வியாழன், 31 ஜூலை, 2008

வெப்ப மாற்றத்தால் பாரிய பனிப்பாறை உடைந்தது

அண்மைக் காலமாக புவி வெப்பமடைந்து வருவது யாவரும் அறிந்ததே! கடந்த காலங்களில் ஆர்ட்டிக் பிராந்தியத்தில் வெப்பநிலை உயர்வடைந்து வருவதால் பனிப்பாறைகள் உடைந்து உருகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

வட கனடாவின் எல்லிஸ் மெரே தீவுக்கு அப்பாலுள்ள வார்ட்ஹண்ட் எனும் தீவில் கடந்த வாரம் 20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள பாரிய பனிப்பாறை உடைவு அவதானிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஐலெஸ்ஸில் 50 சதுர கிலோமீற்றர் பரப்பளவு பனிப்பாறை உடைந்தது, இதன் பின்னர் ஏற்பட்ட பாரிய உடைவே இதுவாகும்.

புதன், 30 ஜூலை, 2008

அல்-கைதா தலைவர் கொல்லப்பட்டார் ?

அல்-கைதா இயக்க இரசாயன ஆயுத நிபுணரான 55 வயதுடைய எகித்து நாட்டவரான அபு கபாப் அல்-மாஸ்ரி எனப்படும் மிதாத் முர்ஸி அல்-செயித், பாகிஸ்தானின் தென் வாஸிரிஸ்தானிலுள்ள அஸாம் வர்ஸாக் கிராமத்தின் பள்ளிவாயலொன்றின் தாலிபான்களுடன் இருக்கும் போது எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டாரென பாகிஸ்தான் படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தெருண்டாலிலுள்ள அல்-கைதா முகாமில் இரசாயன வெடிகுண்டுகள் தயாரிப்பு சம்பந்தமான பயிற்சித் தளத்துக்கு பொறுப்பாக இருந்த மிதாத் முர்ஸி அல்-செயித்தின் தலைக்கு 5 000 000 அமெரிக்க டொலர் பணத்தினை வெகுமதியாகக் கொடுக்க அமெரிக்கா தயாராக இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

இத் தாக்குதலை அமெரிக்கப் படையினர் நடாத்தியதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் கூறுகின்றன.

சார்க் மாநாட்டில் வெளிநாட்டமைச்சின் செயலர்கள்


சார்க் மாநாட்டையொட்டி நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர்களின் நிலையியல் குழுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களின் செயலாளர்கள் கலந்து கொண்ட காட்சி.

செவ்வாய், 29 ஜூலை, 2008

மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமை

மட்டக்களப்பு கோட்ட மட்டத்திலான 2008 ஆம் ஆண்டு ஆங்கில மொழி எழுத்துப் போட்டிப் பரீட்சைக்கு மட்டக்களப்பு வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருத்தி பரீட்சையில் சித்தியடைந்து முதலாமிடத்தைப் பெற்றாள்.

இதனைத் தொடந்து வலய மட்டத்துக்கு தெரிவாகிய இம் மாணவிக்கான ஆங்கில மொழி எழுத்துப் போட்டிப் பரீட்சை 2008.07.09 ஆம் திகதி மட்.புனித மிக்கேல் கல்லூரியில் ஆங்கில ஆலோசகர் ஒருவரின் தலைமையில் நான்கு நடுவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது, இப் பரீட்சைக்குப் பல மாணவர்கள் தோற்றினார்கள்.

இப் போட்டிப் பரீட்சையிலும் இம் மாணவி சிறப்பாகச் சித்தியடைந்து முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டாள், இறுதியில் பரீட்சையில் சித்தியெய்தியவர்களின் பெயர்ப் பட்டியல் அலுவலக விளம்பரப் பலகையில் இரண்டு நாட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது, இதில் இவளின் பெயர் முதலாமிடத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் இப் போட்டிப் பரீட்சையில் சித்தியடையாத ஒரு மாணவியின் பெயர் இப்போது பரிந்துரை செய்யப்பட்டு உண்மையாக சித்தியடைந்த மாணவியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் பிரபல்யமான ஒருவரே தனது சித்தியடையாத மகளுக்காக இந்த முதலாமிடத்தை இப்பகுதி கல்வி அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்துப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

கிராமப் பகுதிகளில் இருந்து பலத்த சிரமத்தின் மத்தியில் ஆங்கிலக் கல்வியினைக் கற்று நகரத்துக்கு போட்டிப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பக்கச் சார்பான தெரிவுகளால் திண்டாடி இளம் வயதிலேயே உளவியல் தாக்கத்துக்கு இலக்காகின்றனர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணசபையும் அதன் கீழுள்ள கல்வியமைச்சும் இதில் கவனம் எடுக்குமா?

