திங்கள், 30 ஜூலை, 2007

புலி சின்னத்துக்கு பதிலாக மீன் சின்னமாக கருணாவின் ரிஎம்விபி மாற்றம்?

கிழக்கு மாகாணத்தில் விரைவில் நடக்க ஏற்பாடாகியுள்ள தேர்தலில் கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ரிஎம்விபி யானது தேர்தல் ஆணையாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமையினால் எதிர்வரும் தேர்தல்களில் கட்சியின் தேர்தல் சின்னமின்றி சுயேட்சையாக போட்டியிடக் கூடிய நிலை தோன்றியுள்ளது, தேர்தல் ஆணையாளர் திணைக்களத்தில் அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மாத்திரமே நேரடியாக கட்சியின் தேர்தல் சின்னத்தில் போட்டியிடலாம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைகளின் தேர்தல் சின்னமாக "பாயும்புலி" சின்னத்தை தேர்தல் அணையாளர் திணைக்களம் ஏற்க மறுத்திருப்பதாகவும், இதனால் விரைவில் கட்சியின் சின்னமான பாயும்புலிக்குப் பதிலாக மீன் சின்னத்தையும் அத்துடன் கட்சிக் கொடியிலுள்ள வர்ணங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தி ஸ்ரீலங்கா தேசியக் கொடியையொத்த வர்ணங்களையும் உள்ளடக்கப் போவதாக அவ்வியக்க உறுப்பினர்களான பிரதீப் மாஸ்டர் மற்றும் மகேஷ் மாமா கருத்துத் தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியது முதல் கட்சி விடயத்தில் தளம்பல் நிலையிலேயே இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.

முதலில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்று இருந்த பெயரை சிங்கள ஆட்சியாளர்களும், முஸ்லிம்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாற்றம் செய்வதாகக் கூறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என நாமம் சூட்டினர், தற்போது தேர்தல் திணைக்களத்தினால் சிக்கல் நிலை தோன்றியுள்ளதால் கட்சிச் சின்னத்திலும் மற்றும் வர்ணத்திலும் மாற்றம் செய்யவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் சி.எழிலன் கருத்துக் கூற அருகதையற்றவர்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் "கிழக்கின் வெற்றி" பற்றிய செய்தி தொடர்பாக "தமிழர்களுக்கான தீர்வை முன்வைக்க மஹிந்த அரசாங்கம் தயாராக இல்லை, தீர்வை முன்வைக்குமாறு பன்னாட்டு சமூகமும் அழுத்தங்களைக் கொடுக்கத்தவறிவிட்டது, மஹிந்த அரசாங்கம் பரப்புரை செய்ததுபோல கிழக்கின் வெற்றி அவர்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் நீக்குவதற்கான திட்டமிடல்களையும் ஒழுங்குபடுத்தல்களையும் தமிழீழ தேசியத்தலைவர் மேற்கொள்கின்றார். எமது தேசியத் தலைவர் அவர்கள் சிறிய பலத்துடன் பெரிய மாற்றங்களைச் செய்ய ஆயத்தமாக இருக்கிறார்" இவ்வாறு கிளிநொச்சியில் நேற்று முன்தினம் புலிகளின் குரல் முத்தமிழ் கலையரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியற்றுறைப் பொறுப்பாளர் திரு.சி. எழிலன் கருத்துத் தெரிவித்தார்.

இவரின் கருத்துத் தொடர்பாக தமிழீழத்தில் வாழும் மக்கள் கூறுகையில்,
பலம் வாய்ந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இன்றைய நிலையில் சிதைவுற வைத்ததுடன் எண்ணற்ற போராளிகளையும் பொது மக்களையும் இல்லாதொழித்து பல போராளிகளையும் எண்ணற்ற பொதுமக்களையும் ஊனமுற வைத்து கிழக்கில் பல அகதி முகாம்களை உருவாக்கி விடுதலைப் புலிகளை வன்னிப் பகுதிக்குள் முடங்கும் அளவுக்கு மாற்றமுறச் செய்தவர் தான் இந்த சி.எழிலன், இவர் கருத்து தெரிவிப்பதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்.

எவ்வித தொந்தரவுமின்றி அமைதியாக இருந்த மூதூர், சம்பூர் மாவிலாறு ஆற்றைப் பூட்டி விவசாயிகளுக்குச் செல்லும் நீரைத் தடுத்து பேரம் பேச முற்பட்டதன் விளைவே இன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அறுவடையாகும்.



"தமிழ்வின்" இணையத்தில் வந்த செய்தி தகவலுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அரசாங்கம் பரப்புரை செய்ததுபோல கிழக்கின் வெற்றி அவர்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற புலிகளின் குரல் முத்தமிழ் கலையரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:

தமிழர்களுக்கான தீர்வை முன்வைக்க மஹிந்த அரசாங்கம் தயாராக இல்லை. தீர்வை முன்வைக்குமாறு பன்னாட்டு சமூகமும் அழுத்தங்களைக் கொடுக்கத்தவறிவிட்டது.

