ஸ்ரீலங்காவின் முதுகெலும்பாக திகழும் கட்டுநாயக்கா விமான படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இரண்டாவது தடவையாகவும் அல்லது தமீழீழ வான்படையின் கன்னித் தாக்குதல் சம்பவமே உலக அரங்கிலேயே உரத்துப் பேசப்பட்ட தற்காலச் செய்தியாகும்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கொடூர முகத்தைக் கண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் பயந்து விட்டார்கள் என கற்பனை பண்ணிய ஸ்ரீலங்கா சனாதிபதி மகிந்த ராசபக்சவும் அவரது அரசாங்கமும் பங்குனித் திங்கள் 26 ம் நாள் அதிகாலை என்ன செய்வதெனத் தெரியாமல் அதிர்ச்சியடைந்த செய்தி சகல ஊடகங்களிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தன.
காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வரும் தமிழினம் விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் செய்தி அனைவரும் அறிந்ததே, இலங்கைத் தீவில் தமிழர்களுக்குப் பிரச்சனை இல்லையென கூறிக் கொண்டிருந்த சிங்கள ஆதிக்கவாதிகள் ஒருபடி கீழே இறங்கி தமிழர்களுக்கும் இந் நாட்டில் பிரசைகளே, இவர்களுக்கும் சகல உரிமைகளும் உண்டென ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், வாய்ப் பேச்சில் மட்டுமே கூறிக்கொண்டு மனதில் வீரவாள் ஏந்திய சிங்கங்களாய் உருவெடுத்திருப்பது சர்வதேசத்துக்கும் தெரிந்த விடயம்.
இந்த ஆண்டு பிறந்ததில் இருந்து தமிழர் பிரதேசங்களை சுத்திகரிப்புச் செய்ய வேண்டுமென திடசங்கற்பம் பூண்ட ஸ்ரீலங்கா அதிபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக செல் வீச்சுக்களை நடாத்துமாறு முப்படைத் தளபதி எனும் காரணத்தினால் உத்தரவிட்டிருந்தார், இதனை ஏற்றுக் கொண்ட படைத் தளபதிகள் ஆட்லறி மோட்டார் குண்டு வீச்சு, பல்குழல் ஆட்லறி குண்டு வீச்சு, விமானத்தில் இருந்து துப்பாக்கிப் பிரயோகமும் குண்டுத் தாக்குதலும் என்றெல்லாம் தமிழர் பிரதேசத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றனர், சுடுகாடாகி மக்கள் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள். திருகோணமலைப் பிரதேசத்தின் மாவிலாறு பகுதியில் உருவான தமிழர் துரத்தியடிப்புப் படலம் வாகரை, கஞ்சிகுடியாறு, தொப்பிகலை, படுவான்கரை, பூநகரி இப்போது கொக்கட்டிச்சோலை என்று விரிவடைந்து கொண்டிருக்கின்றது.
எப்படியாவது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்ற வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா படை தரப்பு முன்னேறி வருகின்றது. ஸ்ரீலங்கா ஒரே கொடியின் கீழ் ஆட்சிமை செய்யப்பட வேண்டுமென்பது அவர்களின் வாதம், இவர்களை எதித்து போர் தொடுத்துக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளோ எம்மை நாம் தான் ஆள வேண்டும், அதற்காக எதனையும் இழக்கத் தயார் எனக் கூறுகின்றனர்.
கெரில்லா தாக்குதல் எனப்படும் கரந்தடிப் படை நடவடிக்கையில் சிறப்பாக விழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் பரிணாம வளர்ச்சியடைந்து மரபு வழி போராட்டமாக தமது போராட்ட தந்திரங்களை மாற்றியதோடு தங்களுக்கென கடற்படையையும் செப்பனிட்டனர், அதன் தற்போதைய கடைக்கூற்றுப் பிரசவமாக தமிழீழ விமானப் படை உலகின் கண்களுக்கு விருந்தாக இன்று பேசப்படுகின்றது.
ஸ்ரீலங்கா அரசைப் பொறுத்தவரை புலிகள் இயக்க வளர்ச்சி வேதனை தருவதாகவே இருக்கின்றது, புலிகளை ஒடுக்க தன்னாலான முயற்சிகளையும் செய்து தோல்வியுற்ற நிலையில் இருக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் திடீரென விமானத்தினால் திட்டமிட்டு தாக்குதல் நடாத்திய விடயம் அரசை கிலி கொள்ள வைத்து விட்டது.