அநீதி இழைக்கப்பட்ட மாணவிக்கு தீர்வு கிட்டுமா?

சனி, 26 ஜூலை, 2008

ஐநா சபைக்குள் நுழைந்த தமிழிச்சி

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நீதிபதியாகவும், தென்னாபிரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றின் முதற் பெண் நீதிபதியாகவும் பணிபுரிந்து வரும் தென்னாபிரிக்காவில் பிறந்த தமிழிச்சி திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஸ்தானிகராக, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, டேபன் நகரின் பேரூந்து ஓட்டுநர் ஒருவருக்கு மகளாக பிறந்த நவநீதம்பிள்ளை அவர்கள் தென்னாபிரிக்க வம்சாவளியாக இருந்தமையால் 28 வருடங்களாக அந் நாட்டின் நிறவெறி அரசாங்கத்தினால் நீதிபதி சம்மேளனத்தில் இணைக்கப்படாமல் இருந்து, 1995 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதல் பெண் மேன்நீதிமன்ற நீதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஐ.நா. சபையினுள் நுழைந்த தமிழிச்சி திருமதி நவநீதம்பிள்ளைக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

வெள்ளி, 25 ஜூலை, 2008

யார் இவள்!

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பை அண்டியுள்ள பூநொச்சிமுனையில் வீட்டுத் திட்ட கிராமத்தின் அருகே கருஞ்சிவப்பு நிற சல்வாரும் வெள்ளை நிற கீழ் அங்கியும் அணிந்துள்ள 20 - 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தெருவில்
கொல்லப்பட்டுக் கிடந்தாள்.

இவளது சடலம் இப்போதும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யார் இவள்! ஏன் இப்படியான கொலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

வியாழன், 24 ஜூலை, 2008

வீரகேசரியே மதவாதம் வேண்டாம் !

இலங்கையின் தேசியப் பத்திரிகையில் ஒன்றான வீரகேசரி "விடிவெள்ளி" எனும் பக்கத்தை ஆரம்பித்திருப்பது வாசகர்கள் அறிந்ததே!

ஒரு தேசியப் பத்திரிகையானது அந் நாட்டில் வாழும் சகலருக்கும் சமவாய்ப்பைக் கொடுக்க வேண்டுமென்பது ஜனநாயக மரபாகும், அவரவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிப்பது சிறப்புக்குரியதே!

இருப்பினும் மதரீதியாக பக்கங்களைப் பிரிப்பது அவ்வளவு நல்லதல்ல என்றே சொல்லத் தோன்றுகின்றது, "கிழக்கின் விடியல்" என்றதுமே தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் செய்தி அல்லது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் ஆட்சிமை பற்றிய செய்தியாக இருக்குமெனும் நோக்கோடு பக்கத்தைத் திருப்பிய போது எதிர்மாறாக "கிழக்கு முஸ்லிம்களின் விடியலை நோக்கி..." எனும் வாசகம் காட்சிக்கு இருந்தமையும், அப்பக்கங்களை அளவுக்கு அதிகமான முஸ்லிம் படைப்பாளிகளைக் கொண்டு பூர்த்தியாக்கி இருந்ததனையும் நோக்கும் போது வீரகேசரியும் மதவாதத்துக்கு அடிபட்டுப் போய்விட்டதோவென எண்ணத் தோன்றுகின்றது.

இன்றைய நிலையில் கிழக்கின் விடியலானது தமிழ் பேசும் மக்களின் விடியலாக நோக்கப்படும் போது பக்கச் சார்பாக முஸ்லிம்களின் விடியலெனப் பார்ப்பது, வீரகேசரியிடமும் நியாயத்தன்மை மரித்து விட்டதோவெனும் புரிதல் மக்களிடம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.