மஹிந்த அரசாங்கம் பரப்புரை செய்ததுபோல கிழக்கின் வெற்றி அவர்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் நீக்குவதற்கான திட்டமிடல்களையும் ஒழுங்குபடுத்தல்களையும் தமிழீழ தேசியத்தலைவர் மேற்கொள்கின்றார். எமது தேசியத் தலைவர் அவர்கள் சிறிய பலத்துடன் பெரிய மாற்றங்களைச் செய்ய ஆயத்தமாக இருக்கிறார் என்றார்.

ஞாயிறு, 29 ஜூலை, 2007

போதையிலிருந்த கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் பதவி நீக்கம்!

மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவால் கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்த கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலுமுள்ள பாடசாலைகள் அனைத்தும் கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளரின் நிர்வாகத்தில் உள்ளவையாகும்.

வெள்ளி, 27 ஜூலை, 2007

கொழும்பில் நடைபெற்ற யூஎன்பி இனரின் பேரணி.


ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஜனநாயக செயற்பாடுகளின் அநாகரீக நடைமுறையைக் கண்டித்து நேற்று கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் நடத்திய பேரணியின் சில காட்சிகள்.

நன்றி வீரகேசரி

வியாழன், 26 ஜூலை, 2007

ஸ்ரீலங்காவில் ஏட்டிக்குப் போட்டியான பேரணிகள்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஜனநாயக செயற்பாடுகளைக் கண்டித்து ஐ.தே.கட்சியினாலும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து சுதந்திரக் கட்சியினரும் ஏட்டிக்குப் போட்டியான பேரணிகளை இன்று நடத்துகின்றார்கள்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களுடன் இணைந்து கொண்ட அரசாங்க கட்சியின் (சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு) எதிர்ப்பாளர்களும் சேர்ந்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துகின்றார்கள்.

இச் சம்பவத்துக்கு எதிர்மறையாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் 150க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களை கொழும்பு, காலி, குருநாகல், கம்பஹா, புத்தளம், அநுராதபுரம், பொலநறுவை, அம்பாறை, திருகோணமலை உட்பட 19 மாவட்டங்களில் நடத்துகின்றார்கள்.

புதன், 25 ஜூலை, 2007

அனைத்து போரியல் யுத்திகளையும் பயன்படுத்துவோம் - இளந்திரையன்

அமெரிக்க "புளும் பேர்க்" செய்தி நிறுவனத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் வழங்கிய செவ்வியில் எமது மக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து வித போரியல் யுத்திகளையும் பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளார்.

தென் தமிழீழத்தை ஸ்ரீலங்காப் படைகள் கைப்பற்றியுள்ளதென்பது முற்றிலும் அரசியல் நலன் சார்ந்தது, ஸ்ரீலங்காப் படைகள் ஆக்கிரமித்த குடும்பிமலைப் பகுதி கேந்திர முக்கிய வாய்ந்த பிரதேசம் இல்லையென்பதால் இந்நிலப் பகுதிகளிலிருந்து பின்னகர வேண்டிய தேவை ஏற்பட்டது, இதனால் தென் தமிழீழத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிட்டு விட்டார்கள் எனும் அர்த்தமல்ல, தமது அமைப்பின் தளபதிகளும் மற்றும் படையணிகளும் தொடர்ந்து அப்பகுதியில் நிலை கொண்டுள்ளன.

ஸ்ரீலங்காப் படைகள் தென்தமிழீழத்தை ஆக்கிரமித்திருக்கும் வரை அமைதி நிலை அப்பகுதியில் ஏற்படுவது சாத்தியம் இல்லை. ஆகவே தேர்தல் ஒன்றை தென் தமிழீழத்தில் நடத்துவதென்பது இரத்தக் களரியை உருவாக்க எடுக்கும் முயற்சியாகுமென்று இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

சனி, 21 ஜூலை, 2007

நவம்பர் 28 ஆம் நாள் கொசோவோ தனிநாடு பிரகடனம்

ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியும் கை கூடாதால் சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று எதிர்வரும் நவம்பர் 28 ஆம் நாளில் தனிநாட்டினை அமைப்பதற்கு கொசோவோ ஒரு தலைப்பட்சமான முடிவை எடுத்துள்ளதாக தலைநகர் பிறிஸ்டினாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொசோவோ பிரதமர் அஜிம் சேக்கு தெரிவித்தார்.

10,000 சதுர கி.மி பரப்பளவையும் 2 மில்லியன் மக்கள் தொகையையும் கொண்ட கொசோவோவில் 90 வீதமான அல்பேனிய முஸ்லிம் இனத்தவர்களும் 10 வீதமான சேர்பிய பழமைவாத கிறிஸ்தவ இனத்தவர்களும் வாழ்கின்றனர்.

மன்னார் நிலாச்சேனை இராணுவ முகாம் தாக்குதல் தொடர்பாக இரு தரப்பினரினதும் முரண்பாடான செய்திகள்

மன்னார் நிலாச்சேனையில் அமைந்திருந்த ஸ்ரீலங்கா இராணுவ முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று அதிகாலை தாக்குதல் நடாத்தி இருந்தனர். இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் வெளியிட்ட தகவல்களில் பல முரண்பட்ட விடயங்கள் பொசிந்துள்ளன.

