ஞாயிறு, 28 ஜூன், 2009

அடுத்த பிரபுதேவாவும் பிறேம் கோபாலும் !

இந்தியாவின் தமிழக தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் ரீவியில் வாராந்தம் ஒளிபரப்பாகி வரும் "அமுல் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" நடன நிகழ்வு இளையோரைக் கவந்த நிகழ்ச்சியாக உள்ளது, பல இளைஞர்கள், யுவதிகள் இந் நிகழ்வுக்காக அதிக நேரத்தினைச் செலவு செய்து ஒத்திகை பார்த்து மேடையேறி தங்களது திறமைகளை வெளிக்காட்டியும் நடுவர்களின் தீர்ப்பில் தெரிவாகாமல் கவலையுடன் வெளியேறுவது போட்டியாளர்களை மாத்திரமின்றி பார்வையாளர்களையும் கலங்க வைக்கின்றது.

ஒருவர் இறந்து விட்டால் அல்லது ஓய்வு பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இன்னுமொருவரைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், ஆனால் தமிழக நடன கலைஞரும், நடிகருமான சுந்தரம் பிரபுதேவாவுக்கு அப்படியேதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை, எதற்காக இந்த தேர்வு நிகழ்வு என்று விஜய் ரீவிக்கும், அதனை நடாத்துபவர்களுக்குமே நன்கு தெரியும். விறுவிறுப்பான நடனங்களை வருங்கால பிரபுதேவாக்களும், பிரபுதேவிக்களும் அழகாக அரங்கேற்றி வருகின்றனர்.

எப்படி இருப்பினும் இலங்கையர்கள் சிலருக்கும் இந் நிகழ்ச்சி களம் அமைத்துக் கொடுத்துள்ளது, அதை சாதகமாக பயன்படுத்த நமது இளையோர்கள் முயன்று வருவது பாராட்டத்தக்கது. அந்த வரிசையில் அடுத்த பிரபுதேவா எனும் மகுடத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் பிறேம் கோபால் எனும் இளவல் அருமையாக நடனத்தை நடாத்தி நடுவர்களினதும், சபையோரினதும் மற்றும் பார்வையாளர்களினதும் பாராட்டினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இலங்கையில் சிங்கள அரசாங்கத்தினாலும், அதன் படை பலத்தினாலும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் தத்துரூபமாக பிறேம் கோபால் அவர்தம் குடும்பத்துடன் இணைந்து அரங்கேற்றிக் காட்டினார்.

பிறேம் கோபாலில் குடும்ப நடனம் தமது தாயக இன்னல்களை உலகுக்கு உரத்துக் கூற அருமையான சந்தற்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, அவர்களும் அதனைத் திறமையாக நடாத்தி சபையோர்களையும், பார்வையாளர்களையும் அத்துடன் நடுவர்களையும் கண் கலங்க வைத்து நல்ல பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

பிறேம் கோபால் உணர்ச்சி வசப்பட்டு உணர்வு பூர்வமாக நடாத்திக் காட்டிய நடனத்தின் இறுதியில் சுய விமர்சனமாக கோபால் தன்னைப் பற்றியும் தனது நாடு பற்றியதுமான முகவுரையுடன் தனது பத்தாவது வயதில் குடும்பத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பேரூந்தில் பயணிக்கையில் கண்டியில் வைத்து அப் பேரூந்தை வழி மறித்த இராணுவத்தினரால் அதில் பயணித்த 30 பேரையும் தெருவுக்கு இறக்கி அரை மணித்தியாலத்துக்கும் மேலாக கைகளை உயரத் தூக்கி நிற்குமாறு பணிக்கப்பட்டனர், இதனால் தனக்கு ஏற்பட்ட விரக்தியில் படிமமே இந்த நடனம் என வர்ணனை செய்தார்.

இவருக்கு பத்து வயதாக இருந்ததால் கிளிநொச்சியைக் கண்டியாக நினைத்தாரோ தெரியவில்லை, யாழ்ப்பாணம் - கொழும்பு பாதையில் கண்டி நகரம் இல்லை, கண்டி என்பது இலங்கையின் மத்தியில், மலையகத்தில் இருக்கும் பிரதான நகரமே கண்டியாகும்.

தொலைக்காட்சிகள் நடாத்தும் பிரபல்யமான நிகழ்ச்சிகளில் கருத்துக்கள் தெரிவிக்கும் போது கவனமாக, நேர்மையாக பதிலிறுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

இறுதியாக இலங்கை வாழ் தமிழர்களுக்காக உதவி செய்யுங்கள் இந்திய மக்களே என அழுதழுது கண்ணீருடன் பிறேம் கோபாலின் தாயும், சகோதரியும் கெஞ்சி மன்றாடிக் கேட்டதுடன் சிறுவர்களின் அசைவும் இறுகிய கல் மனதையும் கரைய வைத்தது.



