வெள்ளி, 20 ஜூலை, 2007

ரணிலும் மங்களவும் உடன்பாட்டில் கைச்சாத்து

தேர்தலில் வெற்றி பெற்றால் ரணில் பிரதமர்,மங்கள உதவிப்பிரதமர் இனப்பிரச்சினைக்கு 9 மாத காலத்திற்குள் தீர்வு காண இணக்கப்பாடு - ஐ.தே.க. - சு.க. (மக்கள் பிரிவு) உடன்படிக்கை கைச்சாத்து.

இன நெருக்கடிக்கு பிளவு படுத்தப்படாத நாட்டிற்குள் அதிகாரப் பரவலாக்கல் மூலம் சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை 9 மாத காலத்திற்குள் முன்வைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் உடன்பாடு கண்டுள்ளன.

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சு.க. மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீரவும் நேற்று வியாழக்கிழமை விரிவான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர்.

வரலாற்றில் என்றுமே கண்டிராத வகையில் இன்று எற்பட்டிருக்கும் அவல நிலை காரணமாக ஜனநாயகம் மற்றும் மனிதாபிமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊழல் மோசடிகளைத் தவிர்ப்பதற்கும் நல்ல ஆட்சியொன்றை நிறுவவதற்கும் வாழ்க்கைச் செலவு அதிகரித்தல் உட்பட மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கை எடுப்பதற்கும் மற்றும் இலங்கையை துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாகையாலும் மேற்படி இலக்குகளை நிறைவேற்றுவதற்கு தத்தமது கட்சிகளின் கொள்கைகள் மற்றும் நோக்கினைப் பாதுகாப்பதுடன் பரந்த அரசியல் ஐக்கியம் ஒன்றை தெளிவான கொள்கை மற்றும் செயற் திட்டம் ஒன்றின் மேல் கட்டியெழுப்புவதற்கான தேவை எழுந்துள்ளதால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பு கொள்கை விளக்கம் மற்றும் கட்சியின் நடுநிலைமையப் பாதுகாப்பதற்கு கட்சியினுள் முயற்சிகளை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியவர்களை அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றி அக் கட்சியினுள் சனநாயகம் மற்றும் நாட்டில் நல்லாட்சி யொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்பவர்களை மீறி கட்சித் தலைமை மற்றும் அவரின் சகோதரர்கள் குழு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தம் பிடியில் வைத்திருக்கிறது.

இலங்கை அரசியல் வரலாற்றில் வெறுமனே ஆட்சி அதிகாரத்தை மட்டும் இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட முன்னணி, கூட்டமைப்பு மற்றும் ஒருமைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட பரந்த உறுதியான கொள்கை அமைப்பு ஒன்றின் மேல் உருவான தெளிவான கால எல்லைக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் கட்சி குழுக்கள் மற்றும் தனி நபர்களைக் கொண்ட ஐக்கியம் ஒன்றை உருவாக்குவது அத்தியாவசியமாயுள்ளதால் இவ்வாறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

புதிய அரசியல் யாப்பு ஒன்றினை வரைபு செய்வதற்கும் அதனை அமுல்படுத்துவதற்கும் மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டதன் பின் கீழே காணப்படும் முதன்மை ஆதாரங்களை உள்ளடக்கி பரந்த அரசியலமைப்பு ஒன்றை பாராளுமன்ற தேர்தலொன்றை நடாத்தி 03 மாதத்தினுள் அரசியலமைப்பு சபை ஒன்றின் மூலம் அறிமுகம் செய்வதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.

அடிப்படை உரிமைகளை அமுல்படுத்துவதனை மென்மேலும் பலப்படுத்துவதும் சகல செயற்பாடுகளிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் ஏனைய சிறுபான்மையினருக்கு எந்தவித பாகுபாடுமின்றி சம உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் பொறுப்புக் கூறக்கூடிய தற்போதுள்ள நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தும் மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி முறையை உருவாக்குதல். பிரதமர் மற்றும் அமைச்சரவையின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை பலப்படுத்தல் இப் புதிய அரசியலமைப்பிற்கு அமைய புதிய ஜனாதிபதி ஒருவருக்குக் கீழ் உடன்பாட்டிற்கு வரும் வகையில் அமைச்சுப் பொறுப்புக்களைக் கொண்டவர்களிடமிருந்து இரு உப ஜனாதிபதி பதவிகளை உருவாக்குவதற்கு அரசியல் யாப்பில் வழியமைத்தல். அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 32 ஆகவும் பிரதி அமைச்சர்கள் பதவி அல்லாத ஏனைய அமைச்சர் பதவிகளை உருவாக்காமல் இருப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது. மேலும் எவ்வேளையிலும் பிரதமர், 32 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சகலரும் உட்படலாக முழு எண்ணிக்கை பாராளுமன்றத்தின் முழு உறுப்பினர் தொகை 1/3 பகுதியை எத்தருணத்திலும் தாண்டக்கூடாது. அரசியல் யாப்பில் இயலுமானவரை அமைச்சர் பதவிகளுக்கான விடயங்கள் மற்றும் பொறுப்புகளைப் பிரித்துக் காட்டல் அமைச்சரவை அமைச்சரின் கீழ் கடமைப் புரியும் அதே நேரம் பிரதி அமைச்சர்களுக்கும் விடயங்கள் மற்றும் பொறுப்புகளை தெளிவாக வேறுப்படுத்திக் கொடுத்தல் அமைச்சரவையில் பெண்களுக்குரிய அதிகபட்ச பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத விசேட அறிவுடைய அதிக பட்சமாக 03 பேருக்குட்பட்டவர்களை அமைச்சரவைக்கு நியமிப்பதற்கு வழிவகை செய்தல். அவ் அமைச்சர்கள் மூவரையும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் வெளியேற்ற முடியும்.

