ஞாயிறு, 24 ஏப்ரல், 2011
சத்தியசாயி பாபா - அரிய படங்களுடன் ஒரு கண்ணோட்டம்
இந்திய ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு உண்மை, அமைதி, அன்பு, அகிம்சை போன்ற போதனைகளை வலியுறுத்தி கல்வி, மற்றும் பொதுநல உதவிகளை மக்களுக்காகச் செய்து, ஒழுக்கமான அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் சத்தியசாயி பாபா.
ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு நீண்ட காலப் பிரச்சனையாக இருந்து வந்த குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வாக 750 கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழும் தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி செய்யப்பட்டுத் தோல்வியடைந்த தெலுங்கு கங்கை நீர்த் திட்டத்தினைச் சீர் செய்து சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக தனது அறக்கட்டளையினால் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தவர் சத்தியசாயி பாபா.
1926-ம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் தந்தை ராஜு ரத்னாகரம், தாயார் ஈஸ்வரம்மா போன்றோருக்கு எட்டாவது பிள்ளையாக "சத்ய நாராயண ராஜு" எனப்படும் சத்தியசாயி பாவா அவதரித்தார்.
சிறு பராயத்தில் இருந்தே சீரடிசாயி பாபாவின் அவதாரமெனக் கூறிக் கொண்ட சத்தியசாயி பாபா பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார், இதனால் இந்தியா உட்பட 137 நாடுகளில் ஏராளமான பக்தர்கள் இவருக்கு உருவானார்கள், 114 நாடுகளில் 1200 க்கும் மேற்பட்ட சத்தியசாயி மையங்கள் உருவெடுத்துள்ளன, இவரின் ஆச்சிரமத்தின் சொத்து மதிப்பு இரண்டரை இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமென கருத்துக் கூறப்படுகின்றது.
1990 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 60 இலட்சம் பேர் சத்தியசாயி வழி நடப்பவர்களாகவும், உலகெங்கும் நூறு கோடிப் பேருக்கும் அதிகமான பக்தர்கள் இருப்பதாகவும் அறியப்பட்டது.
அண்மையில் நோயுற்ற சத்தியசாயி பாவா கடந்த 28 நாட்களாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பிரத்தியேக வைத்தியர்களின் பராமரிப்பில் கண்காணிக்கப்பட்டு முயற்சி பலனளிக்காமல் 85 ஆவது வயதில் 2011.04.24 ஆம் நாளான இன்று காலை 7.28 மணிக்கு மரணத்தைத் தழுவினார்.
இவரைப் பற்றிய எதிர்ப்புக் கருத்துக்களும் அவ்வப்போது மாற்றுக் கருத்தாளர்களால் மேற்கொள்ளப்பட்டன, இருப்பினும் அதிகப்படியான சாயி பக்தர்களின் பார்வையில் குற்றச்சாட்டுகள் நிலைத்து விடாமல் மறைந்தன.
அன்னாருக்கு களத்துமேடு அஞ்சலியைத் தெரிவிக்கின்றது.
பின்னிணைப்பு - வீடியோ தொகுப்பு
வீடியோ - 1
வீடியோ - 2
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.