வெள்ளி, 30 ஜனவரி, 2009

மூளைச் சலவைக்குப் பலியான முத்துக்குமரன் !

ஸ்ரீலங்கா அரச படையினர் தமிழர்கள் மீது நடத்தும் இனவெறி அடக்குமுறைக்கு எதிராக தென்னிந்திய மக்கள் கொண்டுள்ள ஆர்வம் அளப்பரியது, ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் முல்லைத்தீவு நோக்கிய நகர்வை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா பாராளுமனறின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈறாக தமிழக மக்களும் அரும்பாடுபட்டு வருகின்றனர்.

தமிழக மக்களின் இவ் எழுச்சியை தமிழக அரசியல்வாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைப்பது மனதை நெருடுகின்றது, இவ் அரசியல்வாதிகளின் பேச்சுத்திறனில் மயங்கிய இளைஞர்கள் உண்ணாவிரதம், தீக்குளிப்பு என்றெல்லாம் தங்களை மாய்த்துக் கொள்ள மூளைச் சலவை செய்யப்படுகின்றார்கள்.

இளைஞர்களே உங்களது உயிர் விலை மதிக்க முடியாதவை, உயிரோடு விளையாடாதீர்கள், உங்களை இந் நிலைக்கு திருப்பி விட்டுள்ள அரசியல்வாதிகள் தாங்கள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிப்பார்கள், ஊடகத்துறைக்குச் செய்தி எட்டியதும் விலகி விடுவார்கள், அவர்களுக்கெல்லாம் தேவை அரசியல் கலந்த விளம்பரம் மாத்திரமே, அரசியல் சிம்மாசனத்துக்காக எத்தனை உயிர்களை மாய்க்கவும் தயங்க மாட்டார்கள், இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து கொண்டே இருப்பார்கள், ஆகவே இளைஞர்களே சிந்தியுங்கள்.

முத்துக்குமாரின் சாவு எல்லோரையும் கவலை கொள்ளத்தான் செய்ததே தவிர, ஸ்ரீலங்கா படை நகர்வில் எவ்வித தடைகளையும் ஏற்படுத்த வில்லை, ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏலவே திட்டமிட்டபடி 48 மணி நேர அவகாசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு அறிவித்துள்ளது என்பது தான் உண்மை.

இன்னும் பல முத்துக்குமார்கள் உருவாகுவார்கள், இவர்களின் உருவாக்கம் தவிர்க்க முடியாதவை, விடுதலைப் புலிகளின் வீரச் சாவுக்கு ஒப்பானது இம் மரணங்கள் என்றெல்லாம் அரசியல்வாதிகள் தங்களின் வாய்ப் பேச்சுத் திறனின் மூலம் மூளைச் சலவையை விருத்தி செய்து கொண்டே வருகின்றார்கள், ஆனால் அவ் சாவுக்கு அவர்கள் தயாராக மாட்டார்கள், இளைஞர்களை பலியிட முயல்வார்கள்.

முத்துக்குமாருக்கு ஏற்பட்ட மனக் கிலேசம் நியாயமானது தான், ஆனால் அவரின் இந்த திடீர் முடிவு பரிசீலிக்கப்பட வேண்டியது, அவர் வாழ வேண்டியவர், இன்னும் பல போராட்டங்களை பார்க்க வேண்டியவர், அரசியல்வாதிகளின் நாடகங்களை பதிவு செய்ய வேண்டியவர், துரதிஷ்டம் திடீர் முடிவு எடுத்து சாவைத் தழுவிக் கொண்டது தான்!