தலைநகர் கொழும்பும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் பாதுகாப்புப் பிரதேசம் எனக் குறிப்பிடப்பட்டு முழத்துக்கொரு இராணுவச் சாவடி அமைத்து, இத் தெருவால் வரும் தமிழர்களை அங்குலம் அங்குலமாகப் பரிசோதித்து வெடிமருந்து ஏதுமில்லையென உறுதி செய்யப்பட்ட பின் போக அனுமதிக்கின்றனர், அதிலும் சந்தேகப்படும்படி தெரிவோர் விசாரணைக்கென சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர், சிலர் எங்கு உள்ளனர், எங்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்றே தெரியாமல் இருக்கின்றது. இப்படியான மர்மமாக முடிச்சுகளைப் போட்டுக் கொண்டிருக்கும் அரசுக்கும் படையினருக்கும் அதிர்ச்சி தரும் சம்பவம் தான் கடந்த 26ம் திகதி அதிகாலை இடம் பெற்ற கட்டுநாயக்கா விமானப் படைத் தளம் மீதான தாக்குதல்.
இந்த நிலையில் படையினரின் கண்களுக்கு மண்ணைத் தூவி விட்டு வன்னியில் இருந்து கொழும்புக்கு அனுராதபுரம் வழியாக ஆகாய மார்க்கமாக வந்து நீர்கொழும்பில் அமைந்துள்ள விமானப்படை முகாமுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடாத்தினார்கள் என்று கூறும் சம்பவமானது அரசாங்கத்தை வெட்கித் தலை குனிய வைத்து விட்டது. விமானம் என்ன சட்டைப் பைக்குள் கொண்டு செல்ல சிறிய பொருளா? மூடி மறைத்து விட முடியாத சம்பமானதால் அரசாங்கம் வெளிப்படையாகவே புலிகளின் வான்படைத் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
1998ம் ஆண்டு கார்த்திகையில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துயில் கொள்ளும் மாவீரர்களுக்கு விமானத்தின் மூலம் மலர் தூவப்பட்ட செய்தி அறிந்த கணத்தில் இருந்து வான்பாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்க ஸ்ரீலங்கா அரசு முற்பட்டது, அன்றிலிருந்தே புலிகளின் விமானம்பற்றி பரவலாகப் பேசப்பட்டது.
சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க பதவி வகித்த காலத்தில் அலரிமாளிகையிலும், பாராளுமன்றத்திலும் இன்னும் முக்கிய இடங்களிலும் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் ரேடார் கருவிகளையும் வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்து பொருத்தினார்.
இத்தனை பாதுகாப்புகளுக்கும் மத்தியில் விமானத்தில் வந்து இலக்கின் மீது சிறப்பாக தாக்குதல் நடாத்தி விட்டு தளம் திரும்புவதென்றால் சாதாரண விடையமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் இதில் சிறப்பாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவர்களின் திட்டமிடலினால் இலக்கு சிறப்பாக கணிக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றது, இதனால் அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
புலிகளின் சிறப்பான தாக்குதல்கள் அனைத்தும் படையினரின் பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் பலவீனமான ஓட்டைகளைப் பார்த்து தெளிவாக செப்பனிடப்பட்டவையே ஆகும். அதேபோன்று தான் இத்தாக்குதலும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது, ஸ்ரீலங்கா அரசினால் கொள்வனவு செய்யப்பட்ட ரேடார் கருவிகள் அனைத்தும் இரவில் பார்வைத் திறனற்றவை, பகலில் தான் அவற்றின் செயற்பாடு இருக்கும், இதை தெளிவாக புரிந்து கொண்ட புலிகள் தருணம் வரும் வரை காத்து இருந்தனர் அது தான் சர்வதேச கிரிகெட் போட்டி, சிங்களவர்களுக்கு கிரிகெட் என்றால் உண(ர்)வையே மறந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள், இதற்கு இராணுவத்தினரோ விமானப்படையினரோ விதி விலக்கல்ல, துப்பாக்கி கையில் இருந்தாலும் கூட கீழே வைத்து விட்டு கிரிகெட் ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்து ஓட்ட எண்ணிக்கையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பர். இந்தச் சந்தற்பத்தை தருணம் வரும் வரை காத்திருந்த புலிகள் இலகுவாக இலக்கை தகர்த்தனர், கட்டுநாயக்கா விமானப்படை நிலையத்தில் தரித்து நின்ற போர் விமானங்களில் நாற்பது சதவீதத்துக்கு அதிகமானவை சேதமாகின என்பது தற்போதைய உத்தேச மதிப்பீடாகும், தமிழர் தாயகப் பரப்பில் வான் தாக்குதலை நடாத்திய போர் விமானங்களே இவையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படையும் விமானத் தாக்குதலும் அண்டை நாடுகளுக்கு பேராபத்து கொண்டதென்று ஸ்ரீலங்கா சனாதிபதி மகிந்த ராசபக்ச கூறி சர்வதேசத்தின் உதவியைப் பெறுவற்கு முயற்சி செய்து வருவது கூர்ந்து நோக்கத்தக்கது.
