சனி, 31 மார்ச், 2007
மழை விட்டும் தூவாணம் விட வில்லை
கடந்த 26 ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வான்படையால் ஸ்ரீலங்கா கட்டுநாயக்கா விமான படைத்தளம் மீது நடாத்திய தாக்குதலானது பல தரப்பட்ட வர்க்கத்தினதும் வாதப் பிரதிவாதங்களில் இருந்து இன்னும் மீளாமல் இருப்பது மழை விட்டும் தூவாணம் விட வில்லை என்பதை ஞாபகமூட்டுகின்றது.
விமானப்படைத் தளத்தில் ராடர் கழற்றியதை புலிகளுக்கு அறிவித்தது யார்?
இலங்கையில் பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் குற்றம் சுமத்தப்படுகிறது. அண்மையில் ஜெனீவா நகரில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான மகாநாட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் என்ற விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை சார்பில் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் படாதபாடுபட நேர்ந்தது.
இலங்கையில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் மிகைப்படுத்திக் கூறப்படும் தகவல்களா? அல்லது உண்மையான நிலைமை இதுதானா? இவற்றை மிகைப்படுத்திக் கூறப்படும் தகவல்கள் எனவும் அரசாங்கத்திற்கு அசௌகரியங்களை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் சதி வேலைகள் எனவும் அரசு தெரிவிக்கிறது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டிலுள்ள மனித உரிமை அமைப்புகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. அதேபோல சர்வதேச அமைப்புகளும் வெளிநாட்டுத் தூதுவர்களும் நிலவும் நிலைமை குறித்து விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளாக் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை மையமாகக் கொண்டுள்ள Human Rights Watch அமைப்பும் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டுள்ளது. அதேபோலவே, ஜெனீவாவிலுள்ள மனித உரிமை ஆணைக்குழு, ஐ.நா. அமைப்பு, ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி மற்றும் இங்கிலாந்து, சுவிற்சர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்ட சில அமைப்புகளும் நாடுகளுமாகும்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுதல் மற்றும் ஆட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். அதேபோலவே கௌரவமான ஜனநாயக சமூகத்தில் மனித உரிமைகள் என்பது பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய விடயமாகும். மறுபுறத்தில் இலங்கையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இது மிக முக்கியமான- பெறுமதி மிக்கதான கோரிக்கை என்பதை மறக்கக்கூடாது.
நாட்டின் பல்வேறு இடங்களில் அண்மையில் தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்படுகின்றனர் கொல்லப்படுகின்றனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வவுனியாவிலும் நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலும் இவை சாதாரண நிகழ்வுகளாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு கடத்திச் செல்லப்படுபவர்களின் சடலங்கள் இலகுவாகக் கண்டறிய முடியாத இடங்களில் காணப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போனவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஏதோ விதத்தில் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளும் தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று கொல்வதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இந்த ஆட்கடத்தல்கள் தொடர்பாக முற்றிலுமாக அரசு மீது குற்றஞ் சுமத்துவது எவ்வளவு தூரத்திற்குப் பொருத்தமானது என்பதை ஆராய்ந்து அறிதல் வேண்டும். நிலைமை அவ்வாறு இருப்பின், அதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். நாட்டில் யுத்தம் இடம்பெற்று வரும் வேளையில் ஆயுதம் தாங்கிய இளைஞர் குழுக்களும் ஈ.பி.டி.பி. போன்ற அமைப்புகளும் நாட்டில் செயற்பட்டு வருகின்றன. அரசுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதற்காகக் குறிப்பிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இந்த ஆட்கடத்தல்களை மேற்கொள்கின்றன என அரசு தெரிவிக்கிறது. அரசின் இந்த வாதத்தின்படி அரச இராணுவம், கருணா குழு, ஈ.பி.டி.பி. அமைப்பு மற்றும் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு சில ஆயுதக் குழுக்களும் செயற்படுவதாகத் தோன்றுகிறது. அவ்வாறான குழுக்கள் செயற்படுவது உண்மையாயின் அது மிகப் பயங்கரமான நிலைவரமாகும்.