அரச நிர்வாகத்தை இட்டுச் செல்லக் கூடிய பெரும்பான்மையைப் பெறவல்ல சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்திற்குத் தெளிவான வழிவகைகள் கிடைக்கப் பெறும் தேர்தல் முறையொன்றினை அறிமுகம் செய்தல் மேலும் புதிய தேர்தல் தொகுதி எல்லைகளை மீள் அமைத்ததின் பின்பு உருவாக்கப்படும் சகல தொகுதிகளுக்கும் மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதும் இவ் திருத்தங்களின் முதன்மை நோக்கங்களாகும்.

தேர்தலுக்குத் தோற்றி வெற்றிபெற்ற கட்சியை விட்டு விலக முடியாத வகையில் தேவையான சட்டதிட்டங்களை இயற்றவும் இயலுமான வரையில் இடைத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிகளுக்கு குற்றவாளிகள், பாதாளத் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டவர்களை நியமிக்க முடியாத வகையில் கடும் சட்ட திட்டங்களை இயற்றுவதற்கும் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிகளுக்காக குறைந்த பட்ச தகுதிகளை அறிமுகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் பீதி, அச்சம் மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை முடிவிற்குக் கொண்டுவந்து நீதி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நிமித்தம் பொலிஸ் திணைக்களம் அரசியல் மயமாக்கவிலிருந்து நீக்கப்பட்டு சக்திவாய்ந்த நம்பிக்கைக்குரிய நிறுவனமாக மாற்றப்படும். இங்கு அரசாங்கம் ஒன்றை அமைத்து 06 மாதங்களுக்குள் போதைப் பொருள் மற்றும் சட்ட விரோத ஆயுத பாவனையை முற்றாக நீக்குவதற்குப் பாரிய படையெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்படும். சட்ட விரோதமாக ஆயுத மேற்கொள்ளப்பட்ட கொலை, கப்பம் பெறல், மேலும் ஆட்கடத்தல் சம்பந்தமாக உடனடியாக விசாரணை நடாத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கப்படும். மேலும் சட்டத்தை தம் கையில் ஏந்தி அரசியல் தேவைகளின் பொருட்டு பொலிஸ் விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளுக்கு எதிராக விசாரணைகளை நடாத்தி கடும் தண்டனை வழங்கப்படும்.

இனப்பிரச்சினைக்கு துரித தீர்வு காணல்.

சர்வகட்சி மாநாடு, ஆணைக்குழு, கமிட்டி மற்றும் பேச்சு வார்த்தைகள் நடாத்தி பல தசாப்தங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதனை துரிதப்படுத்தி 09 மாதங்களுள் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலே உட்பட ஏனைய சிறுபான்மையினர் சகலருக்கும் சமனான உரிமையுள்ள ஜனநாயக உரிமைகள் சமமான முறையில் வழங்கப்படவும் பிளவுபடாத ஒரே இலங்கைக்குள் பரந்த அதிகாரப் பரவலாக்கல் ஒன்றையும் அமுல்படுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இத்தீர்வின் அடிப்படை நோக்கம் இலங்கையை ஒன்று சேர்ப்பதோடு அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக இனப்பிரிவுகளுக்கும் உடன்பாடு காணக்கூடிய தீர்வு ஒன்றை முன்வைத்து அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கென மக்கள் முன் வைக்கப்படும். பேச்சுவார்த்தை இடம்பெறும் வேளையில் ஆயுதப் பயிற்சி, ஆயுதங்களைக் கொள்வனவு செய்தல், புலனாய்வுப் பிரிவு, இராணுவ அல்லது பொலிஸ் அதிகாரிகளைக் கொலை செய்வது அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு எந்தச் சந்தர்ப்பமும் வழங்காமல் இருப்பதற்கு இரு சாராரும் இணங்கியுள்ளனர்.

