ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

மாநகர சபைத் தேர்தலும் மக்களால் தூக்கி வீசப்பட்ட கூட்டமைப்பினரும் !

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைத் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ள இந்த நேரத்தில் அரசியல்வாதிகளும் வாக்குக்கோர வீடு வீடாக வீதி வீதியாக நடந்து வருகின்றார்கள்.

அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவும் அவர்சார் கட்சி உறுப்பினர்களும் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முகமிழந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு வாக்குத் தேடி வருகின்றனர், அவ்வாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், நாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்து தர்மலிங்கம் சித்தார்த்தன், திருநாவுக்கரசு ஸ்ரீதரன், வீரசிங்கம் ஆனந்தசங்கரி போன்றோர் தம் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்தும், இலங்கை தமிழரசுக் கட்சிக்காக சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரும் மக்களிடம் வாக்குத் தேடுவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தப் பிரதேசங்களில் இவ் அரசியல்வாதிகளுக்கென வாக்குவங்கி இல்லாமையே இவர்களின் தீவிர வாக்கு வேட்டைக்குக் காரணமாகும், கடந்த காலங்களில் மக்களுக்குச் சேவைகள் எதுவும் செய்யாமல், தேர்தல் முடிந்ததும் மக்களை மறந்து விடும் இவ் அரசியல்வாதிகளை மக்கள் திரும்பிப் பார்க்க மறுக்கின்றனர்.

மக்களை மறந்து விட்டவர்களில் முக்கியமானவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியெனப் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரானராகும், போட்டி அரசியலில் டக்ளஸ் தேவானந்தா இருக்கும் வரை பாராளுமன்ற ஆசனம் கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர்கள் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் தூக்கிப் பிடித்தாலே உயிர்ப்பிச்சையும் அவர்களின் ஆசீர்வாதத்துடன் கூடிய வெற்றி வாய்ப்பும் கிடைக்கும் என்பதால் கூட்டமைப்பென நாமமிட்டு ஒன்று சேர்ந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளெனும் ஏகப் பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விடுதலைப் புலிகள் செல்லப்பிள்ளைகளாகப் பார்த்தனர், தேர்தல் வந்தது கள்ள வாக்குகள் மூலம் வாக்குப் பெட்டிகள் நிரப்பப்பட்டன, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர், மேற்சொல்லப்பட்டோர் கண்ட கனவு நிறைவெய்தியது.

வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கான சேவை எதனையும் செய்யவில்லை, மாறாக உயிர்ப்பிச்சையும் பாராளுமன்ற ஆசனத்தையும் பெற்றுக் கொடுத்த விடுதலைப் புலிகளைத் துதி பாடுவதிலும் அவர்கள் செய்யும் கொலைக் கலாசாரத்தை நியாயப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வந்தனர்.

திருகோணமலையில் இருக்கும் மாவிலாறு அணைக்கட்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் பூட்டப்பட்ட கணத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் இலட்சியத்தில் இருந்த தமிழீழம் சுருங்கத் தொடங்கியது, முற்போக்குச் சிந்தனையைக் கொண்டிராத புலித் தலைமையும் இதனை ஏறெடுத்துப் பாராமல் போரியலில் நாட்டம் கொண்டனர், அதன் விளைவு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஊனத்துடனும், மனநோயுடனும் உறவுகளை இழந்து அகதிகளாக வாழ்கின்றனர், பலரைப் பலி கொடுத்ததால் கிடைத்த பரிசும், படித்த பாடமும் இது தான்.

இன்னும் எமக்கு போர் எண்ணம் தேவையா, எம்மை நாம் இன்னும் இழக்கத் தயாரா எனும் கேள்விகள் இன்னும் மீளாய்வு செய்யப்படாமலே தொக்கி நிற்கின்றன.

பல இலட்சக் கணக்கான மக்கள் வன்னிப் போர் முனையில் விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கி அவதியுறும் போது உலகமே அழுதது, விடுதலைப் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடுவிக்குமாறு சர்வதேசமும் கேட்டுக் கொண்டது, ஆனால் விடுதலைப் புலிகளும், அவர்களின் பிரசாரப் பீரங்கிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அம் மக்களின் உயிர்களைப் பற்றி எந்தவித அக்கறையும் இன்றி அவர்கள் விடுதலைப் புலிகளை நேசிப்பவர்கள், புலிகளை விட்டு வர விரும்பாதவர்கள் என்றெல்லாம் கதை கூறித் திரிந்ததை எவரும் மறக்க முடியாது.

சம்பிரதாயத்துக்கேனும் "விடுதலைப் புலிகளே போர் முனையில் தடுத்து வைத்திருக்கும் அப்பாவி மக்களை விடுவியுங்கள்" என ஓர் அறிக்கை விடத் திராணியற்று புலிகள் செய்வதே சரியென வியாக்கியானம் செய்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகும், அந்த வகையில் வன்னியில் நிர்க்கதியாகி நின்று கொல்லப்பட்ட எண்ணற்ற மக்களின் இறப்புக்கும், அகதி முகாம்களில் உறவுகளை இழந்து ஊனமுற்று மனநோயாளிகளாக எம் மக்கள் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் காரணமானவர்கள்.