இத் தாக்குதலில் ஸ்ரீலங்கா படையினரின் மினி முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டபோது, இம் முகாமில் இருந்த ஸ்ரீலங்கா படையினரில் பத்து படையினர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமுற்று தப்பியோடியுள்ளதாகவும் மற்றும் பல இராணுவ தளபாடங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்ததாகவும் விடுதலை புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுததளபாடங்கள்:
இடைத்தர மிசின்கண் - 01
லைற் மிசின்கண் - 01
60 எம்.எம் மோட்டார் - 01
ரி-56 – 04

மோட்டார் மற்றும் சிறு ஆயுதங்கள் கொண்டு விடுதலைப் புலிகள் நடாத்திய இத் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் நடாத்திய போது விடுதலைப் புலிகளில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், 24 பேர் காயமடைந்திருப்பதாகவும் படையினரில் மூவர் கொல்லப்பட்டும் நான்கு பேர் காயமடைந்திருப்பதாகவும் மற்றும் விடுதலைப்புலிகளால் கைவிட்டுச் செல்லப்பட்ட பல ஆயுத உபகரணங்களைக் கைப்பற்றி இருப்பதாகவும் ஸ்ரீலங்கா தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தினான செய்திகள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா படையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுத விபரங்கள்:
ரி56 ரக துப்பாக்கி -03,
ரி56 ரவைக்கூடு -13,
ரி56 ரவைகள் -355,
ஆர்.பி.ஜி குண்டுகள் -03,
கைக்குண்டு -03 உட்பட மேலும் பல பொருட்கள்.

வெள்ளி, 20 ஜூலை, 2007

ரணிலும் மங்களவும் உடன்பாட்டில் கைச்சாத்து

தேர்தலில் வெற்றி பெற்றால் ரணில் பிரதமர்,மங்கள உதவிப்பிரதமர் இனப்பிரச்சினைக்கு 9 மாத காலத்திற்குள் தீர்வு காண இணக்கப்பாடு - ஐ.தே.க. - சு.க. (மக்கள் பிரிவு) உடன்படிக்கை கைச்சாத்து.

இன நெருக்கடிக்கு பிளவு படுத்தப்படாத நாட்டிற்குள் அதிகாரப் பரவலாக்கல் மூலம் சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை 9 மாத காலத்திற்குள் முன்வைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் உடன்பாடு கண்டுள்ளன.

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சு.க. மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீரவும் நேற்று வியாழக்கிழமை விரிவான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர்.

வரலாற்றில் என்றுமே கண்டிராத வகையில் இன்று எற்பட்டிருக்கும் அவல நிலை காரணமாக ஜனநாயகம் மற்றும் மனிதாபிமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊழல் மோசடிகளைத் தவிர்ப்பதற்கும் நல்ல ஆட்சியொன்றை நிறுவவதற்கும் வாழ்க்கைச் செலவு அதிகரித்தல் உட்பட மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கை எடுப்பதற்கும் மற்றும் இலங்கையை துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாகையாலும் மேற்படி இலக்குகளை நிறைவேற்றுவதற்கு தத்தமது கட்சிகளின் கொள்கைகள் மற்றும் நோக்கினைப் பாதுகாப்பதுடன் பரந்த அரசியல் ஐக்கியம் ஒன்றை தெளிவான கொள்கை மற்றும் செயற் திட்டம் ஒன்றின் மேல் கட்டியெழுப்புவதற்கான தேவை எழுந்துள்ளதால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பு கொள்கை விளக்கம் மற்றும் கட்சியின் நடுநிலைமையப் பாதுகாப்பதற்கு கட்சியினுள் முயற்சிகளை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியவர்களை அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றி அக் கட்சியினுள் சனநாயகம் மற்றும் நாட்டில் நல்லாட்சி யொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்பவர்களை மீறி கட்சித் தலைமை மற்றும் அவரின் சகோதரர்கள் குழு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தம் பிடியில் வைத்திருக்கிறது.

இலங்கை அரசியல் வரலாற்றில் வெறுமனே ஆட்சி அதிகாரத்தை மட்டும் இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட முன்னணி, கூட்டமைப்பு மற்றும் ஒருமைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட பரந்த உறுதியான கொள்கை அமைப்பு ஒன்றின் மேல் உருவான தெளிவான கால எல்லைக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் கட்சி குழுக்கள் மற்றும் தனி நபர்களைக் கொண்ட ஐக்கியம் ஒன்றை உருவாக்குவது அத்தியாவசியமாயுள்ளதால் இவ்வாறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

புதிய அரசியல் யாப்பு ஒன்றினை வரைபு செய்வதற்கும் அதனை அமுல்படுத்துவதற்கும் மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டதன் பின் கீழே காணப்படும் முதன்மை ஆதாரங்களை உள்ளடக்கி பரந்த அரசியலமைப்பு ஒன்றை பாராளுமன்ற தேர்தலொன்றை நடாத்தி 03 மாதத்தினுள் அரசியலமைப்பு சபை ஒன்றின் மூலம் அறிமுகம் செய்வதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.