ஈ.பி.டி.பி. மற்றும் கருணா தரப்பினர் ஜனநாயக நீரோட்டத்தில் கலக்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றனர். அரசுக்கு அசௌகரியங்களை உருவாக்கும் விதத்தில் கொலைகளை மேற்கொண்டு தங்கள் எதிர்கால செயற்பாடுகளை பாழடிக்க இந்த அமைப்புகள் முயற்சிக்கும் எனச் சிந்திக்க முடியாது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள் எனக் கூறப்படும் "சிங்களப்புலிகள்" சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் வழங்கிய தகவல்களையடுத்து வெடிபொருட்கள் கூடக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிங்களப் புலிகளைப் போலவே கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்குத் தகவல்களை வழங்கிய பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கில் யுத்தம் இடம்பெற்று வரும் வேளையில் விடுதலைப் புலிகளுக்குத் தகவல்களை வழங்கினர் எனக் கூறப்படும் தென்பகுதியைச் சேர்ந்த சிலரையும் விலைபோன இராணுவ அதிகாரிகளையும் கைது செய்வதில் அரசு தயக்கம் காட்டவில்லை. இவ்வாறான கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கொழும்பில் பல இடங்களில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு வருகின்றனர். சிங்களப் புலிகளைக் கைது செய்த அரசு அவர்களை நாட்டுமக்களின் முன்பும் ஊடகங்களின் முன்பும் நிறுத்த நடவடிக்கை எடுத்தது. கைது செய்யப்பட்ட நபர்கள் கிளிகளைப் போல் ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கியதைக் காண முடிந்தது. இவையனைத்தும் நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தெரியவந்த சம்பவங்களாகும்.
கொழும்பில் இடம்பெற்றுவரும் கைதுகள் சட்டப்படி மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எவரையாவது கைது செய்வதானால் நாட்டின் சட்டத்தின்படி, அதற்கோர் வழிமுறை உள்ளது. அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸாருக்குத் தெரிவித்தே அந்தக் கைதை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அண்மையில் இடம்பெற்ற கைதுகள் ஆட்கடத்தல்கள் போல் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம் வழமையான கைதுகளின் போது அனுசரிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த சில கைதுகளின் போது அனுசரிக்கப்படவில்லை.
இது தொடர்பாக பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் விசாரித்தபோது அவர்கள் பின்வருமாறு தெரிவித்தனர்.
"விடுதலைப் புலிகளின் தொடர்பு வலைப்பின்னல் பாதுகாப்புத் துறைக்குள்ளும் கசிந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் கைதுகளை மேற்கொள்ளும் போது வழமையான விதிமுறைகளைக் கையாண்டால் குறித்த அந்த நபர் கைதிலிருந்தும் தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாட்டில் யுத்தம் இடம்பெற்று வரும் வேளையில் உலகில் எந்தவொரு நாட்டிலும் நீங்கள் கூறுவது போல் ஜனநாயகம் இருக்கவில்லை என்பதே பாதுகாப்புத் துறையினரின் கருத்தாக உள்ளது" எனத் தெரிவித்தனர்.
நாட்டில் கிளர்ச்சி இடம்பெற்ற 1988/89 களில் தமக்கு எதிரான அரசியல் கருத்துகளைக் கொண்டவர்கள் எவ்வாறு கொலை செய்யப்பட்டனர் என்பதை நாங்கள் கண்டுள்ளோம். உத்தியோகப்பற்றற்ற ஆயுதக் குழுக்கள் செயற்படும் போது அவர்களது குறிக்கோள்கள் ஜனநாயக வழிமுறையில் அமையா.