சகலரினதும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரும்பான்மையான மக்களின் அனுமதியுடன் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டத்தை ஏதாவது ஓர் கட்சி அல்லது குழு நிராகரித்து தொடர்ச்சியாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாயிருந்தால் சர்வதேச சமூகம் மற்றும் சமாதானத்தை விரும்பும் சகலரினதும் ஒத்துழைப்புடன் பயங்கர வாதத்தையும், பிரிவினைவாதத்தையும் நாட்டிலிருந்து முழுமையாக நீக்கும் பொருட்டு பாரிய வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்படும். விசேடமாக முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்களை வழங்கி இவ்வேலைத்திட்டம் சர்வதேச யுத்தகால சட்டதிட்டங்களுக்கேற்ப வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் மேற்கொள்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது.

பொருளாதாரக் கொள்கை

பொருளாதார கொள்கையின் அடிப்படை யாதெனில், இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் அபிவிருத்தியின் பலன் நியாயமான முறையில் பிரிந்து செல்ல வழி செய்து எமது தாயகத்தில் மற்றும் ஆசிய கண்டத்திலும் முழு உலகிலும் பண்டைய, சமகால அபிவிருத்தி சம்பிரதாயங்கள் மற்றும் அனுபவங்களை உள்வாங்கி இலங்கையில் துரித அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதாகும்.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,விஞ்ஞான தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி விசேட துறைகளில் உலகம் பூராவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனங்களில் வேலை புரியும் இலங்கையர்களுக்கு விசேட பிரஜாவுரிமை மற்றும் கொடுப்பனவுகள் வழங்கி அந்த விசேட அறிவை இலங்கையின் விரைவான முன்னேற்றம் கருதி பெற்றுக் கொள்வதற்கு உடன்பாடு கொள்ளப்படும்.

விசேட நிதியம் ஒன்று அரச பங்களிப்புடன் ஆரம்பித்து க.பொ.த. உயர்தர பெறுபேறு பெற்றவர்களுக்கு உலகில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களான ஒக்ஸ்போட், கேம்பிரிஜ், ஹவார்ட், யெல் போன்ற பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பெற்றுக் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளல்.

நாளுக்கு நாள் வான் உயரத்திற்கு அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கு, விலை நிர்ணயம் மேற்கொள்ள ரூபாவின் பெறுமதியை நிலையான நிலைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு பொறுக்கக்கூடிய வகையில் வாழ்க்கைச் சுமையை மற்றும் பொருட்களின் விலையை வைத்திருப்பதற்காக வாராந்தம் கூடும் வாழ்க்கைச் செலவுக் கமிட்டி ஒன்று நிறுவப்படும்.

பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு உறவை மீண்டும் கட்டியெழுப்பவும் வெளிநாட்டுக் கொள்கையொன்றை அமுல்படுத்துவதில் இலங்கையின் அடையாளத்திற்கும் பெருமைக்கும் பங்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதோடு இந்திய தலைமை கொண்டு சார்க் பிராந்தியம் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான் மற்றும் சீனா உட்பட ஏனைய நாடுகளுடன் மிகவும் சிறந்த அந்நியோன்ய புரிந்துணர்வுடன் நடவடிக்கை மேற்கொள்ளல்.

யுத்தத்தின் பேரில் மேற்கொள்ளும், ஊழல் மோசடிகள் வெளிவருவதை தடுப்பதற்காக செய்யப்படும் ஊடக அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக குறிப்பிடப்பட்ட வேலைத் திட்டமொன்றை அமுலாக்கல். குற்ற அவதூறை சட்டமாக்குவதைத் தடுக்கக் கூடிய வகையில் அரசியல் யாப்பிற்குச் சட்டமூலம் உட்படுத்தப்படும்.


2005 ஜனாதிபதித் தேர்தல் வெற்றியையிட்டு வாக்களிப்பைத் தவிர்ப்பதற்காக ரூபா இருநூறு மில்லியனை புலி இயக்கத்திற்கு வழங்கியதும் அதன் பிறகு பில்லியன் கணக்கிலான ரூபாய்வை பல்வேறுபட்ட தந்திரங்கள் மூலம் பெற்றுக் கொடுத்தது சம்பந்தமாக பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை கோரியிருப்பது மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு முறைப்பாடு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததனால் அப் பணத்தை உபயோகித்துப் பயங்கரவாதிகள் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய அழிவுப் பொருட்களை வாங்கி எமது இராணுவ வீரர்கள் பலரை அழித்துள்ளதால் இது சம்பந்தமாக பரந்த விசாரணை ஒன்றை நடாத்தி இராஜ துரோக மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கல்.

