சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் நாவலாசிரியர்களின் கூட்டமைப்பான PEN அமைப்பினரால் (Poets Essayists and Novelists) உலகப் புகழ்பெற்ற கவிதைக்கான சர்வதேச விருது (Poetry International Award) பெற்ற செல்வி எனப்படும் சேமமடுவைச் சேர்ந்த செல்வநிதி தியாகராசா 1991.08.30 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் கொல்லப்பட்டார்.
விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களை நாடக வடிவில் தயாரித்து அரங்கேற்ற நாளுக்காக காத்திருந்த வேளையில் செல்வி கடத்தப்பட்டார், செல்வியினால் தயாரிக்கப்பட்ட நாடகம் அரங்கேறுமானால் மக்களின் மனங்களில் பலத்த மாறுதல் ஏற்பட்டு விடுதலைப் புலிகள் தூக்கி எறியப்படுவார்கள் என்பதை உணர்ந்த விடுதலைப் புலிகள், கவிஞை செல்வியுடன் கூடவே அவரின் கையெழுத்துப் பிரதிகள், குறிப்புக்கள், கடிதங்கள், புத்தகங்கள் அனைத்துமே எடுத்துச் சென்று அழித்தார்கள்.
செல்வியின் விடுதலைக்காக சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற பல சர்வதேச அமைப்புக்கள் குரல் கொடுத்து வந்தன. "Counterpoint" எனும் ஆங்கில சஞ்சிகைக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் வழங்கிய செவ்வியின் மூலம் செல்வி தமது தடுப்புக் கைதியாக இருப்பதை ஒப்புக் கொண்டள்ளதாக 1993 டிசம்பர் "சரிநிகர்" பத்திரிகை பதிவு செய்திருந்தது. இதே காலப் பகுதியில் செல்வி கொல்லப்பட்டதனை இலண்டன் அம்னஸ்டி இன்டர்நேஷனல் (London Amnesty International) செவிவழிச் செய்தியின் மூலம் உறுதிப்படுத்தியது.
தேசத்தையும் மனிதத்தையும் நேசித்ததால் விடுதலைப் புலிகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட கவிஞை செல்வியை 20 வருடங்களின் பின்னர் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 2011.10.16 ஆம் திகதி Scarborough Village Recreation Centre, 3600 Kingston Road, Toronto ON M1M 1R9 (Markham Road & Kingston Road) எனும் முகவரியில் மாலை 03.00 - 06.00 வரை நினைவுவேந்தல் செய்ய ஏற்பாடாகியுள்ளது.
மீளாத பொழுதுகள்
அமைதியான காலைப் பொழுது
காலைச் செம்மை கண்களைக் கவரும்
காகம் கரைதலும் இனிமையாய் ஒலிக்கும்
நீண்டு பரந்த தோட்ட வெளிகளில்
தென்றல் தவழ்ந்து மேனியைத் தழுவும்
எங்கும் அமைதி! எதிலும் இனிமை!
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது.
பொழுது புலராக் கருமை வேளையில்
தட தடத்துறுமின வண்டிகள்
அவலக் குரல்கள்: "ஐயோ! அம்மா!"
தோட்டவெளிகள் அதிர்ந்து நடுங்கின
அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்...
ஆட்கள் வெருண்டனர்
அள்ளி ஏற்றிய இளைஞர்கள்
மூச்சுத் திணறினர்.
தாய்மையின் அழுகையும்
தங்கையின் விம்மலும்
பொழுது புலர்தலில்
அவலமாய்க் கேட்டன.
காகம் கரைவதும் நெருடலாய் ஒலித்தது.
மெல்லிய ஒலிகளும் பயத்தையே தூண்டின
எங்கும் அச்சம்; எதிலும் அமைதி.
தென்றல் சிலிர்ப்பில் உணர்வே இல்லை
காலைச் செம்மையை ரசிப்பதை மறந்தோம்.....
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது.
--செல்வி--
மேலதிக தேடலுக்கு:
1. இனியொரு
இதையும் படிக்கவும்
பதிலளிநீக்குஇலங்கை தமிழர் பிரச்சினை – மூன்று முக்கிய குற்றவாளிகள்
பகிர்தலுக்கு நன்றி.
பதிலளிநீக்கு