நீண்ட யுத்தத்துக்கு முடிவு கண்டு விட்டோமென ஸ்ரீலங்கா அரசாங்கம் மார்தட்டிக் கொண்டாடும் இந் நேரத்தில் அந்த யுத்தத்தில் சிக்குண்ட மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாய் விரிந்து கிடப்பதை எச் சமூகமும் ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பது கவலையளிக்கின்றது.
யுத்த பூமியில் வாழ்ந்த தமிழினம் சிதைந்து மண்ணாகிப் போக எஞ்சிய சிலரில் பலர் ஊனமுற்றவராகவும், சிலர் உறவுகளை இழந்தவர்களாகவும் மனிதாபிமான யுத்தத்தின் விளைவை கண்டுள்ளனர்.
அந்த யுத்த களம் ஏற்படுத்திய தாக்கத்தினை "பதுங்குகுழியில் இருந்து ஒரு வலைப்பதிவு" என்று உபதலைப்புடன் தோழர் தீபச்செல்வன் அவர்கள் தீபம் எனும் வலைப்பதிவை காத்திரமாக, மனதைத் தொட்டுச் செல்லும் கவிதைகளூடாகப் பிரசவித்துள்ளார்.
"பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி" எனும் குறியீட்டினூடாக
மண் சிதறி மூடப்பட்ட
பதுங்குகுழியில்
மூடுண்டு போயிற்று
கடைசி வரை
வைத்துக் காத்திருந்த
உடைந்த முகத்தின் எச்சங்கள்.
எனக் கூறித் தொடரும் வரிகள் எத்தகைய கல்மனதையும் கரைய வைக்கக் கூடியதாகப் பதிவு செய்துள்ளமை கவிஞரின் ஆளுமையைக் காட்டுகின்றது, புதுக் கவிதையைத் தளமாகக் கொண்டு தோழர் தீபச்செல்வன் கூறும் அனைத்துக் கவிதைகளும் பிரமாதம்.
ஆனால் நொந்த கவிதைகளின் பிறப்புக்கு உரித்தான எம்மின அழிப்பின் சீரழிவுக்கு ஒரு தரப்பு மட்டுமே சொந்தக்காரரென கவிஞர் கூற முற்படுவதனை ஏற்க முடியாமல் இருக்கின்றது.
தமிழின அழிப்புக்கு முக்கிய பாத்திரங்கள் யாரென்பதை தீபச்செல்வன் போன்ற எதார்த்தக் கவிஞர்கள் இனம் காண வேண்டும், எம்மின மக்கள் அராஜகம் கொண்ட அல்லது பாஸிஸத்தில் மூழ்கிப்போன தமிழீழத்தில் என்றுமே வாழ முற்படவில்லை, மாறாக முற்பட வைக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.
ஒரு வேளை கஞ்சியாவது குடித்து விட்டு நிம்மதியாக இருக்க வேண்டுமென்றே எம்மக்கள் அனைவரும் கூறுவர், மனிதத்தை நேசிப்போர் தங்களின் மனங்களில் கை வைத்துப் பதில் கூறினால் நிம்மதியான வாழ்வு மாத்திரமே எமக்குத் தேவை படுகொலைக் கலாசாரத்துடன் கூடிய சீரழிந்த துப்பாக்கிக் கலாசாரம் வேண்டவே வேண்டாம் என உரத்துக் கூறுவர்.
நன்றி : http://deebam.blogspot.com/
பல தடவைகள் உணரப்பட்ட - பாதிக்கப்பட்ட என்னால் இந்த வலிகளை உணர முடிகிறது! நன்றி உங்கள் பதிவுக்கு!
பதிலளிநீக்குநன்றி முகுந்தன்.
பதிலளிநீக்குஇந்த வலியை எதார்த்தமாக தமிழர்கள் அனைவரும் உணர்ந்துள்ளார்கள்
ஈழவன்
பதிலளிநீக்குஅப்படியானால் உங்களை அந்த சிங்களன் நிம்மதியாக வாழ விடுவான் என நினைக்கிறீரா. அப்படி ஒரு வேளை கஞ்சி கூட குடிக்க முடியாமல் தானே இந்த ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தோம். சிங்களன் நம்மை நிம்மதியாக வழ விடுவான் என்ற நம்பிக்கை உங்களுக்கு இன்னும் உள்ளதா. உங்கள் மனம் தொட்டு கூறுங்கள் நாம் அமைதியாக இருந்து இருந்தால் இப்படி நீங்கள் உயிரோடு பேசி கொண்டு இருந்திரிக்க முடியாது. சிங்களன் எப்போதோ நம்மை விழுங்கி தின்று இருப்பான். என்ன ஈழவன் வரலாறு தெரியாதவரா நீங்கள். நம் மக்களுக்கு ஓட்டு உரிமை கூட தர மறுத்தவன் அல்லவா அவன். எம் இடங்களில் எல்லாம் சிங்கள பொறுக்கிகளை குடியேற்றம் செய்தவன் அல்லவா அவன். பௌத்தன் என்ற சொல்லுக்கு சிறிது கோடா சம்பந்தம் இல்லாத ரத்த வெறி பிடித்த மிருகம் அல்லவா அவன். இன்னுமா அவனுடன் இணைந்து வாழ முடியும் என நினைகிறீர்.