‘பெண்ணே நீ’ மாத இதழில் ஊடகவியலாளராகப் பணிபுரிந்த, சென்னை.99 - கொளத்தூர் மக்கான் தோட்டம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த கு.முத்துக்குமார் திட்டமிட்டு பலியாக்கப்பட்டது கவலை கொள்ள வைக்கின்றது, 26 அகவையையுடைய இவ் வாலிபன் நான்கு பக்க அறிக்கை எழுதும் அளவுக்கு பட்டறிவு உள்ளவனல்ல, ஈழத் தமிழினம் காக்க இந்தியாவில் தீக்குளிப்பது என்பது காலில் உள்ள காயத்துக்கு தலையில் மருந்து கட்டுவது போன்றாகும்.

முத்துக்குமார் இறுதியாக தயாரித்த மரண வாக்குமூலம்

முத்துக்குமாருக்குக் களத்துமேட்டின் கண்ணீர் அஞ்சலி

சனி, 24 ஜனவரி, 2009

விடுதலைப் புலிகளின் தவறும் தமிழ் அரங்கமும் !

விடுதலைப்புலிகள் தவறை உணர்ந்து திருந்தி விட்டார்கள் எனும் தலைப்பில் "தமிழ் அரங்கம்" தனது பாணியில் பத்தியொன்றைப் பதிவு செய்திருந்தது, குமுதம் சஞ்சிகைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் அவர்கள், முஸ்லிம்கள் உட்பட தமிழ் பேசும் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னால் அணி திரள்க எனும் பதத்தினூடாக வழங்கிய செவ்வியின் ஆதங்கமே தமிழ் அரங்கத்தின் இச் சாடலாகும்.

யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக வசித்து வந்த முஸ்லிம்கள் ஒரே இரவில் உடுத்த உடையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட சம்பவம் உலகம் அறிந்ததே! இதனை முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்குமாப் போல் தெரியாது எனக் காட்ட திரு.பா.நடேசன் முனைவதே வேடிக்கையாக இருக்கின்றது.

"முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்." இவ்வாறு திரு.நடேசன் கூறுவதன் அர்த்தம் தான் என்ன? இதைத் தான் காலம் கடந்த ஞானம் என்பதா, அல்லது சந்தற்பவாத அரசியலா?

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முஸ்லிம் சுத்திகரிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இன்றும் பொறுப்பு வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதனை நடேசன் மறந்து விட்டார் போல்த் தெரிகின்றது, காவற்துறையின் பொறுப்பாளராக இருந்த போது கண்டும் காணாதவர் போன்று நடேசன் இருந்தமையே இந்த பொறுப்பற்ற செவ்வியாகும்.

1990 ஆம் ஆண்டு கால நடுப்பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம்களும் அவர்களின் தீவிரவாத அமைப்புக்களும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பை மிகத் திட்டமிட்டு கச்சிதமாக நடாத்தி முடித்தனர், இன்றும் பல தமிழ்க் கிராமங்கள் மனித வாடையற்று காடாகிக் காட்சி தருவது உலகுக்குத் தெரியாத விடயமாகும்.

இக் காலத்தில் அம்பாறை ஊடான இனச் சுத்திகரிப்பு ஆரம்பமானது, இம் மாவட்ட தமிழர்கள் கிராமம் கிராமமாக கொன்றொழிக்கப்பட்டும், சொத்தழிவும் செய்து துரத்தப்பட்டார்கள், இறந்த உறவுகளைப் புதைக்க நேரமின்றி உடுத்த உடையுடன் அகதிகளாக ஓடிக் கொண்டே இருந்தார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனின் மெய்ப் பாதுகாவல் படையணிகளில் இருந்தவர்களின் அதிகமானோர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தோர்களாக இருந்ததால், தங்களை கிழக்குக்கு அனுப்புமாறும் அங்கு முஸ்லிம்கள் நடாத்தும் இனச்சுத்திகரிப்பை தடுத்து நிறுத்த அனுமதி தருமாறுமாம் கோரி நின்றனர், இதனால் வன்னிப் படையணிகளில் தொய்வு ஏற்படலாயிற்று, இதனைச் சீர்படுத்த விடுதலைப் புலிகளின் தலைவர் எடுத்த திடீர் முடிவானது சற்று ஆச்சரியம் ஊட்டுவதாகவே இருந்தது, அது தான் காத்தான்குடி, சம்மாந்துறை பள்ளிவாசல் தொழுகைகளில் இருந்த முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களாகும், இதனைத் தலைமை தாங்கும் பொறுப்பு திரு.கருணா அம்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது, ஆனாலும் முஸ்லிம்கள் தமிழர்கள் மீது நடாத்தும் இனச் சுத்திகரிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது, கிழக்கு விடுதலைப் புலிகளால் இவ் வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, வன்னிப் படையணிகளில் ஆட்டம் காண ஆரம்பித்தன, இதனைச் சுமுகமாகத் தீர்க்க தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த அடுத்த கட்ட அதிரடி முடிவே யாழ்ப்பாண முஸ்லிம்களை ஒரே இரவில் துரத்த எடுத்த நடவடிக்கையாகும்.

