திங்கள், 4 ஏப்ரல், 2011
தமிழும் ஒரு நாள் தெமல என்றாகுமா!
இலங்கையின் சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றிருக்க வேண்டுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு பிறப்பித்திருக்கும் செய்தியானது கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும் என்பதை தெளிவாக்குகின்றது.
சிலோன் ஸ்ரீலங்காவென பரிணாமமெடுத்த காலந்தொட்டே தமிழ்மொழி மீதான ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது, அனேகமான தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்கள உரை நடைக்கேற்பவே ஆங்கிலத்திலும் பதிவு செய்யப்படுகின்றது, இன்றைய சிங்கள தலைமுறை அதனையே சரியான பெயரென நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், இதனைப் வாசிக்கும் தமிழர்களோ விழிபிதுங்கி நிற்கின்றார்கள்.
எதிர்கால சந்ததி பிழையான பாதையில் போகக் கூடாது என்பதனை சரியாக உணர்ந்து கொண்டுள்ள அமைச்சர் வாசுதேவ மூன்று மொழிகளிலுமான பெயர்ப்பலகைகள் அவசியம் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் முன்மாதிரி அரச இணையத் தளமொன்றின் முகப்பில் மொழியைத் தெரிவு செய்க எனும் பதத்துக்குப் பதிலாக ஏதோ புரியாத எழுத்துக் கோர்வை இணைக்கப்பட்டிருக்கின்றது. மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்களும் இவ் எழுத்துக் கோர்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வது கடினம், ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தின் மொழியாக்கத்தைக் கொண்டே என்னவென்று கண்டுபிடிக்க வேண்டிய நிலமை உள்ளது, அரச இணையமே இவ்வாறென்றிருக்கும் போது, தனியார்துறையில் பிழையற்ற தமிழை எப்படித் தேடுவது?
ஈழ விடுதலை ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பப் போராளிகளில் தானும் ஒருவர் எனக் கூறிக் கொள்ளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடந்த வாரம் "கித்துளக வருண – 2011 உற்பத்திக் கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தை" திறந்து வைக்கப்பட்டது, அந் நிகழ்வில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் தொடக்கம் விற்பனைப் பொருட்கள் வரை அனைத்தும் சிங்களச் சொற்களையே தாங்கி நின்றன, தமிழுக்கும் அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது எனக் காட்டுவதற்காக இப்படியுமா சிங்களப் பெயர்களை தமிழில் பொறிக்க வேண்டும், இதனைக் கண்டும் காணாதவராக அமைச்சரும் இசைந்து போனமையானது தமிழும் ஒரு நாள் தெமல என வரும் என்பதைக் காட்டுகின்றது. இதைத் தான் "மெல்லத் தமிழினி சாகும்" எனப் பாரதி சொன்னானோ!
தமிழ்மொழிக்கு வழங்கப்படும் அந்தஸ்தானது சிங்களமொழிக்கு ஒப்பானதாக அமைய வேண்டுமென்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.