ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஈபிஆர்எல்எவ் நாபா அணியின் பாரிஸ் மாநாடு!

ஈழ விடுதலைப் போராட்டம் எனக் கூறிப் புறப்பட்டவர்கள், இத் தேச மக்களின் விடுதலைக்காக செய்தவை என்ன, இதற்கான விடையை மனம் திறந்து உரத்துக் கூற முடியுமா? ஈழ விடுதலை என நாமமிட்ட இயக்கங்கள் முதற்கொண்டு தமிழீழ விடுதலை என பெயரிட்ட இயக்கங்கள் வரை துப்பாக்கி ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்து எமது இனத்தை அழித்ததே வரலாறு!

ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞர்களை விடுதலைப் போராட்டம் எனும் பெயரில் அணி திரட்டி அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றது தான் இந்த விடுதலை இயக்கங்கள் செய்த காரியமாகும்.

ஈழப் புரட்சி அமைப்பு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனப் பெயரிட்டு இயக்கங்களை உருவாக்கியவர்கள் எமது மக்களின் வளர்ச்சிக்காக செய்த நல்ல காரியங்கள் எதுவுமே இல்லை.

இந்த விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களுக்காவது குறைந்த பட்சம் எதாவது செய்து கொடுக்க இவர்களால் முடிந்ததா, இயக்க இலட்சியத்துக்காக உழைத்து மரணித்துப் போன போராளிகளின் குடும்பங்கள் நாளாந்த உணவுக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை இன்றும் உள்ளது, இயக்கத் தலைமையோ தங்களையும் தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டதுடன் வழங்களையும் சுருட்டிக் கொண்டதே வரலாறு, இதில் சற்று வித்தியாசமாக விடுதலைப் புலிகள் தாங்களும் அழிந்து தம்மைச் சார்ந்த சமூகத்தையும் அழித்துச் சென்றது.

பாரிஸில் மாநாடு நடத்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மக்களுக்காக இது வரை செய்த நல்ல காரியம் எதுவும் இல்லை, இயக்கச் சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து கொண்ட சுரேஸ் முதல் வரதர் வரை தங்களது சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டார்களே தவிர மக்களின் நலனுக்காக எதுவுமே செய்யவில்லை.

வடக்கு கிழக்கில் இருந்து இந்திய இராணுவம் பின்வாங்கிச் சென்ற போது அவர்களின் பின்னால் ஓடிய வரதராஜப்பெருமாள் வட இந்தியாவில் சொத்துக்களை வாங்கி மனைவி, பிள்ளைகளுடன் சுகபோகம் அனுபவித்தார், இவர் சார்ந்த இயக்கத்தின் இலட்சியத்துக்காகப் போராடிய போராளிகள் விடுதலைப் புலிகளால் துரோகிகளாக்கப்பட்டு தெருத் தெருவாகச் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தகனாக வாழ்ந்த வரதருக்கு இன்று எதற்காக மீண்டும் இயக்கப் புனரமைப்பு.

சந்தற்பவாத தலைமைத்துவம் நடாத்தும் நாடகங்களுக்கு முகம் கொடுக்காமலும், இன்னும் இன்னும் எமது இனத்தை அழிவு பாதைக்குக் கொண்டு செல்ல வரதராஜப்பெருமாள் போன்றோர் எடுக்கும் முயற்சிக்கு விலை போகாமலும் புலம் பெயர்ந்த சமூகம் இருப்பதே எஞ்சியுள்ள தமிழினத்தைப் பாதுக்காக்கச் சிறந்த வழியாகும்.

வியாழன், 14 அக்டோபர், 2010

சிலியின் மெய் சிலிப்பு!

சிலி நாட்டின் நிலக் கீழ் கனிமச் சுரங்கத்தில் 69 நாட்களாக சிக்கித் தவித்த 33 பேரை இலாவகமாக துளை குழாய் உறை மூலம் வெளியே கொண்டு வந்து உலகுக்கு மீள் அவதாரம் கொடுத்தது சிலி அரசாங்கம்.

2010.08.10 ஆம் நாள் 700 மீட்டருக்கும் ஆளமான சுரங்கத்தினுள் கனிமத் தொழிலாளர்கள் 33 பேர் அடைபட்டுக் கொண்டிருந்த போது அவர்களை வெளியே கொண்டு வர அந் நாட்டு அதிபர் செபஸ்டின் பினேரா அரும்பாடு பட்டார், சிறு சிறு துளைகள் மூலம் 17 ஆம் நாள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் ஆரோக்கிய தகவல் கிடைத்ததும் வெளியே கொண்டு வர தொடர் முயற்சியில் இறங்கினார் அதிபர் செபஸ்டின்.

2010.10.13 ஆம் திகதி சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, துளை குழாய் உறை மூலம் முதலாவதாக சுரங்கத் தொழிலாளர் ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே கொண்டு வரப்பட, நேடியாகவே ஸ்தலத்துக்கு வந்து வெளியே கொண்டு வரப்பட்ட தொழிலாளரைக் கட்டியணைத்து ஆரத்தழுவி தனது சந்தோசத்தை வெளிக்காட்டினார் அதிபர். சின்னஞ் சிறிய நாடான சிலி தனது நாட்டு குடி மக்களை கண்ணியமாக கவனித்து வருவது சிறப்பு மிக்கதாகும்.