ஆகவே வீரகேசரி "கிழக்கு முஸ்லிம்களின் விடியலை நோக்கி..." எனும் பதத்தை மாற்றி "கிழக்கிலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடியலை நோக்கி..." எனும் தோரணையில் கிழக்கின் விடியலான வீரகேசரியின் விடிவெள்ளி அடுத்த பதிப்பில் மாற்றம் காணுமாயின் சிறப்பாக இருக்குமென்பது "களத்துமேட்டின்" ஆதங்கமாகும்.


http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_021.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_022.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_023.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_024.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_025.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_025.pdf
http://epaper.virakesari.lk/PDFHandler.ashx?p1=Web&p2=24_07_2008_027.pdf

செவ்வாய், 22 ஜூலை, 2008

1020 மில்லியன் மக்களுக்கு மலசலகூட வசதியில்லை

அண்மையில் உலக சுகாதார அமையமும், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெவ்வும் இணைந்து தயாரித்துள்ள அறிக்கையின் பிரகாரம் இந்தோனேசியாவில் 66 மில்லியன் பேருக்கும், எத்தியோப்பியாவில் 52 மில்லியன் பேருக்கும், பாகிஸ்தானில் 50 மில்லியன் பேருக்கும், சீனாவில் 32 மில்லியன் பேருக்கும் மலசலகூட வசதி இல்லை எனவும் இந்தியாவில் 665 மில்லியன் பேரும், நைஜீரியாவில் 29 மில்லியன் பேரும், பிரேஸிலில் 18 மில்லியன் பேரும், பங்களாதேஷில் 18 மில்லியன் பேரும் இயற்கைக் கடனை முடிப்பதற்காக திறந்த வெளியைப் பயன்படுத்துவதாக அறிய முடிகின்றது.

இப் புவியில் 1020 மில்லியன் பேர் இயற்கை கடனை முடிக்க மலசலகூடமின்றி திறந்தவெளியையே பயன் படுத்துவதாகவும் இவர்களில் 83 சதவீதத்தினர் ஆசிய, ஆபிரிக்கா போன்ற 13 நாடுகளைச் சேர்ந்தோரெனவும், இந்தியா இப்பட்டியலில் முன்னணீயில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இத்தகைய சுகாதாரக் குறைபாட்டால் தொற்றுநோய் தொடர வாய்ப்பிருப்பதாக இவ் அறிக்கை மூலம் எச்சரித்துள்ளனர்.

ஞாயிறு, 20 ஜூலை, 2008

கணவனுக்குக் கட்டிய நினைவாலயம் - அ.மயூரன் லண்டன்


"பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டிவைச்சாண்டா, எவளாச்சும் ஒரு செங்கல் நட்டுவைச்சாளா' என்னும் பா.விஜயின் வரிகளை மீண்டும் ஒரு முறை மீளாய்வு செய்ய வேண்டும் போல் உள்ளது. ஓர் உண்மையான காதலன் தன் காதலியை இழந்து விட்டால் அவளுக்கு நினைவுச்சின்னம் எழுப்புவது பற்றிக் கோள்விப்பட்டிருக்கின்றோம். அதற்கு தாஜ்மஹால் ஒரு சான்று. ஆனால் ஒரு மனைவி கணவனின் மறைவுக்குப்பின் அவன் நினைவாய் நினைவுச்சின்னம் எழுப்பியுள்ளாள் என்றால் அது விந்தையானது தானே.
கி.மு 623 இல் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது ஹலிகர்னேசஸ் (HALICARNASSUS) என்னும் நகரமாகும். இது தற்போதைய துருக்கியின் துறைமுக நகரமான பொட்ரம் (BODRUM, TURKEY) ஆகும். இந்த நகரத்தை கி.மு.377 இல் கெகற்டோம்நஸ் (HECATOMNUS OF MILAS) ஒவ் மிலஸ் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் இறந்து போக அவனது மகனான மாசோலஸ் கெக்ற்டோம்நஸ் ஆட்சிப் பொறுப்பினைக் ஏற்றான். இவன் ஆட்சிப்பீடம் ஏறியபின் தனது ஆட்சிநிலப்பரப்பை நெய்ற்போரிங் நகரம், மற்றும் அனரோலியா ஆகிய இடங்கள் வரை விஸ்தரித்தான். அவனுக்கு ஆட்டிமிசியா என்னும் தங்கை ஒருத்தி இருந்தாள். அவள் ஆணழகனான மாசோலஸ் மன்னனைக் காதலித்து கரம்பிடித்தாள். அந்தக்காலத்தில் உடன்பிறந்தவர்களை மணப்பது தவறாகத் தெரிவதில்லை. தங்களது உடைமைகள் தமது வம்சாவழியினருக்குக் கிடைக்கவே இவ்வாறு செய்தனர். ஆர்ட்டிமிசியா. காதலுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவள், திருமணத்தின் பின்னும் அவள் தன் கணவன் மேல் கொண்ட பாசத்தையிட்டு உலகமே வியந்தது. இவ்வாறு இருவரும் ஆட்சியை 24 ஆண்டுகள் ஆண்டனர்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை.