அடிப்படை உரிமைகளை அமுல்படுத்துவதனை மென்மேலும் பலப்படுத்துவதும் சகல செயற்பாடுகளிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் ஏனைய சிறுபான்மையினருக்கு எந்தவித பாகுபாடுமின்றி சம உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் பொறுப்புக் கூறக்கூடிய தற்போதுள்ள நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தும் மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி முறையை உருவாக்குதல். பிரதமர் மற்றும் அமைச்சரவையின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை பலப்படுத்தல் இப் புதிய அரசியலமைப்பிற்கு அமைய புதிய ஜனாதிபதி ஒருவருக்குக் கீழ் உடன்பாட்டிற்கு வரும் வகையில் அமைச்சுப் பொறுப்புக்களைக் கொண்டவர்களிடமிருந்து இரு உப ஜனாதிபதி பதவிகளை உருவாக்குவதற்கு அரசியல் யாப்பில் வழியமைத்தல். அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 32 ஆகவும் பிரதி அமைச்சர்கள் பதவி அல்லாத ஏனைய அமைச்சர் பதவிகளை உருவாக்காமல் இருப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது. மேலும் எவ்வேளையிலும் பிரதமர், 32 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சகலரும் உட்படலாக முழு எண்ணிக்கை பாராளுமன்றத்தின் முழு உறுப்பினர் தொகை 1/3 பகுதியை எத்தருணத்திலும் தாண்டக்கூடாது. அரசியல் யாப்பில் இயலுமானவரை அமைச்சர் பதவிகளுக்கான விடயங்கள் மற்றும் பொறுப்புகளைப் பிரித்துக் காட்டல் அமைச்சரவை அமைச்சரின் கீழ் கடமைப் புரியும் அதே நேரம் பிரதி அமைச்சர்களுக்கும் விடயங்கள் மற்றும் பொறுப்புகளை தெளிவாக வேறுப்படுத்திக் கொடுத்தல் அமைச்சரவையில் பெண்களுக்குரிய அதிகபட்ச பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத விசேட அறிவுடைய அதிக பட்சமாக 03 பேருக்குட்பட்டவர்களை அமைச்சரவைக்கு நியமிப்பதற்கு வழிவகை செய்தல். அவ் அமைச்சர்கள் மூவரையும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் வெளியேற்ற முடியும்.

அரச நிர்வாகத்தை இட்டுச் செல்லக் கூடிய பெரும்பான்மையைப் பெறவல்ல சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்திற்குத் தெளிவான வழிவகைகள் கிடைக்கப் பெறும் தேர்தல் முறையொன்றினை அறிமுகம் செய்தல் மேலும் புதிய தேர்தல் தொகுதி எல்லைகளை மீள் அமைத்ததின் பின்பு உருவாக்கப்படும் சகல தொகுதிகளுக்கும் மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதும் இவ் திருத்தங்களின் முதன்மை நோக்கங்களாகும்.

தேர்தலுக்குத் தோற்றி வெற்றிபெற்ற கட்சியை விட்டு விலக முடியாத வகையில் தேவையான சட்டதிட்டங்களை இயற்றவும் இயலுமான வரையில் இடைத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிகளுக்கு குற்றவாளிகள், பாதாளத் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டவர்களை நியமிக்க முடியாத வகையில் கடும் சட்ட திட்டங்களை இயற்றுவதற்கும் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிகளுக்காக குறைந்த பட்ச தகுதிகளை அறிமுகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் பீதி, அச்சம் மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை முடிவிற்குக் கொண்டுவந்து நீதி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நிமித்தம் பொலிஸ் திணைக்களம் அரசியல் மயமாக்கவிலிருந்து நீக்கப்பட்டு சக்திவாய்ந்த நம்பிக்கைக்குரிய நிறுவனமாக மாற்றப்படும். இங்கு அரசாங்கம் ஒன்றை அமைத்து 06 மாதங்களுக்குள் போதைப் பொருள் மற்றும் சட்ட விரோத ஆயுத பாவனையை முற்றாக நீக்குவதற்குப் பாரிய படையெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்படும். சட்ட விரோதமாக ஆயுத மேற்கொள்ளப்பட்ட கொலை, கப்பம் பெறல், மேலும் ஆட்கடத்தல் சம்பந்தமாக உடனடியாக விசாரணை நடாத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கப்படும். மேலும் சட்டத்தை தம் கையில் ஏந்தி அரசியல் தேவைகளின் பொருட்டு பொலிஸ் விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளுக்கு எதிராக விசாரணைகளை நடாத்தி கடும் தண்டனை வழங்கப்படும்.

இனப்பிரச்சினைக்கு துரித தீர்வு காணல்.

சர்வகட்சி மாநாடு, ஆணைக்குழு, கமிட்டி மற்றும் பேச்சு வார்த்தைகள் நடாத்தி பல தசாப்தங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதனை துரிதப்படுத்தி 09 மாதங்களுள் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலே உட்பட ஏனைய சிறுபான்மையினர் சகலருக்கும் சமனான உரிமையுள்ள ஜனநாயக உரிமைகள் சமமான முறையில் வழங்கப்படவும் பிளவுபடாத ஒரே இலங்கைக்குள் பரந்த அதிகாரப் பரவலாக்கல் ஒன்றையும் அமுல்படுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இத்தீர்வின் அடிப்படை நோக்கம் இலங்கையை ஒன்று சேர்ப்பதோடு அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக இனப்பிரிவுகளுக்கும் உடன்பாடு காணக்கூடிய தீர்வு ஒன்றை முன்வைத்து அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கென மக்கள் முன் வைக்கப்படும். பேச்சுவார்த்தை இடம்பெறும் வேளையில் ஆயுதப் பயிற்சி, ஆயுதங்களைக் கொள்வனவு செய்தல், புலனாய்வுப் பிரிவு, இராணுவ அல்லது பொலிஸ் அதிகாரிகளைக் கொலை செய்வது அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு எந்தச் சந்தர்ப்பமும் வழங்காமல் இருப்பதற்கு இரு சாராரும் இணங்கியுள்ளனர்.

