ஸ்ரீலங்கா பேரினவாதத்தினால் சிற்பான்மை இனமான தமிழர்கள் காலம் காலமாக இன்னல்களை அனுபவித்துக் கொண்டே வருகின்றனர், இதில் இருந்து விடுதலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இளைஞர்கள் திரண்டு விடுதலை இயக்கங்களை நோக்கி வீறுநடை போட்டனர், பல இயக்கங்கள் உருவாகி ஸ்ரீலங்கா படை பலத்துக்கு நிர்க்கதி நிலையை உருவாக்கினர், இதனால் வடக்கின் யாழ் குடா மற்றும் வன்னி நிலப்பரப்பு, கிழக்கில் மூதூர் மற்றும் மட்டக்களப்பின் படுவான்கரை போன்ற பகுதிகள் பூரணமாக விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாகின.
இந்த இளைஞர் இயக்கங்களின் ஒற்றுமையைக் கண்ட பேரினவாதமும், வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளும் சீரழிக்க முனைப்புக் காட்டியது, இதற்கு தூபம் இடுவது போல் ஒத்துழைத்தது விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர மற்றய இயக்கங்கள் எதனையும் இயங்க விடக் கூடாது என திட்டமிட்டு சகோதர இயக்கத்தவர்களை விடுதலைப் புலிகள் அழிக்கத் தொடங்கியன் விளைவால், அன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றிடம் ஏற்படத் தொடங்கியது.
அரசியல் மயப்படுத்தாத எந்த மக்கள் போராட்டமும் விடுதலை பெற்றதாக வரலாறு இல்லை, துப்பாக்கிக்குப் பயந்தே பல மக்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி வகுத்தனர், ஆனால் அதற்கு எதிர்மாறாக புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள், புலம்பெயர் நாடுகளில் வாழ வேண்டுமெனில் ஸ்ரீலங்காவில் தொடர் பிரச்சனை இடம்பெற்றுக் கொண்டிருக்க வேண்டும், இதனைக் காட்டியே அகதி அந்தஸ்துடன் கூடிய வதிவிட உரிமையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதுவே அதற்கான காரணம் ஆகும். இந்த குறுகிய நோக்கத்துக்காகவே அதிக பணத்தினை விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்து போரை ஊக்கப்படுத்தியும், ஆதரவு செலுத்தியும் வந்தனர் புலம்பெயர் தமிழர்கள் என்றால் அதில் மிகையில்லை.
மக்களை அரசியல் மயப்படுத்தாது இராணுவ மயப்படுத்தலில் தீவிரம் காட்டிய விடுதலைப் புலிகள் வன்னி இறுதி யுத்த காலத்தில் மக்களை யுத்த அரணாக பாவிக்கத் தொடங்கியதனாலேயே மக்களின் அனுதாபத்தைப் பெற முடியாமல் போய் விட்டது, ஆனால் வன்னியில் உள்ள மக்கள் எம் பின்னால் இருப்பதாக உலகத்துக்கு காண்பிக்கத் தவறவும் இல்லை, இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஸ்ரீலங்கா பேரினவாதம் தமிழின அழிப்பை சுலபமாக மேற்கொண்டது, சர்வதேசத்தினால் பயங்கரவாத அமைப்பாக இனங்காணப்பட்ட விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி வகுத்துள்ள மக்களை சர்வதேசம் கண் திறந்து பார்க்க மறுத்தது, அவர்களையும் விடுதலைப் புலிகளாகப் பார்த்ததோ என்னவோ!, ஆனால் அந்த மக்களை விடுவியுங்கள் என விடுதலைப் புலிகளுக்கு பல வழி முறைகளில் செய்திகளை அனுப்பின, அதனையே ஸ்ரீலங்கா அரசும் செய்து பிரசாரத்துக்கு வழி தேடியது.
போரின் இறுதிக் காலங்களில் இருபதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன, இதன் போது ஸ்ரீலங்கா படையினரால் பலர் கைதாகி விசாரணை செய்யப்பட்டு வருவதாக பல தரப்பட்ட செய்திகள் கூறின, விசாரணையின் போது சித்திரவதைக்கு உள்ளாகி பலர் கொல்லப்பட்ட செய்திகளும் கூடவே வந்து கொண்டு தான் இருந்தன, இந்தச் செய்திகளின் வரிசையில் இறுதியாக நேற்று வந்த செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டது.
ஜனவரி மாதப் பகுதியில் ஸ்ரீலங்கா படையினரால் தமிழ் இளைஞர்கள் சித்திரவதைக்குள்ளான நிலையில் அவயங்கள் கட்டப்பட்டு, நிர்வாணமாக அழைத்து வரப்பட்டு தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோப் பதிவினை
ஜெர்மனி நாட்டிலுள்ள ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர் அமைப்பு வெளியிட அதனை பிரித்தானியாவிலுள்ள Channel 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது, இதன் மூலம் ஸ்ரீலங்காவின் பேரினவாதப் போக்கின் குரூரத் தன்மை வெளிப்படையாகத் தெரிகின்றது, ஆனால் இந்த பதிவின் மூலாதாரத்தினைத் தேட முடியாமல் இருப்பதாகவும் கூடவே செய்தி பகிர்கின்றது சனல் 4 தொலைக்காட்சி.
தமிழின அழிப்பான மனிதவுரிமை மீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகளை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வந்தாலும் கூட அழுத்தம் எதனையும் தெரிவிப்பதாகத் தெரியவில்லை, இதனை சாதகமாகப் பயன்படுத்தும் ஸ்ரீலங்கா தனது வழமையான பாணியில் ஜனவரி காலப் பகுதியில் போர் முடிவுக்கு வரவில்லை, இந்த வீடியோ பதிவு விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது படையினர் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இல்லையெனவும் புனிதம் கற்பிக்கின்றார் ஸ்ரீலங்கா வெளியுறவுச் செயலர் பாலித கோகன.
ஸ்ரீலங்கா பேரினவாதம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பு இவ்வாறு மூடி மறைக்கப்பட்டு வருவதற்கு தமிழர்களின் ஒற்றுமையின்மை முக்கியம் ஆகும். விடுதலைப் புலிகளால் மக்களை அரசியல் மயப்படுத்த முடியாமல் போனமையும்,தமிழ் மக்களிடம் புலிகள் ஏற்படுத்திக் கொண்ட அராஜகப் போக்குமே எமது ஒற்றுமையின்மைக்கான மற்றைய காரணமாகும்.
தொடரும் ஒற்றுமையின்மையால் அழியப் போவது இலங்கையில் வாழும் தமிழினமே என்பதைச் சிந்தித்து எதிர்காலத்தைத் திட்டமிட புத்திஜீவிகள் முன்வர வேண்டும். இரக்கமற்ற முறையில் ஸ்ரீலங்கா பேரினவாதம் நடத்தும் கொடுமைகளை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.