மாசோலஸ் மன்னன் திடீரென ஒருநாள் அதாவது கி.மு.353 இல் மரணமடைந்தான்.

ஆர்ட்டிமிசியா கணவனின் பிரிவைத் தாங்காது துவண்டாள். துடித்தாள் இருந்தும் தான் தளர்ந்துவிட்டால் நாட்டை யார் ஆள்வார்கள் எனத் தன்னைத் தேற்றிக்கொண்டு கணவனுக்குப்பதில் நாட்டை ஆளத் தொடங்கினாள். இதனால் கெகற்ரோம்நஸ் நகரம் ஆர்ட்டிமிசியா நாடு எனப்பட்டது.

இருந்தும் அவள் கணவன் மீது கொண்ட பற்றினால் அவனது முகத்தை அவளால் மறக்க முடியவில்லை. கணவனின் நினைவிலிருந்து விடுபட எவ்வளவோ முயன்றும் தோல்வி கண்டாள். முடிவில் ஆர்ட்டிமிசியா தன் அருமைக் கணவனுக்காக நினைவுச்சின்னம் கட்ட முடிவு செய்தாள்.

ஆனால் இந்த நினைவுச்சின்னம் உலகில் உள்ள நினைவுச்சின்னங்களை விட பெரிதாக இருக்க வேண்டும் என நினைத்தாள்.

இன்றைய துருக்கியின் துறைமுகப்பட்டினமான பொட்ரம் தான் அன்றைய ஆர்ட்டிமிசியா நாட்டின் தலைநகராக விளங்கியது.

அந்தப்பட்டினத்திலேயே கணவனின் நினைவுச் சின்னத்தையும் கட்ட ஆர்ட்டிமிசியா தீர்மானித்தாள். இதற்காக கிரேக்க நாட்டிலேயே தலை சிறந்த சிற்பி எனப் போற்றப்பட்ட ஸ்கோபாஸ் ஒவ் பரஸ், என்பவன் தேர்ந்தெடுக்கப்பட்டு வரவழைத்து நினைவுச்சின்னம் அமைக்கும் பணியை தொடங்கினாள். அச்சிற்பி தனக்குத் துணையாக வேறு பலரையும் அமர்த்திப் பணியைத் தொடங்கினான்.

120 அடி அகலமும், 100அடி நீளமும், 145 அடி உயரமும், உடைய நினைவுச்சின்னம் பளிங்கினால் அமைக்கப்பட்டது.

அந்நினைவுச்சின்னத்தின் நான்கு முகப்புக்களை லியோசர்ஸ், பிரையக்ஸ், ஸ்கோப்பஸ் ஒவ் பரஸ், அத்துடன் ரிமோதயஸ் ஆகியோர் கட்டினர்.

அம்முகப்புக்களுக்கு மேல் வானளாவிய உயரத்தில் 36 தூண்கள் அமைக்கப்பட்டு அதற்கப்பால் 24 அடுக்குகள் கொண்ட பிரமிட் வடிவிலான விதானம் அமைக்கப்பட்டது.

