வியாழன், 30 ஏப்ரல், 2009

மட்டக்களப்பில் மாணாக்கர் மூவரைக் காணவில்லை !

கடந்த இரண்டு நாட்களில் மாணாக்கர் மூவர் மட்டக்களப்புப் பகுதியில் இருந்து காணாமற் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன, மட்டக்களப்பு, கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் 8 வயதுடைய சதீஸ்குமார் தினுஷிகா, ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய வள்ளுவன் மதிசுதன் மற்றும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய ஏரம்பமூர்த்தி ஜனார்த்தனன் ஆகியோரே காணாமல் போன மாணாக்கர்களாவர்.

2009.04.30 ஆம் திகதியான இன்று மட்டக்களப்பு புறநகர் மற்றும் நகரப் பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்கள் இணைந்து கடத்தப்பட்ட மாணாக்கர்களை விடுவிக்கக் கோரி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர், நேற்று மாணவி காணாமற் போன செய்தி அறிந்ததில் இருந்து அப்பகுதி மக்கள் அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வீதிகள் வெறிச்சோடி போயுள்ளதுடன், கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.

கடந்த மாதம் திருகோணமலையில் வர்ஷா எனும் பச்சிளம் பாலகி கடத்தல்காரர்களால் கடத்திக் கப்பம் கோரப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டார், இது தொடர்பாக ஆயுதக் குழுவொன்று தொடர்புற்றுள்ளதாக செய்திகள் வந்த போதிலும் சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான கடத்தல் சம்பவங்களினால் பாடசாலைகளுக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர் தயங்குகின்றார்கள், இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமலும், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த அரசியல்வாதிகளும், பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களும் உளசுத்தியுடன் செயற்படுவதே சிறந்ததாகும்.

இச் சம்பவங்கள் இனிமேலும் தொடரக் கூடாது என்பதனால் களத்துமேடு தனது ஆதங்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

புதன், 29 ஏப்ரல், 2009

தயா மாஸ்டர், ஜோர்ச் மாஸ்டர் இருவரும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி !

ஸ்ரீலங்கா அரச படையினரால் வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்டு வரும் யுத்தத்தினைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சரணடைந்து வருவதாக அரச ஊடக தகவல்கள் கூறுகின்றன.

அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகச் செயலர் திரு.தயா மாஸ்டர், அரசியற் செயலர் அமரர்.சு.ப.தமிழ்ச்செல்வனின் மொழி பெயர்ப்பாளர் திரு.ஜோர்ச் மாஸ்டர் போன்றோர் ஸ்ரீலங்கா அரச படைகளிடம் சரணடைந்ததாக செய்திகள் கூறின.

திரு.தயா மாஸ்டர் மற்றும் திரு.ஜோர்ச் மாஸ்டர் இருவரும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் இரு பாகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

செவ்வி



திங்கள், 27 ஏப்ரல், 2009

உண்ணா நோன்பைக் கை விட்டார் கருணாநிதி

இலங்கையின் வன்னிப் பகுதியில் தொடரும் போர் அவலத்தை நிறுத்தக் கோரி ஸ்ரீலங்கா அரசாங்கத்தைக் கோரும் உண்ணா நோன்பினை இன்று காலை அண்ணா நினைவிடத்தில் கலைஞர் கருணாநிதி ஆரம்பித்தார்.

கலைஞரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா அரசாங்கம் பாதுகாப்பு அவையைக் கூட்டி யுத்த நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ள செய்தி தனக்கு எட்டியுள்ளதாகவும் கூறி உண்ணா விரதத்தைக் கை விட்டார் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

விமல் வீரவன்சவின் உரை தொடர்பாக மனோ கணேசன் அவசர விளக்கம் !

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஜனநாயக ரீதியாக நான் முன்னெடுத்துவருவதை சகித்துக்கொள்ள முடியாத விமல் வீரவன்ச எம்.பி., என்னை அரசாங்கம் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ் இனத்திற்கென எனது ஜனநாயக போராட்டத்தில் சிறை செல்வதற்கும் நான் தயார் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. கூறிய கருத்துத் தொடர்பில் கொழும்பு நிப்போன் ஹொட்டலில் நடத்திய அவசர பத்திரிகையாளர் மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் திரு.மனோ கணேசன் பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்தார்.