இந் நடவடிக்கை திரு.இளம்பருதி, திரு.கரிகாலன் போன்றோர் தலைமையில் நடத்தப்பட்டதாக ஊடகச் செய்திகள் கூறின, துரத்தப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தில் உள்ள பாலாவி, தில்லையடி போன்ற பகுதிகளிலும் மற்றும் அனுராதபுரத்திலும் இன்று வரை வாழ்க்கை நடாத்தி வருகின்றார்கள்.

தமிழ் அரங்கத்தின் பத்தி தொடர்பாக 19.11.91 அன்று தான் யாழில் நடேசன் பொலீஸ் பொறுப்பாளராக பொறுப் பேற்றிருந்தார். இவர் தனது முதல் நடவடிக்கையாக - இந்த தீயசக்திககளை - ஏன் கைது செய்யவில்லை. அந்தப் பொலீஸ் படையின் முதல் அணிவகுப்பே இதே திகதியில் பிரபாகரன் முன்னிலையில் நடந்ததாக `விடுதலைப் புலிகள்` ஏடு தை - 92 எழுதியதே! அதுவும் பொய்யா? எனக் குறிப்பிட்டு பின்னூட்டமிட்டுள்ளதனையும் நடேசன் கருத்தில் கொள்வது நல்லதல்லவா?

உலகம் இருண்டு விட்டது என நினைத்து அர்த்தமற்றுப் பதிலளிப்பது காத்திரமாக இராது, அனைவரும் விழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டு கொள்ள வேண்டும்.

செவ்வாய், 13 ஜனவரி, 2009

தமிழர் புத்தாண்டும் உப்பு மடச்சந்தியும்!

எமது வலைப் பதிவுலகிலுள்ள தோழர் ஹேமா தனது "உப்பு மடச்சந்தி" தளத்தில் "தரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு" எனும் பத்தியை பதிவு செய்துள்ளார், அதில் தமிழர்களின் புத்தாண்டுக்குரிய நாள் தைப்பொங்கல் என்பதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்கத் தவறிவிட்டார்.

யாருக்கோ துதி பாட வேண்டும் என்பதற்காக எழுதியது போல் தெரிகின்றது, ஆதியில் தமிழர் உலகப்பரப்பில் பரந்து வாழ்ந்தான் என்பது அறிவியலாளர்களின் கருத்து இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

ஹேமா சொல்லியது போல் கணிக்கப்பட்ட நாட் கணக்குகள் தொண்டுதொட்டு பஞ்சாங்கத்தின் மூலமே இன்றும் அறியக் கூடியதாகவுள்ளது, கோண்டாவிலுக்கு அருகிலுள்ள இணுவில் கிராமத்தில் பதிவு செய்யப்படும் பஞ்சாங்கத்தில் பல உண்மையான விடயங்கள் உள்ளன என்பது ஹேமாவுக்குத் தெரியாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

