அதிக வாடிக்கையாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக புதுப் புதுச் செய்திகளை முந்திக் கொண்டு இணையத்தளங்கள் தரவேற்றி வருகின்றன, இவை நவீன தொழினுட்பத்தின் வளர்ச்சி என்றால் மிகையில்லை, ஆனால் வருமானத்தை மாத்திரமே குறியாகக் கொண்ட "தமிழ்வின்" போன்ற சில இணையத்தளங்கள் போலியான செய்திகளை பிரசுரித்து மக்களை ஏமாற்றி வருகின்றன.
"கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு முதல்வரை சந்தித்தால் அன்று கிழக்கின் துக்க தினம்! - கிழக்கு பல்கலை பழைய மாணவர்கள்" எனும் தலைப்பில் கடந்த 2012.01.26 ஆம் திகதி தமிழ்வின் வெளியிட்ட செய்தியின் உண்மைத் தன்மையினை அறியாத மேலும் சில இணையத் தளங்கள் அந்த செய்திக்கு இன்னும் கொஞ்சம் மெருகேற்றி பிரசுரித்து இன்பம் கண்டன.
இந்த விடயம் சார்ந்து கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களினால் எந்தவித அறிக்கைகளும் விடப்படாமல் இருந்த போதிலும் "தமிழ்வின்" மக்களைக் குழப்பும் நோக்கில் உண்மையற்ற செய்தியை பிரசுரித்தமை கண்டிக்கத்தக்கதாகும். கிழக்கு பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் தனது பெயரை வி.குணாளன் என அடிக்குறிப்பிட்டு தமிழ்வின் தரவேற்றிய செய்தி போலியானது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் ஒற்றுமை மேலோங்க வேண்டுமென பலர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் "வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்த கதை போல" போலிச் செய்திகளை பிரசுரித்து தமிழ் மக்களைப் பிரித்தாள தமிழ்வின் முன்பும் பல போலிச் செய்திகளைப் பிரசுரித்துள்ளது, இதனை "களத்துமேடு" தோலுரித்துக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்வின் நேர்மையாக ஊடக சுதந்திரத்தைப் பேணுமாக இருப்பின் கிழக்கு பல்கலைக் கழக, பழைய மாணவர் சங்கச் செயலாளர், வி.குணாளன் வெளியிட்ட அறிக்கையையும் வெளியிட வேண்டும், செய்வார்களா?
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
அன்பின் தமிழ்வின் இணையத்தள நிர்வாகிக்கு.
உங்கள் இணையத்தளத்தில் 26.01.2012 அன்று கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு முதல்வரை சந்தித்தால் அன்று கிழக்கின் துக்க தினம்!- கிழக்கு பல்கலை பழைய மாணவர்கள் எனும் தலைப்பில் செய்தி வெளியாகி இருந்ததை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றோம்.
எமது கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பமைய மாணவர் சங்கத்தால் தமிழ்வின் இணையத்தளத்திற்கோ அல்லது வேறு இணையத்தளங்களிற்கோ ஊடகங்களுக்கோ எந்தவிதமான அறிக்கையும் அனுப்பப்படவில்லை இருந்தபோதும் உங்கள் இணையத்தளத்தில் எமது பெயரினைப் பயன்படுத்தி மக்களை குழப்பமடையச் செய்யும் வகையில் செய்திகளை வெளியிட்டமையை இட்டு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறான போலி அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் எமது பழைய மாணவர் சங்கத்தின் நற் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதுடன் எமது சங்கத்தின் பெயரையும் தவறான முறையில் பயன்படத்தி இருக்கின்றீர்கள். எங்கள் பழைய மாணவர் சங்கத்தின் பெயரில் அறிக்கைகளை வெளியிட உங்களுக்கு யார் அனுமதி தந்தது என்பதனை சொல்ல முடியுமா?
ஒரு ஊடகத்தினை நடாத்திக் கொண்டிருக்கும் நீங்கள் பொய்யான அறிக்கைகள் மூலம் மக்களை குழப்பமடையச் செய்வதன் நோக்கம் என்ன? எதற்காக போலி அறிக்கைகளை தயாரிக்கின்றீர்கள். உங்களுடைய இவ்வாறான செயல்களைப் பார்க்கின்றபோது தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ விரும்பாதவர்கள் போன்று உங்கள் செயற்பாடுகள் இருக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தால் அந்த நாளை துக்க நாளாக எமது கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர்சங்கம் பிரகடனப் படுத்தவில்லை. எமது மக்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மீண்டும் மீண்டும் எமது மக்களை போலிப் பிரச்சாரங்களும் போலி அறிக்கைகள் மூலமும் குழப்பமடையச் செய்து அரசியல் இலாபம் தேட நினைக்காதீர்கள்.
உங்களால் வெளியிடப் படுகி்ற அறிக்கைகள் அனைத்தும் எமது சங்கத்தின் பெயரில் வெளியிடப்பட்ட போலி அறிக்கை போன்று போலியான அறிக்கைகள்தானா? இனிமேலாவது இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளைச் செய்யாதீர்கள். எதற்காக எமது சங்கத்தின் பெயரில் போலி அறிக்கையினை வெளியிட்டடீர்கள் என்பதனை சொல்ல முடியுமா?
ஊடகம் எனும் போர்வையில் இனிமேலாவது கீழ்த்தரமான வேலைகளை செய்ய வேண்டாம்.
செயலாளர்
வி.குணாளன்
பழைய மாணவர்சங்கம்
கிழக்கு பல்கலைக்கழகம்
நன்றி: சந்ருவின் பக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.