ஒருவர் இறந்து விட்டால் அல்லது ஓய்வு பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இன்னுமொருவரைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், ஆனால் தமிழக நடன கலைஞரும், நடிகருமான சுந்தரம் பிரபுதேவாவுக்கு அப்படியேதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை, எதற்காக இந்த தேர்வு நிகழ்வு என்று விஜய் ரீவிக்கும், அதனை நடாத்துபவர்களுக்குமே நன்கு தெரியும். விறுவிறுப்பான நடனங்களை வருங்கால பிரபுதேவாக்களும், பிரபுதேவிக்களும் அழகாக அரங்கேற்றி வருகின்றனர்.
எப்படி இருப்பினும் இலங்கையர்கள் சிலருக்கும் இந் நிகழ்ச்சி களம் அமைத்துக் கொடுத்துள்ளது, அதை சாதகமாக பயன்படுத்த நமது இளையோர்கள் முயன்று வருவது பாராட்டத்தக்கது. அந்த வரிசையில் அடுத்த பிரபுதேவா எனும் மகுடத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் பிறேம் கோபால் எனும் இளவல் அருமையாக நடனத்தை நடாத்தி நடுவர்களினதும், சபையோரினதும் மற்றும் பார்வையாளர்களினதும் பாராட்டினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இலங்கையில் சிங்கள அரசாங்கத்தினாலும், அதன் படை பலத்தினாலும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் தத்துரூபமாக பிறேம் கோபால் அவர்தம் குடும்பத்துடன் இணைந்து அரங்கேற்றிக் காட்டினார்.
பிறேம் கோபாலில் குடும்ப நடனம் தமது தாயக இன்னல்களை உலகுக்கு உரத்துக் கூற அருமையான சந்தற்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, அவர்களும் அதனைத் திறமையாக நடாத்தி சபையோர்களையும், பார்வையாளர்களையும் அத்துடன் நடுவர்களையும் கண் கலங்க வைத்து நல்ல பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
பிறேம் கோபால் உணர்ச்சி வசப்பட்டு உணர்வு பூர்வமாக நடாத்திக் காட்டிய நடனத்தின் இறுதியில் சுய விமர்சனமாக கோபால் தன்னைப் பற்றியும் தனது நாடு பற்றியதுமான முகவுரையுடன் தனது பத்தாவது வயதில் குடும்பத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பேரூந்தில் பயணிக்கையில் கண்டியில் வைத்து அப் பேரூந்தை வழி மறித்த இராணுவத்தினரால் அதில் பயணித்த 30 பேரையும் தெருவுக்கு இறக்கி அரை மணித்தியாலத்துக்கும் மேலாக கைகளை உயரத் தூக்கி நிற்குமாறு பணிக்கப்பட்டனர், இதனால் தனக்கு ஏற்பட்ட விரக்தியில் படிமமே இந்த நடனம் என வர்ணனை செய்தார்.
இவருக்கு பத்து வயதாக இருந்ததால் கிளிநொச்சியைக் கண்டியாக நினைத்தாரோ தெரியவில்லை, யாழ்ப்பாணம் - கொழும்பு பாதையில் கண்டி நகரம் இல்லை, கண்டி என்பது இலங்கையின் மத்தியில், மலையகத்தில் இருக்கும் பிரதான நகரமே கண்டியாகும்.
தொலைக்காட்சிகள் நடாத்தும் பிரபல்யமான நிகழ்ச்சிகளில் கருத்துக்கள் தெரிவிக்கும் போது கவனமாக, நேர்மையாக பதிலிறுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.
இறுதியாக இலங்கை வாழ் தமிழர்களுக்காக உதவி செய்யுங்கள் இந்திய மக்களே என அழுதழுது கண்ணீருடன் பிறேம் கோபாலின் தாயும், சகோதரியும் கெஞ்சி மன்றாடிக் கேட்டதுடன் சிறுவர்களின் அசைவும் இறுகிய கல் மனதையும் கரைய வைத்தது.