பழம்பெரும் அரசியல்வாதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் சந்தர்ப்பவாதத்துக்கு ஏற்றவாறு கருத்துக்களை மாறி மாறிக் கூறுவதனை கண்டும் காணாமலும் இருக்க முடியாதென விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.
இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீ யாழ்ப்பாண ஆளுனராகவும், கிழக்கு மாகாணத்தில் கடற்படைத் தளபதி ஆளுனராகவும், இன்னுமொரு இராணுவத் தளபதி அரசாங்க அதிபராக இருப்பதாகக் குறிப்பிட்ட சம்பந்தனிடம் வினா தொடுத்தார் முரளிதரன்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மூலம் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக கொண்டு வரும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பிரசாரம் செய்து இராணுவத் தளபதியை ஜனாதிபதியாக்க பிரயத்தனம் மேற்கொண்டதன் மர்மம் என்ன?
தேர்தல் வரும் காலங்களின் இப்படியான சந்தர்ப்பவாத கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டு ஜதார்த்தத்தை உணர்த்த வேண்டும், ஏ.9 பாதை புனரமைப்புக்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களும், இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டத்துக்கென 20 ஆயிரம் மில்லியன் ரூபாய்களுமென பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் பெயரை சிறு ஒழுங்கைக்கு வைத்தால் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதன் காரணம் என்ன?
கொழும்பில் சரவணமுத்து விளையாட்டு அரங்கு இருக்க முடியுமென்றால் வடக்கு கிழக்கில் ஏன் மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கு இருக்க முடியாது?
கிழக்கு மாகாணத்துக்கு ஒரு விளையாட்டு அரங்கினைத் தாருங்கள் நாங்கள் அதற்கு மகிந்த இராஜபக்ஷவின் பெயரை வைப்போம் என அத் தருணத்தில் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தார் முரளிதரன்.
புத்த பெருமானை வைத்து மதவாதம் பேசுகின்றீர்கள், பிரபாகரனின் தாத்தாவினால் பாணந்துறையில் உருவாக்கப்பட்ட ஆலயம் இன்றும் உள்ளது, அதனை சிங்கள மக்கள் பேணிப் பாதுகாத்து வருகின்றார்கள், ஆனால் தமிழர் பகுதிக்கு புத்தரின் ஆலயம் வரும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் எதிர்க்கின்றீர்கள்?
கிழக்கு பல்கலைக் கழகங்களில் 300 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர், அங்கு எவ்வித வேறுபாடுகளும் இல்லை, ஏறாவூரில் விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்ட பௌத்த விகாரையை நாம் புனரமைத்துள்ளோம் அங்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை.
ஐரோப்பிய, ஏகாதிபத்திய அரசாங்கங்களின் தூண்டுதலில் சனல் 4 தொலைக்காட்சியினால் தமிழ் மக்களைக் குழப்புவதற்காகத் திட்டமிட்டு ஒளிநாடா வெளியிடப்பட்டுள்ளது, இதனை விடவும் கொடூரமான ஒளிநாடாவை தமிழ் மக்களுக்கு எதிராக வெளியிட எமது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் முடியும்,
அறந்தலாவைப் படுகொலை, தலதாமாளிகைக் குண்டு வெடிப்பு, அனுராதபுர தாக்குதல், குழந்தைகள் கொலை, பஸ், புகையிரத தாக்குதல்கள், மற்றும் காத்தான்குடிப் படுகொலை போன்றனவற்றைப் பயன்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஒளிநாடாவை இன்றே வெளியிட முடியும், ஏன் வெளியிடவில்லை என்றால் சகலதையும் மறந்துவிட வேண்டும் எனும் நோக்கத்தினால் மாத்திரமே! வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்களும் அவரின் மக்களே, இதனால் சிங்கள மக்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க அவர் விரும்பவில்லை.
யுத்தம் என்பது கொடிய விடயம் இழப்பு இல்லாமல் வெல்ல முடியாது, அவை கடந்தவை, மீண்டும் மீண்டும் அவற்றைக் கூறி அரசியல் இலாமமீட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனையக் கூடாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் இல்லை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மலையகத்தில் தொண்டமான், கொழும்பில் பிரபா கணேசன், மற்றும் நாங்கள் இருக்கின்றோம், தமிழர்களின் பிரச்சனை தொடர்பாக தீர்வு காணும் போது மேற்கூறிய அனைவரையும் அழைக்க வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியெனும் ரீதியில் கதைக்கலாமே தவிர, தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமேயெனக் கூற முடியாது, அதனை எவரும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம்.
மேற்கண்டவாறு பாராளுமன்ற உரையில் முரளிதரன் விநாயகமூர்த்தி குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தற்பவாதம் பேசுகின்றது, மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை பாதாளத்தில் தள்ள நினைக்கின்றது, தமிழ் மக்களின் துயரத்தில் குளிர் காய நினைக்கின்றது என்பதனை தமிழ் மக்கள் நன்றாகவே உணர்ந்து உள்ளார்கள், அவர்களின் கூற்றுக்கள் இப்போது தமிழர்களிடம் எடுபடுவதில்லை.
ஆனால் சிங்கள ஏகாதிபத்திய அரசாங்கம் தமிழர்களை குறி வைத்து நடத்தும் உக்கிர நிழல் தாக்குதல்கள் ஏராளம், இதனை பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கண்டும் காணாமல் இருப்பது கவலையானது, பாணந்துறையில் உள்ள சைவ ஆலயத்தை சிங்கள மக்கள் விரும்பினால் வணங்கலாம், விருப்பமில்லையேல் விட்டு விடலாம், ஆனால் தமிழர்களின் பிரதேசங்களின் புத்தபிரானுக்கு என்ன வேலை, தமிழர்கள் அவரை வணங்கவில்லையே, ஆகவே அவரின் நாமத்தினை தமிழர்களின் பிரதேசங்களில் வலிந்து திணிப்பதன் நோக்கம் என்ன பிரதி அமைச்சரே?
கோரளைப்பற்று கிரானில் உள்ள திரு. விநாயகமூத்தியின் காணியில் ஒரு பௌத்த விகாரையையும், புத்தபிரானின் உருவச் சிலையையும் நிர்மாணித்து புத்த பிக்குக்களைக் கொண்டு முரளிதரனால் பூஜை புனர்காரம் செய்யலாம், எவரும் அதற்கு தடையாக இருக்க மாட்டார்கள் ஏனெனில் அது தனி மனித சுதந்திரம், ஆனால் தமிழர்கள் எனும் மக்களிடையே ஜனநாயகத்தைப் பேண நினைக்கும் நாட்டில் ஒரு மதத்தின் பேரால் ஆக்கிரமிப்பு நடாத்தப்படுவதை "களத்துமேடு" கண்டிக்கின்றது.அறந்தலாவை படுகொலை, சிங்கள அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் மற்றும் இன்னும் பலவற்றின் சூத்திரதாரி யாரென்பதை கருணா அம்மான் நன்றாகவே அறிவார், ஆகவே முழுப் பூசனிக்காயை சோற்றினுள் மறைக்க எத்தனிப்பது போல பதவியினைத் தக்கவைத்துக் கொள்வதற்காக விதண்டாவாதம் பேசுவதனை நிறுத்தி தமிழர்களுக்கு காத்திரமானதைச் செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.