
ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் பேணப்படுகின்றதோ என்னவோ, தலைநகரில் நீண்ட காலமாக இந்த மரபு மாற்றப்படாமல் வருடாந்தம் தொழிலாளர் தினம் கொண்டாட்டப்பட்டு வருகின்றது, கொழும்பில் பேரினவாதக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அவற்றைச் சார்ந்து அரசியல் நடாத்தும் சிறு கட்சிகளும் ஊர்வலத்தின் இறுதியில் பொதுக்கூட்டத்தினை நடாத்தி வருகின்றன.
இலங்கையில் பயங்கரவாதம் முற்றுப்பெற்று விட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறுவதனால் கொழும்பில் இம்முறை தமிழர்கள் சார்ந்த தொழிற் சங்கங்களின் பொதுக்கூட்டங்களும் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வன்னி பேரழிவில் தமிழர்களைக் கொன்று குவித்த ஸ்ரீலங்கா அரசாங்கமும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் மிகுந்து காணப்படுவதனால், அதனை மூடி மறைக்க தமிழர்களும் எங்களுடனே இருக்கிறார்களெனக் காட்டி உலகத்தின் வாயை மூட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சதிக்கு ஈபிடிபி துணை போகாதிருக்க வேண்டியது அவசியமாகும்.
வன்னிப் பேரழிவுக்கு ஸ்ரீலங்கா படைகளின் கோரத்தாண்டவம் மாத்திரமின்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒழுங்கற்ற, வேண்டத் தகாத நடைமுறையுமே காரணமென தமிழ் மக்கள் அனைவரும் அறிந்தே உள்ளனர். ஆனால் அதிகப்படியான தமிழின அழிப்புக்கு காரணமானவர்கள் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களே என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

ஈபிடிபி தனது யாழ்ப்பாண ஆதரவாளர்கள் சகிதம் கொழும்பில் நடாத்தவிருக்கும் மேதின நிகழ்ச்சியானது கட்சி சார்ந்ததாகவே அமையட்டும், அல்லாமல் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை உயிப்பிப்பதற்காக எடுக்கப்படும் நிர்வாண நிகழ்வாக அமைந்தால் ஈபிடிபி தனது முகத்தைச் சேற்றுக்குள் புதைக்க எத்தனிக்கின்றதே என்பது அர்த்தமாகும்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை பிரதேசங்களில் இருந்து மேதின நிகழ்வுகளுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் வி.முரளிதரன், கிழக்கின் முதலமைச்சர் சந்திரகாந்தன் போன்றாரால் கொழும்புக்கு அழைத்து வரப்படும் தமிழர்கள் பேரினவாத கட்சிகளின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு சேர்க்கப்படவிருக்கிறார்கள், இந் நிகழ்வுகள் முடிந்ததும், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவினரால் ஸ்ரீலங்காவைக் குற்றம் சுமத்திய அறிக்கைக்கு எதிப்புப் போராட்டத்தினை நடத்தவும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.