சகலரினதும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரும்பான்மையான மக்களின் அனுமதியுடன் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டத்தை ஏதாவது ஓர் கட்சி அல்லது குழு நிராகரித்து தொடர்ச்சியாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாயிருந்தால் சர்வதேச சமூகம் மற்றும் சமாதானத்தை விரும்பும் சகலரினதும் ஒத்துழைப்புடன் பயங்கர வாதத்தையும், பிரிவினைவாதத்தையும் நாட்டிலிருந்து முழுமையாக நீக்கும் பொருட்டு பாரிய வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்படும். விசேடமாக முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்களை வழங்கி இவ்வேலைத்திட்டம் சர்வதேச யுத்தகால சட்டதிட்டங்களுக்கேற்ப வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் மேற்கொள்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது.

பொருளாதாரக் கொள்கை

பொருளாதார கொள்கையின் அடிப்படை யாதெனில், இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் அபிவிருத்தியின் பலன் நியாயமான முறையில் பிரிந்து செல்ல வழி செய்து எமது தாயகத்தில் மற்றும் ஆசிய கண்டத்திலும் முழு உலகிலும் பண்டைய, சமகால அபிவிருத்தி சம்பிரதாயங்கள் மற்றும் அனுபவங்களை உள்வாங்கி இலங்கையில் துரித அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதாகும்.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,விஞ்ஞான தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி விசேட துறைகளில் உலகம் பூராவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனங்களில் வேலை புரியும் இலங்கையர்களுக்கு விசேட பிரஜாவுரிமை மற்றும் கொடுப்பனவுகள் வழங்கி அந்த விசேட அறிவை இலங்கையின் விரைவான முன்னேற்றம் கருதி பெற்றுக் கொள்வதற்கு உடன்பாடு கொள்ளப்படும்.

விசேட நிதியம் ஒன்று அரச பங்களிப்புடன் ஆரம்பித்து க.பொ.த. உயர்தர பெறுபேறு பெற்றவர்களுக்கு உலகில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களான ஒக்ஸ்போட், கேம்பிரிஜ், ஹவார்ட், யெல் போன்ற பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பெற்றுக் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளல்.

நாளுக்கு நாள் வான் உயரத்திற்கு அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கு, விலை நிர்ணயம் மேற்கொள்ள ரூபாவின் பெறுமதியை நிலையான நிலைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு பொறுக்கக்கூடிய வகையில் வாழ்க்கைச் சுமையை மற்றும் பொருட்களின் விலையை வைத்திருப்பதற்காக வாராந்தம் கூடும் வாழ்க்கைச் செலவுக் கமிட்டி ஒன்று நிறுவப்படும்.

பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு உறவை மீண்டும் கட்டியெழுப்பவும் வெளிநாட்டுக் கொள்கையொன்றை அமுல்படுத்துவதில் இலங்கையின் அடையாளத்திற்கும் பெருமைக்கும் பங்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதோடு இந்திய தலைமை கொண்டு சார்க் பிராந்தியம் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான் மற்றும் சீனா உட்பட ஏனைய நாடுகளுடன் மிகவும் சிறந்த அந்நியோன்ய புரிந்துணர்வுடன் நடவடிக்கை மேற்கொள்ளல்.

யுத்தத்தின் பேரில் மேற்கொள்ளும், ஊழல் மோசடிகள் வெளிவருவதை தடுப்பதற்காக செய்யப்படும் ஊடக அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக குறிப்பிடப்பட்ட வேலைத் திட்டமொன்றை அமுலாக்கல். குற்ற அவதூறை சட்டமாக்குவதைத் தடுக்கக் கூடிய வகையில் அரசியல் யாப்பிற்குச் சட்டமூலம் உட்படுத்தப்படும்.


2005 ஜனாதிபதித் தேர்தல் வெற்றியையிட்டு வாக்களிப்பைத் தவிர்ப்பதற்காக ரூபா இருநூறு மில்லியனை புலி இயக்கத்திற்கு வழங்கியதும் அதன் பிறகு பில்லியன் கணக்கிலான ரூபாய்வை பல்வேறுபட்ட தந்திரங்கள் மூலம் பெற்றுக் கொடுத்தது சம்பந்தமாக பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை கோரியிருப்பது மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு முறைப்பாடு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததனால் அப் பணத்தை உபயோகித்துப் பயங்கரவாதிகள் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய அழிவுப் பொருட்களை வாங்கி எமது இராணுவ வீரர்கள் பலரை அழித்துள்ளதால் இது சம்பந்தமாக பரந்த விசாரணை ஒன்றை நடாத்தி இராஜ துரோக மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கல்.