இந்த விடயங்களை நிறைவேற்றும் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (மக்கள் பிரிவு) தலைமைகள் இக்கொள்கைகளுக்கு உடன்படும் ஏனைய ஜனநாயக கட்சிகளுடன் பொதுசன இயக்கங்களுடனும் ஒன்று சேர்ந்து பரந்த முன்னணி ஒன்றை நிறுவுவதற்கு இரு சாராரும் இணங்கியுள்ளனர்.

இலங்கையைக் காப்பதற்குள்ள இறுதிச் சந்தர்ப்பத்திற்கு நாம் வந்துள்ளதால் சகல ஜனநாயகக் கட்சிகளையும் இயக்கங்களையும் மேற்படி கொள்கையின் மேலும் அவர்கள் முன்வைக்கும் சாதகமான திருத்தங்களுடனும் இந்த தேசிய சபைக்கு சேர்த்துக்கொள்வதற்கு அதிகபட்ச சக்தியை பிரயோகிக்க இருசாராரும் இணங்கினர்.

பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறும் எதிர்கால சந்தர்ப்பமொன்றில் கீழ்வரும் நடவடிக்கைகளுக்கு இரு சாராரும் இணங்கினர்.

உடன்படும் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய பரந்த முன்னணி ஒன்றின் மூலம் தேர்தல் ஒன்றிற்கு முகம் கொடுத்தல்.

அந்த முன்னணியின் பெயர் தேசிய சபையாகும்.

தேசிய சபையின் இணைச் செயலாளர் பதவிகள் இரண்டிற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) களால் இருவரின் பெயர் எதிர்காலத்தில் குறிப்பிடப்படும். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை அல்லது ஜனாதிபதி பதவியை வகிக்கும் விடத்து தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கும் செயலாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு)யினால் பெயர் குறிப்பிடப்பட்டவர் ஆவார். ஏனைய சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கும் செயலாளர் ஐக்கிய தேசியக் கட்சியினால் பெயர் குறிப்பிடப்படுபவர் ஆவார்.

தேசிய சபையின் தனாதிகாரி பதவி தேசிய சபையின் உறுப்பினர் அந்தஸ்தைப் பெறும் வேறு கட்சியொன்றுக்கு வழங்கப்படும்.

சகல தேர்தல்களிலும் அந்த அந்த மாவட்டங்களுக்கு உடன்பாடு காணப்பட்டுள்ளவாறு அபேட்சகர்களை நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு (மக்கள் பிரிவு) உரிமை உண்டு. மேலும், மாகாண சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கும் தகுதி அடிப்படையில் அபேட்சகர்களை நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) க்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

தேர்தல்களைக் கையாள்வது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், ருக்மன் சேனநாயக்கா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) அமைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீபதி சூரியாராச்சியினால் மேற்கொள்ளப்படும்.

சகல தேர்தல்களுக்கும் இறுதி வேட்பு மனு சபையாக ரணில் விக்கிரமசிங்க மற்றும் மங்கள சமரவீர கடமை புரிவார்கள்.

பாராளுமன்ற தேர்தலின் பின் கீழ்வருமாறு நடவடிக்கை மேற்கொள்ள இருசாராரும் இணங்கினர்.

பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க வகிப்பதற்கும் உதவிப்பிரதமர் பதவியை மங்கள சமரவீர வகிப்பதற்கும் இவ் உடன்படிக்கைக்கு மேலதிகமாக இருசாராரும் உடன்பட்டு கைச்சாத்திடப்பட்ட மேலதிக உடன்படிக்கைக்கு அமைய முழு அமைச்சர் பதவி 32 இனதும் பிரதி அமைச்சர் பதவிகளினதும் விடயங்கள் மற்றும் நிறுவனங்களைப் பிரித்துக் கொள்வதற்கு இருசாராரும் இணங்கியதோடு மேலும் தேசிய சபைக்குட்படும் கட்சிகளுக்கு உரித்தாகும் வகையில் ஏனைய உடன்பாடுகள் பற்றியும் அந்த மேலதிக உடன்படிக்கையில் இணக்கப்பட்டவாறு அமையும்.

ஏனைய கட்சிகளுடன் உடன்பாட்டுக்கு வந்த பின்பு, அக்கட்சிகளுடனும் தேவையான உடன்பாட்டுக்கு வர இரு கட்சிகளும் இணங்கின. இது விடயத்தில் இரு சாராரும் விட்டுக் கொடுக்கும் அடிப்படையில் செயற்படுவதற்கும் இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

நன்றி தினக்குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----