நமது தந்தை செல்வா அமைதியான முறையில் அல்லவா போராட்டம் நடத்தினார் அவரை இந்த சிங்கள மிருகங்கள் என்ன செய்தன. இவர்கள் செய்ததை எல்லாம் இன்னும் நான் நினைவு படுத்தவா. குனிய குனிய இன்னும் கொட்டும் இனமல்லவா சிங்களம். இன்னுமா நீங்கள் அமைதியாய் வாழ முடியும் என்கிறீர். நம் குல மாந்தரை அவர் தம் கற்பை சூதாடிய கொடுர மிருகங்கள் மீதா இன்னும் நம்பிக்கை வைத்துளீர். எம் குல கொழுந்துகளை உயிரோடு எரித்த இந்த காட்டேரிகளை இன்னுமா........ஐயகோ என்ன செய்வது ஈழவன் உங்களை போன்றவரும் இப்படி சொன்னால் ...
சிங்களவரினால் எமக்குரிய அந்தஸ்த்து இன்னும் கிடைக்கவில்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் விகிதாசார ரீதியில் எமக்குரிய கல்வியல், தொழில் அடங்கலாக சகல ஒதுக்கீடுகளும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.
பதிலளிநீக்குஎமக்குரிய அந்தஸ்த்து போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை என்பதனை அரசியலாக்கிப் பார்த்த எமது அரசியல்வாதிகளின் நடவடிக்கையினால் தான் இன்று சீர்குலைந்து நிற்கின்றது இலங்கைத் தமிழினம்.
சிங்கள பேரினவாதப் போக்கு தமிழ்ச் சிறுபான்மையினரை நசிக்கும் இவ் வேளையில் இதனை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் பல ஈழ விடுதலை இயக்கங்கள் போராட்டத்துக்குப் புறப்பட்டன, ஆனால் அவை அனைத்தையும் போராட விடாமல் தடுத்து, சுட்டுக் கொன்று விட்டு தனித்துவமான ஏகப் பிரதிநிதித்துவ சிந்தனையில் தமிழீழம் அமைக்க முயன்ற விடுதலைப் புலிகள் செய்த காரியங்கள் தான் என்ன?
கால் நூற்றாண்டுக்கும் மேலாக துப்பாக்கி கொண்டு போராடி கிடைத்த வெற்றிகள் எவையும் எம்மை தலை நிமிர்ந்து வாழ வைத்ததா? மாறாக எம்முடன் இருந்த சகல உறவுகளையும் அழித்து நாமும் அழிந்தது தான் மிச்சம்.
இந்த யுத்தத்தினால் அழிந்த மூன்று தலைமுறையை யாரைக் கொண்டு நிவர்த்தி செய்வது? இன்னும் எதற்காக வன்முறைப் போராட்டம், எமக்கு கிடைத்தனவே மூன்றுக்கும் மேற்பட்ட அருமையான சந்தற்பங்கள்.
(1). இலங்கை இந்திய ஒப்பந்தம்,
(2). பிரமதாஸ - பிரபாகரன் எழுதாத ஒப்பந்தம்,
(3) சந்திரிகா அரசியல் திருத்தம், (4). ரணில் - பிரபாகரன் சமாதான உடன்படிக்கை இவற்றை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இன்று எம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
ஈழத் தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளே என நாமமிட்டு படங்களுடன் செய்திகள் வெளியிட்டு புளாங்கிதம் அடைய முற்பட்டதால் இன்று வன்னியில் உள்ள அப்பாவி மக்கள் அனைவரும் புலிகளாகவே ஸ்ரீலங்கா படை நோக்குகின்றது, இதனால் பலர் கொல்லப்பட்டும், அதே அளவானவர்கள் ஊனமுற்றவர்களாகவும் எமது மூலாதாரத்தை இழந்து ஒரு சந்ததியை இழந்து நிற்கின்றோமே இதுவா போராட்டம். இதுக்காகவா இவ்வளவு உயிர்களையும் காவு கொடுத்தோம்.
இவை எல்லாவற்றையும் எடுத்து நோக்கின் ஆயுதக் கலாசாரம் எமக்கு எவற்றையும் எடுத்துத் தராது என்பது புலனாகின்றது, அதனாலேயே நொந்த உள்ளங்கள் கஞ்சி குடித்தாவது நிம்மதியாக வாழ வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு!
