செவ்வாய், 19 ஜூலை, 2011
கைப்பற்றிய பிரதேசசபைகளில் ததேகூ செய்த அபிவிருத்திகள் என்ன?
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குக் கோரும் அறிக்கையினை பாட்டனின் பேரால் தந்தை வழியாக அரசியல்வாதியாக உள்நுழைந்த சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ளார்.
தமிழர்களின் பூர்வீக நிலத்தை தமிழர்களே ஆள வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை, நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் பிரதேசசபைகளைக் கைப்பற்றிக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்தந்த பிரதேசங்களுக்கு இதுவரை செய்த சேவைகள் தான் என்ன!
வவுனியா நகரசபையின் ஆளும் கட்சி உள்வீட்டு யுத்தத்தில் இருந்து நகர முடியாமலே தூங்கு நிலையில் இப்போதும் உள்ளது, யாழ்ப்பாணத்து மாநகரசபையில் எதிர்க்கட்சி கூட்டத் தொடரில் போத்தலடி விளையாட்டு விளையாடுகின்றது, இவைதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலட்சணம்.
தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் வந்து வாக்குக்கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், தங்கள் கைவசம் வைத்துள்ள பிரதேசசபைகளை தன்னிச்சையாக செயற்பட வைக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் ஒத்திவைக்கப்பட்ட பிரதேசசபைகளின் பொறுப்புக்களையும் ஒப்படைத்தால், தெருவிளக்குகள் எரியாமல் போகும் சூழல் ஏற்படும்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் 14 பிரதேசசபைகளைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த சேவைகள் என்னவென்பதை பட்டியலிட சந்திரகாந்தனால் முடியுமா, நித்திரையிலுள்ள பிரதேசசபைகள் எப்போது எழும்புவது, ஆரோக்கியமான பிரதேசசபைகள் உருவாக வேண்டுமென மக்கள் நினைப்பதில் தவறில்லை, ஆனால் அதனை உருவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் எப்போதும் முடியாது, அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வாழ்ந்து பழகியவர்கள்.
எமது பிரதேசங்கள் அபிவிருத்தி காண வேண்டுமென்றால் அரசாங்கத்தின் உதவியின்றி எதுவும் நடைபெறாது, ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எனக் கூறி வருவோரை புறந்தள்ள மக்கள் தயாராகி விட்டார்கள், இதனை சந்திரநேரு சந்திரகாந்தன் நன்கு புரிய வேண்டும்.
சந்திரநேரு சந்திரகாந்தனால் குறைந்தபட்சம் திருக்கோவில் பிரதேச அபிவிருத்தியாவது செய்ய முடிந்ததா, கோமாரி பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த ஏழைத் தமிழர்களின் காணிகளை அபகரிக்க சகோதரனுடன் இணைந்து எடுத்த நடவடிக்கைகள் ஊடகங்கள் மூலமாக பிசுபிசுத்தமை சகலரும் அறிந்ததே, இதேபோல் அரச முடிக்குரிய காணிகளை சொந்த காணிகளாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே தவிர தமிழினத்தின் பெயரால் வாக்குக் கோரும் சந்திரகாந்தனால் எவ்வித அபிவிருத்தியோ, முன்னேற்றமோ இவர் சார்ந்த பிரதேசம் பெறவில்லை.
கடந்த 30 வருடங்களாக தமிழ் மக்களை இருண்ட யுகத்தினுள் விடுதலையின் பெயரால் இரும்புக் கரம் கொண்டு வதைத்துக் கொண்டிருந்த நிலை அழிக்கப்பட்டு, மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் மலர்ந்துள்ளது, அதனால் யாழ்ப்பாணத்துக்குச் சுதந்திரமாக அமைச்சர்கள் சென்று அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள் மக்களும் அவர்களை வரவேற்கின்றார்கள்.
தமிழ் மக்கள் அபிவிருத்தி, தொழிவாய்ப்பு பெற்று, மலர்ந்த முகத்துடன் வாழ்வதனை பொறுக்க முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்து வரும் பிரசார நடவடிக்கைகள் தவிடுபொடியாகி விட்டன, இதற்கு யாழ்ப்பாணமே சாட்சி.
யாழ்ப்பாணம் துரிதமாக கண்டுவரும் வளர்ச்சியினைப் போல ஏனைய பிரதேசங்களும் வளர்ச்சி காண வேண்டுமெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற போலிகளை இனம்கண்டு தோற்கடிக்க வேண்டும். போராட்டம் போராட்டமென எங்களை அழித்தது போதும், இனிமேலும் நாங்கள் நிம்மதியாக எமது நிலத்தில் காலூன்றி வாழ, எமது பிரதேசத்தில் போட்டியிடும் எம்மர்களான அரச ஆதரவு சக்திகளை ஆதரித்தால் நிம்மதியுடன் கூடிய சுதந்திர வாழ்வு நிச்சயம் கிட்டும்.
சார்புபட்ட செய்தி
1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.