செவ்வாய், 26 ஜூன், 2007

துப்பாக்கி ரவை சாட்சிப் பொருட்களில் இருந்து நீக்கம்

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூதூரில் "அக்ஷன் பாய்ம்" தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 17 மனிதாபிமான பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவால், சுயாதீன சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப் படுகொலைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதென சாட்சிப்பொருட்களுள் வைக்கப்பட்டிருந்த 5.56 கலிபர் துப்பாக்கி ரவையொன்று நீக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் சிரேஷ்ட சட்டத்தரணியான மைக்கல் பிரின்பாம் குற்றஞ்சாட்டியுள்ளார். 5.56 கலிபர் ரவைகளானது M16 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படுகின்றது.

இத் துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்துவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

திங்கள், 25 ஜூன், 2007

கெமிக்கல் அலிக்கு மரண தண்டனை

1988ஆம் ஆண்டு அன்பாலில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது நச்சுப் புகையைச் செலுத்தி 180000 குர்திஷ் இனத்தவர்களை படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைனின் மைத்துனரான "கெமிக்கல் அலி" எனப்படும் அலி ஹஸன் அல் மஜீத்திற்கு ஈராக்கிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் கெமிக்கல் அலியின் இரு ஆதரவாளர்களுக்கும் மரண தண்டனையும், வேறு இருவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்ட இந்த நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் யுத்த குற்றம் மற்றும் மனித நேயத்திற்கு புறம்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சுல்தான் ஹாஸிம் அஹ்மட், முன்னாள் ஜனநாயக கட்சி பாதுகாப்பு தலைவர் ஹூஸைன் ரஷீட் அல் டிக்ரிதி ஆகியோருக்கும் மரண தண்டனையும் முன்னாள் இராணுவக் கட்டளை தளபதி பர்ஹான் அல் ஜிபோரி, முன்னாள் புலனாய்வு தலைவர் சாபெர் அப்துல் அஸீஸ் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த மரண தண்டனை தீர்ப்பு குறித்து மேன்முறையீடு செய்ய அனுமதியுள்ளது, ஆனால் அம்மேன்முறையீடு தோல்வியடையும் பட்சத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் அலி ஹஸன் அல் மஜீத் தூக்கிலிடப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

"அன்பால்" பிரதேச இராணுவ நடவடிக்கையில் குர்திஷ் இனத்தவர்களை படுகொலை செய்த குற்றத்துக்காக ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூஸைனுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 23 ஜூன், 2007

"சிவாஜி" திரைப்படப் பாடல்கள் (வீடியோ)

http://www.thuvi.com/songs/tamil/133-Sivaji---The-Boss.htm "சிவாஜி" திரைப்படப் பாடல்கள் (வீடியோ) இச் சுட்டியில் உள்ளன.

ஞாயிறு, 17 ஜூன், 2007

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகளின் திருமணம்

ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் மகள் யசோதராவுக்கு கடந்த 15.6.2007 இல் திருமணம் நடைபெற்றது.

பிரித்தானியா வைத்திய நிபுணர் ரோஜர் வோட்டருக்கும் யசோதராவுக்கும் லண்டனில் சிங்கள சம்பிரதாய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு சகோதரர் அனுரா பண்டாரநாயக்கா, சகோதரி சுனேத்திரா பண்டாரநாயக்கா, பிரபல வர்த்தகர் ஹெரி ஜெயவர்த்தன, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ரஞ்சன் யூமோ இவ் ஐவரையும் ஸ்ரீலங்காவில் இருந்து சந்திரிக்கா பண்டாரநாயக்கா அழைத்திருந்தார்.

வெள்ளி, 15 ஜூன், 2007

19ம் நூற்றாண்டு கால ஆயுதம் திமிங்கிலத்தில் இருந்து மீட்பு

கடந்த மாதம் அலஸ்கா கடலில் சூட்டுக் காயத்துடன் பிடிக்கப்பட்டு பின் மரணித்த 50 தொன் எடையுள்ள 49 அடி நீளமான திமிங்கிலத்தின் கழுத்துப் பகுதியில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த குண்டு வகை ஆயுத மொன்று காணப்பட்டுள்ளது.

3.5 அங்குல நீளமான அம்பு வடிவ குண்டானது சுமார் 115 முதல் 130 ஆண்டுகள் பழமையானது என அறிவியலாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
1879ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இவ் ஆயுதமானது 1885ஆம் ஆண்டு வரை இதன் உற்பத்தி நடைமுறையில் இருந்துள்ளது, 1890ஆம் ஆண்டு காலப் பகுதியில் திமிங்கிலம் மீது இவ்வாயுதத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென ஆராட்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

புதன், 13 ஜூன், 2007

இராமர் பாலம் என்பது கட்டுக்கதை

கட்டுரையாளர்: மறவன்புலவு க.சச்சிதானந்தன்

அறிவியல் பார்வைக்கு முன் உடைந்து நொருங்கும் கற்பனைக்கதைகள்
சேது சமுத்திரத் திட்டம் குறித்து கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு சிக்கல்களைச் சிலர் உருவாக்கி வருகின்றனர். இப்போது புதியதாக மதத்தின் பெயரால் ஒரு சிக்கலைக் கொண்டு வந்திருக்கின்றனர். இவர்களுடைய நோக்கம் சேதுக் கால்வாய் வந்துவிடக்கூடாது என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் பவளப்பாறைகள் என்றார்கள். இப்போது இராமர் பாலம் என்கிறார்கள்.

மன்னார் வளைகுடாவில் உள்ள நீளமான மணல் திட்டை அகழ்வுப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் இந்து அமைப்புகள், கட்சிகள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக இந்து அமைப்புகள் லக்னோ உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் தொடுத்து, அகழ்வுப் பணியை நிறுத்தி வைக்க முயற்சி செய்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்து விட்டது.

புராணங்கள், இதிகாசங்கள் கற்பனையானவை என்று தெரிந்திருந்தும் இராமர்பாலத்தைக் கட்டினார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும் அறிவியல், புவியியல் ஆதாரங்கள் என்ன சொல்கின்றன? என்கிற கேள்வியைக் கடலியல் வல்லுநரும் ஐ.நா.வின் முன்னாள் ஆலோசகருமான மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது;

"ஆற்று முகத்துவாரத்தில் நீர்வாத்து குறைந்தகாலங்களில் திட்டுகள் ஏற்படுவதுண்டு. இது போன்று திட்டு ஆழம் குறைந்த கடலிலும் உருவாகின்றது. அந்த மாதிரியான ஒரு திட்டைத்தான் இராமர் பாலம் என்றும் மனிதன் கட்டினான் என்றும் கூறுகின்றனர். இந்தியாவையும் இலங்கையும் சந்திக்கும் மணல் திட்டுகள் தெற்கு, வடக்கு என இரண்டு இடத்தில் உள்ளன. தெற்கே உள்ள மணல் திட்டுகளை இராமர் கட்டினார் என்றால், வடக்கே உள்ள மணல் திட்டுகளை யார் கட்டியது?

ஆனாலும், இந்தச் சிக்கலை மேலோட்டமாகச் சொல்வது நன்றாக இருக்காது. அறிவியல் பூர்வமாகவும் புவியியல் அடிப்படையிலும் கூறினால் மட்டுமே மக்களுக்குப் புரியும்" என்றவர் மேலும் கூறியதாவது;

`சேது' என்பது வடமொழிச் சொல் என்று இதுவரை கூறிவருகின்றனர். அது முற்றிலும் தவறு. சங்க இலக்கியங்களான அகநானூறு 79-7, 394-6, நற்றிணை 213-4, 359-1, பெரும்பாணாற்றுப் படை 306 ஆகிய பாடல்களில் சேறு, மணல் ஆகியவை சேரும் இடத்தைச் சேது என்றும் அந்த மண்ணை ஆண்ட மன்னர்களையும் மக்களையும் சேர்வை என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே, சேது என்பது தமிழ்ச் சொல்லே.

இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இயற்கையாக மணல் சேருகின்ற தன்மையை அங்குள்ள மக்கள் சேர்வது என்று அழைத்து, பின்னர் சேது என்று அழைத்து வந்திருக்கிறார்கள். இவ்வாறு மணல்கள் சேர்வது, நீரும் நிலமும் கலக்கின்ற எல்லா இடங்களிலும் நிகழ்கின்ற இயல்பு. ஆற்றுநீரில் வண்டலாக சேறாக, மண்டியாக வருகின்ற மணல் நீரின் வேகத்தோடு ஓடிச் சென்றாலும் வேகம் குறைந்த ஓரங்களில் திடல்களாக அங்கு உருவாகும்.

நீர்வரத்துக் குறைந்த காலங்களில் உள்வளைவுகளிலும் சரிவுகளிலும் அருவியாகச் சொரியும் இடங்களின் முன்பு கடலோடு கலக்கின்ற நிலையிலும் மணல் சேர்ந்து திரண்டு, திரளாகி, திடலாகி, காட்சி தரும்.

ஆறுகளில் நீர்வரத்துக்குறைந்த காலங்களில் வெளி வளைவுகளில் நீரோட, உள் வளைவுகளில் மணல், சேறு திரண்டு திடல்களாகும். அதேபோல நீர்வரத்துக் குறைந்த காலங்களில் ஆற்றுமுகத்துவாரத்தில் மணல் சேர்ந்து திடலாகி இருக்கும்.

ஆற்றில் வெள்ளம் வந்தால் இந்தத் திடல்கள் கரைந்துவிடும். முகத்துவாரத்தில் வெளிப்பக்கத்தில் அகலமாகவும் நிலப்பகுதியில் கூம்பாகவும் இத்திடல் இருக்கும். மேடுகளுக்கும் செங்குத்தான பள்ளங்களுக்கும் உள்ள எல்லைகளில் இத்தகைய திடல்கள் அமைவது இயற்கை. இது ஒரு புவியியல் தன்மை, நீரியல் தன்மை மற்றும் சேற்றியல்தன்மை. இத்தகைய திடல் ஆற்றுமுகத்துவாரங்களிலும் தரவைக் கடல்களிலும் உருவாகின்றன. ஆழம் குறைந்த கடலே தரவைக் கடல் . ஆழம் அதிகமான கடல் நெடுங்கடல்.

நெடுங்கடலின் நடுவே நிலங்களை இணைக்கும் மேடைதரவைக் கடலாக அமைகின்ற புவியியல் தன்மையை உலகெங்கும் காணலாம். நீரிணை என இவற்றைப் பெயரிடுவர்.

சைபீரியா முனையையும் அலஸ்கா முனையையும் இணைப்பது பெரிங் நீரிணை.

தென் பாப்புவாவையும் வட அவுஸ்திரேலியாவையும் இணைப்பது டொரஸ் நீரிணை.

சுலவகாசி தீவையும் போணியோ தீவையும் இணைப்பது மக்காசா நீரிணை.

அரபுக்கடலின் நீட்டமான மன்னார் வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் இணைப்பது பாக்கு நீரிணை.

நில இடுக்குகளைப் போல நீரிணைகளும் உலகெங்கும் உள்ளன. இந்த நீரிணை மேடை விளிம்புகளில் எல்லைகளில் நெடுங்கடலைச் சந்திக்கும் இடத்தில் மணல் திடல்கள் அமைவது இயல்பு. அது பெரிங், டொரஸ், மக்காசா நீரிணையாக இருந்தால் என்ன? பாக்கு நீரிணையாக இருந்தால் என்ன? ஆழமற்ற மேடை ஆழமான கடலைச் சந்திக்கும் விளிம்பில் திடல்கள் அமையும்.

ஆறு கடலில் கலக்கும் போதும் சரி, கடல் மேல்மட்ட நீரோட்டம் தரவைக் கடலிலிருந்து ஆழ்கடலில் விழும்போதும் சரி கிளைகள் விட்டு பாயும்.

கங்கை, பிரம்மபுத்திரை வங்கக்கடலில் கலக்கும் சுந்தரவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் மணல் திடல்களைச் சுற்றி வளைந்து வளைந்து செல்கின்றன. அக்கடலிலும் கண்ட மேடைகளிலும் நகரும் தீவுகளே இருக்கின்றன.

அதேபோல தரவைக் கடலின் மேல்மட்ட நீரோட்டம் விளிம்பில் வழிந்து ஆழ்கடலில் கலக்கும்போது நகரும் மணல் திடல்கள் அமைகின்றன.

பாக்கு நீரிணையின் தெற்கு எல்லையான தலைமன்னார், தனுஷ்கோடி விளிம்பில் நூற்றுக்கணக்கான நகரும் மணல் திடல்கள் அமைந்திருக்கின்றன.

