நேற்று இரவு 10 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் இரு விமானங்கள் கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீலங்கா வான் படைத்தளம் போன்றனவற்றை இலக்காக வைத்து தாக்குதல் நடத்த முனைந்தன, ஆனால் இதன் விளைவு எப்படியானது என்பதனை ஊடகங்கள் பக்கச் சார்பாக தங்கள் நிலைக்கேற்ப செய்திகளைத் தந்துள்ளன.
அதிர்வு இணையத்தளம் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் இரு விமானங்களும் தளம் திரும்பி விட்டதாக செய்தி தந்துள்ளது, ஆனால் விமானங்கள் இரண்டும் ஸ்ரீலங்கா விமானப் படையினரின் தானியங்கி விமான எதிர்ப்பு பீரங்கிப் பொறிமுறையால் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதாக ரூபவாஹினி அரச தொலைக்காட்சியில் படங்களுடன் செய்தி காண்பிக்கப்படுகின்றது.
கொம்பனித்தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையகத்தினுள் தாக்குதல் நடத்த வந்த வானூர்தி இலக்குத் தவறி அருகில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டடத்தின் மீது குண்டு வீசிய போது அவ்விடத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மற்றய வானூர்தி கட்டுநாயக்கா விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் சுடப்பட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளது, இந்த விமானத்தின் பாகங்களுடன் விமானத்தை ஓட்டிவந்த வான்புலிகளின் வானோடி விமான இருக்கையுடன் இறந்த நிலையில் காணப்பட்டதுடன் விமானத்தின் உட்பகுதியில் வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் மற்றும் இரு சயனைற் குப்பிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரச செய்திகள் கூறுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் 47 பேர் காயமடைந்திருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைச் செய்திகள் கூறுகின்றன.
இத் தாக்குதல்களை நடாத்திய வான்புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்டினன் கேணல் சிரித்திரன் ஆகியோர்களைக் கௌரவித்து விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே.பிரபாகரன் "நீலப்புலிகள்" எனும் விருதினை இவ்விரு மாவீரர்களுக்கும் வழங்கியுள்ளார் என விடுதலைப் புலிகளின் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.