மாறாக ஐயா அவன்யன் அவர்களே, நீங்கள் கூறுமாப் போல் இலங்கைத் தமிழர்கள் எவருக்கும் வாக்குரிமை என்றும் மறுக்கப்பட்டதாக வரலாறு இல்லை, நீங்கள் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா - சாஸ்த்திரி உடன்படிக்கையை இதனுள் புகுத்திப் பார்க்கின்றீர்கள், இதற்கும் இலங்கைத் தமிழருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
எஸ்.ஜே.வி. தந்தை செல்வா கொணர்ந்த போராட்டம் தூர நோக்குடைய வன்முறையற்ற அரசியற் போராட்டமே, ஆனால் இன்று நிறைவடைந்திருப்பது.......
இந்தக் கொடிய யுத்தத்தில் நொந்தவர்கள் நாமே இதனை அரசியலாக்கி அதில் குளிர்காய பலர் முனையலாம், இதற்காகப் பலிக்கடாக்களாக்கப்பட எம்மை இன்னும் அனுமதிக்க முடியாது.
அன்பிற்குரிய ஈழவன்,
பதிலளிநீக்குஇந்த வலைப்பதிவை தொடக்கி இந்த ஜூன் 5ஆம் திகதியுடன் இரண்டு வருடம் ஆகிறது. இவ்வேளையில் உங்களது இந்தக் கருத்துகள் முக்கியமானவை. வலைப்பதிவை தொடக்கியபொழுது நான் கிளிநொச்சியில் இருந்தேன். பதுங்குகுழியிலிருந்து இது தொடங்கப்பட்டது. குறிப்பாக வலைப்பதிவை பதியத் தொடங்கிய நாட்களிலிருந்து மக்களுக்கு எதிரான எல்லாத் தரப்புக்களையும் புரியக்கூடிய மாதிரி இருந்தது. எல்லா அரசியல் அதிகாரங்களும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றது என்றே நினைக்கிறேன்.
//ஆனால் நொந்த கவிதைகளின் பிறப்புக்கு உரித்தான எம்மின அழிப்பின் சீரழிவுக்கு ஒரு தரப்பு மட்டுமே சொந்தக்காரரென கவிஞர் கூற முற்படுவதனை ஏற்க முடியாமல் இருக்கின்றது.//
விடுதலைப்புலிகளிடம் இருந்த தியாகத்தை நான் மிகவும் நேசித்தவன். ஆனால் அவர்களது கொலைப்புத்தியையும் பாஸிஸத்தையும் நேசிக்கவில்லை அதை ஏற்கவில்லை. எல்லைகளில் போரிடுகிற நிறையப்போராளிகளுடன் பழகியிருக்கிறேன். அவர்களது கனவுகள் அனுபவங்கள் வித்தியாசமாயிருந்தன. பேராளிகளில்கூட பல்வேறு விதமான போராளிகள் இருக்கிறார்கள். ஏன் சிருடை அணிந்தேன்? ஏன் துவக்கு தூக்கினேன். யாருடைய பக்கம் எனது துவக்கை நீட்டுவது என்பது பற்றய சிந்தனையில்லாத பேராளிகளும் இருக்கிறார்கள். நான் மிக இளையவன் எனது விமர்சனத்தை எதிர்ப்பை அவர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறேன்.
//தமிழின அழிப்புக்கு முக்கிய பாத்திரங்கள் யாரென்பதை தீபச்செல்வன் போன்ற எதார்த்தக் கவிஞர்கள் இனம் காண வேண்டும்இ எம்மின மக்கள் அராஜகம் கொண்ட அல்லது பாஸிஸத்தில் மூழ்கிப்போன தமிழீழத்தில் என்றுமே வாழ முற்படவில்லைஇ மாறாக முற்பட வைக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.//
எனது அண்ணா ஒரு மகத்தான கனவுடன் சிறந்த போராளியாக இருந்து அந்த இரட்சியத்திற்காக மரணம் அடைந்தவன். மனதுக்கு மிக நெருக்கமான போராளிகள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். பேராளிப்படைப்பாளிகளுடன் மிகவும் நெருக்கமாக பழகி கருத்தாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன். சனங்களுக்கு எதிரான அடக்குமுறையிலான தமிழ் ஈழத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படி ஒன்று தேவையில்லை. என்ற எண்ணம் எப்போழுதுமே இருக்கிறது. அவர்கள் தங்களை விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருந்தால் இப்படியொரு இருளான துயர் நிலையிலிருந்து மீண்டிருக்கலாம்.