நான் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டதாகவும், தனிநாட்டை உருவாக்கும் நோக்கில் அரசியலமைப்பை நான் மீறியுள்ளதாகவும் விமல் வீரவன்ச நேற்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியுள்ளார். விமல் வீரவன்சவின் கூற்றை நான் அடியோடு மறுக்கின்றேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான பொய்யான சோடிக்கப்பட்ட கட்டுக்கதையாகும். எனது அரசியல் அன்றும், இன்றும், என்றும் ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டதாகும். எங்களது நிகழ்ச்சி நிரலில் வன்முறைக்கும், பிரிவினைவாதத்திற்கும் இடமில்லை. ஆனால், நாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தமிழ் மக்களின் உள்ளக அரசியல் சுயநிர்ணய உரிமைக் கொள்கையை ஆதரிக்கின்றோம். தமிழ், சிங்கள, முஸ்லிம் தோழமை சக்திகளுடன் இணைந்து எமது இந்த நோக்கத்தை அடைவதற்காக ஜனநாயக ரீதியாக போராடுகின்றோம். இது எங்களது பகிரங்க நிலைப்பாடு. இதில் மறைப்பதற்கு எதுவும் கிடையாது. தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமைகளை எப்போதும் நிராகரிக்கும் பேரினவாதியான விமல் வீரவன்சவிற்கு எங்களது ஜனநாயக செயற்பாட்டை சகித்துக்கொள்ள முடியவில்லை.

அரசியல் அமைப்பு பற்றியும், மாவீரர் நிகழ்வுகளை பற்றியும், ஆயுத வன்முறை கலாசாரத்தை பற்றியும் கருத்து தெரிவிப்பதற்கு இந்த விமல் வீரவன்சவிற்கு என்ன தகுதி இருக்கின்றது? நான் எனது அரசியலை அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பொலிஸ் நிலையத்திற்கு கைக்குண்டு எறிந்துவிட்டு ஆரம்பிக்கவில்லை.

புலிகள் இயக்கத்திற்கு முன்னரே 1989ஆம் வருடத்திலேயே கண்டி புனித தலதா மாளிகையை தாக்கி கொள்ளையடிக்கவில்லை. பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க கட்சிக் குழுக்கூட்டத்திற்கு கைக்குண்டை கொண்டு சென்று வீசி பாராளுமன்ற உறுப்பினர் கீர்த்தி அபயவிக்கிரமவை கொலை செய்துவிட்டு, நாட்டின் அன்றைய தினத்தின் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை படுகொலை செய்ய முயற்சிக்கவில்லை.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிச் சிங்கள இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கவில்லை. கொட்டிகாவத்தை சத்தா திஸ்ஸ தேரர் போன்ற பெருந்தொகையான பௌத்த துறவிகளையும், விஜயகுமாரதுங்க போன்ற ஜனநாயக அரசியல் தலைவர்களையும், பிரேமகீர்த்தி அல்விஸ் போன்ற கலைஞர்களையும் கொலை செய்த கலாசாரத்தை நான் சாரவில்லை.

இத்தகைய சட்டவிரோத பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு எனது நேரத்தை வீணடிக்காததால் எனக்கு சிகிரியா மலை, சிவனொளிபாத மலை ஆகிய மலைகளில் ஏறுவதற்கும் நேரம் இருந்தது, மனிதர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இதற்கான நேரம் இருக்கவில்லை.

புலிகளின் மாவீரர் தின வைபவத்தில் நான் ஒருபோதும் கலந்துகொண்டதில்லை. இது உண்மை. ஆனால், மாவீரர் வைபவங்களை பற்றி பேசுவதற்கு விமல் வீரவன்சவிற்கு இருக்கும் அருகதை என்ன? இந்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பயங்கரவாதத்தை ஆரம்பித்து வைத்து 1971இல் இவர்கள் நடத்திய கிளர்ச்சியையும், 1989இல் இவர்களது இயக்கத்தலைவர் ரோஹண விஜயவீரவை வலப்பணை தோட்ட பங்களாவிலிருந்து இழுத்து வந்து அன்றைய அரசு கொலை செய்ததையும் இன்று ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்திலும், நவம்பர் மாதத்திலும் நினைவுக்கூர்ந்து கொழும்பில் பெரும் விழா நடத்துகின்றார்கள். இது எவ்விதத்தில் நியாயமாகும்?