இந்த நகரும் திடல் ஒரு நாளைக்கு ஓர் இடத்தில் இருக்கும். மறுநாள் வேறொரு இடத்தில் இருக்கும். நீரோட்டம், சேற்று வெள்ளம், சுழிநீரின் வண்டற் கலக்கல் அளவு போன்ற பல்வேறு காரணங்களினால் முக்கோண வடிவான இத்திடல்களே நகரும் திடல்கள் ஆகின்றன.

இதேபோல, பாக்குநீரிணையின் வட விளிம்பான 45 கி.மீ. நீளமுள்ள கோடியக்கரை மாதகல்நீள் படுக்கையில் நகரும் திடல்கள் அமைந்திருக்கின்றன. அங்கேயும் தரவைக் கடல்விளிம்புக்கு அப்பால் சடுகையான செங்குத்தான ஆழம் வங்காள விரிகுடாவில் உண்டு.

வங்காள விரிகுடாவும் அரபிக்கடலும் எதிர் எதிர் பருவ நிலைகளைக் கொண்ட பூமியின் நடுக்கோட்டை ஒட்டிய கடல்கள். இந்தியப் பெருங்கடலின் நீட்டங்களான இந்த இரு கடல்களில் எதிர் எதிர் பருவக் காற்றுகள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூர்மையடையும்.

கார்த்திகை, மார்கழி, தையில் வாடைக்காற்று வீசும். வங்காள விரிகுடாவிலும் அரபிக் கடலிலும் வலசை நீரோட்டம் ஏற்படும். ஏறத்தாழ 3,000 மீற்றர்வரை ஆழமுள்ள கடல்களில் இந்த நீரோட்டத்தின் உந்துதல் நடு ஆழத்தில் கடுமையாக இருக்கும்.மேற்புறத்திலும் அடி ஆழத்திலும் நீரோட்ட உந்துதல் குறைவாக இருக்கும்.

கங்கையும் பிரம்மபுத்திரையும் ஐராவதியும் மகாநதியும் அடித்துத் தள்ளும் மலைச்சாரல், சேறும் மரமுறிவுகளும் குழைகளும் வங்கக் கடலில் கலந்து இந்த வலசை நீரோட்டத்துடன் இணைந்து சோழமண்டல கரை வழியாக மேற்பரப்பில் விரைந்து ஊர்ந்து பாக்கு நீரிணையை அடைந்து, இலங்கையின் மேற்குக்கரை வழியாக இந்துப் பெருங்கடலை நோக்கி வேகமாக மூன்று மாத காலங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும்.

மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் வலசை நீரோட்டத்தின் வேகம் படிப்படியாக குறைந்து அடங்கிவிடும். வங்கக்கடலானது குளம் போலவும் ஏரிபோலவும் மாறிவிடும். வைகாசி பிறந்தாலே எதிர் பருவமான இடசை நீரோட்டத்திற்கு அரபிக்கடலும் - வங்காள விரிகுடாவும் தயாராகி விடும். தென்றல் காற்று வீசும் காலம் தொடங்கும்.

ஆணி, ஆடி மாதங்களில் கிழக்கு ஆபிரிக்கக் கரையில் பிரியும் சோமாலி நீரோட்டத்தை ஆதாரமாகக் கொண்டு அரபிக் கடலில் கிளம்பும் இடசை நீரோட்டம் மன்னார் வளைகுடாவுக்கு புகுந்து பாக்குநீரிணை மேடைமேல் ஏறி கோடிக்கரை மாதகல் நீள்படுகையும் தாண்டிக் குதித்து வங்கக்கடலில் புகும்.

இலங்கையைச் சுற்றியும் அந்த நீரோட்டத்தின் பெரும் பகுதி நீர், வங்கக் கடலைக் கலக்கி சோழமண்டல கரை வழியாக மிதந்து ஊர்ந்து மியன்மாரைத் தொடும்.

இந்த எதிரெதிர் நீரோட்டங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முழுமையடைந்து அரபிக்கடலையும் வங்கக் கடலையும் கலக்கி வண்டலையும் சேற்றையும் பாக்கு நீரிணையின் மேற் பரப்பும் நீரோட்டத்துடன் கொணர்ந்து சேறாக்கி தங்க வைப்பதால், பாக்கு நீரிணையின் முதல் நிலை உற்பத்தி பெருகுகிறது. அவற்றை நம்பி சிறுமீன்கள் வளர, அவற்றை நம்பி பெருமீன்கள் வளர, சங்குகளும் முத்துகளும் சிப்பிகளும் சிங்கி இறால்களும் பிறவும் பெருமளவில் வளர்கின்றன.

பாக்குநீரிணை தரவைக் கடலில் பரந்துபட்ட மீன் உற்பத்திக்கு இந்த எதிரெதிர் நீரோட்டம் மூலமாக வரும் சேறும் வண்டலும்தான் வளம் ஊட்டுகின்றன.

இந்த எதிரெதிர் நீரோட்டத்தினால் வரக்கூடிய சேறும் வண்டலும் பாக்கு நீரிணையின் வட,தென் விளிம்புகளில் படிந்து சேர்ந்து திரண்டு நகரும் மணல் திடல்கள் ஆகின்றன. இந்தத் திடல்களுள் தெற்கில் உள்ளதை இராமர் பாலம் என்று சொல்கிறார்கள்.

இயற்கையாக நடைபெறும் நிகழ்வினால் ஏற்படும் திட்டுகளை அல்லது திடல்களை மனிதன் கட்டினான் என்று சொல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்? என்று கேள்வியை எழுப்பினார் மறவன் புலவு க.சச்சிதானந்தன்.

அவரிடம் நீங்கள் சொல்வதுபோல் இயற்கையாக ஏற்பட்ட மணல் திடல்களாகவே இருந்தாலும், அந்த திடல்களை தகர்ப்பதால் `சுனாமி' மாதிரியான பேராபத்துகள் வரும்போது, பாக்கு நீரிணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளாரே என்ற போது..

இரண்டு மீற்றர் நீளமுள்ள ஒரு சுவரில் 2 செ.மீற்றர் விட்ட வட்டமுள்ள ஒருதுளையால் அந்த இரண்டு மீற்றர் சுவருக்கு பாதிப்பு வருமா? இந்த இரண்டு செ.மீ. விட்ட வட்டமுள்ள துளை இருந்தால் தானே மின்சார கம்பியினை உட்செலுத்தி மின் இணைப்பு ஏற்படுத்த முடியும். அதோபோலத்தான் 31 கி. மீற்றர் நீளமுள்ள தலைமன்னார் , தனுஷ்கோடி சேதுதிடல்கள் . அதிலே 300 மீற்றர் அகலமான அகழ்வுப் பணி நடைபெற இருக்கிறது.

மொத்தமாகப் பார்க்கும் போது ஒரு விழுக்காடு அளவு தான். இதே மாதிரி எத்தனையோ இடைவெளிகள். அந்த 31 கி.மீற்றர் சேது திடல்களில் உள்ளன. அதனால் பாதிப்பு என்பது துளியும் இருக்காது. 2 மீட்டர் நீள சுவரில் 2 செ.மீ. துளை ஏற்படுத்துவதால் எந்தப் பாதிப்பும் வராது.

ஏதோ முழுத் தொடரை சேது திடல்கள் இடிப்பது போல் அல்லவா கூச்சலிடுகிறார்கள்.31 கி.மீட்டர் . அதில் பாதியளவு இலங்கை எல்லைக்குள் இருக்கின்றது. அதில் ஒரு விழுக்காடு இடைவெளி ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதில் எங்கிருந்து பாக்கு நீரிணைக்குப் பாதிப்பு வரப்போகிறது? கண்டிப்பாக வராது.

அடுத்ததாக, இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறார்கள். அகழ்வுப் பணியில் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. அதனால் அங்கே இருக்கும் கற்பாறைகள், பவளப் பாறைகள் சிதறிப் போய்விடும். தோரியம், மக்னீசியம் போன்ற கனிமவளங்கள் அழிந்து போய் விடும் என்று சொல்கிறார்கள்.

சேது சமுத்திர திட்டத்திற்காக மண் அகழ்கின்ற பணியைச் செய்யும் இடத்தில் மணலே பெருமளவில் இருக்கிறது. 30 அல்லது 40 மீற்றருக்குக் கீழே சுண்ணக்கற்களுடைய புவியியல் அமைப்பு கொண்டவை என்று இந்தியா - இலங்கை ஆழ்கடல் ஆராய்ச்சி கூடங்கள் உறுதி செய்கின்றன. அதனால் அங்கே பாறைகள் உடையும் என்ற நிலையே இல்லை.

இன்னொன்றையும் சொல்கிறார்கள். விண்வெளி கலத்திலிருந்து இந்தியா கடல்வெளியை நாசா எடுத்த ஒளிப்படத்தில் தனுஷ்கோடி கரையிலிருந்து தலைமன்னார் வரை நீளும் திட்டுகள் மனிதனால் கட்டப்பட்ட பாலம் இருப்பதாகவும் அது இராமர் கட்டிய பாலம் என்று அந்த நாசா அமைப்பு கூறியுள்ளதாகவும் கூச்சலிடுகின்றனர்.

இவர்கள் ஏன் நாசாவிடம் போக வேண்டும். இஸ்ரோ அமைப்பு படம் பிடித்திருக்கின்றனர். அவர்கள் இப்படி ஒரு கருத்தை கூறவில்லையே. ஆழம் குறைந்த கடலில் மணற்திட்டு தொடர்ந்து இருப்பதையே விண்வெளிப் படம் காட்டும் . அதற்கு மேல் அதற்கு விளக்கம் தருபவர் புவியியல் கடலியலயாளரோ , நாசாவோ இஸ்ரோவோ இல்லை.

சேது கால்வாய் அமைவதன் மூலமாக இந்திய நாட்டிற்குப் பயன் கிடைக்கும் . குறிப்பாக தமிழக கடற்கரையோர மக்களுக்கு வளம் சேரும்.

152 ஆண்டுகளுக்கு முன்பு சூயஸ் கால்வாய் அமைந்த பொழுது இன்றைய திருப்பூர் பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்ற நேரடியாகக் கூறினார்களா?

90 ஆண்டுகளுக்கு முன்பு பனாமா கால்வாய் உருவாக்கப்பட்டது. அங்கே அதற்குப் பக்கத்தில் அதே அளவில் இன்னொரு கால்வாயை மக்கள் விரும்புகின்றனர். காரணம் புதிய கால்வாய் உருவாக்குவதன் மூலம் அந்நிய நாட்டு ச் செலாவணியை பெருக்கிக் கொள்ள முடிகிறதாம். அண்டை நாட்டில் சுமுகமான வணிக உறவுகளை ஏற்படுத்த முடிகிறதாம். அதனால், அங்குள்ள மக்கள் இதே போன்ற கால்வாய்த் திட்டத்தை விரும்புகின்றனர்.

ஆனால், 145 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி தினக்குரல்

ஸ்ரீலங்காவில் ஊடக சுதந்திரம் மரணித்து விட்டது





ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஊடக சுதந்திரத்துக்கான அச்சுறுத்தலைக் கண்டித்து நேற்றுக்காலை கொழும்பிலுள்ள தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு முன்பாக தேசிய இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.

இவ் ஆற்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அகிலவிதான காரியவம்சம் தலைமையில் "ஊடக சுதந்திரம் மரணித்து விட்டது" எனும் சுலோகத்துடன் கோசமெழுப்புவதையும், இறுதியில் அக் கோசம் தாங்கிய பிரேதப் பெட்டியை எரியூட்டி ஊடக சுதந்திரத்துக்கான அரசின் அச்சுறுத்தலை உலகுக்குக் காட்டியுள்ளனர்.

திங்கள், 11 ஜூன், 2007

"வெல்க தமிழ்" எழுர்ச்சி விழாவில் சிவாஜிலிங்கமும் கொக்கோகோலாவும்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் புலம் பெயர்ந்த தமிழர்களினால் "வெல்க தமிழ்" எழுர்ச்சி விழாவில் ஸ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் உரையாற்றி முடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன, அவர் தனது உரையில் "தமிழீழம் அமையவிருப்பது சத்தியம்" என ஆக்ரோசமாக கொக்கோகோலா பானம் அருந்தியவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 10 ஜூன், 2007

காணாமற் போகும் தீவுகள்

இந்தோனேசியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 24 சிறு தீவுகள் காணாமற் போய் விட்டன.
2004 மார்கழி 26 திகதி ஏற்பட்ட சுனாமி கடல்கோள் அனர்த்தத்தில் மூன்று சிறு தீவுகள் கடலில் மூழ்கின.