அவ்விதம் அமைக்கப்பட்ட கல்லறைக்குள் மாசோலஸ் மன்னனின் உருவச்சிலை வடிக்கப்பட்டது. அத்துடன் கல்லறைக்குச் செல்ல அகலமான இருபது படிகள் அமைக்கப்பட்டன.

இவ்விதமாக மாசோலஸின் கல்லறை முழுமையடையும் தறுவாயில் எவரும் எதிர்பாராத விதமாக இராணி ஆர்ட்டிமிசியா மடிந்து போனாள். (கி.மு.351) இது தனது கணவன் இறந்து இரண்டுவருடங்களின் பின் ஆட்டிமிசியா இறந்தாள். இதனால் கணவன் மனைவி இருவருமே ஓர் இரதத்தில் அமர்ந்திருப்பது போல் சிலை வடித்து கல்லறையில் வைத்தனர். அந்தக் கல்லறைக்கு அவர்கள் மாசோலியம் (THE MAUSOLEUM) எனப்பெயரிட்டனர். அந்த மாசோலஸ் கல்லறை இன்றைய தாஜ்மஹாலைவிட உயர்ந்தது. தாஜ்மஹால் 137அடி உயரமுடையது. ஆனால் மாசோலஸ் 145 அடி உயரமுடையது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக பல காலமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக எல்லா நினைவுச்சின்னங் களுக்கும் ஏற்பட்ட நிலை இந்த மாசோலியத்திற்கும் ஏற்பட்டது. அதாவது கி.மு.334 அளவில் அலெக்சாண்டரின் படையெடுப்பாலும், அதன்பின்னர் கி.மு.62 மற்றும் 58 களில் கடற் கொள்ளைக்காரர்களின் அட்டூழியத்தாலும் இம் மாசோலியம் சிதைவடையத் தொடங்கியது. அதன்பின்னர் 1404 இல் நிகழ்ந்த மிகப்பெரும் பூமியதிர்ச்சியினால் தன்னிலை தளர்ந்து தடுமாறி தரையில் வீழ்ந்து அடிமட்டம் மட்டும் எஞ்சியது. மாசோலியம். கி.பி. 15ஆம் நூற்றாண்டில் மல்டா நாட்டைச் சேர்ந்த நைற் ஒவ் சென்யோன்ஸ் தலைமையிலான படைகள் இந்த மாசோலியத்தினைத் தகர்த்து அதன் கற்களைக் கொண்டு போட்ரம் நகரின் துறைமுகப் பாதுகாப்புக்கென போட்ரம் கோட்டையை (BODRUM CASTLE) 1494 இல் அமைத்தனர். இன்றும் இந்தக் கோட்டையின் சுவர்களில் இப்பளிங்குக் கற்களைக் காண முடிகிறது.

1522 இல் துருக்கியர்கள் கலிகர்னேசஸ் நகரினை முற்றுகையிட்டபோது காவலாளிகள் மாசோலியத்தைப் பாதுகாத்தனர். இதனால் இவ்விடம் பொட்ரம் என அழைக்கப்பட்டது.

பின்னர் 1960 களில் பிரித்தானியாவைச் சேர்ந்த தொல்லியலாய்வாளர் சாள்ஸ் ரோமன் நியூட்டன் என்பவர் இப்பிரதேசத்தை ஆய்வுசெய்தார். இன்றும் பிரித்தானியா அருங்காட்சியகத்திலே இதன் முழுவிபரமும் அடங்கிய எச்சங்கள் காணப்படுகின்றன.

தன் கணவனை ஆழமாய் நேசித்த ஒரு காதலி. தன் காதலின் சிறப்பை உலகுக்கு உணர்த்தும் வகையில் கலையம்சத்துடன் அமைத்த மாசோலியம் இன்று இல்லை.

இருந்தபோதும் ஒரு ஆணுக்காக பெண் ஒரு செங்கல் நட்டுவைத்தாளா என்கின்ற பாடல் வரிகளை இது பொய்யாக்கியுள்ளது. இது ஆண்களுக்காக பெண்கள் ஒரு கல்லைக்கூட நாட்டவில்லை. என்ற ஆண்களின் குற்றச்சாட்டிலிருந்து பெண்கள் விடுதலை பெற இது ஒரு வழியாக அமைந்துவிட்டது எனலாம்.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=20_07_2008_035_002&mode=1
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----