வியாழன், 18 ஜூன், 2009

தீபத்தின் அவசர அவசரமான தீர்வு காண முடியாத நேர் காணல் !

தீபம் தொலைக்காட்சி இன்று இரவு 8.30 மணி தொடக்கம் நேர்காணல் ஒன்றை நடத்தியது, எதிர்வரும் 20.06.2009 ஆம் நாள் சனிக்கிழமை பிரித்தானியாவின் நடத்தவிருக்கும் ஊர்வலம் தொடர்பாக திரு.சபா பத்மநாதன் பதிலளித்துக் கொண்டிருந்தார், அவரிடம் வினாக்கள் தொடுக்கவிருக்கும் நேயர்கள் கேள்விகள் கேட்கலாமென அறிவிப்பாளர் அனஸ் தொலைக்காட்சியில் இலக்கத்தையும் அறிவித்து செவ்வியைத் தொடர்ந்தார், ஆனால் சபா பத்மநாதனிடம் கேட்கப்படும் காத்திரமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே அவசர அவசரமாக நேர்காணல் முடிவடைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மீண்டும் கண்ணீர் வடிக்கத் தொடங்கி விட்ட சபா பத்மநாதன் பதிலளிக்க மறுத்து, வினா தொடுத்தவர்களிடமே கேள்விகளைக் கேட்டு விதண்டாவாதம் புரிந்தது வேடிக்கையிலும் வேடிக்கை.

ஞாயிறு, 14 ஜூன், 2009

சாத்தான் வேதமோதுகின்றது !

தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகமாக கருதப்படுவதால் அதன் பத்தாம் ஆண்டு வருகையை முன்னிட்டு பதிவு பண்ண வேண்டிய காலத் தேவை ஏற்பட்டது.

அதில் குறையுண்டு என நக்கீரத்தனம் புரிய வந்த வலைப் பதிவர் மருதமூரான் பதிவின் முழுத் தன்மையையும் அறியாமல் பின்னூட்டமாய் வந்திருந்த மடலினை மட்டும் படித்து விட்டு அது ஈழவனால் எழுதப்பட்டதாக பதிவு செய்ய முனைந்தது தான் வேடிக்கை.

பிழையான பதிவொன்றினை மருதமூரான் இட்டுள்ளார் என்பதையறிந்த பதிவர் கொழுவி பெருந்தன்மையுடன் தானே அப் பின்னூட்டமிட்டேனெனச் சுட்டிக்காட்டிய போது அதற்கு விதண்டாவாத பின்னூட்டங்களை அடுக்கிக் கொண்டே போகின்றார்.

இத்தனைக்கும் யாழ்தேவி இணையத்தின் நட்சத்திரப் பதிவர் என்று இவருக்கு மகுடம் வேறு. பதிவுகள் இடவேண்டுமென்பதால் குறைப் பிரசவங்களும், வரட்டுச் சிந்தனைகளும் கோலோச்சுகின்றன.

கொழுவியின் வாதத்தின் பின் தவறை உணர்ந்து கொண்ட மருதமூரான் சிறிய பிழை விட்டதாகவும் அது பெரிய தவறாகி விட்டது போல் பாசாங்கு செய்து பின்னூட்டத்திலேயே பதில் எழுதியுள்ளார்.

ஊடக தர்மத்தைப் பற்றி பிரஸ்தாபிப்பவர், முதலில் தான் அதற்குத் தகுதியானவரா என்பதை எடுத்து நோக்க வேண்டும், பிழையான பதிவை தரவேற்றி 24 மணி நேரம் கடந்தும் அந்த நட்சத்திரப் பதிவரால் இன்னும் தவறை ஏற்கும் பதிவொன்றினை இட முடியாமல் இருக்கின்றது, சாத்தான்கள் வேதமோத முற்பட்டால் இப்படித்தான் அமையும்.

வியாழன், 11 ஜூன், 2009

தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகம் !

ஐரோப்பாவில் இருந்து பல தொலைக்காட்சிகள் தமிழில் பல சேவைகளை நடாத்தி வருகின்றது, அவற்றில் தீபம் தொலைக்காட்சி பிரித்தானியாவில் இருந்து ஒளி பரப்பினை நடாத்தி வருகின்றது, தீபம் தொலைக்காட்சியானது தனது சேவையைத் தொடங்கி இன்றுடன் பத்து ஆண்டுகளை எட்டுகின்றது எனக்கூறும் தொலைக்காட்சி நிறுவனத்தினர் நேர்மை, பக்கச்சார்பின்மை, எப்போதும் நடுநிலமைச் செய்திகளை மக்களுக்கு கொணர்வது போன்ற மேதாவித்தன அறிவித்தல்களை விடுத்து வருகின்றனர்.

