ஞாயிறு, 4 ஜனவரி, 2009

விடுதலைப் போரும் விடையில்லா யுத்தியும்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நிர்வாகத் தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சி நகரம் கடந்த 2009 ஜனவரி இரண்டாம் நாள் ஸ்ரீலங்கா படைதரப்பினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வீழ்ந்ததைத் தொடர்ந்து பலரும் பலதரப்பட்ட கருத்துக்களைக் கூறி வருகின்றார்கள், அந்த வரிசையில் இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.என்.ஸ்ரீகாந்தா தனது கருத்தையும் தெரிவிக்க தவறவில்லை.

கிளிநொச்சி நகரத்தின் வீழ்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லாப் போராட்டத்தின் ஆரம்பம் என ஸ்ரீகாந்தா கருத்து தெரிவித்திருப்பதனை அனேகமான ஊடகங்கள் பதிவு செய்திருந்தன. இதனை எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வதென்றே தெரியாமல் உள்ளது, ஏனெனில் விடுதலைப் புலிகள் எப்போதோ கெரில்லா தாக்குதல் முறைக்கு மாறி விட்டார்கள் என்பதே பொருத்தமானதாகும்.

1976 வைகாசிக்கு முதல் இருந்தே புதிய தமிழ் புலிகளாக தொடங்கி தம்பி எனும் வே.பிரபாகரனைத் தலைவராகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளாக மாறிய காலமீறாக கெரில்லாப் போராட்டத்திலேயே நம்பிக்கை வைத்து தாக்குதலை நடாத்தி வந்தார்கள் விடுதலைப் புலிகள், ஆனால் இந்தக் கெரில்லாப் போராட்டம் வெற்றி தராது என்பதால் இதனை வெகுசனப் போராட்டமாக மாற்ற வேண்டிய தேவை விடுதலைப் புலிகளுக்கு அவசியமாக இருந்தது, ஏனெனில் ஏனைய ஈழ விடுதலை அமைப்புக்கள் முன்னமே வெகுசனப் போராட்டத்துக்கு மக்களைத் தயார் படுத்தி விட்டார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவப் போக்கினால் காலவோட்டத்தில் மற்றைய ஈழ விடுதலை அமைப்புக்கள் காணமற் போக விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரச படைகளுக்குமான யுத்தம் தொடர்ந்தது, இலங்கை இந்திய அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து மீண்டும் புத்துயிர் பெற்ற ஏனைய அமைப்புக்களான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ஸ்ரீகாந்தா சார்ந்த ரெலோ மற்றும் பாலகுமார் இல்லாத ஈரோஸ் இறுதியாக ஈபிடிபி போன்றன மாற்றுக் கட்சிகள் எனும் பெயரில் அரசாங்கத்துடன் உறவைப் பேணி உதவிகளைப் பெற்று வந்தன.

இந்தக் காலத்தில் அரசாங்கத்தின் துணைப் படையென பதிவு செய்து ஆயுத உதவியும், பெருமளவு பணமும் பெற்ற மேற்கூறப்பட்ட அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுக்கவென நடத்திய தர்பார்கள் கொஞ்ச நஞ்சமல்ல, இதற்கு தலைநகரின் பம்பலப்பிட்டியில் தலைமையகத்தை வைத்திருந்த செல்வம், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா , போன்றோர் விதிவிலக்கானவர்களல்ல.

பிராந்திய ரீதியில் அரச ஊக்குவிப்புடன் இம் மாற்று அமைப்புக்களுக்கான உதவிகள் தொடர்ந்தன, மட்டக்களப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், வரதராசப்பெருமாள் போன்றோரின்
ஈபிஆர்எல்எவ் ராஸிக், இரெட்ணம் தலைமையிலும், அம்பாறையில் சங்கர், ஜெகதீஸ், வாகீசன் போன்றோரினால் ஈபிடிபியும், திருகோணமலையில் வினோதலிங்கம், சிவாஜிலிங்கம், செல்வம் சார்ந்த ரெலோவினாலும், வவுனியாவில் சித்தார்த்தன், மாணிக்கம்தாஸனின் புளொட்டினாலும் யாழ்ப்பாணத்தில் தீவகம் அடங்கலாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபியினராலும் அரசாங்கத்தின் ஆசியுடன் புலிச் சுத்திகரிப்புடன் கூடிய வெகுசனப் போராட்டங்கள் தொடங்கின.