ஏனையவை மண் அரிப்பு மற்றும் சுரங்கத் தொழில் போன்றவற்றினால் மறைந்துவிட்டன. காணாமற் போன 24 தீவுகளும் தனித்தனி பெயருடன் அழைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 9 ஜூன், 2007

இவரைத் தெரியுமா!


சர்வதேச மில்லியனர் திரு.பில்கேட்ஸ் அவர்களும் அவரின் பாரியாரும்!

9 உருக்குலைந்த சடலப் பொதிகளின் படங்கள்



புத்தளம் தும்பலதெனிய பிரதேசத்தின் பற்றைக் காட்டினுள் 9 உருக்குலைந்த சடலங்களை ஸ்ரீலங்கா பொலிஸார் நேற்று மீட்டனர், நேற்றைய களத்துமேட்டில் 13 உருக்குலைந்த சடலங்கள் எனத் தவறாகப் பதிவாகியிருந்தது, 9 பேர் என்பதே உறுதியான தகவலாகும்.

படத்தின் முதற் காட்சியில் ஊடகவியலாளர்கள் திரண்டு நிற்பதும், இரண்டாவதில் கறுப்புப் பைகளில் பொதியிடப்பட்டு சடலங்கள் காணப்படுவதும் பதிவாகியுள்ளது.

கொழும்புக்கு தமிழர்கள் மீள்வருகை

கொழும்பிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களைப் பலாத்காரமாக வெளியேற்றிய ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்தது தெரிந்ததே,வெளியேற்றப்பட்ட தமிழர்கள் விரும்பினால் உரிய ஆதாரங்களைக் காட்டி மீண்டும் கொழும்புக்கு வரலாம் என்றும் பாதுகாப்புத் தரப்பினால் கூறப்பட்டது.

தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கமும் ஜனாதிபதியும் கட்டுப்பட வேண்டிய நிலையில் கட்டாயத்தின் பேரில் அனுப்பப்பட்ட தமிழர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியில் இவ் உத்தரவினால் 186 தமிழர்கள் கொழும்புக்கு ஐந்து பேரூந்துகளில் பாதுகாப்புடன் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 8 ஜூன், 2007

13 உருக்குலைந்த சடலங்கள் மீட்பு

புத்தளம் மாவட்ட துமலதெனியா வென்னப்புவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உருக்குலைந்த நிலையில் 13 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதில் 11 ஆண் சடலங்களும், இரு பெண் சடலங்களும் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதேபோல் இன்னும் பல சடலங்கள் இப்பகுதியில் காணப்படலாமெனவும் அறிய முடிகின்றது.

இதுவரை அடையாளம் காணப்படாத இச்சலங்கள் காணாமல் போன தமிழ் மக்களின் உடலங்களாக இருக்கலாமென நம்பப்படுகின்றது.

தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றுவதை நிறுத்தவும் - நீதிமன்ற உத்தரவு

கொழும்பில் தங்கியிருந்த தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றுவதை நிறுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் விக்ரர் பெரேராவிற்கும் அவரது திணைக்களத்திற்கும் ஸ்ரீலங்கா உயர்நீதிமன்றம் தற்காலிக இடைநிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தற்காலிகமாக இவ் இடைநிறுத்தத்தினை மாற்றுக்கொள்ளைகளுக்கான அமைப்பின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பாக்கியசோதி சரவணமுத்து பெற்றுக்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா தமிழர்களை பலாத்காரமாக வெளியேற்றுகின்றது

கொழும்பிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டு பலாத்காரமாக வெளியேற்றுவது தமிழீழத்தின் அங்கீகாரத்தின் ஒத்திகையாக இருக்கலாமென எண்ணத் தோன்றுகின்றது, ஒரு நாட்டினுள் அனுமதியின்றி சட்ட விரோதமாக குடியேறியவர்களை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் குடியகல்வு அதிகாரிகளின் உதவியுடன் பொது மன்னிப்பு வழங்கி அவரவர் நாட்டுக்குரிய எல்லைக் கோடுகளில் கொண்டு விட்டு விடுவது சாதாரண விடயம். அதே பாணியில் ஈழ நாட்டில் இருந்து வந்து சட்டவிரோதமாக ஸ்ரீலங்காவில் பகுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஈழ நாட்டின் எல்லைக் கோடுகளில் கொண்டு விடுவதாக நினைக்கத் தோன்றுகின்றது.

விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை பலாத்காரமாக வெளியேற்றுவது மனித உரிமை மீறாலாகுமென்று பல தமிழர் அமைப்புக்களும் அறிக்கை விடுத்துள்ளன.

கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த அப்பாவித் தமிழ்மக்களை பலவந்தமாக அவர்களது பிரதேசங்களுக்கு கொண்டு சென்றமை மனிதஉரிமை மீறலாகும்.
நேற்றைய தினம் கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அப்பாவித் தமிழ்மக்கள் தாம் தங்கியிருக்கின்றமைக்கான தகுந்த காரணங்களைக் காட்டிய போதும் காவல்துறையினர் அவற்றைப் பொருட்படுத்தாது அவர்களை பலவந்தமாக அவர்களது பிரதேசங்களுக்கு கொண்டு சென்றமையானது உண்மையிலேயே ஓர் அடிப்படை மனிதஉரிமை மீறலாகும். இச்செயற்பாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்(ரிஎம்விபி) வன்மையாகக் கண்டிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து வடக்கு கிழக்கு மக்கள் தமது சொந்த இடங்களுக்கு பஸ்களில் ஏற்றி அனுப்பப்பட்டதை வீ.ஆனந்தசங்கரி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
ஒருவித முன்னறிவித்தலுமின்றி ஆண், பெண், குழந்தைகள் என அனைவரையும் அழைத்து பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தமையானது நான் எங்கும் பார்த்திராத கொடூரமான செயலாகும். இப்பேர்ப்பட்ட முட்டாள்த்தனமாக செயல்களால் தான் இன்று புலிகள் இந்தளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளனர். சும்மா இருக்கும் மக்களை புலிகளிடம் பாரம் கொடுப்பது போல் அமைந்துள்ளது இந்நடவடிக்கை. புலிகளுக்கு பயந்து இங்கு வருவது, படையினருக்கு பயங்கு அங்கு செல்வது என மக்கள் எங்கு தான் செல்வது? கடலுக்குள் தான் மக்கள் சென்று தொலைவதா?? இவ்வாறான செயல்களை செய்யக் கூடாது, மனிதாபிமானமுள்ள எவராலும் இச்செயலை அங்கீகரிக்க முடியாது.

கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கும் வடக்குக் கிழக்கு மக்களை பலாத்காரமாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை புளொட் வன்மையாகக் கண்டிக்கின்றது.
தமது சொந்த அலுவல்கள் நிமித்தமும், தத்தமது இடங்களில் பாதுகாப்புடன் வாழ முடியாத சூழலிலும் கொழும்பு வந்து விடுதிகளில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கு மக்களை குறிப்பாக இளவயதினரை பலாத்காரமாக வெளியேற்றி வடக்கு, கிழக்குக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளில் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. இவ்வாறான நடவடிக்கை, மனித உரிமை மீறல்களின் உச்சமாகவே கருத்தப்பட முடியும். ஜனநாயக குடியரசொன்றின் பிரஜைகள் தங்களின் நாட்டில் தாங்கள் விரும்பிய பிரதேசமொன்றில் வாழ முடியுமென்ற அடிப்படை உரிமையையே இது தகர்த்தெறிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசொன்று அதன் பிரஜைகளின் ஒரு சாராரினை தமக்கு விரும்பிய இடங்களில் வாழவிடாது தடுக்கும் நடவடிக்கையானது மிகப்பாரிய உரிமை மீறலாகும்.

கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது பற்றிய விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் தனது மேற்சட்டையை கழற்றி எறிந்து எதிர்ப்பினை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் மேற்சட்டையை கழற்றி எறிந்தார், முதற்தடவையாக இடம்பெற்ற இச் சம்பவமானது பாராளுமன்ற பதிவேட்டில்(கன்சாட்) பதிவாகியுள்ளது.


கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆடிக் கலவரத்தைவிட மோசமான நடவடிக்கை என, பாராளுமன்றத்தில் நேற்று இது தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தில் பேசிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் காரணமின்றி அரசினால் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை போன்று கொழும்பில் தங்கியுள்ள முஸ்லீம்களையும், சிங்கள மக்களையும் அரசு வெளியேற்ற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார் ஹக்கீம்.

கொழும்பில் தங்கியிருந்த தமிழர்களை பலவந்தமாக அரசு வெளியேற்றியதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தாமும் வடக்கு கிழக்கிற்கு செல்லவிருப்பதாகவும் அதேபோன்று வடக்கு-கிழக்கிலுள்ள படையினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

சிவாஜி திரைப்படம்

இரசிகர்களுக்காக சிவாஜி திரைப்படத்தின் பாகங்கள்: http://www.dinamalar.com/trailer/default.asp

வியாழன், 7 ஜூன், 2007

பாவம் ஸ்ரீ காந்தா

ஸ்ரீலங்கா பாராளுமன்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அமைப்பு அல்ல, ரெலோ, ஈபிஆர்எல்எவ், தமிழரசுக் கட்சி போன்ற பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

நாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அமைப்பு அல்ல. விடுதலைப் புலிகளுக்கோ வேறு எந்த ஒரு அமைப்புக்கோ நாம் அச்சப்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பாக நாம் பேசுவதாக குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாவம் என்.ஸ்ரீகாந்தா, தமிழீழ விடுதலைப் புலிகள் கருணை காட்டாமல் போயிருந்தால் புதைத்த இடத்தில் புல் என்ன மரமே முளைத்திருக்கும், அது மட்டுமல்லாமல் மரணித்த பாராளுமன்ற உறுப்பினருக்குப் பதிலாகவே இவரை நியமிக்க வேண்டிய துர்ப்பாக்கியம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டது, அதுவும் தமிழ்ச்செல்வனின் சிபார்சுவில் தெரிவானவர் தான் இந்த ஸ்ரீ காந்தா. நிலமை அப்படியிருக்கும் போது இவரின் வாய் வார்த்தை ஜாலம் பரிதாபமாக உள்ளது.

தமிழீழத்துக்கான அங்கீகாரம்!

கொழும்பையும் அதனை சுற்றியுள்ள கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்களை ஏலவே வெளியேறுமாறு ஸ்ரீலங்கா பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க தங்கியிருக்கும் தமிழர்களை பலோத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா பொலிஸார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையில் வெளியேற்றப்பட்ட தமிழர்களை இருபதுக்கும் மேற்பட்ட பேரூந்து வண்டிகளில் ஏற்றி வவுனியாவில் கொண்டு இறக்கி விட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்றைய நடவடிக்கையில் வெளியேற்றப்பட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பேரூந்தில் ஏற்றப்பட்டு பெஹலியகொட பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரீலங்காவில் இக் கெடுபிடிகளை உற்று நோக்கும் போது தமிழீழ அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது போன்றும், தமிழீழத்தில் உள்ளவர்கள் ஸ்ரீலங்காவில் வதியும் உரிமையற்றவர்களாகவும், கொழும்பு மற்றும் தென்பகுதிகளுக்குச் செல்வதென்றால் அதற்குரிய கடவுச்சீட்டு இருக்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதற்காகவே ஸ்ரீலங்கா இப்படி நடந்து கொள்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது.

புதன், 6 ஜூன், 2007

செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் - ஐ.நா செயலர்

இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் சின்னராசா சண்முகலிங்கம் மற்றும் கார்த்திகேசு சந்திரமோகன் ஆகிய இரு தொண்டர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூண் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் அவர் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த இருவரது கொலைகள் குறித்து ஸ்ரீலங்கா பொலிஸார் முழுமையான புலன்விசாரணையை நடத்த வேண்டும், பத்து மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் திருகோணமலை மாவட்டம் மூதூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டுத் தொண்டர் நிறுவனத்தின் 17 உள்ளூர் பணியாளர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து புலன் விசாரணை நடத்துவதில் இலங்கை அரசாங்கத்துக்கு உள்ள முக்கியத்துவம் போன்ற விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான அதிகரித்துவரும் வன்செயல்களுக்கு எதிராக இந்த வருடத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் ஐ.நா.தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட செஞ்சிலுவைச் சங்க தொண்டர்களின் இறுதி நிகழ்வுகள்







செவ்வாய், 5 ஜூன், 2007

ஊடகவியலாளனின் பார்வையில் ஸ்ரீலங்கா

ஆழ்மனத்தூறல்

கட்டுரையாளர் - இளைய அப்துல்லாஹ்

இலங்கையும் ஊடக சுதந்திரமும் ஜனாதிபதி இலங்கையில் ஊடகவியலாளர்களை அழைத்து "என்னைத்தான் எல்லோரையும் விமர்சிக்க விட்டிருக்கிறேனே. பிறகு என்ன ஊடக சுதந்திரம் இல்லை என்கிறீர்கள்" என்று கோபப்பட்டிருக்கிறார். இதனைத்தான் நாம் சொல்கிறோம் எமக்கு சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை என்று. ஊடகவியலாளர்களைக் கண்டு பயப்படுபவர்கள் எல்லாம் அவர்களைக் கொலை செய்துவிட்டால் சரி என்று நினைத்து விட்டனர் இலங்கையில்.