இன்று ஜே.வி.பி. கட்சியை உடைத்து வெளியேறிவிட்டு, வேறு கட்சி அமைத்துக் கொண்டதால் விமலசிறி கம்லத் என்ற ஆருடப்பெயரில் செயற்பட்ட விமல் வீரவன்ச தனது பயங்கரவாத வரலாற்றை மூடி மறைத்துவிட முடியாது. நாங்கள் ஒரு முறை பிறந்து வாழ்ந்து இறந்து இன்று மீண்டும் பிறக்கவில்லை. 1971இலும், 1989இலும் இவர்கள் செய்துவந்த படுகொலைகளை நாம் மறக்கவில்லை. ஆகவே விமல் வீரவன்ச போன்ற பேரினவாதப் பயங்கரவாதியின் அறிவுரை எனக்குத் தேவையில்லை.

நன்றி வீரகேசரி

புதன், 22 ஏப்ரல், 2009

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் குடும்பத்துடன் படையிடம் சரண் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகச் செயலராக கடமை புரிந்த முன்னாள் ஆங்கில ஆசிரியரான வடமராட்சி தம்பசிட்டியைச் சேர்ந்த தயா மாஸ்டர் எனப்படும் திரு.வேலாயுதம் தயாநிதி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ச் எனப்படும் ஓய்வுபெற்ற தபாலதிபர் திரு.வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம் ஆகியோர் தங்களது குடும்பங்கள் சகிதம் இன்று புதுமாத்தளன் பகுதியில் நிலைகொண்டுள்ள 58 ஆம் படையணியிடம் சரணடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தென்னிலங்கையில் இருந்து வடக்கு நோக்கிச் சென்ற வாசுதேவநாயணயக்கார போன்ற சிங்கள அரசியல்வாதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக வரவேற்று அவர்களுடனான சந்திப்புகளில் மொழி பெயர்ப்பாளராக தயா மாஸ்டர் கலந்து கொண்டவராவார்.


விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைகளுக்கென கிளிநொச்சிக்கு விஜயம் செய்த சர்வதேசப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் திரு.வே.பிரபாகரன் மற்றும் திரு.சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு மொழி பெயர்ப்பாளராகவும், சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பேச்சுவார்த்தைகளுக்கெனச் சென்ற திரு.தமிழ்ச்செல்வன் குழுவுடன் திரு.ஜோர்ச் கலந்து கொண்டவராவார்.

ஸ்ரீலங்கா அரச படையினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய மாட்டார்களென விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் திரு.புலித்தேவன் நேற்று ரொய்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சனி, 11 ஏப்ரல், 2009

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையே கருத்து முரண்பாடு!

இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு.சிவசங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை இந்திய அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார், எதிர்வரும் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக நேற்று முந்தினம் இரவு ஸ்ரீலங்காவில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று நடைபெற்றது, இக் கலந்துரையாடலின்படி இந்தியா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென முடிவெடுக்கப்பட்டது, இந்தச் சந்திப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராஜா தலைமை வகித்தார், உடனடியாக இச் செய்தியை இந்தியாவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் திரு.சம்பந்தனுக்கு தெரிவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் திரு.என்.ஸ்ரீகாந்தா சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில்லையெனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் சந்திப்பில் திரு.சிவசங்கர் மேனனைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் சந்திப்புக்கான முக்கிய தொடர்ப்புகளைப் பேணுமுகமாக திரு.மாவை சேனாதிராஜா இந்தியாவுக்கு உடனடியாக பயணத்தை மேற்கொண்டுள்ளார், கூட்டமைப்பினரில் பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதால் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் இச்சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு.சிவசங்கர் மேனன் அவர்களின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மேலதிக செய்திகள்:

1. புதினம் இணையம்

2. பிபிசி வானொலி

3. ரெலோ இணையம்
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----