இவர்கள் நடுநிலமை எனக் கூறுவது எது என்பது அனேகமானவர்களுக்குத் தெரியாமல் இருக்கின்றது, ஸ்ரீலங்காவில் நடக்கும் நிகழ்வுகளை அரங்கேற்றுவது ஊடகங்களின் தார்மீகப் பணி, அதிலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உள் வீட்டு அந்தரங்கங்க விடயங்கள் மட்டும் தான் நடுநிலைச் செய்திகள் அல்ல, மாறாக விடுதலைப் புலிகளின் அசைவுகளில் ஏற்படும் பிழைகளையும் சுட்டிக்காட்டுவது தான் நடுநிலைச் செய்தி, ஆரோக்கியமானதும் கூட, ஆனால் தீபம் தொலைக்காட்சி என்றும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லையே!

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தீபம் தொலைக்காட்சிக்கு தெரியாமல் போனதற்குக் காரணமென்ன, அல்லது ஏன் போய் வீண் பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொள்ள வேண்டுமென தவிர்த்து ஒரு தலைப் பட்ச செய்திகளை மட்டும் பதிவு செய்ததா?

ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழினத்துக்குச் செய்யும் அராஜகம் கொஞ்சநஞ்சமல்ல, அளவுக்கு அதிகமானது தான், ஆனால் அதற்கு எதிர் தரப்பு எனக் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை ஏன் தீபம் தொலைக்காட்சி பதிவேற்றம் செய்ய மறந்து விட்டது.

ஜனநாயக நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோர்கள் துரோகியாக வர்ணிக்கப்பட்டு கொல்லப்பட்டார்களே, இது பிழையான வாதம் என தீபம் குரல் கொடுக்கத் தவறிவிட்டதே!

வீட்டுக்கு ஒருவர் போராட்டத்துக்கு வரவேண்டும் எனக்கூறி பலவந்தமாக பதின்ம வயதுக்குள்ளானவர்கள் அனைவரையும் ஆயுத முனையில் யுத்த களத்துக்கு அனுப்பி கொன்றதுடன், எஞ்சிய சிலராக ஊனமுற்ற சமுதாயமொன்றை விடுதலைப் புலிகள் பிரசவித்து விட்டு காணாமல் போனார்களே இது தீபம் தொலைக்காட்சிக்குத் தெரியவில்லையா?

வன்னியில் முன்னூறு ஆயிரம் பேருக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்து யுத்தம் நடத்தினார்களே, அந்தவேளை எதிரி பாரிய ஆயுத தளபாடங்களுடன் யுத்தத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றான் மக்களை விடுவியுங்கள் என ஒரு நாளிகையாவது விடுதலைப் புலிகளுக்கு உங்களின் ஊடகத்தின் மூலமாக அறிவித்தல் விடுத்தீர்களா முடியவில்லையே ஏன்?

இன்னும் அதிகம் குறிப்பிடலாம் இனிமேலாவது நடுநிலை தவறிய ஊடகம் தீபம் எனப் பதிவு செய்யுங்கள், அரசியல் ஞானமுள்ள ஊடகவியலாளர் திரு.அனஸ் முகமட் எனும் இளைய அப்துல்லாஹ் கூட தீபம் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரே தவிர விடுதலைப் புலிகளினால் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் பற்றி குரல் கொடுக்கத் தவறி விட்டாரே !

ஆகவே மொத்தத்தில் தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகமென்பதே நிஜம்.

செவ்வாய், 9 ஜூன், 2009

அரசுடன் நெருங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஸ்ரீலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டப் பின் விடுதலைப் புலிகளினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் துணையை நாடியிருப்பதனை அறியக் கூடியதாக இருக்கின்றது.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கிஷோர் சிவநாதன் அண்மைக் காலமாக அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருவது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் களைகட்டியுள்ளன.

காங்கேசந்துறை நோக்கி செல்லவிருக்கும் யாழ்தேவி புகையிரத சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் வவுனியாவில் இருந்து தாண்டிகுளம் வரையான யாழ்தேவி வெள்ளோட்ட நிகழ்வில் அரசதரப்பு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுபிப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா அமைச்சர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கிஷோர் சிவநாதனும் சேர்ந்து தாண்டிக்குளத்தில் புகையிரதத்தை வரவேற்று நிகழ்ச்சி யொன்றினையும் நடாத்தினர், அதில் அதிதியாகக் கலந்து கொண்டு கிஷோர் சிறப்புரை நிகழ்த்தினார்.

