இலங்கையில் பயங்கரவாதம் முற்றுப்பெற்று மக்கள் அனைவரும் பீதியற்று நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றார்களென ஊடகங்களின் வாயிலாக புளகாங்கிதம் அடைய ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர் முயற்சி எடுத்து வருகின்றமை அனைவருக்கும் தெரிந்ததே!
தமிழ் இனச் சுத்திகரிப்பை படுகொலைகள் மூலம் திட்டமிட்டு அரங்கேற்றி வரும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் மக்களின் நன்மைக்கானதெனச் சர்வதேசம் புரிந்து கொள்ளத்தக்கதான காய் நகர்த்தல்களைத் செவ்வனே திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றது.
அரசாங்கத்தின் இச் செயற்பாடுகளை தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக்கொள்ளக் கூடிய சில தமிழ் அமைப்புக்களை கையகப்படுத்தி அரசியற் சாணக்கியம் செய்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. இவரின் பிடியில் சிக்கிக் கொண்ட தமிழ் அமைப்புக்களில் ஒன்று தான் ஈபிடிபி என அழைக்கப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழீழ விடுதலைப் புலிகளின் அராஜகப் போக்கைக் கண்டித்து அரசியல் நடாத்தியதால் அரசாங்கத்தின் துணையை நாட வேண்டிய காலச் சூழல் ஏற்பட்டது, இதுவே சந்தற்பவாத அரசியல் நடத்த அரசாங்கத்துக்கு சாதக சூழலை வலுப்படுத்தியது.
ஸ்ரீலங்கா அமைச்சரவையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா, இவர் தமிழ் மக்கள் சார்ந்த ஊடகச் செவ்விகள் அனைத்திலும் ஈழ விடுதலைப் போராட்ட ஆரம்பப் போராளிகளில் தானும் ஒருவன் என கூறிப் பெருமை அடைவார். அப்படியாயின் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம் சிங்களப் பேரினவாதம் நடாத்திய தமிழ்மொழிக்கான புறக்கணிப்பென்றால் அதில் மிகையில்லை.http://www.blogger.com/img/blank.gif
ஸ்ரீலங்காவில் சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகள் எனக் கூறப்பட்டுள்ள போதிலும் தமிழ்மொழிக்கான அந்தஸ்து கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு ஒப்பாகவே போய்க் கொண்டு இருக்கின்றது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனேகமான நடவடிக்கைகளில் இருந்து தமிழ்மொழி தூரத்தே துரத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது, இதனை ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பப் போராளிகளில் ஒருவரென அடிக்கடி கூறிக் கொள்ளும் டக்ளஸ் தேவானந்தாவால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதுவே வேதனையாக இருக்கின்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி இணையத்தளத்தில் பிரசுரமாகியுள்ள கித்துளக வருண – 2011 உற்பத்திக் கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தை பற்றிய தலைப்பே இக் கட்டுரைக்கான தொடக்கமாகும்.
கித்துளக வருண எனும் சிங்களப் பதத்தினை தமிழர்களுக்கு தெரியப்படுத்த நினைக்கும் அமைச்சர் தமிழ்மொழியை மறந்து விடலாமா, அப் பதத்திற்கு நிகரான தமிழ்ப் பதத்தினைச் சேர்த்திருந்தால் எவ்வளவோ நன்றாக அமைந்திருக்கும், தமிழ் அமைச்சர் ஒருவரின் தலைமையில் நடைபெறும் விழாவிலேயே தமிழ்மொழி மறுக்கப்படுகின்றதெனில் சிங்களவர்களினால் நடாத்தப்படும் விழாக்களில் தமிழ்மொழியை எப்படித் தேட முடியும்.
தமிழ் மக்களின் விடிவுக்காக பேய்களுடனும் சேர்ந்து போகத் தயாராக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிங்களப் பெயர்ப் பலகையுடன் கூடிய அனைத்து சிங்கள வார்த்தைகளுக்கும் உருக்கொடுக்க முனைவது வேடிக்கையிலும் வேடிக்கை.
அரசியலில் பயணிக்க தமிழர்கள் தேவையென உணர்ந்து கொள்ளும் தேவானந்தா சிங்களவர்களுடன் கூட்டுச் சேரும் போது தமிழுக்கான அங்கீகாரத்தை நிலைநிறுத்துவாரா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.