
வன்னி யுத்தத்தில் தப்பித்து வவுனியா நலன்புரி கிராமங்களில் தங்கியிருந்த மக்களின் ஒரு தொகுதியினரான 12,000 குடும்பங்களைச் சேர்ந்த 41,685 பேர் இன்று 22 ஆம் திகதி மீள்குடியேற்றம் செய்யப்படவிருக்கும் செய்தி ஊடகங்களில் முன்னுரிமை பெற்றுள்ளது.
2583 குடும்பங்களைச் சேர்ந்த 8643 பேர் வவுனியாவிலும், 2644 குடும்பங்களைச் சேர்ந்த 6631 பேர் மன்னாரிலும், 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16,391 பேர் முல்லைத்தீவிலும், 2453 குடும்பங்களைச் சேர்ந்த 10,017 பேர் கிளிநொச்சியிலும் மீள்குடியேற்றம் பெறுகின்றனர்.
180 நாட்களில் துரித மீள்குடியேற்றம் நடக்குமென மே மாதத்தில் உறுதியளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலம் கடந்த நிலையில் நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களை கட்டங்கட்டமாக மீள்குடியேற்றம் செய்ய அதிகாரிகளைப் பணித்த விடயமானது ஆரோக்கியமானதாகவே கருதப்படுகின்றது, இந்நிலையில் அக்டோபர் மாதத்திலும் அதனைத் தொடர்ந்து வரும் காலங்களான இவ் வருட இறுதிக்குள் சகல மக்களையும் மீள்குடியேற்றம் செய்வாரென அரசியல்வாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் கந்தளாய் நெடும் பாலத்தினைத் ஜனாதிபதி ராஜபக்ஷ திறந்து வைத்த போது கூறிய "சொல்வதைச் செய்வேன், செய்வதைச் சொல்வேன்" எனும் வாக்கியங்கள் நிஜமாக வேண்டுமெனில் நிர்க்கதியாக நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்கள் அனைவரும் அவரவர் சொந்த நிலத்தில் மீளக் குடியேற்றம் பெற வேண்டும்.
செய்வாரா மஹிந்த!, பொறுத்திருந்து பார்ப்போம்!