துவக்குத் தூக்கியவன் எவனாக இருப்பினும் கொலை செய்து விடுவோம் என்கின்ற எண்ணத்தில் தான் அலைகின்றான். துவக்குகள் இப்பொழுது கறுப்புச் சந்தையிலும் ஆமிக்காரர் இடமிருந்தும் எல்லோரும் இலகுவாக வாங்கக்கூடிய நிலைமையில் இருக்கிறது. ஒருவர் சொன்னார் கையெறி குண்டு ஒன்று மூவாயிரம் ரூபாவுக்குக் கிடைக்கிறதாம்.

மனித உரிமை மீறல்கள் அதிகரித்த தேசத்தில் தணிக்கை இல்லாமல் எழுதினால் சுடுவோம் என்கின்ற ஒரு நிலைமையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தணிக்கை உத்தியோகபூர்வமாக இருந்தால் தானே சர்வதேசம் கேட்கும் என்ன ஏது என்று.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு றிச்சட் பௌச்சர் போய்விட்டு வந்த அடுத்த நாள் 320 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்போவதாக ஒவ்வொரு ஃபக்லிட்டி யிலும் இவ்வளவு பேர் என்று சொல்லி கொலைப் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை என்னவென்று சொல்வது. இதனைப் பத்திரிகையில் எழுதுவதா? கூடாதா? கூடாது என்று தான் துப்பாக்கிதாரிகள் சொல்கின்றனர்.

ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவதும், கைது செய்யப்படுவதும், எழுதினால் சுடுவோம் என்பதும், மிரட்டுவதும், இப்பொழுது சாதாரணமாகவே இருக்கிறது இலங்கையில். அண்மையில் உதயன் செய்தியாளர் ரஜிவர்மன், வவுனியாவில் நல்ல கவிஞன் `எஸ் போஸ்' போன்றவர்களை சுட்டுப்போட்டார்கள்.

ஒரு கணம் ஒரு கொலையாளி நினைத்தால் ஒரு உயிர் சர்வ சாதாரணமாக பறிக்கப்பட்டுப் போய்விடுகிறது. ஊடக அமைப்புகள் கண்டனம் விடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றன இலங்கையில்.

பத்திரிகை மெசினில் வேலை செய்கின்றவரில் இருந்து ஆசிரியபீடம் வரைக்கும் பயம் பயம். என்ன செய்வது அண்மையில் தான் தனது நூறாவது `இடி' பத்திரிகையை வெளியிடுவதற்கு முழு முயற்சியோடு ஈடுபட்டிருந்த எஸ்.எச். நிஃமத் என்ற பத்திரிகையாளருக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் காரணமாக அவர் உயிர்ப் பயத்தின் காரணமாக நாட்டை விட்டே ஓடிவிட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டேன்.

அடுத்தது இந்த இணையத்தளங்கள். பல முட்டாள் தனமானவர்கள் சுயமாக ஆரம்பிக்கும் இணையத்தளங்கள் மூலமாக தனிப்பட்ட மனிதர்களை குறி வைக்கிறார்கள். இலங்கை அரசுக்கு பொய்த் தகவல்களைக் கூறும் ஆங்கில இணையத்தளங்களில் இல்லாதவர்களை எல்லாம் `புலி' என்றும் அவரின் ஆதரவாளர்கள் என்றும் எழுதி விடுகின்றார்கள்.

அதனை எடுத்துப் பின்னர் ஹெல உறுமய, சிங்கள இனவாதிகள் நடத்தும் வெப்சைட்டுகளும் போடுகின்றன. போதாதற்கு செய்திகளை ஆராயாமல் அரசாங்க வெப்சைட்டுகளில் கூட போட்டு விடுகின்ற அதி புத்திசாலிகள் இருக்கின்றனர். இப்பொழுது நான், நீங்கள் யார் வேண்டுமானாலும் காசு கட்டியோ அல்லது இலவசமாகவோ வெப்சைட்டோ அல்லது BLOGE புளொக்கோ திறக்கலாம். அதில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.

ஒருவரை `புலி' என்று சொல்லலாம். இல்லை என்று சொல்லலாம். எப்படியும் எழுதலாம் ஏசலம். என்னவும் செய்யலாம். அதனால், எந்த நோக்கமும் இல்லாமல் திறக்கப்படும் வெப்சைட்டுகள் மூலமாக ஒரு சமூகத்துக்கே அவலத்தை ஏற்படுத்தலாம். அந்தக் கைங்கரியத்தை சில தமிழர்கள் லண்டனிலும் செய்து வருகின்றனர். ஊடக சுதந்திரம் என்றால் என்ன என்று முன்னாள் மனித உரிமை ஆர்வலரான மகிந்த ராஜபக்ஷவுக்கு நாம் தான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கோடன் பிறவுணும் அகதிகளும் கடந்த வாரம் பேர்மிங்ஹாமில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ஹோம் ஒஃபிஸஸில் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைத்திருக்கிறது.
இலங்கையில் இவ்வளவு குத்துப்பாடு நடக்கும் பொழுதும் அகதிகளின் அந்தஸ்து கொடுப்பது மறுக்கப்பட்டு வருகிறது. இங்கே பிரிட்டனில்.

இலங்கையில் என்ன நடந்தாலும் அவர்கள் கேட்பது "உங்களுக்கு சொந்தமாக என்ன பிரச்சினை" என்பது தான். அதனை நிரூபிக்கத் தவறினால் அவர்களின் அகதி கோரலை நிராகரித்து திருப்பி அனுப்பி விடுவார்கள். பலருக்கு இது விளங்குவதில்லை. ஏதோ இலங்கையில் குண்டு வெடித்தால் இங்கு அகதி அந்தஸ்து கொடுத்து விடுவார்கள் என்று நினைக்கின்ற அறிவோடும் பலர் இருக்கிறார்கள்.

அத்தோடு, இலங்கையில் சண்டை என்று இங்கு வாங்கோ அகதி அந்தஸ்து பெற்றுத் தருகிறோம் என்று லண்டனுக்குக் கூப்பிடும் பல சட்டத்தரணிகளின் விளம்பரங்களைப் பார்க்கிறேன். இது பொய். காசு புடுங்குவதற்காக அவர்கள் அப்படிச் செய்கிறார்கள். உண்மையில் அகதி அந்தஸ்து பெறுவது என்பது மிகவும் கஷ்டம்.

ஈராக்கில் இருந்து ஜூன் மாத இறுதியில் படை விலகல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பரில் முழு பிரிட்டிஷ் படைகளும் திரும்பிவிடும் என்று தான் இராணுவ விமர்சகர்கள் சொல்கின்றனர்.

அப்பொழுது தான் கோடன் பிறவுண் தேர்தலில் வெற்றிபெறுவார். இந்த சந்தர்ப்பத்தை அவர் விட்டுக் கொடுக்க மாட்டார்.

ஆனால், படைகளை ஈராக்கில் இருந்து கொண்டுவருவது சுலபம்.

அகதிகள் விசனம் பெரும் சிக்கல். பல்லின, பல்கலாசார, பல்மத இணைப்புக் கொண்ட சகிப்புத் தன்மை நிறைந்த பிரிட்டனில் இந்த விடயத்தை முள்ளில் விழுந்த சேலை போல மெதுவாகத் தான் எடுக்க வேண்டும். அல்லாது போனால் மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிடும்.

அதனால், தான் காதும் காதும் வைத்தது மாதிரி காரியங்கள் நடைபெறுகின்றன. நாட்டைவிட்டு அனுப்புகின்றனர். அகதிகளின் அதிகரிப்பு சுதேசிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தது ஐரோப்பிய நாடுகளில் இருந்து இங்கு வருகின்றவர்களாலும் பெரும் தொல்லை என்று பிரிட்டிஷ்காரர் நினைக்கின்றனர்.

அதனால் தான் அகதிகள் மீதான சட்டங்களும் இறுகிக் கொண்டே போகின்றன.

இதில் உடனே நிராகரிக்கக்கூடிய `கேஸ்' களை உடனே விசாரித்து உடனே திருப்பி அனுப்புகின்றனர். கொஞ்சம் அங்கீகரிக்கக் கூடிய `கேஸ்' களை `லீகஸிகேஸ்' (LEGACY CASE) என்று ஒரு புதிய முறையின் கீழ் 5 வருடங்களுக்கு சும்மா இருக்க விட்டு விடுகிறார்கள். இவர்களுக்கு 5 வருடங்களின் பின்பு தான் விசாரணை என்று கடிதம் கொடுக்கிறார்கள்.

இப்பொழுது எவ்வளவு வெளிநாட்டுக்காரர் மேல் இறுக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் ஒரு மாணவர் விசாவில் வந்தவர் 18 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்தால் அவரைப் பிடித்து விசாவைக் கான்ஸல் பண்ணித் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

வேக் பேமிற்றில் வந்தவர் சரியாக வேலை செய்கின்றாரா என்று செக் பண்ணுகின்றனர். அடுத்து "கார்" வைத்திருக்கும் ஒருவர் என்ன விசாவில் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து அவர் அகதியா? என்ன விசாவில் இருக்கிறார். விசா இல்லையா என்பதை எல்லாம் ஆராய்ந்து விசா இல்லாமல் இருந்தால் இரவோடு இரவாக போய்க் கோழி அமுக்குவதைப் போல் அமுக்கித் தூக்கி ஏத்தி விடுகின்றனர்.

எல்லாவற்றையும் முழு நெற்வேக்கில் கனக்ட் பண்ணி வைத்து அங்கு இங்கு அசைய முடியாதபடி அகதிகளை இறுக்கி வைத்திருக்கின்றனர். எல்லாம் தேர்தலை முன்னிட்டு.

அடுத்தது இன்னொரு நன்மை 23.05.2007 அன்று இங்கு (பிரிட்டனில்) நிகழ்ந்திருக்கிறது. அது அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டு விசா இருப்பவர்கள் திருமணப் பதிவு செய்து கொள்ளலாம் என்பது தான். முன்பு அப்படிச் செய்ய முடியாது. அப்படியென்றால் அகதியாக இங்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆண் லண்டன் மாப்பிள்ளை. ஆம் இலங்கையில் இருந்து பெண்ணை ஸ்பொன்ஸர் பண்ணிக் கூப்பிட்டுக் கலியாணம் முடிக்கலாம். இனி பல பேருக்கு வரன் பிரசாதமாக அமையப் போகிறது.

ஹோம் ஒஃபிஸ் சொல்கிறது இது பெரிய தலை வலியாக வரப் போகிறதாம். ஏனெனில், அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டவர்கள் கூட இனி ஸ்பொன்ஸர் செய்யப் போகிறார்கள். இன்னும் ஆட்கள் இங்கு கூடப்போகிறார்கள் என்கிறது ஹோம் ஒஃபிஸ். ஆனால், அழுத்திச் சொல்லலாம் அகதி விசா இருந்தால் அவரும் லண்டன் மாப்பிளைதான்.

முதுகெலும்பு உடைந்த சிவாஜிலிங்கம் (எம்.பி.)

இங்கே லண்டனில் போனவாரம் சிவாஜிலிங்கம் எம்.பி.யை சந்தித்தேன்.

கோட் போட முடியாது, பல்லுத்தீட்ட முடியாது, கதிரையில் உட்கார முடியாது. நடக்க முடியாது, எல்லாவற்றுக்கும் இன்னொரு ஆள் வேண்டும் என்று மிகவும் கஷ்டப்படுகிறார் அவர். "என்ன என்று கேட்டேன்".

போன எலக்ஷன் நேரம் ஈ.பி.டி.பி. யினர் நெடுந்தீவில் வைத்து அடித்ததில் முதுகெலும்பில் முக்கிய பாகம் உடைந்துவிட்டது. அதன் தாக்கம் தான் என்றார்.

எலக்ஷன் கம்பயினுக்குப் போன ஒரு மனிசனை இப்படியா நாயடி பேயடி அடிப்பார்கள்?

ஜனநாயக வழியில் எலக்ஷன் கேட்கவும் விடமாட்டார்கள். ஆயுதம் தூக்கிப் போராடவும் விடமாட்டார்கள். எடுத்ததற்கெல்லாம் அடி, உதை, சூடுதானா?

