நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிக உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றிய போதிலும், கொழும்பு மாநகரசபையின் 24 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
கொழும்பு மாநகரசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றுமானால் பாராளுமன்ற பிரதமர் பதவி பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு வழங்கப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியதாக ஊடகச் செய்திகள் கூறின, இதனாலேயே கொழும்பு மாநகரசபைத் தேர்தல் வெற்றிக்கான வேலைத் திட்டங்கள் கோத்தபாய ராஜபக்ஸவிடம் ஒப்படைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.
கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்று அடைந்த தோல்வியானது கோத்தபாய ராஜபக்ஸவின் பிரதமர் கனவைக் தவிடு பொடியாக்கியுள்ளது, ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த ஏனைய ஆசனங்களைச் சேர்த்து ஆட்சி அமைப்பது பற்றிய விடயங்களில் கவனம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.
53 ஆசனங்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையின் ஆட்சி அதிகாரத்துக்கு மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி பெற்றுள்ள 6 ஆசனங்களும் முக்கியமானவையாகும், இவர்கள் வழங்கும் ஆதரவைக் கொண்டே கொழும்பு மாநகரசபையின் ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது.
இன்று 2011.10.10 ஆம் திகதி மாலை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, ஜயலத் ஜயவர்தன ஆகியோர் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் கொழும்பு மாநகரசபை ஆட்சி தொடர்பாக பேச்சுவார்த்தை செய்துள்ளனர், இவ் ஆட்சி அமைப்பில் நிபந்தனையின்றி ஆதரவு கொடுக்க முடியாதென மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபைத் தேர்தலிற்காக போட்டியிட்ட மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு 26,229 வாக்குகள் கிடைத்துள்ள போதிலும் 28,433 விருப்பு வாக்குகளை அக் கட்சியின் தலைவர் மனோ கணேசன்
பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மனோ கணேசனுடன், எஸ்.குகவரதன், குருசாமி நளன்ராஜ் தேவன், தங்கேஸ் வர்கீசன், எஸ்.பாஸ்கரன், மற்றும் லோறன்ஸ் பெர்னான்டோ ஆகியோர் கொழும்பு மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்காக முதல்வர் வேட்பாளரான ஏ.ஜே.எம். முசம்மில் 55,448 விருப்பு வாக்குகள் பெற்று முதலிடத்திலும், கிருசன் ஜோன் ராம் 9966 விருப்பு வாக்குகள் பெற்று இரண்டாது இடத்திலும், டைடஸ் பெரேரா 8,732 விருப்பு வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்திலும் உள்ளனர், ஆனால் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற முசம்பில் கொழும்பு மாநகரசபை மேயராகவும், மூன்றாமிட விருப்பு வாக்குகளைப் பெற்ற டைடஸ் பெரேரா பிரதி மேயராகவும் நியமிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார், இரண்டாமிட விருப்பு வாக்குகளைப் பெற்ற தமிழரான கிருசன் ஜோன் ராம் கட்சியின் தீர்மானத்தை ஏற்று பிரதி மேயர் பதவியினைக் விட்டுக் கொடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி தமக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தமிழர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.