இந்தக் காலத்தில் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள மேற்படி இயக்கங்களுக்கு ஏற்பட்டது, ஆனால் மக்களிடையேயான செல்வாக்கு இவ் அமைப்புக்கள் அனைத்துக்கும் கிடைக்கவில்லை, திருகோணமலையில் திரு.சம்பந்தனின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கணிசமான ஆதரவு இருந்தது, அதேபோல் மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், அம்பாறையில் ஈபிடிபி மற்றும் முஸ்லிம் காங்கிரசுக்கும், வவுனியாவில் ரெலோ மற்றும் புளொட்டுக்கும், யாழ்ப்பாணம் டக்ளஸின் ஈபிடிபிக்கும் அதிகமான வாக்குவங்கி இருந்தது.

தேர்தல் வந்தது எதிர்பார்த்தபடியே மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், அம்பாறையில் ஈபிடிபியும், முஸ்லிம்காங்கிரசும், திருகோணமலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், வவுனியா மற்றும் மன்னாருக்கு செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் சித்தார்த்தனும் அவரைச் சார்ந்தவர்களும், யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவரைச் சார்ந்தோர்களும் தெரிவானார்கள், இப் பாராளுமன்றத்துக்கு ஆளும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

திரு.ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்க படைகளுக்குமான யுத்த தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இக் காலத்தில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் பதவிக் காலம் முடிவுற்றதால், மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானார்.

பாராளுமன்றத்தினுள் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு போதாமையால் எந்தவித முடிவுகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது, இவரின் சகல திட்டங்களுக்கும் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி முட்டுக்கட்டையாக இருந்தது, இதனால் ஜனாதிபதியெனும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொற்ப காலத்தினுள்ளே பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு ஏற்பாடு பண்ணினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டக்ளஸுக்கு இருக்கும் வாக்குவங்கியை உடைத்து சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராஜா மற்றும் ஆனந்தசங்கரி போன்றோர் தங்களுக்கு புதிய வாக்குவங்கியை உருவாக்கி அதன் மூலம் பாராளுமன்றக் கதிரை கிடைப்பதென்பது பகற்கனவு என்பதைப் புரிந்து கொண்டு புலியெதிர்ப்புக் கொள்கையில் இருந்து விடுபட்டு, பிரபாகரன் தான் ஏகத் தலைவன் எனும் கொள்கையை ஏற்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கை குலுக்கிக் கொண்டனர்.

அடுத்து வந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடிக்கப்பப்பட்டு மகிந்தவின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வெற்றி பெற்றது, பாராளுமன்ற ஆசனம் கிடைக்கும் என்பது முயற்கொம்பைக் காண்பதற்கு ஒப்பானது என நினைத்திருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராஜா போன்றோருக்கு யாழ்பாண மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கள்ள வாக்குகளின் மூலம் ஆசனம் கிடைத்தது, ஆனந்தசங்கரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் உறவை முறித்துக் கொண்டதால் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.

இந்தப் ஆசனப் பட்டியலில் தெரிவாகாமல் தொங்கிக் கொண்டு இருந்த திரு. என்.ஸ்ரீகாந்தா, இறந்த ஒரு பா.உ வின்
வெற்றிடத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சிபாரிசுவில் நியமிக்கப்பட்டார், இந்தப் பதவியை தக்க வைத்திருக்க வேண்டுமெனில் துதி பாடி, வாய்க்கு வருவனவற்றையெல்லாம் அரசியலாக்கிப் பார்க்க வேண்டியது தான் என நினைத்து கருத்து தெரிவித்துள்ளார்.

1984 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே வெகுசன இணைப்பினால் மரபுவழிப் போராட்டத்தை நடத்தி தமிழீழத்தை வென்றெடுக்க முடியுமென தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்மானித்தார்கள், கெரில்லா போராட்டம் நிறுத்தப்பட்டு மரபுவழிப் போராட்டம் தொடர்ந்தது.

பல விடுதலைப் புலி உறுப்பினர்கள் களப்பலியானார்கள், மாவீரர்கள் பட்டியல் நீண்டது, தமிழீழம் கைக்கெட்டிய தூரத்திலெனக் கற்பனை செய்து தம் உயிரையே தியாகம் செய்தார்கள் எதுவும் அறியாத அப்பாவி அடிமட்டவிடுதலைப் புலிகள்.

மாவிலாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் திரு.எழிலனினால் பூட்டப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான ஸ்ரீலங்கா அரச படைகளுக்கூடான யுத்தம் பூதாகரமானது. யுத்த தவிர்ப்பு ஒப்பந்தம் கேள்விக் குறியானது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கெரில்லா யுத்த முறைக்கு மாறினார்கள், கிளைமோர், கண்ணிவெடி, குண்டுத் தாக்குதல், தற்கொலைத் தாக்குதல் போன்றன தொடர்ந்தன, என்றாலும் திருகோணமலையைத் தக்க வைத்திருக்க முடியாமல் பின் வாங்கினர் விடுதலைப் புலிகள்.

இதே வரிசையில் மட்டக்களப்பின் குடும்பிமலை, புலிபாய்ந்தகல் அம்பாறையின் கஞ்சிகுடியாறு போன்ற அடர்ந்த காட்டுப் பகுதி போன்றன அரச படை வசமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கல் எனக் கூறி வன்னி திரும்பினர், ஆனாலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்கள் தொடர்கின்றன.

இதோ போன்று முகமாலை, பூநகரி போன்ற இடங்களையும் விடுதலைப் புலிகள் இழந்த போது இவை முக்கியமற்ற பிரதேசங்களெனவும், தந்திரோபாய பின்வாங்கலென்றெல்லாம் பிரசாரம் செய்தனர், அதே வரிசையில் கிளிநொச்சியையும் இழந்த போது முக்கியத்துவம் இல்லாத பிரதேசமென்றே கூறுகின்றனர்.

இவை அனைத்தும் முக்கியமற்ற பிரதேசமெனில் எதற்காக இவ்வளவு கால யுத்தமும், அனியாய உயிரிழப்புகளும் எனக் கேட்கத் தோன்றுகின்றது. வீட்டுக்கு ஒருவர் போராட்டத்துக்கு வர வேண்டும், உதவிகள் செய்ய வேண்டுமென்றெல்லாம் எதற்காக இவ்வளவு ஆர்ப்பரிப்புக்கள், பாம்புக்கடி, வெள்ளப் பெருக்கு, தொற்று நோய், செல்வீச்சு மற்றும் பட்டினிச் சாவு போன்றனவற்றுக்கு தினமும் பலியாகிக் கொண்டிருக்கும்
இரு நூறாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் நிர்க்கதி வாழ்க்கையால் அடைந்த பயன் என்ன?

மாவிலாறை இழந்த போதே மீதமுள்ள பகுதிகள் அனைத்தும் முக்கியமற்ற பிரதேசங்கள் எனக் கூறி விட்டு காட்டுக்குச் சென்றிந்தால் இவ்வளவு உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்காது,
ஆயுத தளபாடங்களையும், இயக்க முக்கியத்தர்களையும் பாதுகாக்கவே இவ்வளவு உயிரிழப்புகளும் ஏற்படுத்தப்பட்டனவெனில் எதிர்காலத்தில் இன்னும் எதற்காக திரு என்.ஸ்ரீகாந்தா கூறும் கெரில்லாப் போராட்டம்.

இன்றைய கள நிலையை எடுத்துக் கொண்டால் இன்னும் சொற்ப நேரத்தில் ஆனையிறவுடன் கூடிய ஏ - 9 பாதை அரச படையினரால் விடுவிக்கப்படலாம், அதனை அடுத்து முல்லைத்தீவும் இதே நிலையை எட்டலாம் அதன் பின்னரும் அரச படைகளால் போராளிகளைக் கொல்ல முடிந்ததா, ஆயுதங்களை மீட்க முடிந்ததா குறைந்தபட்சம் விடுதலைப் புலிகளின் தஸ்தாவேஜுக்களையாவது கைப்பற்ற முடிந்ததாவென அர்த்தமற்று வினா தொடுக்கலாம், ஆனால் இந்த பெறுமதி இல்லாத மண்ணுக்கு எதற்காக இத்தனை ஆயிரம் விலை மதிப்பற்ற உயிர்கள் காணிக்கையாக்கப்பட்டன என்பதே இன்றைய விடுதலைப் போரும் விடையில்லா யுத்தியும் ஆகும்.

6 கருத்துகள்:

  1. ஈழவன் உங்கள் கருத்து என்னவோ தெரியவில்லை.முரண்பட்டுக்கூட இருக்கலாம்.மூன்று நாட்களாக மூச்சு எனதில்லை.கடவுளே என்று சொல்வதைத் தவிர வார்தைகள் இல்லை.குற்றம் சொல்லவும் முடியாத அகதிக் கரைகளில் நாங்கள்.நான்கு நாடுகளை எதிர்த்துச் சண்டையிடும் பலம்?ஆனாலும் சொந்த நாடுகளில் இன்னொருவருக்கு அடிமையாய் இருப்பதைவிட அகதிநாடுகளில் சுதந்திரமாக மூச்சை விடுவோம்.