ஏன் இந்தத் தமிழர்கள் யோசிக்கிறார்கள் இல்லை.

ஏன் கருத்துகளை கருத்துகளால் மோத இன்னும் திராணியில்லாமல் போய்விட்டது. ஒரு எதிரியை அது அரசியல், கருத்து ரீதியானதாக இருந்தாலும் வாயை அடைத்துப் போட ஒரே வழி அடித்து முறிப்பது தானா?

இறந்து போனால் ஒரு தமிழன் தானே இருக்கிறான் என்ற எண்ணம் கிஞ்சித்தும் எழாமல் வக்கிரமான உணர்வுகளோடு அலைகிறோம் நாம். இப்படியே புடுங்குப்பட்டு கொலை செய்து எத்தனை அறிவாளிகளை இழந்துவிட்டோம்.

இங்கு லண்டன் வந்தும் இன்னும் எமது தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. எல்லாவற்றுக்கும் பிரச்சினை தான் என்று ப.வை. ஜெயபாலன் எனது செவ்வி ஒன்றில் தெரிவித்தார்.

கோவில் திறந்தால் எதிர்க் கோவில், பாடசாலை திறந்தால் எதிர்ப் பாடசாலை, முதியோர் இல்லம் திறந்தால் எதிர் முதியோர் இல்லம், கடை திறந்தால், எதிர்க் கடை, அவர் மலிவு விலை விற்றால் அதனை விட மலிவு விலை என்று எதிர்த்தே பழகிவிட்டார்கள் தமிழர்கள். இப்படி இப்படியே எல்லாவற்றுக்கும் எதிர்த்து- சகிப்புத் தன்மையே இல்லாமல் ஆகிவிட்ட ஒரு சமுதாயமாகவும் உள் சமூகத்துக்குள்ளேயே பொறாமை மிக்க சமுதாயமாகவும் எமது மக்கள் ஆகிவிட்டார்கள். அதுதான் பெருங்கவலை எனக்கு. இது சாகும் வரை மாற மாட்டாதாக்கும்.

நன்றி தினக்குரல்

சர்வதேசத்தின் கண்களுக்கு மண்ணைத் தூவும் மகிந்த ராஜபக்ஷ்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச்செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்க தொண்டர்களான அலகுச் செயலாளர் சின்னராசா சண்முகலிங்கம் மற்றும் உதவி நிறைவேற்று உத்தியோகத்தர் காத்திகேசு சந்திரமோகன் இருவரினதும் சடலங்கள் மக்களின் அஞ்சலிக்காக கொழும்பு ஜயரட்ண மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. இருவரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

அஞ்சலி செலுத்தி தமிழர்களின் நண்பனென்று தன்னை அடையாளப்படுத்தப் பார்க்கின்றாரா அல்லது சர்வதேசத்தின் கண்களுக்கு தானும் தன் இனமும் குற்றவாளிகள் அல்ல என்று கூறமுற்படுகின்றாரா மகிந்த ராஜபக்ஷ?

சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு தொடர்ந்து மண்ணைத் தூவ முடியாதென்று மகிந்த ராஜபக்ஷவும், அவரின் எடுபிடிகளும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத்திற்கு ஆயுதப் போரை முதலில் வித்திட்டவர் போராளி சிவகுமாரன்

ஈழப் போராட்டத்தினை ஆயுதப் போராட்டமாக மாற்றிய பெருமைக்குரியவர் சிவகுமாரன். இவ்விடயம் ஈழப் போருடன் சம்பந்தப்பட்டோர் அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம், ஆனால் காலப்போக்கில் இவரின் நாமத்தை அழித்துவிட வேண்டுமென சில தமிழீழ விடுதலை இயக்கங்கள் கங்கணங்கட்டி நிற்பது அறிந்ததே.

ஆயுதப் போராட்டத்துக்கு வித்திட்டவர் சிவகுமாரன் எனும் பெயர் முன்னிலைப் படுத்தப்படுமாயின், எங்கே தமக்குரிய மரியாதையும் கௌரவமும் அடிபட்டுப் போய் விடுமோவென நினைத்து சிவகுமாரனின் தியாகத்தை மழுங்கடிப்பது வருத்தந்தரும் விடயமாகும்.

இவரின் தியாகத்தை கௌரவிக்கும் முகமாக ஈபிடிபி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஈழப் போராட்டத்தின் முதல் வித்தாக சிவகுமாரன் எனக் கௌரவம் செய்து "விடுதலை வித்துக்கள் தினமாக" இன்றைய ஆனி 5 ஆம் திகதிக்கு மகத்துவம் செய்கின்றனர். ஆனால் அவர்களின் கட்சிக்காக உழைத்து மரித்த தோழர்களுக்கு அவர்கள் மகத்துவம் செய்வதில்லை என்பது பதிவு செய்யப்பட வேண்டிய விடயம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பட்டியலில் பொன் சிவகுமாரன் அவர்களை தமிழீழத்தின் முதல் மாவீரரெனப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 4 ஜூன், 2007

குழந்தைகள் மனிதத்தன்மையை இழந்து விடாமல் காக்க வேண்டியது மிகவும் அவசியம்

எழுதியவர் - இரா. காமராசு
இன்று குழந்தைகளுக்காக மிகச் சிலரே எழுதுகின்றனர். சில இதழ்களும் சில இணைப்பு இதழ்களும் வெளிவருகின்றன. இவற்றில் வருபவை பெரும்பாலும் பாடல்கள், படக்கதைகள், துணுக்குகள், விடுகதைகள், கதைகள் என்பதாக இருக்கின்றன. எல்லாவற்றிலும் `நீதிபோதனை' தவறாமல் இடம்பெறுகிறது.

தொலைக்காட்சி அலைவரிசைகள் குழந்தைகளின் வாசிப்புப் வழக்கத்தைப் பறித்துவிட்டன. எப்படிக் குழந்தைகள் நமது விளையாட்டுகளைக் கைவிட்டு விட்டு கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கைதட்டத் தொடங்கினார்களோ அப்படிப் புத்தகங்களையும் தூர நிறுத்திவிட்டார்கள். தொலைக்காட்சி பார்த்தலில் வெறும் பார்வையாளர்களாகச் சுருங்கிப் போய்விட்டார்கள்.

குழந்தைகளின் உலகம் அலாதியானது. அவர்களின் உலகம் கனவுகளால் நிரம்பியது. அவர்களின் உலகில் பெரியவர்களின் உலகச் சிக்கல்கள் இல்லை. எதையும் நிதர்சனமாக அணுகும் இயல்பு குழந்தைகளுடையது. குழந்தைகளுக்கான சிறு வெளியீடுகள் அதிகம் வெளிவர வேண்டும். வயதும் புரிந்து கொள்ளும் திறனும் அறிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. வயதுக்கேற்ற நூல்கள் எழுதப்பட வேண்டும்.

அறிவியல், ஓவியம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் என எல்லாவற்றுக்குமான தனித்தனியான எழுத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குழந்தைகளுக்காக எழுதி வெளிவரும் அதிலும் பள்ளி நூலகங்களுக்கு வரும் நூல்களில் தொண்ணூறு விழுக்காடு பதிப்பகங்கள் நூலக ஆணை பெற்றுச் சில எழுத்தாளர்களை அமர்த்தி எழுதும் நூல்களாகவே இருக்கின்றன. இவற்றில் ஆழமோ கவர்ச்சியோ பன்முகத்தன்மையோ இருப்பதில்லை.

குழந்தைகள் மனநிலையில் வாழ்ந்து பார்த்தால் மட்டுமே அசலான எழுத்துகள் பிறக்கும். இல்லையென்றால் அறிவுரைக் கதைகளே வலம் வரும். குழந்தைகளின் உள்ளுணர்வுகளைப் பிரதிபலிக்கும் படைப்புகளை வடிவ நேர்த்திகளில் வழங்கும்போது அவற்றின் தாக்கம் அளவிட முடியாத சாதனையாக அமையும்.

குழந்தைகள் தாங்கள் பார்த்த பூச்சிகள், பறவைகள், விலங்குகள், செடிகள், கொடிகள், மரங்கள், பேசிய- கேட்ட ஒலிகள், உரையாடல்கள் ஆகியவற்றை எழுத்தில் பார்த்து வாசிக்கும்போது பரவசமடைகின்றனர். குழந்தைகள் பற்றிய எழுத்துகளை குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதுவது, குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதுவது, குழந்தைகளைப் பற்றி எழுதுவது என வகைப்படுத்தலாம்.

குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதுவது மட்டுமே பெரும்பாலும் குழந்தை இலக்கியமாக அடையாளம் கொள்ளப்படுகிறது. தமிழில் சாதனைகள் செய்த பெரிய எழுத்தாளர்களில் எத்தனை பேர் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். குழந்தைகள் வரைகிற ஓவியங்கள், எழுதுகிற பாடல்கள், கதைகள் ஆகியவற்றை வெளியிட்டுச் சிறப்பிக்க வேண்டும். அவர்களுக்கான சந்திப்பு முகாம்களை ஏற்படுத்த வேண்டும். அந்த முகாம்களில் அனுபவமிக்க படைப்புக் கலைஞர்கள் மூலம் கலந்துரையாடி குழந்தைகளின் படைப்பாற்றலைச் செழுமைப்படுத்தலாம்.

பள்ளி இலக்கிய மன்றங்கள், நுண்கலை மன்றங்கள் பெயரளவிற்கு ஆகிவிட்டன. சாதனை படைத்த பல சான்றோர்கள் தங்களது பள்ளி வாழ்வில் இத்தகைய மன்றங்கள் தமக்கு அளித்த ஊக்கமும், அங்கீகாரமுமே தங்கள் உருவாக்கத்துக்கு அடித்தளமாக அமைந்ததாகக் கூறுகின்றனர்.

ஆனால், தற்போது தேர்வுகள்- மதிப்பெண்கள் மீது குவிக்கப்பட்டிருக்கிற கவனம், கவர்ச்சிகளால் இத்தகைய மன்றங்கள், நூலகச் செயற்பாடுகள் இன்று முடங்கிப் போய்விட்டன. குழந்தைகளிடம் குறுகுறுப்பும் குதூகலமும் கற்பனையும் நிரம்பிய படைப்பாற்றல் உணர்வு இயல்பிலேயே பொதிந்திருக்கிறது.

குழந்தைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கி ஊக்கப்படுத்தினால் அவர்களின் தனித்திறன்கள் வளரும். அடுத்து குழந்தைகளின் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், பிரச்சினைகள் சார்ந்த படைப்புகளை உருவாக்குவது. இப்படியான குழந்தைகள் வாழ்வியல் குறித்த கதைகள், கவிதைகள், நாவல்கள், திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

குழந்தைகளின் பிரபஞ்சத்தை எல்லா வயதுவந்த ஆணும் பெண்ணும் புரிந்து கொள்கிறபோது குழந்தைகளைக் கொண்டாடும் மனப்பக்குவம் வரும்; வளரும். ஆதரவற்ற குழந்தைகள், ஒரு பெற்றோர் குழந்தைகள், ஊனமுற்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய புரிதல் இருந்தால்தான் இவர்களைப் பற்றிய பரிவுணர்வு ஏற்படும்.

பல்வேறு பிரிவு குழந்தைகள் கூடும் பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த காலை வணக்கக் கூட்டங்கள், பிரார்த்தனைகளைத் தவிர்த்து இயற்கை சார்ந்த அழகுகளை உணர்தல், போற்றுதல், நாடு, மொழி சார்ந்த சாதனைகள், தியாகங்களை உணர்தல், போற்றுதல், மனிதப் பண்புகள் சார்ந்த பாடல்களைச் சேர்த்துப் பாடச் செய்தல் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.

சாதி, மதம், பால் சார்ந்த வேறுபாடுகளைக் களைய முதலில் இவற்றின் `தன் உணர்வை' தகர்த்தாக வேண்டும். குழந்தைகள் நிலையில் இதை உருவாக்க வேண்டும். "நாட்டின் நாளைய தந்தையராக உரிமை கொண்டாடும் இன்றைய மாணவர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்.

உப்பு தனது உப்புத்தன்மையை இழந்துவிட்டால் அதைவேறு எங்கிருந்து பெறுவதற்கு இயலும்?" என்பார் மகாத்மா காந்தி. ஆம், நம் குழந்தைகள் மனிதத்தன்மையை இழந்துவிடாமல் எழுத்து மூலம் காக்க வேண்டியது அவசியம்.

நன்றி - தினமணி

ஞாயிறு, 3 ஜூன், 2007

இன்றைய கிசு கிசு நாயகி

ஏன் இந்த நிலை?

