இந்த வாராந்த நாட்டியப் போட்டி நிகழ்ச்சி நூறாவது வாரத்தை எட்டியதனை சிறப்பிக்கும் முகமாக கலைஞர் கருணாநிதியைப் புகழ் பாடும் நோக்கில் மானாட மயிலாட - 4 பல நாட்டியங்களை அரங்கேற்றின, அனைத்துப் போட்டியாளர்களும் தங்களது திறமைகளை நிலைநாட்ட அருமையான நடன நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
போட்டியாளர்களில் ஒருவரான கோகுல் தனது தனித்துவத்தை நிலைநாட்ட பல சிறப்பு நிகழ்சிகளை நடத்தி வருவது பார்வையாளர்களுக்கு சிறப்பு விருந்தாகும், கோகுலையும் விஞ்சும் வகையில் இறுதியாக இணைந்துள்ள போட்டியாளர்களில் ஒருவரான மனோ தனது குரலின் திறமையை வெளிக் கொணர பிரபலங்களின் குரலோசையை அப்படியே பிரதி பண்ணுவது சிறப்பாக உள்ளது.
இந்த மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியை திறம்பட நடாத்தும் முழுப் பொறுப்பும் நடன இயக்குநர் கலா மாஸ்டரிடமே தங்கி இருப்பதனால் அவருடன் இணைந்து நடுவர்களாக நடிகை குஷ்பு மற்றும் நடிகை நமீதாவும் செயற்படுகின்றனர். இதில் நடிகை நமீதாவின் கெஞ்சும் குரல் பலருக்கு கொஞ்சும் குரலாக இருந்தாலும் புது நடுவரைத் தேட வேண்டிய கட்டாயம் கலா மாஸ்டருக்கு உள்ளது, தமிழகத்தில் நடுவர்களுக்கான பஞ்சம் ஏற்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.
இந்த நூறாவது வாராந்த சிறப்பு நிகழ்வில் நடிகை குஷ்பு "சின்னத்தம்பி" படப் பாடலான "நீ எங்கே நான் இங்கே..." எனும் பாடலுக்கு அபிநயம் செய்தது தத்துரூபமாக இருந்தது.
நடன இயக்குனர் கலா மாஸ்டரின் உதவியாளர்களில் ஒருவரான ஸ்ராண்டி "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை, ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும், அலை கடல் ஓய்வதில்லை, ஆடிவா, ஆடிவா, ஆடிவா... எனும் பாடலுக்கு நடனத்தில் மெருகூட்ட, கலா மாஸ்டரும் அந்தப் பாடலுக்கேற்ப நடனமாடியது இனிமையாக இருந்தது, ஆனால் அந்தப் பாடல் வரிகளில் வரும் "இடையெனும் கொடியாட நடமாடி வா ..." எனும் சொற்தொடருக்குக் கலா மாஸ்டரின் உடல்வாகு பொருத்தமின்றி இருந்தாலும் கூட அந்த உடலைத் தூக்கி செவ்வனே நடனமாடியதற்காக "ஓ" போட வேண்டும்.
இந் நாட்டியப் போட்டி நிகழ்ச்சிக்கு "மானாட மயிலாட" எனும் தலைப்பை கலைஞர் கருணாநிதியே வைத்ததாக எல்லோரும் கூறிக் கொண்டாலும் கூட இங்கு ஆணும் பெண்ணும் ஜோடியாக இணைந்தல்லவா நடனமாடுகின்றனர், இங்கு குறிப்பிடப்படும் அழகிய தோகை மயில் ஆண் வர்க்கமாகையால், கலைஞர் குறிப்பிடும் மான் பெண் மானாக இருப்பதற்கான வாய்ப்பே அதிகம் !
செய்திவளையம் குழுவிநருக்கு நன்றி.
பதிலளிநீக்கு