பஞ்சாங்கங்களில் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்கள் புகழ்பெற்றன, இந்தப் பஞ்சாங்கங்களில் வாக்கிய பஞ்சாங்கம் சூரியன் மேடராசியில் பிரவேசிப்பது முதல் மீனராசியை விட்டு நீங்கும் வரையும் உள்ள காலம் சௌர வருஷம் என்று கூறுகிறது. திருக்கணித பஞ்சாங்கம் மேடராசியின் தொடக்கமாகிய அச்சுவினி நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம் தொட்டு, மீனராசியின் அந்தமான ரேவதி நட்சத்திரத்தில் நின்று நீங்கும் வரையில் உள்ள காலம் சௌர வருஷம் என்றும் கூறுகின்றது, இவை அனைத்தும் விஞ்ஞான ரீதியில் பார்க்கும் போது உண்மை புலனாகின்றது.

கார்த்திகை மாதத்தில் தொடங்கும் முதல் மழையைத் தொடர்ந்து விவசாயி தனது உழவுத் தொழிலுக்குத் தயாராகின்றான், இக் காலத்திலேயே உழவர்கள் காடுகளை வெட்டிக் கழனியாக்கி வேளாண்மைப் பயிர்ச் செய்கைக்குத் தயாராகின்றார்கள் தை மாதமானது உழவருக்கு வேலைவெட்டி நிரம்பிய மாதமாகும், புவியியல் ரீதியாகப் பார்த்தாலும் தை மாதமானது இலங்கையருக்கு மாரி காலமாகும், இக் காலம் வறுமை நிறம்பிய காலமென்றால் மிகையாகாது, இக் காலத்தில் மழை சற்று ஓய்வு பெறும் காலம் தை நடுப் பகுதியாகும், இக் காலத்தில் உழவன் பாடுபட்டு பயிர் செய்த வேளாண்மை தனது பொற்கதிர்களை உலகுக்கு காண்பிக்கும், இதில் சிவந்த கதிர்களை அறுவடை செய்து அதை அரிசியாக்கி, அதனைக் கொண்டு உதவி செய்த சூரியனுக்கும், மறுநாள் மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாட்களே தைப்பொங்கலும், மாட்டுப் பொங்கலும் ஆகும்.

இவை தமிழர்களின் புத்தாண்டு நாட்களல்ல, பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயி அறுவடை அனைத்தும் முடித்து நெல் மணிகளை வீட்டில் கொண்டு சேகரித்து வைத்து குடும்பத்துடன் கூடிக் குலாவும் காலமே சித்திரை மாதமாகும், இந்தக் காலத்தில் உற்றார் உறவினர்கள் அனைவரும் இணைந்து சிறப்பிக்கும் காலமான சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் முதல் நாளே சித்திரை வருடப்பிறப்பாகும்.

மேலதிக விபரம்: "வியாபாரிமூலை" இந்து வருடப்பிறப்பு

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

விடுதலைப் போரும் விடையில்லா யுத்தியும்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நிர்வாகத் தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சி நகரம் கடந்த 2009 ஜனவரி இரண்டாம் நாள் ஸ்ரீலங்கா படைதரப்பினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வீழ்ந்ததைத் தொடர்ந்து பலரும் பலதரப்பட்ட கருத்துக்களைக் கூறி வருகின்றார்கள், அந்த வரிசையில் இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.என்.ஸ்ரீகாந்தா தனது கருத்தையும் தெரிவிக்க தவறவில்லை.

கிளிநொச்சி நகரத்தின் வீழ்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லாப் போராட்டத்தின் ஆரம்பம் என ஸ்ரீகாந்தா கருத்து தெரிவித்திருப்பதனை அனேகமான ஊடகங்கள் பதிவு செய்திருந்தன. இதனை எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வதென்றே தெரியாமல் உள்ளது, ஏனெனில் விடுதலைப் புலிகள் எப்போதோ கெரில்லா தாக்குதல் முறைக்கு மாறி விட்டார்கள் என்பதே பொருத்தமானதாகும்.