இந்த விடயங்களை நிறைவேற்றும் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (மக்கள் பிரிவு) தலைமைகள் இக்கொள்கைகளுக்கு உடன்படும் ஏனைய ஜனநாயக கட்சிகளுடன் பொதுசன இயக்கங்களுடனும் ஒன்று சேர்ந்து பரந்த முன்னணி ஒன்றை நிறுவுவதற்கு இரு சாராரும் இணங்கியுள்ளனர்.

இலங்கையைக் காப்பதற்குள்ள இறுதிச் சந்தர்ப்பத்திற்கு நாம் வந்துள்ளதால் சகல ஜனநாயகக் கட்சிகளையும் இயக்கங்களையும் மேற்படி கொள்கையின் மேலும் அவர்கள் முன்வைக்கும் சாதகமான திருத்தங்களுடனும் இந்த தேசிய சபைக்கு சேர்த்துக்கொள்வதற்கு அதிகபட்ச சக்தியை பிரயோகிக்க இருசாராரும் இணங்கினர்.

பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறும் எதிர்கால சந்தர்ப்பமொன்றில் கீழ்வரும் நடவடிக்கைகளுக்கு இரு சாராரும் இணங்கினர்.

உடன்படும் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய பரந்த முன்னணி ஒன்றின் மூலம் தேர்தல் ஒன்றிற்கு முகம் கொடுத்தல்.

அந்த முன்னணியின் பெயர் தேசிய சபையாகும்.

தேசிய சபையின் இணைச் செயலாளர் பதவிகள் இரண்டிற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) களால் இருவரின் பெயர் எதிர்காலத்தில் குறிப்பிடப்படும். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை அல்லது ஜனாதிபதி பதவியை வகிக்கும் விடத்து தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கும் செயலாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு)யினால் பெயர் குறிப்பிடப்பட்டவர் ஆவார். ஏனைய சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கும் செயலாளர் ஐக்கிய தேசியக் கட்சியினால் பெயர் குறிப்பிடப்படுபவர் ஆவார்.

தேசிய சபையின் தனாதிகாரி பதவி தேசிய சபையின் உறுப்பினர் அந்தஸ்தைப் பெறும் வேறு கட்சியொன்றுக்கு வழங்கப்படும்.

சகல தேர்தல்களிலும் அந்த அந்த மாவட்டங்களுக்கு உடன்பாடு காணப்பட்டுள்ளவாறு அபேட்சகர்களை நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு (மக்கள் பிரிவு) உரிமை உண்டு. மேலும், மாகாண சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கும் தகுதி அடிப்படையில் அபேட்சகர்களை நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) க்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

தேர்தல்களைக் கையாள்வது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், ருக்மன் சேனநாயக்கா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) அமைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீபதி சூரியாராச்சியினால் மேற்கொள்ளப்படும்.

சகல தேர்தல்களுக்கும் இறுதி வேட்பு மனு சபையாக ரணில் விக்கிரமசிங்க மற்றும் மங்கள சமரவீர கடமை புரிவார்கள்.

பாராளுமன்ற தேர்தலின் பின் கீழ்வருமாறு நடவடிக்கை மேற்கொள்ள இருசாராரும் இணங்கினர்.

பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க வகிப்பதற்கும் உதவிப்பிரதமர் பதவியை மங்கள சமரவீர வகிப்பதற்கும் இவ் உடன்படிக்கைக்கு மேலதிகமாக இருசாராரும் உடன்பட்டு கைச்சாத்திடப்பட்ட மேலதிக உடன்படிக்கைக்கு அமைய முழு அமைச்சர் பதவி 32 இனதும் பிரதி அமைச்சர் பதவிகளினதும் விடயங்கள் மற்றும் நிறுவனங்களைப் பிரித்துக் கொள்வதற்கு இருசாராரும் இணங்கியதோடு மேலும் தேசிய சபைக்குட்படும் கட்சிகளுக்கு உரித்தாகும் வகையில் ஏனைய உடன்பாடுகள் பற்றியும் அந்த மேலதிக உடன்படிக்கையில் இணக்கப்பட்டவாறு அமையும்.

ஏனைய கட்சிகளுடன் உடன்பாட்டுக்கு வந்த பின்பு, அக்கட்சிகளுடனும் தேவையான உடன்பாட்டுக்கு வர இரு கட்சிகளும் இணங்கின. இது விடயத்தில் இரு சாராரும் விட்டுக் கொடுக்கும் அடிப்படையில் செயற்படுவதற்கும் இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

நன்றி தினக்குரல்

வியாழன், 19 ஜூலை, 2007

கிழக்கு உதயம் நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ்

குடும்பிமலையை விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்டெடுத்த ஸ்ரீலங்கா படையினருக்கு கௌரவம் செய்யும் நோக்கில் "கிழக்கு உதயம்" எனும் வெற்றி விழா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம் பெற்றது.

நாம் இலங்கையர்கள் என்பதால் கிழக்கே சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து தொப்பிகலையில் தேசியக்கொடியேற்ற வழிவகுத்தார்கள், அங்கு விடுதலைப்புலிகளிற்கு ஏற்படுத்திய தோல்வியை இராணுவ வெற்றியென்று மட்டும் கூற நான் விரும்பவில்லை அதற்கும் மேலாக தேசியமிக்க சர்வதேச பெறுமானமொன்று இந்த வெற்றியினுள்ளே பொதிந்திருக்கிறது.