எனினும் நம்மால் உருவாக்கப்பட்ட அந்தக் கனவை, கருத்தை நம்மில் பலர் ஏற்று அதற்காக நிறையப்பேரை களத்தில் பலியாக்கியிருக்கிறோம். அவர்களை நாம் இழந்திருக்கக்கூடாது. ஆனால் அதிகாரத்தனமாக, குறுக்குப் புத்தியுடன், கட்டமைக்கப்படுகிற கருத்துக்களையோ, நடவடிக்கைகளையோ எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதனாலும் மக்களை நாம் இழந்திருக்கிறோம். கடைசிப்போர் எல்லாவற்றையும் உணர்த்திவிட்டது.
//ஒரு வேளை கஞ்சியாவது குடித்து விட்டு நிம்மதியாக இருக்க வேண்டுமென்றே எம்மக்கள் அனைவரும் கூறுவர்இ மனிதத்தை நேசிப்போர் தங்களின் மனங்களில் கை வைத்துப் பதில் கூறினால் நிம்மதியான வாழ்வு மாத்திரமே எமக்குத் தேவை படுகொலைக் கலாசாரத்துடன் கூடிய சீரழிந்த துப்பாக்கிக் கலாசாரம் வேண்டவே வேண்டாம் என உரத்துக் கூறுவர்.//
நீங்கள் கூறுகிற இந்த நெஞ்சார்ந்த கருத்து இப்பொழுது பரவலாக வெளிப்படுகிறது. இந்தப்போர் தேவையிலலாமல் நிகழ்ந்து எங்களை கொடுமையாக வதைத்துவிட்டது. சரி அதற்கு எதிராக பேராடினாலும்கூட உலகம் திரண்டு எல்லாவற்றையும் பழிவாங்குகிறது. சனங்களை அழித்து வேடிக்கை பார்க்கிறது? எனவே போதும் என்ற மனநிலை தோன்றிவிட்டது. ஆனால் வாழ்வதற்கு வழியில்லை. சிங்கள அரசிற்கு எல்லாமே வாய்ப்பாக இருக்கிறது. அடி மனதில் பெரிய வெறுமைதான் இருக்கிறது.
உங்கள் பார்வைக்கு நன்றிகள்
நன்றி
அன்புடன் தீபச்செல்வன்
அன்புடன் தோழர் தீபச்செல்வனுக்கு,
பதிலளிநீக்குஎனது பதிவினை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் சுயவிமர்சனம் செய்தமை பாராட்டத்தக்கது.
//விடுதலைப்புலிகளிடம் இருந்த தியாகத்தை நான் மிகவும் நேசித்தவன். ஆனால் அவர்களது கொலைப்புத்தியையும் பாஸிஸத்தையும் நேசிக்கவில்லை அதை ஏற்கவில்லை.//
//ஏன் சிருடை அணிந்தேன்? ஏன் துவக்கு தூக்கினேன். யாருடைய பக்கம் எனது துவக்கை நீட்டுவது என்பது பற்றய சிந்தனையில்லாத பேராளிகளும் இருக்கிறார்கள்.//
//சனங்களுக்கு எதிரான அடக்குமுறையிலான தமிழ் ஈழத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படி ஒன்று தேவையில்லை. என்ற எண்ணம் எப்போழுதுமே இருக்கிறது. அவர்கள் தங்களை விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருந்தால் இப்படியொரு இருளான துயர் நிலையிலிருந்து மீண்டிருக்கலாம்.//
//ஒரு வேளை கஞ்சியாவது குடித்து விட்டு நிம்மதியாக இருக்க வேண்டுமென நீங்கள் கூறுகிற இந்த நெஞ்சார்ந்த கருத்து இப்பொழுது பரவலாக வெளிப்படுகிறது. இந்தப்போர் தேவையிலலாமல் நிகழ்ந்து எங்களை கொடுமையாக வதைத்துவிட்டது. சரி அதற்கு எதிராக பேராடினாலும்கூட உலகம் திரண்டு எல்லாவற்றையும் பழிவாங்குகிறது. சனங்களை அழித்து வேடிக்கை பார்க்கிறது? எனவே போதும் என்ற மனநிலை தோன்றிவிட்டது. ஆனால் வாழ்வதற்கு வழியில்லை. சிங்கள அரசிற்கு எல்லாமே வாய்ப்பாக இருக்கிறது. அடி மனதில் பெரிய வெறுமைதான் இருக்கிறது.//
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களில், உண்மையை இப்படி உரத்துக் கூறியவர்கள் மிகச் சிலரே.
அந்த வரிசையில் எதார்த்தக் கவிஞர் தோழர் தீபச்செல்வன் இனிமேலும் காத்திரமான கவிப் பிரசவங்களைச் செய்வார் என்பது கண்கூடு.
நன்றி தீபச்செல்வன், இலக்கிய தேடல்களுக்கூடாக நட்பை வளர்ப்போம்.