விடுதலைப்புலிகள் தவறை உணர்ந்து திருந்தி விட்டார்கள் எனும் தலைப்பில் "தமிழ் அரங்கம்" தனது பாணியில் பத்தியொன்றைப் பதிவு செய்திருந்தது, குமுதம் சஞ்சிகைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் அவர்கள், முஸ்லிம்கள் உட்பட தமிழ் பேசும் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னால் அணி திரள்க எனும் பதத்தினூடாக வழங்கிய செவ்வியின் ஆதங்கமே தமிழ் அரங்கத்தின் இச் சாடலாகும்.யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக வசித்து வந்த முஸ்லிம்கள் ஒரே இரவில் உடுத்த உடையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட சம்பவம் உலகம் அறிந்ததே! இதனை முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்குமாப் போல் தெரியாது எனக் காட்ட திரு.பா.நடேசன் முனைவதே வேடிக்கையாக இருக்கின்றது.
"முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்." இவ்வாறு திரு.நடேசன் கூறுவதன் அர்த்தம் தான் என்ன? இதைத் தான் காலம் கடந்த ஞானம் என்பதா, அல்லது சந்தற்பவாத அரசியலா?
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முஸ்லிம் சுத்திகரிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இன்றும் பொறுப்பு வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதனை நடேசன் மறந்து விட்டார் போல்த் தெரிகின்றது, காவற்துறையின் பொறுப்பாளராக இருந்த போது கண்டும் காணாதவர் போன்று நடேசன் இருந்தமையே இந்த பொறுப்பற்ற செவ்வியாகும்.
1990 ஆம் ஆண்டு கால நடுப்பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம்களும் அவர்களின் தீவிரவாத அமைப்புக்களும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பை மிகத் திட்டமிட்டு கச்சிதமாக நடாத்தி முடித்தனர், இன்றும் பல தமிழ்க் கிராமங்கள் மனித வாடையற்று காடாகிக் காட்சி தருவது உலகுக்குத் தெரியாத விடயமாகும்.
இக் காலத்தில் அம்பாறை ஊடான இனச் சுத்திகரிப்பு ஆரம்பமானது, இம் மாவட்ட தமிழர்கள் கிராமம் கிராமமாக கொன்றொழிக்கப்பட்டும், சொத்தழிவும் செய்து துரத்தப்பட்டார்கள், இறந்த உறவுகளைப் புதைக்க நேரமின்றி உடுத்த உடையுடன் அகதிகளாக ஓடிக் கொண்டே இருந்தார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனின் மெய்ப் பாதுகாவல் படையணிகளில் இருந்தவர்களின் அதிகமானோர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தோர்களாக இருந்ததால், தங்களை கிழக்குக்கு அனுப்புமாறும் அங்கு முஸ்லிம்கள் நடாத்தும் இனச்சுத்திகரிப்பை தடுத்து நிறுத்த அனுமதி தருமாறுமாம் கோரி நின்றனர், இதனால் வன்னிப் படையணிகளில் தொய்வு ஏற்படலாயிற்று, இதனைச் சீர்படுத்த விடுதலைப் புலிகளின் தலைவர் எடுத்த திடீர் முடிவானது சற்று ஆச்சரியம் ஊட்டுவதாகவே இருந்தது, அது தான் காத்தான்குடி, சம்மாந்துறை பள்ளிவாசல் தொழுகைகளில் இருந்த முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களாகும், இதனைத் தலைமை தாங்கும் பொறுப்பு திரு.கருணா அம்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது, ஆனாலும் முஸ்லிம்கள் தமிழர்கள் மீது நடாத்தும் இனச் சுத்திகரிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது, கிழக்கு விடுதலைப் புலிகளால் இவ் வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, வன்னிப் படையணிகளில் ஆட்டம் காண ஆரம்பித்தன, இதனைச் சுமுகமாகத் தீர்க்க தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த அடுத்த கட்ட அதிரடி முடிவே யாழ்ப்பாண முஸ்லிம்களை ஒரே இரவில் துரத்த எடுத்த நடவடிக்கையாகும்.
இந் நடவடிக்கை திரு.இளம்பருதி, திரு.கரிகாலன் போன்றோர் தலைமையில் நடத்தப்பட்டதாக ஊடகச் செய்திகள் கூறின, துரத்தப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தில் உள்ள பாலாவி, தில்லையடி போன்ற பகுதிகளிலும் மற்றும் அனுராதபுரத்திலும் இன்று வரை வாழ்க்கை நடாத்தி வருகின்றார்கள்.
தமிழ் அரங்கத்தின் பத்தி தொடர்பாக 19.11.91 அன்று தான் யாழில் நடேசன் பொலீஸ் பொறுப்பாளராக பொறுப் பேற்றிருந்தார். இவர் தனது முதல் நடவடிக்கையாக - இந்த தீயசக்திககளை - ஏன் கைது செய்யவில்லை. அந்தப் பொலீஸ் படையின் முதல் அணிவகுப்பே இதே திகதியில் பிரபாகரன் முன்னிலையில் நடந்ததாக `விடுதலைப் புலிகள்` ஏடு தை - 92 எழுதியதே! அதுவும் பொய்யா? எனக் குறிப்பிட்டு பின்னூட்டமிட்டுள்ளதனையும் நடேசன் கருத்தில் கொள்வது நல்லதல்லவா?
உலகம் இருண்டு விட்டது என நினைத்து அர்த்தமற்றுப் பதிலளிப்பது காத்திரமாக இராது, அனைவரும் விழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டு கொள்ள வேண்டும்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)