந்து போன சுரேஸ் பிரேமச்சந்திரன் பா.உ


13 ஆவது திருத்தத்தின் கீழ் இனநெருக்கடிக்கு தீர்வில்லை
ஏற்றுக் கொண்டார் அமெரிக்க தூதுவர்

[14 - February - 2008]
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

இரு தசாப்தங்களை பூர்த்தி செய்திருக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒரு போதும் நிறைவேற்றப் போவதில்லையென வட, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் திருத்தமாக தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்காவும் 13 ஆவது திருத்தத்தின் மூலம் இனநெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர முடியாதென்பதை ஏற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை அந்நாட்டின் தூதுவர் ரொபேர்ட் பிளேக் நேற்று புதன் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், யாழ்.மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று அமெரிக்கத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இச்சந்திப்பு குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்;

"தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களாகிய நாம் தற்போது நாட்டின் நிலைவரம், மனித உரிமை மீறல் விவகாரம், தமிழர் பகுதிகளில் இடம்பெற்றுவரும் விமானத் தாக்குதல்கள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள் தொடர்பாக மேற்குலகின் தூதுவர்களை சந்தித்து விரிவாக எடுத்துரைத்து வருகிறோம்.

இத்தாலி, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர்களை சந்தித்துள்ளோம். அதன் ஓரங்கமாகவே அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக்கை சந்தித்தோம்.

இச்சந்திப்பில் தமிழ் மக்கள் மீதான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறினோம். தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளை உடனடியாக கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் வலியுறுத்தினோம். இலங்கை இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக 1987 இல் மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தம் எந்த விதத்திலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியாதென உடனடியாக தமிழ்த் தலைவர்கள் இந்திய, இலங்கையின் அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதையும் அமெரிக்கத் தூதுவரிடம் சுட்டிக்காட்டினோம்.

இன நெருக்கடிக்கு தீர்வு காண 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக அறிவிப்பு ஆக்கபூர்வமான பயனைத்தரப் போவதில்லையெனவும் ஒற்றையாட்சி முறைக்குள் ஒருபோதும் தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாதெனவும் தூதுவரிடம் விரிவாக எடுத்துரைத்தோம். அத்துடன், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றின் மூலமே பல தசாப்தகாலங்களாக தொடரும் இனநெருக்கடிக்கு நிலையான தீர்வொன்றைக் கொண்டுவர முடியுமென்பது தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கை என்பதையும் அவரிடம் கூறினோம். மேலும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் விமானத்தாக்குதல் நடத்தப்படுவதையும் தாக்குதலின் பின் புலிகள் கொல்லப்படுவதாக போலியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தூதுவரிடம் சுட்டிக்காட்டினோம்.

இவற்றை கவனமாக செவிமடுத்த தூதுவர் பிளேக், உரிய தரப்பினரின் கவனத்துக்கு இவற்றை கொண்டு செல்வதாக உறுதியளித்தார். அதேசமயம், 13 ஆவது திருத்தத்தின் கீழ் இனநெருக்கடிக்கு தீர்வு காணமுடியாதென்பதையும் தூதுவர் ஏற்றுக்கொண்டார்" என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.



அமெரிக்க தூதுவரின் விளக்கம்...
[16 - February - 2008]

13 ஆவது திருத்தத்தின் கீழ் இன நெருக்கடிக்கு தீர்வில்லை - ஏற்றுக்கொண்டார் அமெரிக்கத் தூதுவர் எனும் தலைப்பில் நேற்று முன்தினம் வெளியான தலைப்புச் செய்தி தொடர்பாக அமெரிக்க தூதுவர் ரொவேர்ட் பிளேக் விளக்கமளித்துள்ளார்.

அவரின் விளக்கம் வருமாறு;

2008 பெப்ரவரி 14 ஆம் திகதி உங்கள் தினக்குரலில் பிரசுரித்த என்னுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடான சந்திப்பு சம்பந்தமாக மேலும் விளக்கிக் கூற விரும்புகின்றேன். "13 ஆவது திருத்தத்தின் கீழ் இன நெருக்கடிக்கு தீர்வில்லை - ஏற்றுக்கொண்டார் அமெரிக்க தூதுவர்" எனும் தலைப்பின் கீழ் பிரசுரமானதை வித்தியாசமான முறையில் நான் கூறியதாக நம்புகிறேன். மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வின் ஓர் நல்ல முதல் அத்தியாயமாக 13 ஆவது திருத்த அமுலாக்கம் அமையுமென அமெரிக்கா நம்புகின்றது.

மேலும் பல திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. சர்வகட்சிக் குழுவின் முக்கிய பணிகளைத் தொடர்வதற்காக இலங்கை அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் எமக்கு நம்பிக்கையூட்டுகிறது. தமிழ் மற்றும் ஏனைய சமூகங்களின் அபிலாஷைகள் நிறைவேறக்கூடிய அதிகாரப் பகிர்வுக்கான இணக்கப்பாட்டை கட்டியெழுப்பக் கூடிய நல்ல சந்தர்ப்பத்தை சர்வகட்சிக் குழு வழங்குகிறது. அதன்மூலம் ஒரு ஐக்கிய இலங்கையினுள்ளே நம்பிக்கையும் வாய்ப்புகளுமுள்ள எதிர்காலத்தை அநுபவிக்கலாமென வன்னியிலும் மற்றுமிடங்களிலும் வசிக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முடியும்.

எனது கருத்துக்களை விளக்கிக் கூற சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றி.

சுரேஸ் பிரேமச்சந்திரன் இப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இவரின் நடவடிக்கைகள் அனைத்தும் கிரகித்துக் கொள்ளாமல் அவசரத்தில் விடப்படும் அறிக்கைகள் போன்றே தெரிகின்றது, இவர் ஈபிஆர்எல்எவ் எனப்படும் இயக்கத்தில் பொறுப்பு வாய்ந்தவராக இருந்ததுடன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்பு இலங்கை வந்தடைந்த இந்திய அமைதி காக்கும் படையினருடன் சேர்ந்தியங்கிய மண்டையன் குழுவுக்கு (ஈபிஆர்எல்எவ்) தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இக்குழு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேட்டையாடுவதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பான காலங்களில் பாராளுமன்ற ஆசனம் கிடைக்காத காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சரணடைந்து அவர்களின் சிபாரிசுவில் இப்போது பாராளுமன்ற ஆசனம் பெற்று கிரகிக்காமல் எல்லாம் பதில் அளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆக இவர் பொறுப்பில் இருந்த போது ஈபிஆர்எல்எவ் அமைப்பு எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கும் என்பதை இத்தால் அறிய முடிகின்றது.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----