இப்படியான சுயநலவாதப் போக்குடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தமிழர்களின் ஒற்றுமை பற்றிக் கருத்துக் கூற அருகதை உடையவர்களா?, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் உரிமையையும் நேர்மையுடன் வென்றெடுக்கக்கூடிய தமிழர்களின் சக்தியாய் தமிழர்களின் மாபெரும் பலமாய் இருக்கக்கூடிய ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு என அறிக்கை விடுகின்றார்கள், இப்படிக் கூற இவர்களுக்கு வெட்கம் இல்லையா, இன்னும் தமிழினம் மௌனிக்க முடியாது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கை இவர்களைக் கேள்வி கேட்க வைக்கின்றது, இதனாலேயே இவர்களின் போலி முகங்களை அம்பலப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தையடுத்து இலங்கை வந்த இந்திய அமைதி காக்கும் படையுடன் இணைந்து செல்வம் அடைக்கலநாதன் சார்ந்த தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் மக்களுக்குச் செய்த கொடுமைகள் எண்ணற்றவை அதில் பாடசாலை சென்ற மாணவர்கள் முதல் வீதியில் நின்ற வாலிபர்கள் வரை பலோத்காரமாக பிடித்துச் சென்று தமிழ்த் தேசிய இராணுவம் எனும் பேரில் ஆயுதப் பயிற்சி கொடுத்து புலிகளுக்கெதிராக போராடத் தூண்டி விட்டமை முதன்மையானதாகும்,
இந்திய இராணுவம் இந்தியா திரும்பிய போது அவர்களுடனே சேர்ந்து ஓடியோருள் செல்வம் அடைக்கலநாதன் சார்பு இயக்கத்தினரும், சுரேஸ் பிரேமச்சந்திரன் சார்பு இயக்கத்தினரும் முக்கியமானவர்கள்.

இந்தியாவில் சிலகாலம் அஞ்ஞாதவாசம் செய்து விட்டு ஸ்ரீலங்கா திரும்பி சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து துணைப்படையெனும் பெயரில் பாதுகாப்பு அமைச்சினால் கொடுக்கப்பட்ட பணத்தினையும், பாதுகாப்பையும் பெற்று கொழும்பில் அலுவலகம் அமைத்து அரச புலனாய்வாளர்களாக செயற்பட்டவர்கள் இவர்களே!, கொழும்பிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் இவர்களால் கைதாகி காணாமற் போனோர் அதிகம் பேர்.

அரசாங்கத்திற்குத் துணைபோனமைக்காகவே இவர்களுக்கு பாராளுமன்ற ஆசனம் இல்லாத போதிலும் ஜனாதிபதி சந்திரிக்காவினால் சில திணைக்களங்களுக்கு ஆலோசகர் பதவி வழங்கிக் கௌரவம் செய்ததை ஞாபகமூட்ட வேண்டியுள்ளது, ஈபிஆர்எல்எவ் அமைப்புக்காக சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு மீன்பிடி இலாகாவில் ஆலோசகர் பதவியும், ரெலோ அமைப்புக்காக ஜே.திவ்வியநாதனுக்கு ஓர் ஆலோசகர் பதவியும் வழங்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமையுடன் கூடிய தங்கு விடுதியும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதே போன்று விடுதலைப் புலிகளுடன் இணைந்து குரல் கொடுத்த போது தமிழ் தேசிய இராணுவம் எனும் பேரில் கொண்டு செல்லப்பட்டு ஆயுததாரிகளாக்கப்பட்டவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்ற போதும் மௌனம் சாதித்து புலிகளின் செய்கைகளை நியாயப்படுத்தி வந்தவர்களில் செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் முக்கியமானவர்கள்.

எக் காலத்திலும் தமிழ் மக்களுக்கு இடைஞ்சல் தரக் கூடியவர்களாக வாழ்ந்து வந்த இப்பேற்பட்டவர்களை தமிழர்களின் காவலர்களாக எவ்வாறு ஏற்றுக் கொள்வது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறிக் கொண்டு வரும் துரோகிகளை தூக்கி வீச தமிழ் மக்கள் காத்திருக்கின்றார்கள், எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள யாழ்ப்பாணம், வவுனியா நகர சபைத் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

2 கருத்துகள்:

  1. நகரசபையெனும் சிறிய தேர்தலுக்கு பெரிய தேர்தலை ஒட்டிய நிகழ்ச்சித் திட்டங்கள், எப்படியாகினும் போலி முகங்களை அம்பலப்படுத்திய உங்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. களத்துமேட்டுக்கு வந்து கருத்தைப் பகிர்ந்து கொண்ட தீவிரவாசகனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----