இந்திய அமைதிகாக்கும் படையுடன் தப்பியோடிய வரதராஜப்பெருமாள்

ஈழ விடுதலையை வென்றெடுக்கவென புறப்பட்ட இயக்கங்கள் காலவோட்டத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சேடமிழுக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளால் கே.பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழ மண்ணில் தடை செய்யப்பட்ட பின்னர் இந்திய இலங்கை உடன்படிக்கையைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் வரதராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர் மீண்டும் காலூன்ற முயற்சித்தனர். எதுவுமறியாத அப்பாவி விவசாயிகளையும், பாடசாலை மாணவர்களையும் ஆயுத முனையில் கடத்திச் சென்று தமிழ் தேசிய இராணுவம்(T.N.A)எனும் பெயரில் இராணுவப் பயிற்சி கொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட முயற்சி செய்தனர், தமிழ் தேசிய இராணுத்தை அமைக்க ஈழ விடுதலை இயக்கங்களான TELO, ENDLD, PLOT,EPRLF போன்றன இதே பாணியில் செயற்பட்டன. அவ்வேளையில் இந்திய அமைதி காக்கும் படையினரின் உதவியுடன் மாகாணசபைத் தேர்தலில் பங்கேற்று வடக்கு கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை இயக்கத்தினரும் கைப்பற்றினர்.

ஜனாதிபதி பிரேமதாச இந்திய அமைதி காக்கும் படையினரை வெளியேறுமாறு கோரிய போது, தமிழீழ விடுதலைப் புலிகளும் ஸ்ரீலங்கா இராணுவத்தினருடன் இணைந்து மேற்கூறப்பட்ட தமிழ் தேசிய இராணுவத்தையும் ஏனைய இயக்கத்தினரையும் வேட்டையாடினர். இந்திய அரசாங்கம் தனது இராணுவத்தை வாபஸ் பெறுவதாக அழைத்தது, நிற்கதியாகிய அவ்வியக்கங்கள் இந்திய இராணுவத்தினருடனேயே இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். தப்பிச் செல்லும் போது வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் தன்னிச்சையாக "ஈழப் பிரகடனம்" செய்து விட்டு தங்கள் குழுவினருடன் தப்பிச் சென்றார்.

இந்தியாவுக்குத் தப்பிச் சென்று சில காலங்களில் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் செயலாளர் நாயகமாகம் பத்மநாபா தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டார், அதன் பின் அவ்வியக்கத்தின் தலைமை பொறுப்பைப் பெறுவதற்கு வரதராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர் இயலுமான குறுக்கு வழிகளையெல்லாம் பயன்படுத்தினர், இரு சாரியாகப் பிரிந்து செயற்படலாயினர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எனும் நாமத்துக்குச் சொந்தக்காரன் யாரெனும் போட்டி தொடர்ந்ததால் நீதிமன்றத்தின் உதவியை நாடினர், பத்மநாபாவால் உருவாகிய இயக்கம் வரதராஜப்பெருமாளுக்கு உரியதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது, உதிரியாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தனக்கு உதவியளித்த உறுப்பினர்களுடன் ஈபிஆர்எல்எவ் சுரேஷ் அணியென இயங்க ஆரம்பித்தார், அரசியலில் நுழைய பெரும் பிரயத்தனம் மேற்கொண்டார், பாராளுமன்ற ஆசனம் கிடைப்பது கானல்நீர் போன்று தெரிந்ததால் எதிரியென்றே கூறிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மண்டியிட்டார், அவர்களின் தியாகத்தில் கிடைத்த பரிசாக இறுதி நேரத்தில் சுரேஷ்பிரேமச்சந்திரனுக்கும் ஓர் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்துடன் துண்டைக் காணோம் துணியைக் காணோமென தப்பியோடிய வரதராஜப்பெருமாள் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையாரின் உதவியுடன் தனது இயக்கத்துக்கு உயிரூட்ட முனைந்தார், ராஸிக் எனப்படும் முத்துலிங்கம் கணேசமூர்த்தி என்பவரை முன்னிலைப்படுத்தி ஸ்ரீலங்கா இராணுவ துணைப்படையில் இணைந்தார், பிரிகேடியர் ராஸிக் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கில் இருந்து தப்ப முடியாமல் போகவே சுபத்திரனுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது அவரும் கொல்லப்பட இறுதியில் ஸ்ரீதரன் பொதுச் செயலாளராக்கப்பட்டார்.

இவ்வளவுக்கும் மத்தியில் தலைமைப் பொறுப்பை பெற்றுக்கொண்ட வரதராஜப்பெருமாள் எங்கு இருக்கின்றார் எனப் பலருக்கும் தெரியாமல் இருந்து, பெங்களூரில் தனது குடும்பத்துடன் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மாட்டு பண்ணையுடனும் அரச பாதுகாப்பில் இருப்பதாக அப்போதைக்கப்போது தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியால் வெளியிடப்படும் "கண்ணோட்டம்" பத்திரிகையில் வரதராஜப்பெருமாள் எழுதும் கடிதம் பிரசுரமாகி வருகின்றது, கடைசியாக வந்த கண்ணோட்டம் பத்திரிகையில் வந்த வரதராஜப்பெருமாளின் கடிதம் பின்வருமாறு உள்ளது.


தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும். அளவுக்கு மிஞ்சிய பேராசை அழிவைத் தவிர வேறெதனையும் தராது

அன்பார்ந்த நண்பர்களே!

உங்கள் அனைவருக்கும் எனது இந்த பன்னிரண்டாவது கடிதத்தின் முதல் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் வாழும் சூழ்நிலை மிகவும் ஆபத்துக்கள் நிறைந்தது என்பதில் புதினமொன்றுமில்லை. ஆனால், இங்குள்ள அரசியற் சூழலோ முன்னெப்போதையும்விட மிகவும் சிக்கலானதாகவும், குழப்பமானதாகவும் உள்ளது. இங்குள்ள நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. அப்படித்தான் சிரமப்பட்டுப் புரிந்து கொண்டாலும் அதனை மற்றவர்களுக்குப் புரிய வைப்பதென்பது கல்லை உருக்கி வார்க்க முனைவது போன்றதாகும்.

ஏனெனில் இங்கு அன்றாட நிகழ்ச்சிகளே மக்களின் மனங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் யுத்த அரசியலை மொத்தமாகத் தொகுத்து, பகுத்துப்பார்ககும் நிலையிலோ அவர்கள் இல்லை. இலங்கையின் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இனவாத அரசியலின் தன்மைகளையும் போக்குகளையும் வரலாற்று ரீதியாகப் புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே மக்கள் உள்ளனர்; உள்ளாக்கப் பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையானவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் இருமுனை மூலோபாயத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஒன்று புலிகளின் எதிhப்பைச் சம்பாதிக்கக்கூடாது. இன்னொன்று மக்களின் அன்றாட துன்பங்களை அரசாங்கத்துக்கு எதிரான உணர்ச்சி அரசியலாக்கிக் கொள்வது. இங்கு நேர்மையாக நடந்து கொள்ள முற்படுவதோ, உண்மைகளை ஒழிவு மறைவின்றிப் பேசுவதோ அத்துடன் எதிலும் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை தர்க்க ரீதியாகவும், பகுத்தறிவு பூர்வமாகவும் சிந்தித்து அதன்படி நடக்க முற்படுவதோ இங்கு தோல்வியைத் தழுவுவதற்கான அணுகு முறைகளாகவே உள்ளன. அதுமட்டுமல்ல பெரும்பாலானோரின் வெறுப்புக்கும், கோபத்துக்கும் உள்ளாக வேண்டியும் ஏற்படுகின்றது. மலினமான அரசியல் நடத்துபவர்கள் வெகு இலகுவாக சேற்றைவாரி இறைப்பதற்கும் உள்ளாக வேண்டியுள்ளது.

பேச்சில் உண்மையும், நடத்தையில் நேர்மையும், சமூகத்தைப் பற்றி பொறுப்புணர்வுடன் சிந்திப்பவர்களாகவும் இருப்பவர்கள்; பெரும்பாலானோர் இங்குள்ள ஆபத்தான சூழ்நிலையினால் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். நாட்டிலே இருப்பவர்கள் தமது குரல்களை உள்ளே இழுத்துக் கொண்டு மௌனமாகிக் கொண்டார்கள். வெளிநாடுகளிலும் அதுதான் நிலை.

ஒரு சமூகம் ஆரோக்கியமாக வளர்ச்சியடைய வேண்டுமானால் பேசவும, எழுதவும், கூட்டம் கூடவும் சுதந்திரம் வேண்டும். நவீன சமூகங்களின் வளர்ச்சியின் அடிப்படையே இதுதான். குறைந்தபட்சம் அந்த சுதந்திரத்திற்காகப் போராடும் சந்தர்ப்பங்களாவது வேண்டும். மாற்றுக் கருத்துக்களின் மோதல்கள், விவாதங்கள் இல்லாமல் ஒரு சமுதாயத்தில் அறிவு வளர்ச்சி ஏற்படமுடியாது. சரி எவை பிழை எவை என்பது பகுத்தறியப்படமாட்டா. ஒரு சமூகத்தின் அறிஞர்களே முதுகு வளைந்து தலையைக் குனிந்து தமது பேனைகளையும் சுருட்டி வைத்துவிட்டு மௌனிகளாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டால் அந்த சமூகத்தின் அழிவை யாராலும் காப்பாற்ற முடியாது. இதுதான் இன்றைய இலங்கைத்தமிழர் சமூகத்தின் நிலை.

இலங்கைத் தமிழர்களாகப் பிறந்தவர்கள் பெருமைப்பட இன்று எது மிச்சம் வைக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச விமான நிலையங்களில் இன்று மிக மோசமான அளவுக்கு சந்தேகங்களுக்கும் சோதனைகளுக்கும் உள்ளாக்கப்படுவதைக் கண்டு பெருமைப்படவா? உலகில் நண்பர்களே இல்லாத ஒதுக்கப்பட்ட, தீண்டத்தகாத சமூகமாக ஆகிவிட்ட தனித்துவத்தைக் கண்டு பெருமைப்படவா? சொந்த சமூகத்தில் ஆயிரக்கணக்கில் அரசியல் தலைவர்களும்;, கல்விமான்களும், நிர்வாகிகளும், இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டு முதகெலும்பில்லாத ஊனச் சமூகமாக ஆக்கப்பட்டு விட்டதைக் கண்டு பெருமைப்படவா? அல்லது சர்வதேச வல்லரசுகள் சிறீலங்கா அரசோடு தமது கணக்கைச் சமப்படுத்திக் கொள்வதற்கான கருவியாக தமிழர்களின் சாவுகள்; ஆகிப் போய்விட்டதைக் கண்டு பெருமைப்படவா?

இன உணர்வையும், எல்லை ரீதியான அடிப்படையையும்; கொண்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் அதன் முற்போக்கான பாதையில் இருந்து சிறிது விலகினாலோ அல்லது பிழையான தலைமைகளின் செல்வாக்கின் கீழ் வந்துவிட்டாலோ அப்போராட்டம் மிகவும் பிற்போக்கானதாகவும் ஆக்கப்பூர்வமான முன்னேற்றமெதனையும் தராததாகவும் அமைந்துவிடும் என்பது பற்றிய புரிதல், இந்தப் போராட்டம் ஆரம்பித்து சில ஆண்டுகளிலேயே எம்மிடையே ஏற்பட்டது. அதைத் தடுப்பதற்காகவே சமூக பொருளாதார சமத்துவம், எகாதிபத்திய எதிர்ப்பு, சர்வதேச புரட்சிகர முற்போக்கு சக்திகளுடன் ஒன்றுபடல் போன்ற கருத்துக்களை ஈழ விடுதலை இலட்சியத்தோடு இணைத்தோம். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வர்க்க உணர்வுகளை வளர்த்து அவர்களை அணிதிரட்ட வேண்டும் என முயற்சித்தோம்.

ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஸ்தாபன ரீதியான கட்சி அரசியல் தலைமையைப் போராட்டத்துக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடுகள் செய்தோம். போராட்டத்தில் வேறு அணிகள் ஈடுபடும் போது ஏதோ ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் முரண்பாடுகள் விலக்கப்பட்ட ஒற்றுமை வேண்டும் என்பதற்கான ஐக்கிய முன்னணி ஏற்படுவதற்காக தொடர்ந்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். என்றாலும் குறுகிய கால ஓட்டத்திலேயே எமது விடுதலைப் போராட்டம் மீளமுடியாத அழிவுப் பாதைகளுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டது.

