ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி மற்றும் சமூக நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று சர்வ கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
கூடவிருக்கும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கவிருக்கின்றன, குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிபாரிசுவில் தெரிவாகி பாராளுமன்றம் சென்று சர்வகட்சிக் குழுக் கூட்டங்களுக்கு கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவிழந்த பின்னரான இந்த நேரத்தில் ஜனாதிபதியினுடான சர்வகட்சிக் குழுக் கூட்டத்துக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இன்றைய சர்வகட்சிக் குழுவின் முதலாவது கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் திரு.என். சிறீகாந்தா தலைமையில் திரு.த.கனகசபை, திரு.கே.துரைரட்ணசிங்கம், திரு.வினோ நோகதாரலிங்கம், திரு.கிஷோர் சிவநாதன் ஆகியோரைக் கொண்ட குழு கலந்து கொள்ளவுள்ளதாகவும், அத்துடன் எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் இந்த சர்வ கட்சிக் குழுக் கூட்டத்திலும் தாம் கலந்துகொள்ளவுள்ளதாகவும் திரு.பா.அரியநேந்திரன் (பா.உ) உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்க கட்சியுடனான சந்திப்புக்களை விடுதலைப் புலிகளின் அரசியற் செயலர்களான மறைந்த திரு.சு.ப.தமிழ்ச்செல்வன், பா.நடேசன் ஆகியோரின் கோரிக்கைக்கு ஏற்ப தவிர்த்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், இப்போது சொந்த அறிவின் அடிப்படையில் கலந்து கொள்ள முன்வந்துள்ளதமையானது சிறப்பம்சமாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிஷோர் சிவநாதன் காட்டிய வழியில் இன்னும் பல தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உள் நுழைய இருப்பதாகவும், அதற்கான இரகசிய பேச்சுக்கள் திரை மறைவில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன, அதற்கான முதற்கட்ட ஒத்திகையே இந்த கூட்டத்திற்கான சமூகமளித்தலாகும்.
எது எப்படி இருப்பினும் எமது நலிந்த மக்களுக்கு உபத்திரமின்றி இனிமேலாவது கிடைத்திருக்கும் பாராளுமன்ற ஆசனம் எனும் பெரிய பதவியினைக் கொண்டு தங்களால் முடியுமான உதவிகளைச் செய்வார்கள் என அறிய முடிகின்றது, இச் சந்தற்பத்தையும் தவற விடுவார்களாயின் எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செல்லாக் காசாகி விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது, இப்போதே கருத்தியல்ரீதியாகப் பிரிந்துள்ள இக் கூட்டமைப்பினர் நிரந்தரமாகவே பல கூறுகளாகப் பிரிந்து இருந்த இடமே தெரியாமல் போவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.