பயங்கரவாதத்திற்கு சட்ட ரீதியான அதிகார பிரதேசமொன்று இருக்கின்றதென்பதை உடன் படிக்கையொன்றின் மூலம் ஏற்றுக்கொண்டது போன்ற அநியாயமான செயலொன்று இலங்கையை வேறேங்குமே இடம் பெறவில்லை. இந்த பிரதேசம் அதிகாரமாகி அம்பலப்படுத்தியதன் மூலம் பயங்கரவாதத்தின் கனவுகள் சுக்குநூறாக செல்லும் செய்தியை எமது வீரர்கள் தொப்பிகல குன்றிலிருந்து உலகிற்கு எடுத்து கூறினார்கள். ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது கிழக்கு பகுதியின் மொட்டாக்கு போட்ட முஸ்லிம் பிள்ளைகளும் பொட்டு வைத்த தமிழ் பிள்ளைகளும் கலாசார பொருளாதார ரீதியிலொடுக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.

கிழக்கிலுள்ள 12,14 வயது சிறுவர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களுக்கும் பென்சில்களுக்கும் பதிலாக அவர்கட்குக் கிடத்தது விடுதலைப்புலிகளின் துப்பாகிகளும் குண்டுகளும் சயனைட் குப்பிகளும் தான், இப்போது நாம் அனைவரும் ஒன்றினைந்து அச்சிறுவர்களின் எதிர்கால உலகைக் கட்டியெழுப்புவோம், இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ தனதுரையில் குறிப்பிட்டார்.

புதன், 18 ஜூலை, 2007

பிரேஸில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 200 பேர் பலி!

பிரேஸில் நாட்டின் "ராம் எயர் லைனெஸ்" பயணிகள் விமானம் கான் கோஷ் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமான நிலைய ஓடுப்பாதை ஈரமாக இருந்தமையால் விமானம் வழுக்கிச் சென்று அருகிலிருந்த எரிப்பொருள் நிலையத்தில் மோதியதால் தீ பற்றி எரிந்துள்ளது.

இச் சம்பவத்தில் 200 பேர் பலியாகியுள்ளனர் எனத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்காவின் கிழக்கு படுக்கையில் பூமியதிர்ச்சி

ஸ்ரீலங்காவின் கிழக்கே வங்காள விரிகுடா கடற்பகுதியில் இன்று காலை 9.56 மணியளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது, கண்டியிலிருந்து கிழக்குப் படுக்கையாக 406 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கடற் பரப்பில் 5.2 றிட்சர் அளவான பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளது எனவும் இப் பூமியதிர்சியால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லையெனவும் பேராதனை பல்கலைகழக புவியியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கபில நஹாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி,மாத்தளை,கொழும்பு மற்றும் சில பகுதிகளிலும் இப் பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

செவ்வாய், 17 ஜூலை, 2007

சிறுவனின் முகத்தில் கேசம் வளரும் அபூர்வம்

இந்தியாவின் மகாராஷ்டிராவின் சாங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்த 11 வயதுடைய பிருதுவிராஜ் பாட்டேல் விசித்திரமான நோய்க்கு இலக்காகி உள்ளார்.

பிறக்கும் போது இவரது தலையில் மட்டுமன்றி உடலின் ஏனைய பாகங்களிலும் உரோமங்கள் இருந்தன, சிறுவனின் வளர்ச்சிக்கேற்ப தலைக் கேசம் வளர்வது போன்று முகத்திலுள்ள உரோமங்களும் வளர்ச்சியடைந்து வருகின்றது.

சமீபத்தில் நடந்த சாங்லி மருத்துவ முகாமுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனின் முகத் தோற்றம் கமராவினுள் சிக்கிக் கொண்டது.

கிழக்கு மாகாண தலைமைச் செயலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இரை

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணசபை அண்மையில் வடக்கு, கிழக்கு என்று வெவ்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு தனித் தனி செயலர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் கிழக்கு மாகாணசபைக்கு சிங்கள இனத்தவரான எச்.எம்.ஹேரத் அபேவீர ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார், இவர் முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றி இருந்தார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் திருகோணமலை, உள்துறைமுக வீதியிலுள்ள தனது அலுவலகப் பணியில் இருந்த வேளை சாரளம் வழியாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

வியாழன், 12 ஜூலை, 2007

வவுனியா ரெலோ அலுவலகத்தினுள் துப்பாக்கிப் பிரயோகம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு கொண்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வவுனியா அலுவலகத்தினுள் இன்று ஸ்ரீலங்கா படையினர் தேடுதல் நடாத்திய போது அங்கிருந்து ஒருவர் ஸ்ரீலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலதிக விபரங்கள் பெறப்படவில்லை.

புதன், 11 ஜூலை, 2007

புதிய 7 உலக அதிசயங்கள்



போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனில்(Lisbone) சனிக்கிழமை நடைபெற்ற வண்ணமயமான நிகழ்வில் unesco அமைப்பு மூலம் உலகம் முழுவதிலும் உள்ள 10 கோடி மக்களினால் அதிசய தினமான 07.07."07 ஆம் தேதி 21 உலக அதிசயங்களிலிருந்து ஏழு அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இதுவரை உலக அதிசயங்களாகக் கணிக்கப்பட்ட இத்தாலியில் உள்ள பைசால் சாய்கோபுரம், பிரான்ஸ்சில் உள்ள ஈபிள் கோபுரம், ஈராக்கில் உள்ள பாபிலோன் தோட்டம் மற்றும் எகிப்தில் உள்ள பிரமிட் ஆகியன நீக்கபட்டுள்ளன.