    பதிலளிநீக்கு
  2. ஈழவன்,நல்ல ஒரு பதிவு. உண்மைகளை சிறப்பாக அலசியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
    (நேரம் கிடைப்பது குறைவாக இருப்பதனால் அடிக்கடிவர(பதிய) முடியவில்லை.)

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு,ஈழவிடுதலை போரின் வரலாற்று சக்கரத்தின் ஒரு பதிவு இது,இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்திய இராணுவ காலத்தில் செய்த அட்டகாசங்களை மக்கள் மறந்துவிட்டார்களே,அல்லது மன்னித்துவிட்டார்களா அல்லது புலிகளுக்கு ஆதரவாக பேசுவதால் தேசியம் என்ற புனித நீரால் அவர்களின் பாவங்கள் களுவப்பட்டு மாமனிதர்கள் ஆகிறார்களோ தெரியவில்லை.கண்டிப்பாக வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்து தான் வைத்துள்ளது.இதற்கு விரிவாக பதில் தர வேண்டும்,அதற்கு உறுதுணையான பல ஆவணங்கள் இருந்தன,பலவற்றை தொலைத்து விட்டேன்,சிலவற்றை நண்பர்கள் சுட்டுவிட்டார்கள்,முடிந்தவரை விரைவில் பதிவிடுகிறேன்.மேலும் என்னால் இடப்பட்ட பதிவுக்கு தங்களின் காத்திரமான பதிலுக்கு நன்றி.பின்னூட்டம் இனி வரும்காலங்களில் இடலாம்.தவறு திருத்தப்பட்டுள்ள அதே வேளை பிரதானமாக மாணவர் பேரவையின் பெயரை தவறவிட்டமைக்கு வருந்துகிறேன்.கணணியில் சில மென்பொருள் மாற்றீடுகள் செய்யப்படுவதால்,புதிய பதிவுடன் விரைவில் சந்திக்கிறேன்,தொடர்ந்தும் காத்திரமான பதிவுகளை தோழர் ஈழவனிடம் இருந்து எதிர்பார்க்கும்

    அப்புச்சி

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஹேமா,

    //நான்கு நாடுகளை எதிர்த்துச் சண்டையிடும் பலம்?//

    எங்கே போய் விட்டது, அட்டைக் கத்தியை வைத்து சண்டை போட இயலாது, ஆனால் பூச்சாண்டி காட்டலாம்.

    சொந்த மண்ணிலே வாய் மூடி மௌனியாக வாழாமல் நிம்மதியாக சுவிஸில் கவிதை எழுதி சுதந்திரமாய் வாழ்ந்தேன் எனப் பெருமையாய் சொல்லுங்கள் ஹேமா.

    பதிலளிநீக்கு
  5. நன்றி செல்வன்,

    ஆரோக்கியமான திறனாய்வினை எமது சக பதிவர்கள் ஏன் தான் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்களோ தெரியவில்லை.

    பிழை தென்படின் சுட்டிக் காட்டி திருத்தம் செய்யத் தூண்டலாமல்லவா?

    பதிலளிநீக்கு
  6. நன்றி அப்புச்சி,

    காத்திரமான பதிவுகளைக் கொணர களத்துமேடு தயாராக இருக்கின்றது, ஆனால் எம் சக பதிவர்கள் பின்னூட்டத்தின் மூலம் பிழையெனில் சுட்டிக் காட்டி சரியெனினில் அதற்கு ஊக்கம் கொடுத்து வரவேற்க தயாரில்லையே!

    ஆங்கிலேய இணையத் தளங்களில் பொறாமை உணர்வற்று எவ்வளவு அருமையாகச் செயற்படுகின்றார்கள்!

    தங்களின் பதிவுக்கு களத்துமேடு செவி மடுத்து பதிலிட்டு உள்ளதெனில், அந்த பதிவுக்கு அப்புச்சி நிச்சயம் பதில் தந்திருக்க வேண்டும் என்பது ஊடக தர்மம். இதனையே தோழர் ஹேமா நேரடியாகவே கேட்டிருந்தார்.

    தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாவங்கள் கழுவப்பட்ட புனிதர்கள் தாமென்று தலை கீழாக நின்று உரத்துக் கூறினாலும் ஈழத்தவர்களால் எவ்வேளையிலும் மன்னிக்கப்பட மாட்டார்கள், இந்தியர்கள் சிலவேளை இவர்களின் முகமூடியை அறியாமல் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----