முத்துராஜவெலவில் 5 சடலங்கள் காணப்பட்டதையடுத்து மனித உரிமைகள் என்ற தலைப்பு புத்துயிர் பெற்றுள்ளதுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொலிஸாரை அழைத்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு பணித்தார். நாட்டில் மனித உரிமைகள் பாரதூரமான விதத்தில் மீறப்பட்ட காலகட்டத்தில் அது குறித்துத் தெரிவிக்க அன்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குத் தான் சென்ற போது எவ்வாறாயினும் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது எனத் தான் தெரிவித்ததாக ஜனாதிபதி கூறினார்.
இலங்கையில் மனித உரிமைகள் என்ற தலைப்பு அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மங்கள மற்றும் ஷ்ரீபதி ஆகியோருக்கு முக்கிய அரசியல் தலைப்பாக மாறியுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன எனத் தெரிவித்து இலங்கைக்கு ஐ.நா. அமைதிப் படையைக் கொண்டு வருவதே நோர்வே அரசின் எதிர்பார்ப்பு என ஜே.வி.பி. தெரிவிக்கிறது. " எமது நாட்டின் மனித உரிமைகளை நாங்கள் பார்த்துக் கொள்ளுவோம் (கையாளுவோம்)" என்பதே ஜே.வி.பி. உலகுக்கு விடுக்கும் தகவலாகும்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற முறைப்பாடு தொடர்பாக உடனடியாக செயலில் இறங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மனித உரிமைகள் பற்றிக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். அதேபோல சர்வதேசம் கவனத்தைச் செலுத்தக் கூடிய விதத்தில் மனித உரிமைக் குழுவையும் நியமித்தார். இவற்றின் ஊடாக வெளிநாடுகள் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை தொடர்பான நிகழ்வுகள் குறித்துக் கண்டறியும் வழியை ஜனாதிபதி உருவாக்கினார்.
ஐ.நா.வின் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் பிராந்தியப் பணிமனையை இலங்கையில் அமைப்பது தொடர்பாக ஐ.நா. தெரிவித்த கருத்தை இலங்கை அரசு அண்மையில் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது. நாட்டில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக அரசும் ஜனாதிபதியும் நடவடிக்கை எடுத்துவரும் வேளையில் " எங்கள் மனித உரிமையை நாங்களே பார்த்துக் கொள்ளுவோம்" என ஜே.வி.பி. தெரிவிப்பதானது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையாகும்.
நாட்டில் அரசியல் காரணங்களுக்காக ஆட்கள் கடத்தப்பட்டனர் என இதுவரை தகவல் எவையும் கிடைக்கவில்லை. அதுபோலவே தனிப்பட்ட காரணங்களுக்காக அரச படைகளின் தலையீட்டால் எவரும் காணாமல் போனதாகவும் குற்றஞ்சாட்டப்படவில்லை. தமிழ் இளைஞர்களை அரச படைகள் கடத்திக் கொன்றது தொடர்பாக சட்டபூர்வமாக நிரூபிக்கும் விதத்தில் எதுவித சம்பவமும் குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் அரச படைகள் இவ்வாறான கொலைகளை மேற்கொள்கின்றன என்ற குற்றச்சாட்டில் நூற்றுக்கு நூறு வீதம் நியாயம் இருப்பதாகச் சிந்திக்க முடியாது.
இருப்பினும், இந்த நிலைமைகளைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பிலிருந்து பாதுகாப்புத் துறையினர் தப்பிக்க முடியாது. நாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாரிய பிரச்சினைகள் இல்லையென்ற நிலையில் அவை மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன என்றால் அது நல்ல விடயமாகாது.
இருப்பினும், அண்மையில் ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பாக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலைமை தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதேபோல், அரச சார்பற்ற அமைப்புகள் தேவைக்கேற்ப யுத்தத்திற்கு முகங்கொடுக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
லக்பிம பத்திரிகையில் இருந்து தமிழாக்கம் - நேமிக்கா
நன்றி தினக்குரல் 3132007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.