இந்த தாக்குதலின் மூலம் புலிகளுக்கு சிறப்பான விளம்பரம் கிடைத்துள்ளதென்றால் அதில் மிகையில்லை. இருப்பினும் புலிகள் இந்த இலக்கை வேறொரு இடத்துக்குத் திருப்பியிருந்தால் அதிகப்படியான படையினரை அழித்து போர் விமானங்களையும் தகர்த்திருக்கலாம், அவர்கள் ஏனோ அந்த இலக்கை தெரிவு செய்யாமல் விட்டு விட்டனர், வன்னியின் இருந்து கடற்பரப்பின் வானவெளியூடாக நீர்கொழும்பு வருவது இலகுவானது என புலிகள் கணிப்பிட்டு இருக்கலாம், அத்துடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருக்கும் ரேடார் கருவி பழுதடைந்த தகவலும் புலிகளுக்கு இலக்கை தெரிவு செய்ய உதவியிருக்கலாம். இங்கு இருக்கும் ரேடார் கருவி மூன்று கிலோமீற்றர் தூரத்தில் வரும் விமானங்களைத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டக் கூடியது.
இத் தாக்குதலைச் சிறப்பாக நடாத்தி விட்டோம், விமானம் மீண்டும் தளம் திரும்பி விட்டது என்றெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் வீர வசனம் பேசினாலும், இச்சம்பவத்தின் எதிரொலி எப்படி இருக்கும் என்பதனை தீர்மானிக்க மறந்து விட்டனர், மறு நிமிடமே தமிழர் தாயகப் பரப்பில் ஆட்லறி, பல்குழல் செல் வீச்சுக்களும் மற்றும் விமானத் தாக்குதல்களும் எம்மக்களை தொல்லைப்படுத்தின, உயிராபத்துக்களை ஏற்படுத்தின, உடமைகளை அழித்தன. இதற்கு விடுதலைப் புலிகளின் பின்னோக்கிய பார்வை பயனற்றுப் போனது. ஸ்ரீலங்கா அரசாங்கமும், எதிர்க்கட்சியும் மாறிமாறி இத்தாக்குதலின் பின்னணி எப்படியானது என்பது பற்றி ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொண்டு வருகின்றனர்.
உலகில் தமிழருக்கென விமானப் படை உருவாகி விட்டது, ஈழம் வெகுவிரைவில் என்றெல்லாம் சர்வதேசத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு சிலர் பேசிக் கொள்வதனையும் அறியக் கூடியதாக உள்ளது, இருப்பினும் மாற்றுத் தரப்பினரால் சில மாற்றுச் செய்திகளும் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன. விமானத் தாக்குதல் எதுவும் விடுதலைப் புலிகளால் விமானப் படைத்தளத்தில் நடாத்தப்படவில்லையென்றும் உள்ளே ஏற்பட்ட வெடித் தாக்குதல் என்றும், சந்தர்ப்பம் பார்த்து புலிகள் காய் நகத்தி தங்களின் விளம்பரத்தைச் செய்து விட்டார்களெனவும், இதற்கு அவசர அவசரமாக வெட்டி ஒட்டப்பட்ட படங்கள் சாட்சி என்றெல்லாம் காரணம் கூறுகின்றனர்.
ஒரு படத்தில் தமிழீழ விமானப்படையினர் இரண்டு வரிசையான நிற்க நடுவில் பிரபாகரன் நிற்கும் படம் ஒட்டப்பட்ட படமென்றும் அவரின் கழுத்துக்கு பின்புறத்தில் விமானப்படை சீருடையின் கழுத்துப் பட்டி தெரிவதாகவும், வரிசையாக அமர்ந்திருக்கும் மற்றைய படத்தில் ஒருவர் வெட்டி எடுக்கப்பட்டு அவ்விடத்தில் பிரபாகரனின் படத்தை தத்துரூபமாக ஒட்டி இருப்பதாகவும், ஆனால் இதில் ஒருவரின் கைக்கு மேல் பிரபாகரன் அமர்ந்திருப்பது போன்று தெரிவதாகவும் கூறுகின்றனர்.
எது எப்படி இருப்பினும் இராணுவ இலக்கு ஒன்று புலிகளினால் தகர்க்கப்பட்டுள்ளது என்பது மாத்திரம் உண்மை. காலப் போக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆகாய மார்க்கமாக அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக அறிய முடிகின்றது. விடுதலைப் புலிகள் ஆகாய மார்க்கமாக தாக்குதல் நடாத்துகின்றார்களோ என்னவோ ஆனால் ஸ்ரீலங்கா படை சமவலுவிழந்து நிற்கதியாக திக்கற்று நிற்கின்றது என்பது தான் உண்மை. எந்த நேரத்தில் எவ்விடத்தில் எங்கிருந்து புலிகள் தாக்குதல் நடத்த வருவார்கள் என்று தெரியாமல் உளவியல் தாக்கத்துக்கு உள்ளாகி திணறுகின்றனர். எந்த முகாமுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பது யாரைப் பாதுகாப்பது இப்படியான கேள்விகளுக்கு பதிலின்றி தவிக்கின்றது ஸ்ரீலங்கா படை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.