1976 வைகாசிக்கு முதல் இருந்தே புதிய தமிழ் புலிகளாக தொடங்கி தம்பி எனும் வே.பிரபாகரனைத் தலைவராகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளாக மாறிய காலமீறாக கெரில்லாப் போராட்டத்திலேயே நம்பிக்கை வைத்து தாக்குதலை நடாத்தி வந்தார்கள் விடுதலைப் புலிகள், ஆனால் இந்தக் கெரில்லாப் போராட்டம் வெற்றி தராது என்பதால் இதனை வெகுசனப் போராட்டமாக மாற்ற வேண்டிய தேவை விடுதலைப் புலிகளுக்கு அவசியமாக இருந்தது, ஏனெனில் ஏனைய ஈழ விடுதலை அமைப்புக்கள் முன்னமே வெகுசனப் போராட்டத்துக்கு மக்களைத் தயார் படுத்தி விட்டார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவப் போக்கினால் காலவோட்டத்தில் மற்றைய ஈழ விடுதலை அமைப்புக்கள் காணமற் போக விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரச படைகளுக்குமான யுத்தம் தொடர்ந்தது, இலங்கை இந்திய அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து மீண்டும் புத்துயிர் பெற்ற ஏனைய அமைப்புக்களான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ஸ்ரீகாந்தா சார்ந்த ரெலோ மற்றும் பாலகுமார் இல்லாத ஈரோஸ் இறுதியாக ஈபிடிபி போன்றன மாற்றுக் கட்சிகள் எனும் பெயரில் அரசாங்கத்துடன் உறவைப் பேணி உதவிகளைப் பெற்று வந்தன.

இந்தக் காலத்தில் அரசாங்கத்தின் துணைப் படையென பதிவு செய்து ஆயுத உதவியும், பெருமளவு பணமும் பெற்ற மேற்கூறப்பட்ட அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுக்கவென நடத்திய தர்பார்கள் கொஞ்ச நஞ்சமல்ல, இதற்கு தலைநகரின் பம்பலப்பிட்டியில் தலைமையகத்தை வைத்திருந்த செல்வம், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா , போன்றோர் விதிவிலக்கானவர்களல்ல.

பிராந்திய ரீதியில் அரச ஊக்குவிப்புடன் இம் மாற்று அமைப்புக்களுக்கான உதவிகள் தொடர்ந்தன, மட்டக்களப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், வரதராசப்பெருமாள் போன்றோரின்
ஈபிஆர்எல்எவ் ராஸிக், இரெட்ணம் தலைமையிலும், அம்பாறையில் சங்கர், ஜெகதீஸ், வாகீசன் போன்றோரினால் ஈபிடிபியும், திருகோணமலையில் வினோதலிங்கம், சிவாஜிலிங்கம், செல்வம் சார்ந்த ரெலோவினாலும், வவுனியாவில் சித்தார்த்தன், மாணிக்கம்தாஸனின் புளொட்டினாலும் யாழ்ப்பாணத்தில் தீவகம் அடங்கலாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபியினராலும் அரசாங்கத்தின் ஆசியுடன் புலிச் சுத்திகரிப்புடன் கூடிய வெகுசனப் போராட்டங்கள் தொடங்கின.

இந்தக் காலத்தில் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள மேற்படி இயக்கங்களுக்கு ஏற்பட்டது, ஆனால் மக்களிடையேயான செல்வாக்கு இவ் அமைப்புக்கள் அனைத்துக்கும் கிடைக்கவில்லை, திருகோணமலையில் திரு.சம்பந்தனின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கணிசமான ஆதரவு இருந்தது, அதேபோல் மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், அம்பாறையில் ஈபிடிபி மற்றும் முஸ்லிம் காங்கிரசுக்கும், வவுனியாவில் ரெலோ மற்றும் புளொட்டுக்கும், யாழ்ப்பாணம் டக்ளஸின் ஈபிடிபிக்கும் அதிகமான வாக்குவங்கி இருந்தது.