தமிழர்கள் மத்தியிலுள்ள உயர்சாதி செல்வாக்கு
வெளிநாடுகளில்; பிற்போக்குத்தனங்களோடும் குறுகிய சுயநலன்களோடும் வாழுகின்ற தமிழர்களின் செல்வாக்கு.
பிற்போக்குத்தனமான அரசியல் அதிகாரங்களின் செல்வாக்குக்கு உட்பட்ட தமிழ்நாடு எமது போராட்டத்தின் பின்தளமாக அமைந்தமை.
சுதந்திர ஈழம் அமைவதை ஏற்றுக் கொள்ளாத இந்திய அரசின் உதவிகளை எல்லையற்ற ரீதியில் எதிர்பார்த்து தமிழர்களின் போராட்ட அணிகள்; திடீர் விரிவாக்கத்துக்கு உள்ளானமை.
மொசாட் உளவுப்படை உட்பட ஏகாதிபத்திய உளவு ஸ்தாபனங்கள் எமது போராட்ட அமைப்புக்களுக்குள் தமது செல்வாக்குகளை வளர்த்துக் கொண்டமை.
ஆகிய காரணிகள் ஒட்டு மொத்தத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை அணிகளுக்கிடையில் மோதல் என்ற வடிவத்தில் தோற்கடித்துவிட்டன.

1986ம் ஆண்டு புலிகள், ரெலோ மீது யுத்தம் ஆரம்பித்து அதன் 300க்கு மேற்பட்ட உறுப்பினர்களை படுகொலை செய்த அன்றே ஈழ விடுதலைக்கான யுத்தத்தில் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். இன்றைக்குத் தமிழர்களின்நிலை மிகவும் விசனத்துக்குரியதாகும். மூட்டையிலிருந்து அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்கனிகள் போல, மேய்ப்பனில்லாத ஆடுகள் போல ஆகிவிட்டார்கள். இப்போதும் தமிழர்களின் அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியில் ஒன்றுபட்ட ஓர் அணியை உருவாக்கி ஒரு தலைமையை வழங்க முடியும். அது சாத்தியமில்லை. தமிழர் கூட்டணி;, தமிழ்க் காங்கிரஸ், ரெலோ ஆகியவற்றின் கூட்டணி ஒரு சுயாதீனமற்ற ஒன்றாக புலிகளுடன் பேசித்தான் அரசாங்கம் ஓர் அரசியற் தீர்வுக்கு வர வேண்டும் எனக் கூறுகின்றன. இவர்களைப் புலிகள் தங்களின் அரசியற் பிரதிநிதிகள் என்று அங்கீகரிக்கவில்லை. அதுமட்டுமல்ல, புலிகளின் தேசத்துரோகிகள், சமூக விரோதிகள் மற்றும் மரண தண்டனைப் பட்டியலில் இருந்து இன்னமும் இந்தக் கட்சிக்காரர்கள் நீக்கப்படவில்லை. இவ்வளவு பாட்டுப்பாடியும் காவடி தூக்கியும் இவர்களின் ஜனநாயக உரிமைகளைக் கூட அங்கீகரிக்காத புலிகள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவார்கள் என்று கூறுவது புரியாத தனமா? போலித்தனமா?

இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலும் இப்போதும் உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி அகதிகளாகத்தான் இருக்கிறார்கள். அகதிகள் என்று பெயர் பெறாதவர்கள் கூட திறந்தவெளி அகதி முகாம்களில் வாழ்வது போலத்தான் அவர்களின் சீவியம் அமைந்திருக்கின்றது.

இன்று இலங்கைத் தமிழர்கள் உலகம் பூராவும் பரந்து விட்டதனால் உலகின் பல பாகங்களில் பல யாழ்ப்பாணங்களும், பல மட்டக்களப்புக்களும் உருவாகியிருக்கலாம். ஏன்? பல வெள்ளவத்தை , பம்பலப்பிட்டிகளும் கூட உருவாகலாம். பல்வேறு நாடுகளிலும் நல்லூர் திருவிழாவையும் மிஞ்சிய தேர்த்திருவிழாக்கள் நடக்கலாம். சுடச்சுட அரியாலைத் தோசை, கரையூர் பால் அப்பம், புங்குடுதீவு சோறு கறி, கொட்டடி இடியப்பம், ஆனைக்கோட்டை நல்லெண்ணெய், மட்டுவில் கத்தரிக்காய், மண்டைதீவுக் கீரை, உரும்பிராய் வடி, பலாலிக் கிழங்கு, பருத்தித்துறை வடை, ஓட்டமாவடி சட்டித்தயிர், காரைத்தீவு சம்பா அரிசி எனத் தமிழர்களின் கடைகள் கனடாவின் ஒட்டவா தொடக்கம் லண்டனின் தேம்ஸ் நதியையும் தாண்டி ஐரோப்பாவின் அல்ப்ஸ் மலை அடிவாரம் வரை பரந்து விரிந்து இலங்கைத் தமிழர்களின் ஊர்ப் பெருமைகளைப் பறைச் சாற்றக்கூடும். அதெல்லாம் மண்ணை விட்டுப் போனவர்களின் ஆதங்கத்துக்குத் தீனி போடுவதற்கான வியாபார வடிவங்களே. அங்கு அடுத்த தலைமுறை அப்படியில்லை. அவர்களை இணைப்பது ஒரு மொழியென இருக்காது, ஒரு பண்பாடென இருக்காது. அடுத்த தலைமுறை, உலகில் 'எனது தேசமே சிறந்தது" என இந்தியர்கள் பாடுவது போலப் பாடிப் பெருமைப்பட அவர்களின் தேசத்தின் நிலைமையும் இல்லை. ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமது மூதாதையரின் தாய் நாட்டை நினைத்துப் பார்ப்பதற்கு இஸ்ரேலியருக்கு இருந்தது போல தமிழருக்கு ஒரு பைபிளும் கிடையாது.

எனவே சுதந்திர ஈழம் என்பது காலம்கடந்த விடயம். அதற்காகத் தான் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோம். அதைப் புலிகள் எனும் கோடரிக் காம்புகள் வெட்டிச் சாய்த்து விட்டன. கூரையைக்கூட வேயமாட்டாத இவர்கள்; வானத்திலே கோட்டை கட்டுவார்கள் என்று ஒரு சமுதாயத்தையே அழியவிட்டு வேடிக்கை பார்க்கும் நிலைதான் இங்கு செல்வாக்குச் செலுத்துகிறது. இதிலிருந்து பெரும்பான்மையான தமிழர்கள் விடுபடவில்லையாயின் - விடுவிக்கப்படவில்லையாயின் இலங்கைத் தமிழர்கள் என்னும் தேசிய இனம் அழிந்து போகும்.

அன்பு நண்பர்களே!

ஒன்றை மட்டும் மனந் திறந்து சொல்ல விரும்புகிறேன். இங்கு துணிச்சலான சிங்களத் தலைவர்கள் சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்களின் ஒப்புதலைப் பெற்று தமிழர்களின் அரசியல் உரிமைகளைக்; காப்பாற்றினால் சரி மற்றபடி வேறு யாரும் காப்பாற்ற முடியாது என்ற நிலைமைதான் காணப்படுகின்றது. அப்படியான நிலைமைக்கே இன்று தமிழர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அப்படிச் செயற்பட சிங்களத் தலைவர்கள் முன்வந்தாலும்; இரண்டு விடயங்கள் சாத்தியமில்லை. ஒன்று தமிழர்கள் மத்தியில் காணப்படும் அதிதீவிரமான அபிலாஷைகளைத் திருப்திப்படுத்த முடியாது. இரண்டாவது தமிழ் மக்களின் அரசியற் பிரதிநிதிகளினதும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே அது நடக்க வேண்டும்.

இதெல்லாம் சாத்தியமா? அப்படிப்பட்ட அரசியல் நெருக்கடிகளை எந்த சிங்கள அரசியவாதிகளும், தலைவரும் எதற்காகத் தனக்குத் தானே தேடிக் கொள்ள வேண்டும். அப்பாவிச் சிங்கள மக்கள் கொல்லப்படும்போது மனிதாபிமான அடிப்படையில்; அதனை கண்டனம் செய்யும் தமிழர்களை தமிழ்த் துரோகிகள் என்று பட்டம் சூட்டும்போது, தமிழர்களுக்காகக் குரல் எழுப்பும் சிங்களத் தலைவர்களுக்கும் அவர்களின் சமூகத்தில் அதுதானே கதி. சிங்களத் தலைவர்கள் மட்டும் தமது சமூகத்தில் துரோகிகள்; பட்டத்தைப் பொருட்படுத்தாமல் தமிழர்களின் உரிமைகளுக்காக செயற்படவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வாறு சரியானதாகும். அவ்வாறு எதிர்பார்ப்பதற்கு எங்களுக்கு என்ன தார்மீக உரிமை உண்டு.

தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும். அளவுக்கு மிஞ்சிய பேராசை அழிவைத் தவிர வேறெதனையும் தராது

என்பவற்றை நான் உங்களுக்கு விரிவாகக் கூறவேண்டியதில்லை. எமது மக்கள் மத்தியில் உண்மையும், நேர்மையும் நிலைபெற, யதார்த்தபூர்வமான சமூகச்சிந்தனை வளர்ச்சியடைய, நல்லவர்கள் நம்பிக்கைபெற நாம் மேலும் மேலும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இப்படிக்கு

உங்கள் அன்பு நண்பன்

அ.வரதராஜப்பெருமாள்

தமிழர் பகுதியில் இருந்து சிங்களவர் பகுதிக்கு கனரக வாகனங்கள் செல்லத் தடை

வடக்கு கிழக்கு பிரதேசமான தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து தென்னிலங்கைப் பிரதேசமான சிங்களவர்கள் வாழும் பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் வருவதற்கு நேற்றுத் தொடக்கம் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து நேற்றுமுன்தினம் கொழும்பு நோக்கி தேங்காய் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றினை நிக்கரவெட்டியாவின் பளுஹஸ் சந்தியிலுள்ள வீதிச் சோதனைச் சாவடியில் நேற்று மாலை 3.30 மணியளவில் ஸ்ரீலங்கா படையினர் சோதனையிட்ட போது C4 ரக வெடிமருந்து 1054 kg வைத்துக் குண்டு மீட்கப்பட்டதை அடுத்தே இப் புதிய நடைமுறை தற்காலிகமாக அமு லுக்கு வந்துள்ளது. 10 கிலோ எடை கொண்ட C4 வெடிமருந்து 9 பெட்டிகளிலும், 26 கிலோ எடை கொண்ட C4 வெடிமருந்து 37 பெட்டிகளிலும் நிரப்பப்பட்டிருந்தது.

தெற்கே வரும் வாகனங்கள் வவுனியா தேக்கவைத்தையில் அமைந்துள்ள வாகனச் சோதனை நிலையத்தில் தடுத்து வைத்து சோதனைக்கு உள்ளாக்கப்படும். இந்தத் தடை மேலிடத்து உத்தரவின் பேரில் அமுல் செய்யப்படுவதாக வவுனியா பொலிஸ் அதிகாரி சிசிர மெண்டிஸ் தெரிவித்தார்.அதேவேளை திருகோணமலையில் இருந்து தெற்குநோக்கி வரும் வாகனங்களும் சோதனை செய்யப்படும் என்றும் பிறிமா நிறுவனத்தில் இருந்து மா ஏற்றிவரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட மாட்டா என்றும் பொலிஸ் அதிகாரிகள் கொழும்பில் தெரிவித்தனர்.

இரு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய பகுதியில் வைத்து கடத்தப்பட்ட இலங்கைச் செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களான மட்டக்களப்பினைச் சேர்ந்த தொண்டர் அலகு செயலாளரான 32 வயதுடைய சின்னராசா சன்முகலிங்கம் மற்றும் 27 வயதுடைய உதவி நிறைவேற்று உத்தியோகத்தரான கார்த்திகேசு சந்திரமோகன் இருவரும் கைகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக இரத்தினபுரிப் பகுதியின் கிரியெல்ல எல்லாகாவ கொட்டேபோக் காட்டுப் பிரதேசத்தில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

..

..

..