தாண்டிக்குளத்தில் யாழ்தேவி புகையிரத வரவேற்பைத் தொடர்ந்து ஓமந்தையில் புதிய புகையிரத நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றது, இவ் அனைத்து நிகழ்வுகளிலும் திரு.கிஷோர் கலந்து கொண்டார்.

இன்று (09.06.2009) பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தினை நீடிக்கும் பிரேரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதற்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன, ஐக்கிய தேசியக் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரில் எட்டுப் பேர் கலந்து கொண்ட போதிலும் ஏழு பேரே எதிர்த்து வாக்களித்துள்ளனர், ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கிஷோர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்துள்ளார்.

இவை அனைத்தையும் உற்று நோக்கும் போது அரசாங்கத்துடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கிஷோர் செயற்படுவது புலனாகின்றது, எது எப்படியாகினும் விரைவில் அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

திங்கள், 1 ஜூன், 2009

பதுங்குகுழியில் இருந்து ஓர் வலைப்பதிவு

நீண்ட யுத்தத்துக்கு முடிவு கண்டு விட்டோமென ஸ்ரீலங்கா அரசாங்கம் மார்தட்டிக் கொண்டாடும் இந் நேரத்தில் அந்த யுத்தத்தில் சிக்குண்ட மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாய் விரிந்து கிடப்பதை எச் சமூகமும் ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பது கவலையளிக்கின்றது.

யுத்த பூமியில் வாழ்ந்த தமிழினம் சிதைந்து மண்ணாகிப் போக எஞ்சிய சிலரில் பலர் ஊனமுற்றவராகவும், சிலர் உறவுகளை இழந்தவர்களாகவும் மனிதாபிமான யுத்தத்தின் விளைவை கண்டுள்ளனர்.

அந்த யுத்த களம் ஏற்படுத்திய தாக்கத்தினை "பதுங்குகுழியில் இருந்து ஒரு வலைப்பதிவு" என்று உபதலைப்புடன் தோழர் தீபச்செல்வன் அவர்கள் தீபம் எனும் வலைப்பதிவை காத்திரமாக, மனதைத் தொட்டுச் செல்லும் கவிதைகளூடாகப் பிரசவித்துள்ளார்.

"பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி" எனும் குறியீட்டினூடாக

மண் சிதறி மூடப்பட்ட
பதுங்குகுழியில்
மூடுண்டு போயிற்று
கடைசி வரை
வைத்துக் காத்திருந்த
உடைந்த முகத்தின் எச்சங்கள்.

எனக் கூறித் தொடரும் வரிகள் எத்தகைய கல்மனதையும் கரைய வைக்கக் கூடியதாகப் பதிவு செய்துள்ளமை கவிஞரின் ஆளுமையைக் காட்டுகின்றது, புதுக் கவிதையைத் தளமாகக் கொண்டு தோழர் தீபச்செல்வன் கூறும் அனைத்துக் கவிதைகளும் பிரமாதம்.

ஆனால் நொந்த கவிதைகளின் பிறப்புக்கு உரித்தான எம்மின அழிப்பின் சீரழிவுக்கு ஒரு தரப்பு மட்டுமே சொந்தக்காரரென கவிஞர் கூற முற்படுவதனை ஏற்க முடியாமல் இருக்கின்றது.

தமிழின அழிப்புக்கு முக்கிய பாத்திரங்கள் யாரென்பதை தீபச்செல்வன் போன்ற எதார்த்தக் கவிஞர்கள் இனம் காண வேண்டும், எம்மின மக்கள் அராஜகம் கொண்ட அல்லது பாஸிஸத்தில் மூழ்கிப்போன தமிழீழத்தில் என்றுமே வாழ முற்படவில்லை, மாறாக முற்பட வைக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.

ஒரு வேளை கஞ்சியாவது குடித்து விட்டு நிம்மதியாக இருக்க வேண்டுமென்றே எம்மக்கள் அனைவரும் கூறுவர், மனிதத்தை நேசிப்போர் தங்களின் மனங்களில் கை வைத்துப் பதில் கூறினால் நிம்மதியான வாழ்வு மாத்திரமே எமக்குத் தேவை படுகொலைக் கலாசாரத்துடன் கூடிய சீரழிந்த துப்பாக்கிக் கலாசாரம் வேண்டவே வேண்டாம் என உரத்துக் கூறுவர்.

நன்றி : http://deebam.blogspot.com/

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----