தேர்தல் வந்தது எதிர்பார்த்தபடியே மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், அம்பாறையில் ஈபிடிபியும், முஸ்லிம்காங்கிரசும், திருகோணமலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், வவுனியா மற்றும் மன்னாருக்கு செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் சித்தார்த்தனும் அவரைச் சார்ந்தவர்களும், யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவரைச் சார்ந்தோர்களும் தெரிவானார்கள், இப் பாராளுமன்றத்துக்கு ஆளும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

திரு.ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்க படைகளுக்குமான யுத்த தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இக் காலத்தில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் பதவிக் காலம் முடிவுற்றதால், மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானார்.

பாராளுமன்றத்தினுள் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு போதாமையால் எந்தவித முடிவுகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது, இவரின் சகல திட்டங்களுக்கும் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி முட்டுக்கட்டையாக இருந்தது, இதனால் ஜனாதிபதியெனும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொற்ப காலத்தினுள்ளே பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு ஏற்பாடு பண்ணினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டக்ளஸுக்கு இருக்கும் வாக்குவங்கியை உடைத்து சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராஜா மற்றும் ஆனந்தசங்கரி போன்றோர் தங்களுக்கு புதிய வாக்குவங்கியை உருவாக்கி அதன் மூலம் பாராளுமன்றக் கதிரை கிடைப்பதென்பது பகற்கனவு என்பதைப் புரிந்து கொண்டு புலியெதிர்ப்புக் கொள்கையில் இருந்து விடுபட்டு, பிரபாகரன் தான் ஏகத் தலைவன் எனும் கொள்கையை ஏற்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கை குலுக்கிக் கொண்டனர்.

அடுத்து வந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடிக்கப்பப்பட்டு மகிந்தவின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வெற்றி பெற்றது, பாராளுமன்ற ஆசனம் கிடைக்கும் என்பது முயற்கொம்பைக் காண்பதற்கு ஒப்பானது என நினைத்திருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராஜா போன்றோருக்கு யாழ்பாண மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கள்ள வாக்குகளின் மூலம் ஆசனம் கிடைத்தது, ஆனந்தசங்கரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் உறவை முறித்துக் கொண்டதால் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.

இந்தப் ஆசனப் பட்டியலில் தெரிவாகாமல் தொங்கிக் கொண்டு இருந்த திரு. என்.ஸ்ரீகாந்தா, இறந்த ஒரு பா.உ வின்
வெற்றிடத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சிபாரிசுவில் நியமிக்கப்பட்டார், இந்தப் பதவியை தக்க வைத்திருக்க வேண்டுமெனில் துதி பாடி, வாய்க்கு வருவனவற்றையெல்லாம் அரசியலாக்கிப் பார்க்க வேண்டியது தான் என நினைத்து கருத்து தெரிவித்துள்ளார்.

1984 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே வெகுசன இணைப்பினால் மரபுவழிப் போராட்டத்தை நடத்தி தமிழீழத்தை வென்றெடுக்க முடியுமென தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்மானித்தார்கள், கெரில்லா போராட்டம் நிறுத்தப்பட்டு மரபுவழிப் போராட்டம் தொடர்ந்தது.

பல விடுதலைப் புலி உறுப்பினர்கள் களப்பலியானார்கள், மாவீரர்கள் பட்டியல் நீண்டது, தமிழீழம் கைக்கெட்டிய தூரத்திலெனக் கற்பனை செய்து தம் உயிரையே தியாகம் செய்தார்கள் எதுவும் அறியாத அப்பாவி அடிமட்டவிடுதலைப் புலிகள்.

மாவிலாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் திரு.எழிலனினால் பூட்டப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான ஸ்ரீலங்கா அரச படைகளுக்கூடான யுத்தம் பூதாகரமானது. யுத்த தவிர்ப்பு ஒப்பந்தம் கேள்விக் குறியானது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கெரில்லா யுத்த முறைக்கு மாறினார்கள், கிளைமோர், கண்ணிவெடி, குண்டுத் தாக்குதல், தற்கொலைத் தாக்குதல் போன்றன தொடர்ந்தன, என்றாலும் திருகோணமலையைத் தக்க வைத்திருக்க முடியாமல் பின் வாங்கினர் விடுதலைப் புலிகள்.

இதே வரிசையில் மட்டக்களப்பின் குடும்பிமலை, புலிபாய்ந்தகல் அம்பாறையின் கஞ்சிகுடியாறு போன்ற அடர்ந்த காட்டுப் பகுதி போன்றன அரச படை வசமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கல் எனக் கூறி வன்னி திரும்பினர், ஆனாலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்கள் தொடர்கின்றன.

இதோ போன்று முகமாலை, பூநகரி போன்ற இடங்களையும் விடுதலைப் புலிகள் இழந்த போது இவை முக்கியமற்ற பிரதேசங்களெனவும், தந்திரோபாய பின்வாங்கலென்றெல்லாம் பிரசாரம் செய்தனர், அதே வரிசையில் கிளிநொச்சியையும் இழந்த போது முக்கியத்துவம் இல்லாத பிரதேசமென்றே கூறுகின்றனர்.

இவை அனைத்தும் முக்கியமற்ற பிரதேசமெனில் எதற்காக இவ்வளவு கால யுத்தமும், அனியாய உயிரிழப்புகளும் எனக் கேட்கத் தோன்றுகின்றது. வீட்டுக்கு ஒருவர் போராட்டத்துக்கு வர வேண்டும், உதவிகள் செய்ய வேண்டுமென்றெல்லாம் எதற்காக இவ்வளவு ஆர்ப்பரிப்புக்கள், பாம்புக்கடி, வெள்ளப் பெருக்கு, தொற்று நோய், செல்வீச்சு மற்றும் பட்டினிச் சாவு போன்றனவற்றுக்கு தினமும் பலியாகிக் கொண்டிருக்கும்
இரு நூறாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் நிர்க்கதி வாழ்க்கையால் அடைந்த பயன் என்ன?

மாவிலாறை இழந்த போதே மீதமுள்ள பகுதிகள் அனைத்தும் முக்கியமற்ற பிரதேசங்கள் எனக் கூறி விட்டு காட்டுக்குச் சென்றிந்தால் இவ்வளவு உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்காது,
ஆயுத தளபாடங்களையும், இயக்க முக்கியத்தர்களையும் பாதுகாக்கவே இவ்வளவு உயிரிழப்புகளும் ஏற்படுத்தப்பட்டனவெனில் எதிர்காலத்தில் இன்னும் எதற்காக திரு என்.ஸ்ரீகாந்தா கூறும் கெரில்லாப் போராட்டம்.

இன்றைய கள நிலையை எடுத்துக் கொண்டால் இன்னும் சொற்ப நேரத்தில் ஆனையிறவுடன் கூடிய ஏ - 9 பாதை அரச படையினரால் விடுவிக்கப்படலாம், அதனை அடுத்து முல்லைத்தீவும் இதே நிலையை எட்டலாம் அதன் பின்னரும் அரச படைகளால் போராளிகளைக் கொல்ல முடிந்ததா, ஆயுதங்களை மீட்க முடிந்ததா குறைந்தபட்சம் விடுதலைப் புலிகளின் தஸ்தாவேஜுக்களையாவது கைப்பற்ற முடிந்ததாவென அர்த்தமற்று வினா தொடுக்கலாம், ஆனால் இந்த பெறுமதி இல்லாத மண்ணுக்கு எதற்காக இத்தனை ஆயிரம் விலை மதிப்பற்ற உயிர்கள் காணிக்கையாக்கப்பட்டன என்பதே இன்றைய விடுதலைப் போரும் விடையில்லா யுத்தியும் ஆகும்.

