மட்டக்களப்பு கோட்ட மட்டத்திலான 2008 ஆம் ஆண்டு ஆங்கில மொழி எழுத்துப் போட்டிப் பரீட்சைக்கு மட்டக்களப்பு வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருத்தி பரீட்சையில் சித்தியடைந்து முதலாமிடத்தைப் பெற்றாள்.
இதனைத் தொடந்து வலய மட்டத்துக்கு தெரிவாகிய இம் மாணவிக்கான ஆங்கில மொழி எழுத்துப் போட்டிப் பரீட்சை 2008.07.09 ஆம் திகதி மட்.புனித மிக்கேல் கல்லூரியில் ஆங்கில ஆலோசகர் ஒருவரின் தலைமையில் நான்கு நடுவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது, இப் பரீட்சைக்குப் பல மாணவர்கள் தோற்றினார்கள்.
இப் போட்டிப் பரீட்சையிலும் இம் மாணவி சிறப்பாகச் சித்தியடைந்து முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டாள், இறுதியில் பரீட்சையில் சித்தியெய்தியவர்களின் பெயர்ப் பட்டியல் அலுவலக விளம்பரப் பலகையில் இரண்டு நாட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது, இதில் இவளின் பெயர் முதலாமிடத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் இப் போட்டிப் பரீட்சையில் சித்தியடையாத ஒரு மாணவியின் பெயர் இப்போது பரிந்துரை செய்யப்பட்டு உண்மையாக சித்தியடைந்த மாணவியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் பிரபல்யமான ஒருவரே தனது சித்தியடையாத மகளுக்காக இந்த முதலாமிடத்தை இப்பகுதி கல்வி அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்துப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
கிராமப் பகுதிகளில் இருந்து பலத்த சிரமத்தின் மத்தியில் ஆங்கிலக் கல்வியினைக் கற்று நகரத்துக்கு போட்டிப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பக்கச் சார்பான தெரிவுகளால் திண்டாடி இளம் வயதிலேயே உளவியல் தாக்கத்துக்கு இலக்காகின்றனர்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணசபையும் அதன் கீழுள்ள கல்வியமைச்சும் இதில் கவனம் எடுக்குமா?
அநீதி இழைக்கப்பட்ட மாணவிக்கு தீர்வு கிட்டுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.