ஸ்ரீலங்காவில் சிறுவர்களைக் கடத்தும் பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் படையணிக்காக மாணவர்களையும், பராயமடையாத சிறார்களையும் கடத்தி யுத்த தயாரிப்புகளில் ஈடுபடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பலமாக எதிரொலித்து வந்தது, அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்த கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் தரப்பினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பின் கட்டுமானப் பணியை வலுப்படுத்துவதற்காக படையணியை உருவாக்கும் நோக்கில் ஆட்கடத்தலில் குறிப்பாக சிறுவர்களை படைகளில் சேர்ப்பதில் முயன்று வந்தனர், ஆனால் சிறார்களைப் படையணிகளில் சேர்ப்பதனை முற்றாக எதிர்த்து வந்த ஐ.நா. வின் கோரிக்கையினால் சற்று தளர்வடைந்து வந்த இவ் ஆட்கடத்தல் விவகாரம் கிழக்கின் உதயத்தின் பின் விஸ்வரூபம் எடுத்து குழந்தைகளைக் கடத்தி கப்பம் கோரி கொலை செய்யும் அளவுக்கு விருத்தியடைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி புதன் கிழமை திருகோணமலை சென். மேரிஸ் பெண்கள் கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயிலும் பாலையூற்றைச் சேர்ந்த ஆறு வயதுப் பாலகி ஜூட் ரெஜி வர்ஷா பாடசாலையில் வைத்துக் கடத்தப்பட்டு 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கண்கள், வாய், கைகள் மற்றும் கால்களை பச்சை நிற பிளாஸ்டிக் ரேப்பினால் இறுகக் கட்டி கழுத்து நெரித்து கொலை செய்து உரப் பையினுள் திணித்து மூன்று நாட்களின் பின் திருமலையில் சன நடமாட்டமுள்ள சோனகத் தெருவின் வடிகாலில் போடப்பட்டிருந்த சம்பவம் திருகோணமலை மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இக் கொலைக்கு காரணமானவர்கள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் திரு பிள்ளையான் சந்திரகாந்தனை தலைமையாகக் கொண்டு இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களேயென பொலிசார் தரப்பு செய்திகள் கூறின.
பொலிஸாரினால் கைதான பிரதான சந்தேக நபர் திருகோணமலையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒப்ரின் மேர்வின் நிரோஷன் பொலிஸாரைத் தாக்கி விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த ஆட்கடத்தல் மற்றும் கொலை தொடர்பான 2 ஆவது சந்தேக நபரான திருகோணமலை, கந்தசாமி கோவில் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய வரதராஜன் ஜனார்த்தனன் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களைக் காண்பிப்பதாக பொலிஸாரைக் அழைத்துச் சென்று, அங்கு புத்தகத்தினுள் மறைத்து வைத்திருந்த சயனைட்டை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நிலையிலேயே 3 ஆம் மற்றும் 4 ஆம் சந்தேக நபர்களான சிவானந்தன் நிஷாந்தன் மற்றும் டானி ரெஜினோல்ட் இருவரும் கன்னியா சாரதாபுரம் மகாவூற்றுக் காட்டுப் பகுதியில் வைத்து துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது இவ்விதம் இருக்க மட்டக்களப்பு, கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோயில் வீதியில் வசிக்கும் பாலகி, 8 வயதுடைய சதீஸ்குமார் தினூஷிகா ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பாடசாலையில் வைத்துக் கடத்தப்பட்டு, 3 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு இறுதியில் கொல்லப்பட்டு மே மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை காலை கல்வியங்காடு பாரதி வீதியிலுள்ள சேமக்காலைக்கருகில் உள்ள பாழடைந்த கிணறொன்றினுள் காணப்பட்டார்.
இம் மாணவியின் கொலை தொடர்பாக ஜுலியன், மயூரன், தனூசன் ஆகிய மூவரும் ஏறாவூர்ப் பகுதியில் வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது தினூஷிகாவின் புத்தகப் பையைக் காண்பிப்பதாக மட்டக்களப்பு, முஸ்லிம் கொலனி, முஸ்லிம் மையவாடிக்கு பொலிஸாரை அழைத்து வந்த சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் தாக்குதல் நடத்த முற்பட்ட போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் அம் மூவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.
இந்த இரு சிறுமிகளினதும் ஆட்கடத்தல் மற்றும் கொலையை எடுத்து நோக்கும் போது பின்னணியில் பலர் இயங்குவது புலனாகின்றது, பின்புலத்தில் இருப்பவர்கள் அடையாளம் காணப்படாமல் இருப்பதற்காகவே விசாரணையின் ஆரம்பக்கட்டதில் வைத்தே சந்தேக நபர்கள் அழிக்கப்படுகின்றார்கள்.
