ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் நடாத்தி வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தங்களின் பிரசார நடவடிக்கைக்காக "இதயவீணை" எனும் பகுதி நேர வானொலியினை "இலங்கை வானொலி"க்கூடாக ஒலிபரப்பி வந்தனர், இதனால் அறிய முடியாத பல மறைக்கப்பட்ட செய்திகள் அம்பலத்துக்கு வந்தன.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவடைந்ததும் திடீரெனக் காணாமல் போனது இதயவீணை வானொலி, ஸ்ரீலங்கா அரச கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஈபிடிபி ஊடாக எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காத காரணத்தினால் இதயவீணை வானொலி நிறுத்தப்பட்டதா என எண்ணத் தோன்றுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அராஜகப் போக்கு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஊதுகுழலாக விழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்பட்டமான தமிழ் விரோதப் போக்கினை தோலுரித்துக் காட்ட முன்னின்றது இதயவீணை வானொலி என்றால் அதில் மிகையில்லை. ஆனால் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினதும் ஈபிடிபியினரினதும் நல்லதெனக் கருதப்படும் ஒரு முகம் மாத்திரமே இதயவீணை வானொலிக்கூடாக காட்டப்பட்டு வந்தது.
தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு துணையாக இருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அரசாங்கத்தின் மற்றய கோர முகத்தினை "இதயவீணை" வானொலி மூலமாக காட்டத் தவறி விட்டது என்பது வேதனையானது.
வடக்கிலங்கை முற்றுமுழுதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிய போது, விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறையை ஈபிடிபி நடாத்திய "மக்கள் குரல் வானொலி" அருமையாக பறைசாற்றியது. இதனை தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா அற்புதராஜா (ரமேஷ்) அருமையாகத் தொகுத்தளித்தார்.
விடுதலைப் புலிகளின் தற்கொலையாளியால் கொல்லப்பட்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மரணத்தைத் தொடர்ந்து மௌனித்த "மக்கள் குரல்" நீண்ட காலத்தின் பின்னர் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் ஆட்சிக் காலத்தில் "உலகத் தமிழ் வானொலி" யென இணைய வானொலியாக உலக வலம் வந்தது, அதுவும் கொஞ்சக் காலத்தில் மௌனித்துக் கொண்டது, அதனைத் தொடந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் புனர்வாழ்வு பெற்று "இதயவீணை வானொலி" எனும் பெயரில் இரு தடவை பிறப்பெடுத்த வானொலி இப்போது மீண்டும் மௌனித்து விட்டது.
ஈபிடிபி மீண்டும் வானொலி நடாத்தும் எண்ணம் இருப்பின் மற்றய அமைப்புக்களை விமர்சிப்பது போன்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தினையும், ஈபிடிபியினையும், அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றனவற்றையும் பல பரிமாணங்களின் நின்று பக்கச்சார்பற்று ஒலிபரப்பினால் காத்திரமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.