1. சீனப் பெருஞ்சுவர்: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, படிப்படியாகக் கட்டி முடிக்கப்பட்ட, உலகின் மிகநீண்ட மதில்சுவர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருந்து மத்திய ஆசியா வரை அமைந்துள்ளது. உலக பாரம்பரிய மையமாக யுனெஸ்கோவால் 1986-ல் தேர்வு செய்யப்பட்டது.

2. ஜோர்டானின் பெத்ரா: ஜோர்தான் தலைநகர் அம்மானில் இருந்து தெற்காக 200 கிலோமீட்டர் தொலைவில் பெத்ரா அமைந்துள்ளது. காண்போரை வியப்படையச் செய்யும் வகையில் மலையைச் செதுக்கி இளஞ்சிவப்பு நிறத்தில் உருவாக்கப்பட்ட வழிபாட்டிடங்களும், கோபுரங்களும் அமைந்த புராதன சின்னம்.

3. பிரேசிலின் கிறிஸ்து ரட்சகர் சிலை: பிரேசிலின் 710 மீட்டர் உயரத்திலுள்ள கார்கோவடோ மலையில் 38 மீட்டர் உயரமும், 700 எடையும் கொண்ட யோ டி ஜெனிரோவில் உள்ள பிரேசிலின் அடையாளமாக 1931-ம் ஆண்டு திறக்கப்பட்டது இக் கிறிஸ்து ரட்சகர் சிலையாகும். ஒவ்வோர் ஆண்டும் 18 லட்சம் பேருக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் சுற்றுலாத்தலம்.

4. பெரு நாட்டின் “மச்சுபிச்சு’ கட்டுமானம்: கடல்மட்டத்தில் இருந்து 2430 மீட்டர் உயரத்தில், மலைக்குன்றுகளின் மீது உருவாக்கப்பட்ட பிரமாண்ட நகரம். பெரு நாட்டின் உருபம்பா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இன்கா நாககம் உச்சத்தில் இருந்தபோது உருவாக்கப்பட்ட அற்புத புராதன நகரம்.

5. மெக்சிக்கோவில் உள்ள மாயர்களின் நகரமான சிச்சன் இட்சா: மெக்சிக்கோவில் உள்ள யுட்டகன் தீபகற்பத்தில் கி.பி. 500 வாக்கில் கட்டப்பட்ட நகரமான சிச்சன் இட்சாவில் மிகப் பிரமாண்டமான பிரமிட், வானியல் ஆய்வு மையம், போர்வீரர்கள் கோயில் போன்ற புராதன கட்டுமானங்கள் உள்ளன.

6. ரோம் நகல் உள்ள கொலாசியம்: கி.பி. 80-ல் கட்டி முடிக்கப்பட்ட 500 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்து வந்த ரோமப் பேரரசின் பெருமையைப் பறைசாற்றும் 50 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கக் கூடியவாறு இவ் "வட்ட அரங்கு" கட்டப்பட்டுள்ளது.

7. தாஜ்மகால்: இந்தியாவின் யமுனை நதிக்கரையில் ஆக்ராவில் முகலாய மன்னன் ஷாஜகானால் காதலி மும்தாஜ்ஜுக்காக 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காதல் சின்னம்.

செவ்வாய், 10 ஜூலை, 2007

யசோதரா, ரோஜர் வோட்டர் திருமணக் காட்சி


ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் மகள் யசோதராவுக்கு கடந்த 15.6.2007 இல் திருமணம் நடைபெற்றது.

பிரித்தானியா வைத்திய நிபுணர் ரோஜர் வோட்டருக்கும் யசோதராவுக்கும் லண்டனில் சிங்கள சம்பிரதாய முறைப்படி நடைபெற்ற திருமணம் வைபவத்தில் யசோதராவின் சகோதரன் விமுக்தி, தாய் சந்திரிக்கா மற்றும் கணவன் ரோஜர் வோட்டர் ஒன்றாக காணப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.

புதன், 4 ஜூலை, 2007

இலங்கை அணிக்கு 1 விக்கெட்டுக்கு 154 ஓட்டம் 62 ஓட்டங்களுடன் சுருண்டது பங்களாதேஷ்.

கொழும்பில் இடம்பெற்று வரும் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதலாவது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி தனது முதலாவது இனிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களை எடுத்திருந்தது.

தனது முதலாவது இனிங்ஸில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் முரளிதரன் 4 விக்கட்டுக்களையும், லசித் மலிங்க 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து தனது முதலாவது இனிங்ஸில் ஆட ஆரம்பித்த இலங்கை அணியின் சார்பில் மைக்கல் வன்டொற் 14 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்க ஆட்டநேர இறுதியில் வர்ணபுர 79 ஓட்டங்களுடனும், சங்ககார 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் ஆடுகளத்தில் இருந்தனர்.

திங்கள், 2 ஜூலை, 2007

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----