விசாரணைக்கு உட்படும் கொலைக் குற்ற சந்தேக நபர்களை வீதிகளில் கொண்டு செல்லும் போது கைகளுக்கு விலங்கிட்டு ஓட முடியாமல் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதே பொலிஸாரின் மரபு, ஆனால் திருகோணமலையில் வர்ஷாவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட கொலைக் குற்ற சந்தேக நபர்களை பொலிஸார் விசாரணையின் நிமித்தம் கொண்டு செல்லும் போது அவர்களில் ஒருவர் பொலிஸாரைத் தாக்கிவிட்டு ஓடும் போது சுட்டுக் கொல்லப்பட்டதும், மற்றவரில் ஒருவர் மறைத்து வைத்திருந்த சயனைட்டினை உட்கொண்டு தற்கொலை செய்ததும், மற்றைய இருவரும் மறைந்து நின்று ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட சம்பவமும் அறியப்பட்டதே!
அதே போலவே மட்டக்களப்பில் கடத்திக் கொல்லப்பட்ட தினூஷிகாவின் கொலையுடன் தொடர்புடைய கொலைக் குற்ற சந்தேக நபர்களை அழைத்துச் சென்ற போது அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் தாக்குதல் செய்ய முற்பட்ட போது பொலிஸார் நடத்திய தாக்குதலில் அம் மூன்று சந்தேக நபர்களும் கொல்லப்பட்டனர். அப்படியானால் ஏன் பொலிஸார் அவர்களுக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லவில்லை.
இரு சம்பவங்களும் ஒரே வடிவத்தில் செய்யப்பட்டுள்ளதால் கொலைகாரர்கள் ஒத்த இலக்குடையவர்கள், பொலிஸாருக்கும் இவ் ஆயுதம் தரித்த கும்பலுக்கும் இடையில் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது அத்துடன் நீதி விசாரணை எனும் இச் சம்பிரதாயத்தை மூடி விடுவதற்காகவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட முன்னதாகவே கொல்லப்பட்டுள்ளார்கள்.
எது எப்படி இருப்பினும் கிழக்கின் உதயமென நாமமிட்டு ஆயுததாரிகளின் கைகளில் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்ததே மானிட தர்மம் மரித்ததற்குக் காரணமாகும், தொடரும் குழந்தைகளைக் கடத்தி கப்பம் கோரும் நாகரீகமற்ற கொடும் செயலால் திக்குமுக்காடிப் போயுள்ளது கிழக்கிலங்கை மாணவர் சமூகம்.
ஆட் கடத்தல் மற்றும் கொலைகளால் கிழக்கிலங்கையின் பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்புற்றதுடன், பாடசாலைக்கு மாணவர்களை அனுப்பப் பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர், அரசாங்கம் இதில் கூடிய கவனம் செலுத்தி தொடரும் இப் படுகொலைக் கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
துப்பாக்கிக் கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்க வேண்டும். சட்ட விரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். சொத்து பறிமுதல் போன்ற தண்டனை உட்பட. விளையாட்டு துப்பாக்கி விற்பனை கூட தடை செய்யப்பட்டு சந்தையில் உள்ளவை வாபஸ் பெறப்பட வேண்டும்.
பதிலளிநீக்குஎந்த உயிரையும் கொல்லும் உரிமை எவருக்கும் இல்லை - மனிதத்தின் பெயரால் எனது தனிப்பட்ட கருத்து
நன்றி த.முகுந்தன்,
பதிலளிநீக்குஇலங்கையில் இன்று ஆயுதக் கலாசாரம் வேரூன்றி விட்டது என்றால் அதில் மிகையாகாது.
இது பரவலடையா காரணமாகத் திகழ்ந்தவர்கள் ஈழ விடுதலைப் போராட்ட அமைப்பினர்கள் அனைவருமே!
துப்பாக்கிக் கலாசாரம் விருத்தியடைந்ததால் மத, இன பேதமின்றி அனேகரிடம் சரளமாக உபயோகப் பொருளாகி விட்டது துப்பாக்கி.
இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்த பின்னர் ஈழ விடுதலை அமைப்புகளிடம் துப்பாக்கிகள் அளவுக்கதிகமாக இருந்தமையாலும், கண்ணில் கண்டவர்களெல்லோரும் ஆயுதப் பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டதாலும் இறுதியில் பிரேமா-பிரபா ஒப்பந்தத்திற்கேற்ப இந்தியப் படை வெளியேற்றத்துடன் ஆரம்பமாகிய இரகசிய ஆயுத விற்பனை பல முகவர்களை உருவாக்கி பல்லினத்தவர்கள் கரங்களையும் சென்றடைய வைத்தது.
இதனால்த் தான் இலங்கையில் துப்பாக்கிக் குண்டுக்குப் பயப்படாத மனித சமூகம் உருவாகி உள்ளது என எண்ணத் தோன்றுகின்றது.
முகுந்தன் நீங்கள் சொல்வது போன்று துப்பாக்கிக் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும், அதற்காக கடுமையான தண்டனை அரசினால் கொடுக்கப்பட வேண்டும், இக் கூற்று ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியதே.
ஆனால் வேலியே பயிரை மேய்வது போல் நடைபெறும் சம்பவங்களுக்கு யார் காவல் போடுவது ?