கடந்த இரண்டு நாட்களில் மாணாக்கர் மூவர் மட்டக்களப்புப் பகுதியில் இருந்து காணாமற் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன, மட்டக்களப்பு, கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் 8 வயதுடைய சதீஸ்குமார் தினுஷிகா, ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய வள்ளுவன் மதிசுதன் மற்றும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய ஏரம்பமூர்த்தி ஜனார்த்தனன் ஆகியோரே காணாமல் போன மாணாக்கர்களாவர்.
2009.04.30 ஆம் திகதியான இன்று மட்டக்களப்பு புறநகர் மற்றும் நகரப் பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்கள் இணைந்து கடத்தப்பட்ட மாணாக்கர்களை விடுவிக்கக் கோரி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர், நேற்று மாணவி காணாமற் போன செய்தி அறிந்ததில் இருந்து அப்பகுதி மக்கள் அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வீதிகள் வெறிச்சோடி போயுள்ளதுடன், கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.
கடந்த மாதம் திருகோணமலையில் வர்ஷா எனும் பச்சிளம் பாலகி கடத்தல்காரர்களால் கடத்திக் கப்பம் கோரப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டார், இது தொடர்பாக ஆயுதக் குழுவொன்று தொடர்புற்றுள்ளதாக செய்திகள் வந்த போதிலும் சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
இப்படியான கடத்தல் சம்பவங்களினால் பாடசாலைகளுக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர் தயங்குகின்றார்கள், இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமலும், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த அரசியல்வாதிகளும், பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களும் உளசுத்தியுடன் செயற்படுவதே சிறந்ததாகும்.
இச் சம்பவங்கள் இனிமேலும் தொடரக் கூடாது என்பதனால் களத்துமேடு தனது ஆதங்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.