ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி இருப்பதனால், அந்தந்த பிரதேசங்களில் போட்டியிடும் அரசியற்கட்சிகள் மிகவும் சுறுசுறுப்பாக அரசியல் வேட்டையில் இறங்கி மக்களிடம் வாக்குகளை பெற முயன்று வருகின்றார்கள்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி எனும் பதிவு செய்யப்பட்ட அமைப்பின் ஊடாக போட்டி இடுவதனை மக்களுக்குக் பறைசாற்றுவதற்காக தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியீடு செய்துள்ளனர்.
தமிழ் மக்களை காலம் காலமாக ஏமாற்றி அரசியல் வியாபாரம் நடாத்தி வரும் இவர்கள் மீண்டும் தங்களின் வக்கிர நோக்கத்தை தேர்தல் விஞ்ஞாபனம் எனும் போர்வையில் தமிழர்களே ஒன்றுபடுங்கள் இதனாலே தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்குக் காட்டலாம் எனக் கூறியுள்ளனர், காலத்துக்குக் காலம் மாறிமாறி வரும் பேரினவாத சிங்கள அரசாங்கங்களுடன் பின் கதவால் சென்று சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்து வரும் இச் சுயநல அரசியல்வாதிகள் மக்களுக்கு செய்துள்ள அபிவிருத்திப் பணிதான் என்ன?
எவருக்கும் அஞ்சாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை வழி நடத்தி வந்த வே.பிரபாகரனுக்குப் பின்னால் பெரும்பான்மை தமிழர்கள் இருந்த போதிலும், அந்த ஒன்று கூடலினால் எதுவும் சாதிக்க முடியாமல் அழிவுகளைச் சந்தித்தமை தான் வேதனையின் உச்சம்.
"இவற்றிலிருந்து தனித்துவமிக்க தமிழ்த் தேசிய இனமும் அதன் மொழி இன மத அடையாளங்களும் கலைபண்பாடு உள்ளிட்ட வாழ்விடங்களும்; அதன் அரசியல் அடிப்படை உரிமைகள் வாழ்வுரிமை மற்றும் மனித உரிமைகளும் உள்ளிட்ட சுயநிர்ணய உரிமைக்கோட்பாடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசரமும் அவசியமும் தமிழ்ப் பிரதேச மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கான மீள் எழுச்சித் திட்டங்களுக்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு ஜனநாயக விழுமியங்களையும் கோட்பாடுகளையும் பின்பற்றித் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கும் விடிவுக்கும் தம் நிலத்தில் தன்னாட்சிக்குமான இலக்குடன் எம் மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டியுள்ளோம்". (தேர்தல் விஞ்ஞாபனம்)இந்த பிரபாகரனால் சாதிக்க முடியாமல் போனதை, தங்களுக்காகவே அரசியல் பிழைப்பு நடாத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் என்றுமே நிவர்த்தி செய்ய முடியாது, தமிழ்த் தேசியம், தனித்துவம் எனக் கடந்த காலங்களில் கூறிக் கூறியே தமிழர்களின் வேதனைகளிலும், சோதனைகளிலும் பல்லக்கு ஏறியவர்கள், தமிழர்களை ஏமாற்றி வந்த சுயநலவாத கூட்டமைப்பினரிடமிருந்து தமிழர்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் பல்லாயிரம்.
"எம் தமிழ் மக்கள் சென்ற பொதுத் தேர்தலில் தெளிவான தீர்க்கமான ஒரு தீர்ப்பை வழங்கிய பொழுதிலும் அரசாங்கத்தின் இன்னொரு முகம் தரகர்களையும் அமைச்சர்களையும் தமிழ்ப் பிரதேசத்தில் உருவாக்கி தமிழ் மக்களிடையே நியமனம் செய்து அபிவிருத்தியென்ற போர்வையில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதையும் அறிவீர்கள். இந் நடைமுறை மூலம் எம் மக்களை பலவீனப்படுத்திபிளவுபடுத்தி அரசை ஆதரிக்கச் செய்து அரசு நினைக்கும் அரசியல் தீர்வை தமிழ் மக்களிடம் திணித்து விட்டு சர்வதேசத்தையும் திருப்திப்படுத்தலாம் என தரகு அரசியல் வியாபாரத்தில் ஈடுபடுவோர் செயல்படுவதையும் அறிவீர்கள். இத் தேர்தல் மூலம் இக் கால கட்டத்தில் ஜனநாயக வழியிலும் தமிழ் மக்களை தோற்கடித்து விடவும் தமிழ் மக்கள் ஜனாதிபதியினதும் அரசினதும் நடவடிக்கைககளையெல்லாம் ஏற்கிறார்கள் என்பதை உலகிற்குக் காட்டுவதற்கும் அரசு கங்கணங்கட்டி நிற்கிறது. இதனை எம் மக்கள் ஒரு பொழுதும் ஏற்கமாட்டார்கள்". (தேர்தல் விஞ்ஞாபனம்)தமிழர்களின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனை பொறுக்க முடியாத இவர்களின் முகத்திரையைக் கிழிக்கப்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. மக்களுக்கு வேலை வாய்ப்புக்களும் நிம்மதியும் கிடைத்து விட்டால், இவ் அரசியல் போலிகளை மக்கள் துரத்தியடித்து விடுவார்கள் என்பதை நன்கே உணர்ந்துள்ள கூட்டமைப்பினர் அபிவிருத்திப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவதனை தமிழர்கள் எல்லோரும் நன்கு அறிவார்கள்.
தமிழர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கும், ஜனாதிபதிக்கும் எதிரானவர்கள் எனக் காட்ட முற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், தங்களின் சுயநலத்துக்காக அரசாங்க தலைவர்களின் காலைத் தடவுவதனை பசில் ராஜபக்ஷ போன்றோர்கள் பல தடவைகள் கூறியுள்ளார்கள், எல்லாவற்றுக்கும் மறுப்பறிக்கை விடுபவர்கள் இதனையும் மறுத்து அறிக்கை விடாமல் போனதன் மர்மம் என்ன!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.