செவ்வாய், 12 ஜூலை, 2011
கதிர்காம கந்தனின் பக்தையின் பரிதாப மரணத்தைத் திசை திருப்பி அரசியல் இலாபமீட்ட பிரசாரம் மேற்கொள்ளும் ஊடகங்கள்!
கதிர்காமம் முருகன் ஆலயத்தைத் தரிசிக்கும் நோக்கத்தில் ஆடி மாத கொடியேற்றத்தினைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும், கால் நடையாகவும் சென்று வழிபாடு நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத சூழலில் இருந்து மீண்ட மக்கள் சுதந்திரமாக விரும்பிய இடங்களுக்கெல்லாம் விரும்பிய நேரங்களில் சென்று வருகின்றனர், இதனால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வாழும் கதிர்காம கந்தனின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காட்டு வழியாக பாதயாத்திரை செய்து கதிர்காமத்தை அடைகின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தின் திருக்கோவில் பகுதியிலுள்ள தம்பிலுவில் கிராமத்தில் வாழும் 32 அகவையுடைய இரு பிள்ளைகளில் தாயான கிருஷ்ணபிள்ளை சந்திரகுமாரி சாந்தசிறி என்பவர் ஏனைய யாத்திரிகர்களுடன் இணைந்து காட்டு வழியாக கதிர்காம யாத்திரை மேற்கொண்டு இருந்தவேளையில் 2011.07.10 ஆம் திகதி அதிகாலை சிறுத்தைப்புலியின் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாப மரணமடைந்த செய்தி ஊடகங்களில் பிரசுரமாகின.
இப்போது உள்ளூராட்சி தேர்தல் காலமாகையால் இச் செய்தியை இனவாதத்துடன் இணைத்துப் பார்க்க முனைந்த சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் மேற்படி சந்திரகுமாரி எனும் பக்தர் பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்டதாக செய்தியைத் திரிபுபடுத்தி அதில் அரசியல் இலாபமீட்டி வழமைபோல் குளிர்காய நினைக்கின்றார்கள்.
அடர்ந்த காட்டில் அதிகாலையில் எழுந்து காலைக்கடனை முடிப்பதற்காக அருகில் இருந்த ஆற்றிற்குச் சென்ற பக்தர் மீது மரத்தில் இருந்து பாய்ந்து வந்த சிறுத்தைப்புலி தாக்குதலை நடத்தியுள்ளது, கூக்குரல் கேட்டு அந்தத் திசை நோக்கி ஓடிய பக்தர்கள் கழுத்துப் பகுதியில் பலத்த காயத்துடன் காணப்பட்ட சந்திரகுமாரியை குறை உயிருடன் மீட்டுள்ளனர், ஆனால் சற்று நேரத்தில் உயிர் பிரிந்து விட்டது.
தாக்குதல் மேற்கொண்டதாக நம்பப்பட்ட சிறுத்தைப்புலி மீண்டும் அந்த இடத்தை நோக்கி வந்ததாகவும் பக்தர்களின் முயற்சியினால் துரத்தப்பட்டதாகவும் ஏனைய பக்தர்கள் கூறியதாக அறிய முடிகின்றது.
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் திட்டமிடற் பிரிவில் நிகழ்ச்சித்திட்ட உதவிப் பணியாளரான சந்திரகுமாரி சாந்தசிறி அக்கரைப்பற்று கல்விக் காரியாலயத்துக்கு இலிகிதராக இடமாற்றம் பெற்றுள்ளார், இவரின் கணவர் அண்மையில் விபத்தொன்றில் சிக்கி இரு கால்களும் இயங்க முடியாத நிலையில் இருப்பதாக தகவல்களின் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
இச் செய்தியை அறிந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்ததுடன் ஒரு இலட்சம் ரூபாயினை தனது ஜனாதிபதி நிதியில் இருந்து வழங்கியதாக மேலதிக தகவல்கள் கூறுகின்றன.
தேர்தல் காலங்கள் வந்தால் இனவாதம் கக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அவர்களோடு ஒட்டி வாழும் ஊடகங்களும் கதிர்காம கந்தனின் பக்தை சந்திரகுமாரியின் பரிதாப மரணத்தை திசை திருப்பி அரசியல் இலாபத்துக்காக வாக்குச் சேகரிக்க நினைப்பது ஆரோக்கியமாகத் தெரியவில்லை.
தொடர்புபட்ட செய்திகள்:
1.http://tamilwin.net/view.php?22uIBZ302VjQ64e3OGpDcb2Z92gdd2E294bc37pGce40MQjd02eBLGa 2
2.http://tamilwin.net/view.php?22Gp7bc3BI24eE29203jQCdd2QjH20Z923e4GLBcb2pGu2
3.http://www.thambiluvil.info/2011/07/blog-post_10.html
4.http://www.thambiluvil.info/2011/07/blog-post_12.html
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.