வியாழன், 1 ஜனவரி, 2009

அப்புச்சியின் விம்பங்களும் அரசாங்க பயங்கரவாதப் பட்டியலும்!

இணையத்தின் எமது சக பதிவர் தோழர் அப்புச்சி தனது விம்பங்கள் எனும் தமிழர்களின் உரிமைக் குரலில் "இலங்கை அரசின் அந்தக்கால பயங்கரவாதப் ப‌ட்டியல்......" எனும் தலைப்பில் அருமையான வரலாற்றுக் கட்டுரையைப் பதிவு செய்துள்ளார், இக் கட்டுரை இன்னும் விரிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும், ஏனெனில் இன்னும் பல விடுதலைக் குழுக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக ஒரு பிரமை.

வலைப் பதிவர் இக் கட்டுரையில் முக்கியமாக இக் குழுக்களின் அல்லது இவ் இயக்கங்களின் தலைவர்களின் பெயர்களையும், இவர்களால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதல்கள் போன்ற விபரங்களுடன் ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடப்படும் அவ்வியக்கங்களின் முழுப் பெயரையும் பதிவு செய்வது சிறப்பாக இருக்கும்.

இவ் ஈழ இயக்கங்களின் வரலாற்றுப் பதிவுகள் எமது எதிர்காலச் சந்ததிகளுக்கு நிச்சயம்
தேவையானவை, அவை பதிவு செய்த வரலாற்று உண்மைகளையும் மறக்காமல் அப்புச்சி பதிவு செய்வது காத்திரமானதாகும்.

உதாரணம்:

பத்மநாபா மற்றும் டக்ளஸ் தேவானந்தாவின் EPRLF இனரால் வெளியிடப்பட்ட வரலாற்று ஆவணமான ஈழம் முத்திரை.

மகேஸ்வரனைத் தலைமைத்துவமாகக் கொண்ட TEA இனரால் கொணரப்பட்ட அதிட்டலாபச் சீட்டு.

ஸ்ரீசபாரெத்தினம் மற்றும் தாஸ், பொபி போன்றோரின் TELO இனரால் யாழ்ப்பாண நகரத்தில் உருவாக்கப்பட்ட வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொலிஸ் சேவை.

உமாமகேஸ்வரனைத் தலைமையாகக் கொண்ட PLOT இனரால் யாழ்ப்பாண கோட்டையில் இருந்து ஸ்ரீலங்கா படையினரால் ஏவப்படும் செல் தாக்குதலில் இருந்து பொது மக்கள் தப்பிக்கக் கூடிய வகையில் போதனா வைத்தியசாலையைச் சுற்றி அமைக்கப்பட்ட ஓசை எழுப்பக் கூடிய கருவிகள் மற்றும் பாதுகாப்பு அரண்கள்.

விம்பங்கள் எனும் அப்புச்சியின் வலைப் பதிவில் பின்னூட்டமிடுவது கடினமாக இருப்பதால் அதனைச் சீர்படுத்துவதுடன், அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விபரங்களுடன் இன்னும் பல சாதக பாதக விபரங்களையும் சேர்த்துக் கொள்வது வரலாற்றுத் தேவையாகும்.

ஸ்ரீலங்கா அமைச்சரவையில் திடீர் மாற்றம், ஊடகத்துறை ஜனாதிபதியிடம்!

ஸ்ரீலங்கா அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த திரு.கருஜெயசூரிய அரசாங்கத்திலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டிருந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இம் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
ஊடகத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த திரு.அனுர பிரியதர்சன யாப்பா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவி வகித்த திரு.சரத் அமுனுகம பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

எஞ்சியுள்ள ஊடகத்துறை அமைச்சினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----