இச்சடலங்களில் ஒருவருடைய சடலம் கருநீலநிற நீளக் காற்சட்டையும் சேட்டும் மற்றய சடலம் கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் கபில நிற சேட்டும் அணிந்த நிலையில் காணப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பயத்தின் காரணமாக தற்காலிகமாக தங்களின் செஞ்சிலுவைச் சங்க செயற்பாடுகளை நிறுத்துவதாக மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு நாளை சந்திப்பு

ஒற்றை, சமஷ்டி என்ற ஆட்சிமுறைப்பதங்களை நீக்கிவிட்டு புதிய `சொல்' தேடுவதற்கு தீவிர முயற்சி

ஆக்கம் - ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான சர்வகட்சிப் பிரதிநிதிகளின் மற்றுமொரு கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி பதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புதியதொரு முறையிலான தீர்வுத் திட்டத்தை தயாரிக்க சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முயற்சிக்குமென தெரிவிக்கப்படுகிறது.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தவிசாளரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இது பற்றிக் கூறுகையில்;

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகள் தீர்வு யோசனைகளை சமர்ப்பித்துள்ளன. இறுதித் தீர்வை காண்பதற்கான தீர்வுத் திட்டம் விரைவில் வெளிவருவதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் தோன்றியுள்ளது என்றார்.

இதேவேளை, நாளை கூடவிருக்கும் சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் அரசாங்கத்தின் தன்மை, அதிகாரப் பரவலாக்கம் மற்றும் ஆட்சி முறை என்பன குறித்து பிரதானமாக ஆராயப்படவுள்ளது.

இலங்கை எத்தகைய ஆட்சி முறை தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டுமென கடந்த காலங்களில் நிலவிய சர்ச்சைகளை கவனத்திற்கொண்டு இறுதித் தீர்வு யோசனைகளில் சமஷ்டி மற்றும் ஒற்றை எனும் பதங்களை நீக்கி புதியதொரு சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மாகாணங்கள் மத்திய அரசின் அழுத்தங்களின்றி சுயமாக செயற்படவும் கூடிய அதிகாரங்களை வழங்குவது பற்றியும் ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக குழு முன்னர் சமர்ப்பித்திருந்த யோசனைகளில் உள்ளடங்கியுள்ள சில விடயங்களையும் தீர்வு யோசனைகளில் சேர்த்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேசமயம், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் பெறும் 13 அரசியல் கட்சிகளில் அநேகமானவை சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் என்பதால் இச்சிறுபான்மை கட்சிகள் தமக்கிடையே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி செயற்படுவது பற்றிய கலந்துரையாடல்கள் தற்போது உத்தியோகப்பற்றற்ற மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் இணக்கப்பாடு எட்டப்படும் பட்சத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை சிறுபான்மை சமூகங்களுக்கு சாதகமானதாக அமையுமென்ற அச்சம் காரணமாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலுள்ள ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட மற்றும் சில கட்சிகள் இறுதித் தீர்வை எட்டுவதற்கான காலப்பகுதியை இழுத்தடிக்கும் நோக்குடன் செயற்படுவதாக சிறுபான்மை கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மைக் கட்சிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு ஆதரவான போக்கை ஐ.தே.க. சார்பில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்கும் கே.என்.சொக்ஷி கொண்டிருப்பதாகவும் சிறுபான்மை கட்சிகள் சார்பில் கருத்துக் கூறப்பட்டது.

சனி, 2 ஜூன், 2007

கல்லூரி மாணவியல்ல 13 குழந்தைகளின் தாய்

அமெரிக்காவின் குர்ன்சி பகுதியில் வசிக்கும் ஜோனே வாட்சனை பார்ப்போர் கல்லூரி மாணவியென்றே கருதுவர், உண்மை அதுவல்ல 13 குழந்தைகளைப் பெற்றெடுத்த 36 வயதுடைய தாய் இவராகும்.

42 வயதுடைய ஜொனேயின் கணவர் வாட்சன் கனரக வாகன ஓட்டுநராக இருக்கின்றார்.

லண்டன் தெருக்களில் சிகரெட்டை வீசுவோருக்கு 100£ அபராதம்

சிகரெட்டைப் புகைத்து விட்டு அதன் எஞ்சிய பகுதிகளை லண்டன் தெருக்களில் வீசுவோருக்கு 100£ அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து இங்கிலாந்து நாடுமுழுவதும் இச்சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

ஆகவே புகைத்து விட்டு எஞ்சிய பாகத்தை பழக்கதோசத்தில் தெருக்களில் வீசாதீர்கள்.

சிங்களவர்களை நாட்டைவிட்டுச் செல்லுமாறு வேடர்கள் ஆணையிட்டால்!

தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழ்நாட்டில் பார்த்துக் கொள்ளட்டும் ஸ்ரீலங்காவில் இடமில்லை எனும் யோசனையை ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ளது. இது சார்பாக கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர எதிர்காலத்தில் இலங்கையின் ஆதிக்குடிகளான வேடர்கள், சிங்களவர்களும் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஆணையை பிறப்பித்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையென்பதை, எல்லோரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

அமைச்சர் பேரியல் அஷ்ரப்பிற்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் மலேஷியாவிற்கு அல்லது வேறெந்தவொரு நாட்டுக்குச் சென்றா தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நிலைமை தொடருமானால் இலங்கையின் ஆதிக்குடிகளான வேடர்களும் சிங்களவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டுமென்று சொல்வார்கள். அவ்வாறு நிகழுமானால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி அமைச்சராகவிருக்கும் ஹெல உறுமயவின் சம்பிக ரணவக்க இதற்குரிய பதிலைச் சொல்ல வேண்டும்.

மண்டைதீவுக்குள் பிரவேசிக்கத் தடை

1990 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இடப்பெயர்வின் பின் மண்டைதீவு பகுதியை கடற்படையினர் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர், அதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட மீள் குடியேற்றத்தில் பலர் தங்களது இருப்பிடங்களுக்கு மீண்டனர். அவர்களுக்கு கடற்படையினால் விசேட அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது, மண்டைதீவு வதிவிட அத்தாட்சியின் கூடிய கடற்படை அடையாள அட்டையின்றி உள்வருவோர் மண்டைதீவினுள் பிரவேசிக்கத் தடையினை கடற்படையினர் தற்போது ஏற்படுத்தியுள்ளனர்.

கொழும்பு விடுதிகளில் காரணமின்றி தங்கியுள்ள தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவர்

வெளியிடங்களில் இருந்து வந்து கொழும்பிலுள்ள விடுதிகளில் காரணம் எதுவுமின்றி நீண்டகாலமாக தங்கியுள்ள தமிழர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுவதால் அவர்களைச் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பு விடுதிகளில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களை வெளியேற்றுமாறு பொலிஸார் உத்தரவிட்டதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறான ஒரு உத்தரவினை பொலிஸார் பிறப்பிக்கவில்லை, காரணமெதுவுமின்றி தங்கியுள்ளவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர ஏனையவர்களை வெளியேறுமாறு நாம் கோரவில்லை என கொள்ளுப்பிட்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

நாம் மனித உரிமைகள் தொடர்பாக பேசுகின்றோம். மனிதனுக்கு வாழும் உரிமை முக்கியமானதாகும். இன்று மக்கள் பலர் கொல்லப்படுகின்றார்கள். இதன் மூலம் மக்களின் வாழும் உரிமை அங்கு பறிக்கப்படுகின்றது.

பலர் வெளியிடங்களிலிருந்து கொழும்புக்கு வந்து உரிய காரணங்களெதுவும் கூறாமல் தொடர்ந்தும் நீண்டகாலமாக தங்கியுள்ளனர். சிலர் வீசா பெறுவற்கென வந்ததாகக் கூறி நீண்டகாலமாக கொழும்பில் தங்கியுள்ளனர். இவ்வாறு உரிய காரணம் இன்றி நீண்ட காலம் தங்கியுள்ளவர்களை நாங்களே பாதுகாப்பான முறையில் அவர்களை பஸ் மூலம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்போம் இவ்வாறு பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

வெள்ளி, 1 ஜூன், 2007

என்றுமே காண முடியாத இரு துருவ நட்சத்திரங்களும் இணைந்துள்ள காட்சி


என்றுமே காண முடியாத இரு துருவ நட்சத்திரங்களும் இணைந்த காட்சி கணினி மூலம் பிடிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/article.php?artiId=3064&token=dispNews

நன்றி தமிழின் வெற்றி

கொழும்பு விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்களை உடனடியாக வெளியேற பணிப்பு

வடக்கு - கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த அனைவரையும் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலைக்குள் கொழும்பு விடுதிகளில்(லொட்ஜ்) இருந்து வெளியேற்றி விட வேண்டுமென பொலிஸார் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொழும்பு, புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் இருக்கும் அறுபதுக்கும் மேற்பட்ட விடுதிகளினதும் உரிமையாளர்களை அழைத்த புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கொழும்பின் பாதுகாப்பு காரணமாக கொழும்பு நகரிலுள்ள அனைத்து விடுதிகளிலுமிருந்து வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த அனைவரையும் உடனடியாக வெளியேற்றுமாறும், இன்று அதிகாலை எவ் விடுதிகளிலும் வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இருக்கக் கூடாதெனவும் எச்சரித்துள்ளனர்.

தங்களது இந்த உத்தரவையும் மீறி யாராவது தங்கியிருப்பின் இன்று காலை பஸ்களைக் கொண்டு வந்து அனைவரையும் அப்புறப்படுத்தி விடுவோமெனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறுகையில், விடுதிகளிலிருந்து எவரையும் வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும், இது திரித்துக் கூறப்படும் செய்தியெனவும், விடுதிகளிலிருந்து எவரையும் உடனடியாக வெளியேறுமாறு கூறும் அதிகாரம் எவருக்கும் வழங்கப்படவில்லை. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக விடுதிகளில் நடத்தப்படும் சோதனைகளைத் தீவிரப்படுத்தவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் உட்பட அனைத்து மக்களதும் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்காவில் மனிதத்துவத்துக்கு இருக்கும் மகத்துவம் இவ்வாறுதான் உள்ளது, மாற்றான் தாய் மக்களாக தமிழர்களைப் பார்ப்பது அரசாங்க படையினருக்கும் சிங்கள இனவெறியர்களுக்கும் இருக்கும் வரை தமிழர் பிரச்சனைக்கு ஜனநாயக அடிப்படையில் தீர்வு காணபது முயற் கொம்பாகவே அமையும்.

இந்தியா இலங்கைக்கு ராடர் உள்ளிட்ட சாதனங்களை மட்டுமே வழங்கும்

ஸ்ரீலங்காவின் போக்கைப் பார்த்தால் ஈழம் என்றொரு நாடு இருப்பது போன்றும் அதனுடன் யுத்தம் மூண்டால் ஸ்ரீலங்காவால் தாக்குப்பிடிக்க முடியாமல் போய் விடலாம், இதனால் முன்னெச்சரிக்கையாக யுத்த ஆயுத தளபாடங்கள், மற்றும் போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஸ்ரீலங்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற் கட்டமாக இந்தியாவிடம் ஆயுத உதவி செய்யுங்கள் இல்லையேல் வேறு நாட்டவர்களுடன் கேட்கவேண்டிய நிலை ஏற்படுமென்று அதிகாரத் தோரணையில் கேட்டுள்ளனர். - களத்துமேடு

இலங்கைக்கு யுத்த ஆயுத தளபாடங்களை இந்தியா ஒரு போதும் வழங்காது, ஆனால், தாக்குதலை தடுக்க பயன்படுத்தப்படும் ராடர் உள்ளிட்ட சாதனங்களை மட்டும் வழங்குமென்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கைக்கடற்படையினால் தாக்கப்படுவது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்த தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதனையடுத்தே நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு விஜயம் செய்த எம்.கே. நாராயணன் மீண்டும் தமிழகமுதலமைச்சர் கருணாநிதியிடம் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குலைத் தடுக்க இந்திய கடற்படையும் கடலோரக் காவற்படையும் ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் ரோந்துப்பணிகள் மேற்கொள்வது, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பினை அதிகரிப்பது போன்ற விடயங்களைக் கலந்துரையாடினர்.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்து புலிகளிடம் விமானங்களை தாக்கியழிக்கும் ஏவுகணைகளையும் ரேடார் கருவிகளையும் இந்தியா வழங்க வேண்டுமென கோரியிருந்தார். இந்தியா ஆயுத உதவிகளை வழங்காவிடின் வேறு நாடுகளின் உதவியினை நாட வேண்டிவரும் என்றும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த நாராயணன் இந்திய கடற்படை இலங்கைக் கடற்படையுடன் கூட்டு சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபடாது. ஆனால் இருதரப்பும் ஒருங்கிணைந்த ரோந்துப்பணியை மேற்கொள்ள முடியும்.

இலங்கைக்கு யுத்த ஆயுத தளபாடங்களை இந்தியா ஒரு போதும் வழங்காது. ஆனால், தாக்குதலைத் தடுக்க பயன்படும் ரேடார் உள்ளிட்ட சாதனங்களை மட்டுமே இந்தியா இலங்கைக்கு வழங்கும் என்றார்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----