இலங்கையைப் போன்ற நாட்டில் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பின் விடயம் வெளியே கசிவதற்கு முன்பாகவே உள்ளே சிக்கிய அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள், அல்லது அழிக்கப்பட்டிருப்பார்கள்.

2010.10.14 ஆம் திகதி சிலி நாட்டு நேரம் 20.15 மணி வரை 29 பேர் எந்தவித இடையூறுமின்றி வெளியே கொண்டு வரப்பட்டு உடல் ஆரோக்கியத்துக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். முப்பதாம் தொழிலாளி இரவு மணி 08.40 க்கு வெளியே கொண்டு வரப்பட்டார், வெளியே கொண்டு வரப்படும் நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பல்லாயிரம் மக்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி வருவதுடன், அதிபர் செபஸ்டிருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிலி நாட்டு அதிபர் செபஸ்டின் தனது குடிமக்கள் மீது வைத்திருக்கும் அன்பைப் போன்று இலங்கையிலும் ஏற்படுமா? தமிழ் மக்கள் மீது ஜனாதிபதி கருணை காட்டுவாரா!

2010.10.14 சர்வதேச நேரம் அதிகாலை 02.05 மணிக்கு உள்ளூர் நேரம் இரவு மணி 21.05 க்கு 31 வது தொழிலாளி வெளியே கொண்டு வரப்பட்டார். உள்ளூர் நேரம் 21.56 மணிக்கு இறுதியாக இருந்த 33 வது சுரங்கத் தொழிலாளியான லுஸ் உர்ஷாவும் வெளிக் கொணரப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.



















சனி, 2 அக்டோபர், 2010

இலங்கை அரச இலக்கிய விருதுகள்.

2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச இலக்கிய விருதுகள் மும்மொழிகளையும் சேர்ந்த 35 நூல்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் வைத்து 2010.09.30 ஆம் திகதி வழங்கப்பட்டன, இவ்விருதுகளை 11 தமிழ்மொழி நூல்களும், 18 சிங்கள மொழி நூல்களும், 06 ஆங்கில மொழி நூல்களும் பெற்றுக் கொள்ள நீண்ட காலமாகப் இலக்கியத் துறைக்கு பங்களிப்புச் செய்த கலாபூஷணம் ஏ. முஹம்மது சமீம், பேராசிரியர் டப்ளியு.எஸ். கருணாதிலக்க மற்றும் கலாநிதி லக்ஷ்மி டி சில்வா ஆகிய மூவருக்கும் “சாஹித்தியரத்ன” விருதுகள் வழங்கப்பட்டன.

2009 ஆம் ஆண்டு வெளியீடு செய்யப்பட்ட 1332 நூல்களில் மும்மொழிகளையும் சேர்ந்த 77 நூல்கள் அரச இலக்கிய விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டிருந்தும், 35 நூல்களே அரச இலக்கிய விருதுகளை பெற்றுக் கொள்ள தகுதி பெற்றன.

தமிழ் மொழியில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருதை ஒ.கே. குணநாதன் எழுதிய "குறும்புக்கார ஆமையார்", சிறந்த சிறுவர் மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை சரோஜினி அருணாசலம் எழுதிய "என்றும் உங்கள்", சிறந்த நாடக இலக்கியத்திற்கான விருதை கலையார்வன் எழுதிய "கூத்துக்கள் ஐந்து" போன்ற நூல்கள் பெற்றுக் கொண்டன.

மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை, மடுல்கிரியே விஜேரத்ன எழுதிய "தீச்சுடர்", திக்குவல்லை கமால் எழுதிய "தொடரும் உறவுகள்", கெக்கிராவ சுலைஹா எழுதிய "பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்", ஆய்வு இலக்கியத்திற்கான விருதை கலாநிதி எஸ். ஜெபநேசன் எழுதிய “இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்”, கவிதை இலக்கியத்திற்கான விருதை மு.பொ. எழுதிய "கவிதையில் துடிக்கும் காலம்" போன்ற நூல்களும் பெற்றுக்கொண்டன.

அறிவியல் இலக்கியத்திற்கான விருதை ச. அருளானந்தம் எழுதிய "அற்புதமான வானம்", சிறுகதை இலக்கியத்திற்கான விருதை சுதாராஜ் எழுதிய "மனைவி மகாத்மியம்", சிறந்த நாவல் இலக்கியத்திற்கான விருதை நீ.பி. அருளானந்தம் எழுதிய "துயரம் சுமப்பவர்கள்" போன்ற நூல்களும் பெற்றுக்கொண்டன.

விருதுக்குத் தகுதியான நூல்களைப் படைத்த ஆசான்களுக்கு களத்துமேட்டின் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----